பௌத்த சுவட்டைத் தேடி : பெருஞ்சேரி
1940
மயிலை சீனி.வேங்கடசாமி (1940) முதற்கொண்டு சி.மீனாட்சி (1979), டி.என்.வாசுதேவராவ் (1979), சிவராமலிங்கம் (1997) உள்ளிட்ட அறிஞர் பெருமக்கள் பெருஞ்சேரியில் உள்ள புத்தர் சிலையைப் பற்றிக் கூறியுள்ளனர். பாண்டிச்சேரி பிரெஞ்சு ஆய்வு நிறுவனம் (French Institute of Pondicherry)
தன் தொகுப்பில் இச்சிலையின்
புகைப்படத்தைக் கொண்டுள்ளது. தமிழக அரசு வெளியிட்டுள்ள தமிழ்நாட்டு வரலாறு சோழப்பெருவேந்தர் காலம்
(1998) என்னும் நூலில் இப் புத்தரைப் பற்றிய குறிப்பு உள்ளது. புதியதாக ஒரு புத்தர் சிலையைக் கண்டுபிடிப்பதற்கும், முன்னர் அறிஞர்கள் கூறியுள்ள சிலையைப் பார்ப்பதற்கும் வேறுபாடு இருப்பினும் சிலையை முதலில் காணும்போது கிடைக்கும் எல்லையற்ற மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொள்வதற்காக இவ்வனுபவம். வாருங்கள் பெருஞ்சேரிக்குப் பயணிப்போம்.
1993
1993இல் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் தஞ்சாவூர் மாவட்டத்தில் பௌத்தம் (Buddhism in Tamil Nadu with special reference to Thanjavur District) என்ற தலைப்பில் ஆய்வியல் நிறைஞர் பட்டத்திற்குப் பதிவு செய்தபின் வரலாற்றறிஞர் முனைவர் குடவாயில் பாலசுப்ரமணியன் அவர்களுடன் பௌத்தம் தொடர்பான பதிவுகளைப் பற்றி விசாரித்தபோது மயிலாடுதுறை அருகே ரிஷிக்கோயில் என்ற பெயரில் ஒரு புத்தர் கோயில் இருப்பதாகக் கூறியிருந்தார்.
மே 1995
நண்பர் முனைவர் பாலச்சந்திரன் அவர்களுடன் பூம்புகார் களப்பயணம் மேற்கொண்டபோது, இடைப்பட்ட நேரத்தைப் பயன்படுத்திக்கொள்ளும் வகையில் பெருஞ்சேரி சென்றேன். போதிய விவரங்களை எடுத்துச் செல்லாததால் அங்கிருந்த வாகீஸ்வரர் கோயில் சென்றோம். அங்கிருந்த அர்ச்சகர் திரு ஆபத்நாதசகாய குருக்கள் எனது ஆய்வைப் பற்றி ஆர்வமாகக் கேட்டார். கோயிலிலோ. அருகிலோ புத்தர் சிற்பங்களோ, பௌத்தம் தொடர்பான தடயங்களோ இல்லை என்று அவர் கூறிய நிலையில் மேற்கொண்டு பயணத்தைத் தொடராமல் திரும்பினோம்.
அக்டோபர் 1998
முனைவர் குடவாயில் பாலசுப்ரமணியன் அவர்கள் பெருஞ்சேரி புத்தர்
கோயில் பற்றிய செய்தி ஒரு நூலில் (Census of India 1961, Tamil Nadu, Temples of Tamil Nadu, Director of Census Operations, Tamil Nadu & Pondicherry, 1971) வந்ததாகக் கூறி அச் செய்தியின் படியை
எனக்குத் தந்தார்.
