நாகப்பட்டினம் மாவட்டத்தில் பௌத்தம்

சோழ நாட்டில் பௌத்த விகாரம், செப்பேடு, கல்வெட்டு, செப்புத்திருமேனி, சிலை, கோயில் என்ற பல நிலைகளில் சான்றுகளைக் கொண்ட பெருமையினைக் கொண்டது நாகப்பட்டினம் மாவட்டமாகும்.








நாகப்பட்டினத்தில் பொ.ஆ.720இல் பல்லவ மன்னர் நரசிம்மபோத்தவர்மன் காலத்தில், வர்த்தகத்தின் பொருட்டுச் சீன நாட்டிலிருந்து நாகப்பட்டினத்திற்கு வரும் பௌத்தர்களுக்காகச் சீன அரசர் விருப்பப்படி ஒரு பௌத்தக்கோயில் கட்டப்பட்டது. பொ.ஆ.11ஆம் நூற்றாண்டில் ஸ்ரீவிஜய நாட்டு மன்னரான ஸ்ரீமார விஜயோத்துங்கவர்மன், முதலாம் ராஜராஜன் அனுமதியுடன் நாகப்பட்டினத்தில் ஒரு பௌத்த விகாரத்தைக் கட்டியதாக பெரிய ஆனைமங்கலச் செப்பேடு கூறுகிறது. இதற்கு முதலாம் ராஜராஜன் ஆனைமங்கலம் என்னும் ஊரையும், அதன் வருவாயையும் கொடையாக வழங்கினான். அவரது மகன் முதலாம் ராஜேந்திரன் இந்நிவந்தத்தை உறுதிப்படுத்தினான். முதலாம் குலோத்துங்கன் மேலும் சில ஊர்களைத் தந்ததாக சிறிய லெய்டன் செப்பேடு கூறுகிறது. அப்போது இந்த விகாரம் ராஜராஜப்பெரும்பள்ளி என்றழைக்கப்பட்டது. இச்செப்பேட்டில் ராஜேந்திரச்சோழப்பெரும்பள்ளி என்ற மற்றொரு பௌத்த விகாரமும் இருந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தச்செப்பேடுகள் நெதர்லாந்து நாட்டில் லெய்டன் பல்கலைக்கழக அருங்காட்சியகத்தில் உள்ளன.


பொ.ஆ.1725இல் சீனா கோயில் என்னும் பெயருள்ள ஒரு கோயில் நாகப்பட்டினத்தில் இருந்ததாக வேலண்டினும், கூறியுள்ளார். அதேபோன்று நாகப்பட்டினத்திற்கு வடக்கே ஒன்று அல்லது இரண்டு கல் தொலைவில் புதுவெளிக்கோபுரம், சீனா கோயில், கருப்புக் கோயில் என்ற பெயர்களில் அழைக்கப்பட்ட கோபுரம் நாகப்பட்டினத்தில் ஓர் அடையாளமாகக் கடற்பயணிகளுக்குத் தோன்றியதாகவும், இதைத் தாம் நேரில் பொ.ஆ.1849இல் கண்டதாகவும் வால்டர் எலியட் கூறியுள்ளார்.


