சமண சுவட்டைத் தேடி: திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்கள்
எனது முனைவர் பட்ட ஆய்விற்காக சோழ நாட்டைச் சார்ந்த புத்தர் சிற்பங்களைப் பற்றிய குறிப்புகளைச் சேகரிக்க பிப்ரவரி 1999இல் புதுச்சேரி பிரெஞ்சு ஆய்வு நிறுவனத்திற்குச் சென்றிருந்தேன். எனது கட்டுரைகளில் அத்தொகுப்பு பற்றி குறிப்பிட்டு வருகிறேன். அந்நிறுவனத்தார் மேற்கொள்ளும் சமணத்திட்டம் தொடர்பாக ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள சமணர் சிற்பங்களைப் பார்க்க விரும்பி முனைவர் நா.முருகேசன் தலைமையிலான குழுவினர் என்னைத் தொடர்பு கொண்டனர். எனது ஆய்வு பௌத்தம் தொடர்பானதாக இருப்பினும், எனது வலைப்பூவில் களப்பணியில் கண்ட சமணர் சிற்பங்களைப் பற்றி ஓர் இடுகை இட்டிருந்தேன். அதனடிப்படையில் அவர்கள் என்னைத் தொடர்பு கொண்டபோது அத்திட்டத்திற்கு உதவ இசைந்தேன். எனது மேற்பார்வையில் தஞ்சாவூர் மாவட்டத்தில் சமணம் என்ற திட்டத்தை மேற்கொள்ளும் திரு தில்லை கோவிந்தராஜன் அவர்களை அழைத்தபோது அவரும் மனமுவந்து எங்களுடன் இணைந்துகொண்டார். 3.11.2011 அன்று திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் களப்பணி மேற்கொண்டோம். அப்போது ஒரு புதிய சமணர் சிற்பத்தைக் கண்டுபிடித்தோம். அதனைப் பத்திரிக்கைகள் மூலமாக வெளிவுலகிற்குக...