குடந்தையில் பௌத்தம்
தஞ்சாவூர் மாவட்டத்தில் பௌத்தம் என்ற தலைப்பில் ஆய்வியல் நிறைஞர் பட்டத்திற்குப் பதிவு செய்து ஆய்வைத் தொடங்கியபோது பௌத்தம் தொடர்பான பதிவுகளைத் தேடி களப்பணி மேற்கொண்டேன். அவ்வாறான ஒரு களப்பணியின்போது கும்பகோணம் அருகே புத்தர் கோயில் இருந்ததற்கான ஒரு கல்வெட்டு கும்பகோணம் கும்பேஸ்வரர் கோயிலில் இருப்பதை அறிந்தேன். கும்பகோணம் பகுதியில் பௌத்தம் இருந்ததற்கான அந்த அரிய சான்றை மையமாகக் கொண்டு கட்டுரை எழுதினேன். 15 ஆண்டுகளுக்கு முன் தமிழ்ப்பொழில் இதழில் வெளியான என்னுடைய முதல் கட்டுரை அதுவேயாகும். அக்கட்டுரையே இம்மாத இடுகையாகும். என்னுடைய அந்த கட்டுரையையும், பிற கட்டுரைகளையும் வெளியிட்டு வரும் தமிழ்ப் பொழில் இதழுக்கு நன்றி. இனி பௌத்தச் சுவட்டைத் தன்னகத்தே கொண்ட கும்பகோணத்திற்குப் பயணிப்போம்........... குடந்தையின் பெருமை எப்போதும் வற்றாத நீர்ப்பெருக்கையுடைய காவிரி நதி பாயும் நாடு சோழ நாடு. இதற்கு வளநாடு, சென்னி நாடு, அபய நாடு, கிள்ளி நாடு, செம்பியர் நாடு, அகளங்க நாடு, பெருநீர் நாடு, பொன்னிநாடு எனப்...