![]() |
ரிஷிக்கோயில் எனப்படும் புத்தர் கோயில் (1971) புகைப்படம்: Census of India 1961 |
அதனைப் பார்த்ததும் அக்கோயிலைச் சென்று
பார்க்கவேண்டுமென்று ஆவல் மிகுந்தது. அப்போது எட்டாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த என் மூத்த மகன் பாரத் என்னுடன் வர ஆசைப்படவே அவனை அழைத்துக்கொண்டு களப்பணியைத் தொடங்கினேன். தஞ்சாவூரிலிருந்து பெருஞ்சேரிக்குச் செல்ல திட்டமிட்டுக் கிளம்பினோம். கும்பகோணம் வந்ததும் திடீரென்று கல்வெட்டு நினைவிற்கு வரவே, கும்பகோணத்திலிருந்து எலந்துறை சென்றுவிட்டு பின்னர் பெருஞ்சேரி செல்வதற்காக மயிலாடுதுறைக்குப் புறப்பட்டோம்.
மயிலாடுதுறை-கிளியனூர் செல்லும் பேருந்தில் பெருஞ்சேரி செல்லலாம் எனப் பேருந்து நிலையத்தில் கூறினர். ஏதாவது சாப்பிடலாம் என்றால் உடன் பேருந்து வந்து கிளம்பிவிட்டால் என்ன செய்வது என்ற சிந்தனையில் எதுவும் சாப்பிடாமல் பேருந்து வரும் பாதையையே பார்த்துக்கொண்டிருந்தேன். பேருந்து நின்று பயணிகள் இறங்குவதற்குள் அனைவரும் முண்டியடித்துக்கொண்டு ஏறினர். நாங்களும் ஏறினோம். தஞ்சாவூரில் காலை சிற்றுண்டி முடித்துக் கிளம்பி எதுவும் சாப்பிடாமல் பயணம் தொடர்ந்தது. கையில் எடுத்துச்சென்ற குடிநீரும் தீர்ந்துவிட்டது. எனக்கு புத்தரைப் பார்க்கவேண்டும் என்ற எண்ணத்தைத் தவிர வேறு எதுவும் இல்லை. உடன் வந்த மகனைப் பற்றியோ அவனுடைய பசியைப் பற்றியோ நான் சிந்திக்கவில்லை.
மயிலாடுதுறை-கிளியனூர் பேருந்தில் பெருஞ்சேரியில் முதல் நிறுத்தத்தில் இறங்கினோம். எதிரில் சிறிய மண்டபம் போல் இருந்தது. அந்த மண்டபத்தில் புத்தரைக் காணமுடிந்தது. அந்த புத்தரை ரிஷி என்று கூறினர். எங்கு பார்த்தாலும் குப்பையாக இருந்தது. அருகிலிலுள்ளோரிடம் அது புத்தர் சிற்பம் என நான் கூறியபோது யாரும் ஏற்கத் தயாராக இல்லை. அது ரிஷிக்கோயில் என்றும், பூசையெல்லாம் செய்யப்படுவதில்லை என்றும் கூறினர். பராமரிப்பின்றி இருந்த அந்த புத்தரைப் பார்க்க வேதனையாக இருந்தது. புகைப்படம் எடுத்தபின் கிளம்பினோம். புத்தரைப் பார்த்த மகிழ்ச்சியில் நான் எடுத்த பயணச்சீட்டை தொலைத்துவிடவே, மயிலாடுதுறையில் பரிசோதகர் கேட்ட தண்டக்கட்டணத்தைச் செலுத்திவிட்டு, அடுத்து எங்கு செல்லலாம் என யோசித்தபோது, மாலை 4.00 மணிக்கு மேலாகிவிட்டது. பேருந்தைவிட்டு இறங்கியபின் உடன் வந்த என் மகனைக் காணவில்லை. தேடியபோது அருகில் ஒரு இடத்தில் சோர்வுடன் அமர்ந்திருந்தான். மேலும் ஒரு அடி கூட எடுத்துவைக்கமுடியாது என்றும் அதிகமாகப் பசிக்கிறது என்றும் கூறினான். அப்போதுதான் நாங்கள் எதுவும் சாப்பிடாமல் இருந்தது எனக்கு நினைவிற்கு வந்தது. புத்தரைப் பார்க்கவேண்டிய ஆர்வத்தில் என் பசியை மறந்ததோடு மட்டுமன்றி, என் மகனையும் மறந்துவிட்டேன். மதிய உணவை மாலை மயிலாடுதுறையில் முடித்தபின் இருவருக்கும் ஓரளவு தெம்பு பிறந்தது. பின்னர் கும்பகோணம் வழியாக மானம்பாடி சென்று அங்கிருந்த புத்தரைப் பார்த்துவிட்டு வீடு திரும்பினோம். எலந்துறை மற்றும் மானம்பாடி பயணம் குறித்து பிறிதொரு அனுபவத்தின்போது விவாதிப்போம்.