நிர்ப்பந்தம் காரணமாக பொ.ஆ.1867இல் கோபுரம் இடிக்கப்பட்டு அதன் பொருள்கள் கல்லூரி கட்டுவதற்குப் பயன்படுத்தப்பட்டன. இங்குக் கட்டப்பட்ட கல்லூரிக் கட்டடப்பகுதி தற்போது காவல் துறை, வருவாய்த்துறை, வட்டாட்சியர் அலுவலகங்களாகச் செயல்பட்டு வருகிறது. இதில் சில இடிந்துபோன கட்டடப்பகுதிகளின் சுவர்களுக்குள் பழைய விகாரங்களில் பயன்படுத்தப்பட்டிருந்த செங்கற்களும், சோழர் கால ஓடுகளும் காணப்படுகின்றன. இதன் முன்பாக 100 அடி தொலைவில் பூமியில் செங்கற்கள் பரப்பப்பட்டுள்ளது போன்ற கட்டடப்பகுதி பரவலாக தொடர்ச்சியாக பல இடங்களில் காணப்படுகின்றன. இப்பகுதியில் சீனக்களிமண் வகை மண்பாண்டச் சில்லுகளும், சோழர் கால ஓடுகளும் கிடைக்கின்றன. இப்பகுதியே பெரும்பாலும் விகாரம் இருந்த இடமாகக் கருதலாம். எச்சங்களை இங்குத் தற்போது காண இயலா நிலையிலும் பௌத்த விகாரம் இருந்த இடம் என்ற சிறப்பினை நாகப்பட்டினம் பெறுகிறது.


நாகப்பட்டினம் நாகநாதர் கோயிலில் கிடைத்துள்ள பொ.ஆ.15ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பராக்கிரம பாண்டியன் என்று பெயர் குறிப்பிடப்பட்டுள்ள கல்வெட்டு ராஜராஜப்பெரும்பள்ளி என்ற ஸ்ரீமாகேசுவரப்பெரும்பள்ளியின் திருப்பணிக்குக் கொடுக்கப்பட்ட கொடையைப் பற்றிக் கூறுகிறது. இப்பள்ளியானது ஆனைமங்கலச் செப்பேட்டில் கூறப்படுகின்ற பௌத்த விகாரமே என்பது தெளிவாகிறது.


விகாரம், கல்வெட்டு, செப்பேட்டுச் சான்றுகளை அடுத்து இங்கு காணப்பட்ட புத்தர் செப்புத்திருமேனிகளும், புத்தர் சிலைகளும் முக்கிய பங்கினை வகிக்கின்றன. பொ.ஆ.1856 முதல் நாகப்பட்டினத்திலிருந்து முற்கால, பிற்காலச்சோழர் காலத்தைச் சேர்ந்த சுமார் 350 புத்தர் செப்புத் திருமேனிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.


அமர்ந்த நிலையிலும், நின்ற நிலையிலும் உள்ள இந்தச் செப்புத் திருமேனிகள் தலையில் வரிசையாகச் சுருள்முடி, அதற்கு மேல் ஞானத்தை உணர்த்தும் தீச்சுடர், சற்றே மூடிய கண்கள், நீண்ட காதுகள், உதட்டில் புன்னகையின் வெளிப்பாடு, நெற்றியில் திலகக்குறி, வலது உள்ளங்கையில் தர்மசக்கரக்குறி, மேலாடை ஆகியவற்றுடன் உள்ளன. இவை இந்தியாவில் சென்னை, தஞ்சாவூர், கொல்கத்தா, பாட்னா, நாக்பூர், மும்பை, திருவனந்தபுரம், குவாலியர், பெங்களூர், லக்னோ, ஜெய்ப்பூர், ஸ்ரீநகர், வடோதரா, ராஜ்கோட் ஆகிய இடங்களிலும், வெளிநாட்டு அருங்காட்சியகங்களிலும் காணப்படுகின்றன. தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டையில் ஒரு நாகப்பட்டினப் புத்தர் செப்புத் திருமேனி வழிபாட்டில் உள்ளது. திருவாரூர் மாவட்டம் குடவாசல் வட்டத்திலுள்ள செல்லூர், தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி அருகில் உள்ள ரெட்டிப்பாளையம், நாகப்பட்டினம் உள்ளிட்ட பல இடங்களிலிருந்தும் புத்தர் செப்புத்திருமேனிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

