தம்ம பதம் : ப.ராமஸ்வாமி
புத்த பெருமான் அருளிய அறநெறிகளைக் கொண்டது தம்ம பதம். பௌத்தத் திருமுறைகளின் ஒரு பகுதியாக அமைந்துள்ள இந்நூல் ப.இராமஸ்வாமி அவர்களால் மொழிபெயர்க்கப்பட்டது. இரட்டைச் செய்யுட்கள், கருத்துடைமை, சிந்தனை, புஷ்பங்கள், பேதை, ஞானி, முனிவர், ஆயிரம், தீயொழுக்கம், தண்டனை, முதுமை, ஆன்மா, உலகம், புத்தர், களிப்பு, இன்பம், கோபம், குற்றம், சான்றோர், மார்க்கம், பலகை, நரகம், யானை, அவா பிக்கு, பிராமணன் என்ற 26 தலைப்புகளைக் கொண்டு அமைந்துள்ளது. இந் நூலில் உள்ள அறநெறிக்கருத்துகள் சிலவற்றைப் பார்ப்போம். இரட்டைச் செய்யுள்: (ஒவ்வொரு கருத்தும் இரண்டு சூத்திரங்களால் விளக்கப் பெற்றது) கூரை செம்மையாக வேயப்படாத வீட்டினுள் மழை நீர் பாய்வதுபோல் நன்னெறிப் பயிற்சியில்லாத மனத்தினுள் ஆசைகள் புகுந்துவிடுகின்றன. (13) கூரை செம்மையாக வேயப்பட்ட வீட்டினுள் மழை நீர் இறங்காததுபோல் நன்னெறிப் பயிற்சியுள்ள மனத்தினுள் ஆசைகள் நுழைய முடியா. (14) பேதை: எந்தக் காரியத்தைச் செய்தால் பின்னால் மனம் இன்பமடையுமோ, எதன் பயனை உள்ளக்களிப்போடு அனுபவிக்க வேண்டியிருக்குமோ, அதுவே நற்செயல். (10) ஞானி: ...