அடுத்து ஒரு முறை அங்கு சென்றேன். அது தொடர்பான அனுபவங்களைத் தொடர்ந்து காண்போம்.
மார்ச் 2010
குத்தாலம், பந்தநல்லூர், மானம்பாடி களப்பணி மேற்கொண்டபோது பெருஞ்சேரி சென்றேன். பேருந்தைவிட்டு இறங்கியதும் உள்ளூர் மக்கள் சூழ்ந்து கொண்டனர். என்னைப் பார்த்ததும் அவர்கள் அடையாளம் கண்டுகொண்டனர். ரிஷிக்கோயில் இப்போது எப்படியிருக்கிறது என அவர்களிடம் கேட்டேன். அவர்கள், கடந்த முறை நீங்கள் வந்தபோது இந்த சிலையைப் புத்தர் என்று கூறினீர்கள். நாங்கள் இச்சிலையைப் புத்தர் என்று கூறி அவ்வப்போது வழிபாடும் நடத்துகின்றோம் எனக் கூறினர். சிலையின் நெற்றியில் திருநீறும், குங்குமமும் பூசப்பட்டிருந்தது. முந்தைய களப்பணியின்போது பராமரிப்பின்றி காணப்பட்ட சிற்பம் மிகுந்த பராமரிப்புடன் இருப்பதைக் கண்டபோது மனதிற்கு திருப்தியாக இருந்தது.
-------------------------------------------------------------------------------------------
நன்றி: முனைவர் குடவாயில் பாலசுப்ரமணியன், முனைவர் பாலச்சந்திரன், என் மூத்த மகன் பாரத், திரு ஆபத்சகாய குருக்கள்,
திரு குமார், திரு சிங்காரவேலு
-------------------------------------------------------------------------------------------
12 மார்ச் 2025இல் மேம்படுத்தப்பட்டது.
சான்றோர்கள் தாங்கள் மேற்கொண்ட செயலினை நிறைவேற்றும் வரையில், பசி நோக்கார், கண் துஞ்சார் என்று படித்தது நினைவிற்கு வருகின்றது. ஆனால் தாங்களோ, அதனினும் ஒரு படி மேலே சென்று,புத்தரைத் தேடும் தங்களின் புனிதப் பயணத்தில், தங்களின் மகனையே அல்லவா மறந்திருக்கின்றீர்கள். மனம் நெகிழ்கின்றது.
ReplyDeleteFirst time am seeing this kind of The Lord Buddha Temple in South Tamil Nadu, Very much happy and lots of wishes for your exposure
ReplyDeleteமுதன்முதலாக தாங்கள் இவ்வாறான கோயிலைப் பார்ப்பதறிந்து மகிழ்ச்சி. வாய்ப்பு கிடைக்கும்போது நாம் அங்கு செல்வோம். வாழ்த்துக்கு நன்றி.
DeleteCan I get this book
ReplyDeleteYou can contact me thro' drbjambulingam@gmail.com or jambubuddha@gmail.com so that I will reply accordingly.
Deleteபெருஞ்சேரி அருகிலுல்ல கிளியனூரே என் சொந்த ஊர். நானும் அந்த சிலை குறித்து அது புத்தராகதான் இருக்க வேண்டும் என்று தகவல்களை அங்கொன்றும் இங்கொன்றுமாக தேடி சேகரித்துக் கொண்டிருந்தேன். இப்பதிவில் நிறைவான தகவல்கள். அது புத்தர் சிலைதானென்ற ஊர்ஜிதம். நன்றி!
ReplyDelete