நாகப்பட்டினம் மாவட்டத்தில் நான்கு இடங்களில் புத்தர் சிலைகள் உள்ளன. அவற்றில் ஒரு சிலை அருங்காட்சியகத்திலும், ஒரு சிலை புத்தர் கோயிலிலும் உள்ளன. கீழ்வேளூர் வட்டம் கிராந்தியில் ஒரு புத்தர் சிலை பீடத்தின்மீது உள்ளது. உடற்பகுதியுடன் தலைப்பகுதி பொருத்தப்பட்ட, அமர்ந்த நிலையில் தியானக்கோலத்திலுள்ள இந்தச் சிலை தலையில் சுருள்முடி, நீண்ட காதுகள், கழுத்தில் மூன்று மடிப்புகள், அகன்ற மார்பு, பரந்த தோள்கள், இடது மார்பை மூடிய மேலாடை, இடது உள்ளங்கையின்மீதுள்ள வானோக்கிய நிலையிலுள்ள வலது உள்ளங்கையில் தர்மசக்கரக்குறி, இடுப்பில் ஆடை ஆகியவற்றுடன் உள்ளது. சிலையின் முகமும், தீச்சுடரும், வலது உள்ளங்கையும் சிதைந்துள்ளன. சிலையின் பீடத்தில் ‘கிராந்தி தெப்பிள்ளை’ என்ற பொ.ஆ.11-12ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழ் எழுத்துப்பொறிப்பு காணப்படுகிறது. சோழ நாட்டில் கல்வெட்டுப்பொறிப்புடன் உள்ள புத்தர் சிலைகள் மிகவும் அரிதாகும். ‘கிராந்தி தெப்பிள்ளை’ என்பது சிலையைக் கொடையாகக் கொடுத்தவரைக் குறிக்கும். இந்தச் சிலையைக் படுக்கப்போட்டால் மழைவருவதாக நம்புகின்றனர். ஒரு முறை உட்கார வைத்ததால் நிலம் வறண்டுவிட்டதாகவும், ஆதலால் பெரும்பாலும் படுக்க வைத்துவிடுவதாகவும் உள்ளூரில் கூறினர்.

வேளாங்கண்ணி அருகில் சந்தைத்தோப்பு என்னுமிடத்தில் இருந்த, புத்தர் சிலை தற்போது நாகப்பட்டினம், அரசு அருங்காட்சியகத்தில் உள்ளது. இச்சிலை சற்றொப்ப கிராந்தி புத்தரைப் போலுள்ளது.

புஷ்பவனத்தில் அமர்ந்த நிலையில் தியானக்கோலத்திலுள்ள புத்தர் சிலை சற்றே மூடிய கண்கள், நீண்ட காதுகள், புன்னகை சிந்தும் இதழ்கள், தலையில் வரிசையாகச் சுருள்முடி, அதன்மேல் தீச்சுடர், கழுத்தில் மூன்று மடிப்புகள், அகன்ற மார்பு, பரந்த தோள்கள், மேலாடை, வலது உள்ளங்கையில் தர்மசக்கரக்குறி ஆகியவற்றுடன் உள்ளது. ‘நாட்டுக்கோட்டை செட்டியார்’ என்றழைக்கப்படுகின்ற இச்சிலைக்கு முடியெடுத்து நேர்த்திக்கடன் செய்வதோடு, கற்பூரம் ஏற்றி, சாம்பிராணி தூபமிட்டு, பித்தளை விளக்கில் தீபம் ஏற்றுகின்றனர். புத்த பூர்ணிமா, தைப்பொங்கல் ஆகிய நாள்களில் சிறப்புப்பூஜை செய்து, சர்க்கரைப்பொங்கல் வைத்துப் படைத்து அன்னதானமும் செய்கின்றனர்.

