பௌத்த சுவட்டைத் தேடி : ஆலங்குடிப்பட்டி
சோழ நாட்டில் பல இடங்களில் புத்தரைச் சமணர் என்றும், சமணரைப் புத்தர் என்றும் கூறிவருவதைக் களப்பணியில் காணமுடிந்தது. ஆய்வின் ஆரம்ப நிலையில் எனக்கு இந்தக் குழப்பம் இருந்தது. சிற்பத்தின் அமைப்பினைத் தெளிவாகப் புரிந்துகொண்டு உறுதி செய்வதில் சுணக்கம் இருந்தது. தொடர்ந்து மேற்கொண்ட களப்பணி புத்தர் சிற்பத்திற்கும், சமண தீர்த்தங்கரர் சிற்பத்திற்கும் உள்ள வேற்றுமையைத் தெளிவுபடுத்தியது. புத்தரைத் தேடிச் சென்று சமணத் தீர்த்தங்கரர் சிற்பத்தைப் பார்த்த அனுபவம் இம்மாதப் பதிவு. மயிலை சீனி.வேங்கடசாமி பௌத்தமும் தமிழும் என்ற நூலில் புதுக்கோட்டைப் பகுதியில் புத்தர் சிற்பங்கள் உள்ள இடங்களில் ஒன்றாக ஆலங்குடிப்பட்டியைக் குறிப்பிடுகிறார். அந்நூலில் அவர் பின்வருமாறு கூறுகிறார். "ஆலங்குடிப்பட்டி: குளத்தூர் தாலுகாவில் உள்ள ஊர். இங்கு 3 அடி 6 அங்குலம் உயரமுள்ள புத்தர் உருவச்சிலை இருக்கிறது". அவரைத் தொடர்ந்து பிற அறிஞர்கள் அவர் சொன்ன கருத்தை அப்படியே கூறியுள்ளனர். கூடுதல் செய்தி எதுவும் கிடைக்கவில்லை. இந்தத் தகவலை அடிப்படையாகக் கொண்டு புதுக்கோட்டைப் பகுதிய...