பௌத்த சுவட்டைத் தேடி : தஞ்சாவூர் கீழவாசல்
1999இல் புதுச்சேரி பிரெஞ்சு ஆய்வு நிறுவனத்தின் (French Institute of Pondicherry) புத்தர் சிலை தொகுப்பில் இருந்த புகைப்படங்களில் தஞ்சாவூர் கீழவாசல் பகுதியில் உள்ள வீரபத்திரர் சிற்பத்தைக் கண்டபோது, அது புத்தர் அல்ல என்றதும், நான் தெரிவித்ததன் அடிப்படையில் அந்நிறுவனத்தார் உரிய திருத்தத்தினை தம் தொகுப்பில் மேற்கொண்டதும், அந்த சிலையைப் பார்க்க சுமார் 20 ஆண்டுகள் ஆனதும் ஒரு மறக்க முடியாத அனுபவம். 1999இல் தொடங்கிய தேடல் சூன் 2016இல் நிசும்பசூதனி கோயிலின் குடமுழுக்கின்போது நிறைவேறியது. சற்றே பின்னோக்கிச் செல்வோமா? பிப்ரவரி 1999 முதன்முதலாக என் ஆய்வு தொடர்பாக புத்தர் சிலைகளைப் பற்றிய விவரங்களைத் திரட்ட புதுச்சேரி பிரெஞ்சு ஆய்வு நிறுவனத்திற்குச் சென்றபோது அங்குள்ள சுமார் 50க்கு மேற்பட்ட புத்தர் சிற்பங்கள் தொடர்பான பதிவுகளைக் காணமுடிந்தது. அப்பதிவுகளில் (எண்.5671.7) ஒரு சிலை கீழவாசல், தஞ்சாவூர் என்ற குறிப்புடன் வீரபத்திரர் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. புத்தர் சிலைகளைப் பற்றிய தொகுப்பில் இவ்வாறான புகைப்படம் இருந்தது வித்தியாசமாக இருந்தது. பாண்டிச்சேர...