கீழ்வேளூர் வட்டம் புத்தமங்கலத்தில் உள்ள, தாய்லாந்து நாட்டு வடிவமைப்பில் அமைந்துள்ள புத்தர் கோயிலில் உடற்பகுதியுடன் தலைப்பகுதி பொருத்தப்பட்ட, அமர்ந்த நிலையில் தியானக்கோலத்திலுள்ள புத்தர் சிலை வழிபாட்டில் உள்ளது. வலது உள்ளங்கை சிதைந்துள்ளது. முகம் தெளிவின்றி உள்ளது. தாய்லாந்து நாட்டுப் பௌத்த சமயத்தினர் கோடைக்காலத்தில் இங்கு வந்து முடியெடுத்து, வழிபடுவதாக உள்ளூரில் கூறினர். மழை வருவதற்காக பட்டை மிளகாயை அரைத்துச் சிலையின் தலையில் தேய்த்து, எருக்கம்பூ மாலையை அணிவிப்பது வழக்கம் என்றும், அவ்வாறாக மாலையிட்ட சில நிமிடங்களில் மழை வந்துவிடும் என்றும், தற்போது கோயில் கட்டி அதில் வைத்துவிட்டதால் மழையை வரவழைக்கும் சாமிக்கு இப்போது இவ்வாறு செய்வதில்லை என்றும் கூறினர். சோழ நாட்டில் புத்தர் சிலை உள்ள இரு கோயில்களில் இக்கோயிலும் ஒன்றாகும்.

தமிழ்நாட்டில் பௌத்தச் சான்றுகளை அதிகம் கொண்டுள்ள நாகப்பட்டினத்தில் பௌத்தத்தின் தாக்கம் இன்றுவரை நிலவி வருவதை இச்சான்றுகள் உணர்த்துகின்றன.
    துணை நின்றவை
  • வேங்கடசாமி, மயிலை சீனி. (1940, மூன்றாம் பதிப்பு 1957). பௌத்தமும் தமிழும். திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக்கழகம், சென்னை.
  • Ramachandran, T.N. (1954, Reprint 1992). The Nagapattinam and other Buddhist Bronzes in the Madras Museum. Director of Museums, Madras
  • ஜெயக்குமார், பா. (1995). வரலாற்று நோக்கில் நாகப்பட்டினம், பரணி. பதிப்பாசிரியர்கள்: பெ. ராமலிங்கம் & சி. சுந்தரேசன், ஆய்வாளர் கழக வெளியீடு, தஞ்சாவூர்.
  • (1999, நவம்பர் 10). அய்யம்பேட்டையில் சோழர் கால புத்தர் சிலை கண்டுபிடிப்பு, தினமலர்.
  • காசிநாதன், நடன. (1999). பூம்புகாரும் கடல் அகழாய்வும், திருநெல்வேலி தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் லிட், சென்னை
  • (2013, மே 2). நாகை அருகே சோழர் கால புத்தர் சிலை, தினமணி.
  • (2013, ஜூன் 1). பௌத்த சுவட்டைத்தேடி : கிராந்தி, சந்தைத்தோப்பு, சோழ நாட்டில் பௌத்தம், https://ponnibuddha.blogspot.com/2013/06/blog-post.html
  • (2021, நவம்பர் 1). பௌத்த சுவட்டைத்தேடி : மீண்டும் புத்தமங்கலம், சோழ நாட்டில் பௌத்தம், https://ponnibuddha.blogspot.com/2021/11/blog-post.html
  • ஜம்புலிங்கம், பா. (2022). சோழ நாட்டில் பௌத்தம். புது எழுத்து, காவேரிப்பட்டிணம்.
  • Jambulingam, B. (2023). Buddhism in Chola Nadu. Pudhu Ezuthu, Kaveripattinam.
  • (2024, July 8). A staunch Buddhist in a remote Nagapattinam village, The Hindu.
  • செல்வராஜ், என். (2024). வரலாற்றில் ஐயம்பேட்டை. கிழக்கு பதிப்பகம், சென்னை.
-------------------------------------------------------------------------------------------
நன்றி: போதி முரசு, மார்ச் 2025
-------------------------------------------------------------------------------------------

Comments