பௌத்த சுவட்டைத் தேடி : கிராந்தி, சந்தைத்தோப்பு

அக்டோபர் 2012
நாகப்பட்டினம் வரலாற்று ஆர்வலர் குழுவின் முதன்மைச் செயலாளரும்,  நவம்பர் 2011 களப்பணியின்போது உடன் வந்து உதவியவருமான நண்பர் திரு க.இராமச்சந்திரன் ஒரு புத்தர் புகைப்படத்தை அனுப்பி அந்த புத்தர் சிலை நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் வட்டம் கிராந்தி என்னுமிடத்தில் இருப்பதாகக் கூறியிருந்தார்.  அச்சிலையைக் காணும் நாளை ஆவலோடு எதிர்பார்த்திருந்தேன். ஏப்ரல் 30 ஆம் தேதி அவரிடமிருந்து தொலைபேசி அழைப்பு. நாகப்பட்டினத்தை நோக்கி மறு நாள் களப்பயணம். அந்த புத்தர் சிலையின் பீடத்தில் தமிழ்க்கல்வெட்டு குறிப்பு  இருந்தது. அதனைத் தெளிவிக்க  வரும்படி  திரு தில்லை கோவிந்தராஜன் அவர்களைக் கேட்டுக்கொள்ளவே அவரும் இசைந்தார். மறுநாள் (1.5.2013) காலை 5.30 மணிக்குள் தஞ்சையை விட்டுக் கிளம்புவதாக எங்கள் திட்டம் அமைந்தது.
கிராந்தி புத்தர் (அக்டோபர் 2012)
புகைப்படம் : திரு க.இராமச்சந்திரன்
1 மே  2013
விடியற்காலையில் இருவரும் கிளம்பினோம். பேருந்து நிலையம் வந்தோம். அரசியல் கட்சித்தலைவர் கைது செய்யப்பட்டதன் காரணமாக விடியற்காலை 4.30 மணிக்கு மேல் எந்தப் பேருந்துகளும் இயக்கப்படவில்லை என்பதை அறிந்தோம். தொடர்வண்டியில் கிளம்ப இன்னும் ஒரு மணி நேரத்திற்கு மேலாகும் என்பதை அறிந்தோம். கடைசியாக ஒரு வேன் வந்தது. எப்படியும் போகவேண்டும் என்ற ஆர்வத்திலும், நேரத்தை வீணாக்கக்கூடாது என்ற எண்ணத்திலும் வேனில் ஏறினோம்.. திருவாரூர் வந்தபின்,  பேருந்துகள் ஓடிக்கொண்டிருப்பதைப் பார்த்தபின் இருவரும் திருவாரூரில் இறங்கினோம். காலை உணவை முடித்துவிட்டு அங்கிருந்து பேருந்தில் நாகப்பட்டினம் பயணித்தோம்.

வெளிப்பாளையத்தில் எங்களுக்காகக் காத்திருந்தார் திரு இராமச்சந்திரன். திரு தில்லை கோவிந்தராஜன் அங்கிருந்த அவரது மைத்துனர் வீட்டிற்குச் சென்று அங்கிருந்து பைக்கை எடுத்துவந்தார். அவரது பைக்கில் நான் ஏறிக்கொள்ள, இர்மச்சந்திரன் தனது பைக்கில் வர மூவரும் அங்கிருந்து கிளம்பினோம். நாகப்பட்டினத்திலிருந்து கிராந்தி வந்து சேர்ந்தோம்.  ஊருக்குள் நுழையும்போது கிராமத்தினர் திரு இராமச்சந்திரனைச் சூழ்ந்துகொண்டனர். அவரிடம் ஒவ்வொருவரும் நலம் விசாரித்தனர். அவர்கள் பேசியதைப் பார்த்தபோது நெடுநாள்  நண்பரிடம் அவர்கள் பேசுவதுபோலத் தெரிந்தது. அவரும் ஒவ்வொருவருக்கும் மறுமொழி கூறிக் கொண்டே வந்தார். பெரியவர் சிறியவர் என வயதுப் பாகுபாடின்றி அனைவரும் அனைவரும் எங்களைத் தொடர ஆரம்பித்தனர். சிலையை சில சிறுவர்கள் ஆர்வமோடு பார்த்துக் கொண்டிருந்ததைக் கண்டோம். சிலையின் அருகில் சென்றோம். சிலை தரையில் படுக்க வைக்கப்பட்டிருந்தது. உடற்பகுதி தனியாகவும், தலைப்பகுதி தனியாகவும் இருந்தன. அருகிலிருந்த ஒருவர், "கடந்த முறை நீங்கள் வந்தபோது புத்தரை அமர வைத்துவிட்டுப் போய்வீட்டீர்கள். பூமி வறண்டு போச்சுங்க. அதற்குப் பின்னர் மழையே வரவில்லை. புத்தரைப் படுக்கவைத்தபின்னர்தான் மழை பெய்ய ஆரம்பித்தது என்றார்." இக்கருத்தை அருகிலிருந்த பலர் கூறினர். இந்தப் புத்தர் காரணமாகவே அங்கு மழை பெய்கிறது என்பது அவர்களது நம்பிக்கை. 

கிராந்தி புத்தர் (2013)
புகைப்படம் : முனைவர் பா.ஜம்புலிங்கம்


முந்தைய களப்பணிகளின்போது திருவாரூர் மாவட்டம் திருநாட்டியத்தான்குடி மற்றும் அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் ஆகிய இடங்களில் மழையுடன் தொடர்புபடுத்தி புத்தர் சிலையைப் பற்றிக் கூறியதை நான் கேட்டுள்ளேன்.  அவற்றைப் பற்றிப் பிறிதொரு கட்டுரையில் விவாதிப்போம்.
கிராந்தி புத்தர் அருகில் திரு தில்லை கோவிந்தராஜன், முனைவர் பா.ஜம்புலிங்கம்
புகைப்படம் : திரு க. இராமச்ச்நதிரன்

சிலையைப் பார்த்தோம். சோழ நாட்டில் காணப்படுகின்ற அனைத்துக் கூறுகளுடனும் அச்சிலை இருந்தது. 1993 முதல் மேற்கொள்ளப்பட்டவரும் களப்பணியின்போது நாகப்பட்டினம் மாவட்டத்தில் குத்தாலம், குறும்பூர், புத்தமங்கலம், பூம்புகார், பெருஞ்சேரி, புட்பவனம் ஆகிய இடங்களில் நான் புத்தர் சிலைகளைப் பார்த்துள்ளேன். அவற்றில் பூம்புகாரில் உள்ள சிலை மட்டும் நின்ற நிலையில் உள்ளது. தற்போது காணப்பெறும் சிலை உட்பட பிற அனைத்து சிலைகளும் அமர்ந்த நிலையில் தியான கோலத்தில் உள்ளன.  சிலையின் பீடத்தில் உள்ள எழுத்து தெரிவதற்காக அதன்மீது சாக்பீஸோ கோல மாவோ தடவி, தண்ணீர் தெளித்துப் பார்ப்பதற்காக அவற்றை அருகிலிருந்தவர்களிடம் கேட்டோம். கோலமாவும் கிடைக்கவில்லை. சாக்பீஸ் எடுக்கச் சென்றவர்களும் வரவில்லை. தெளிவாகப் படிக்க எழுத்தின்மீது திருநீற்றைப் பயன்படுத்தலாமா என்றேன். வெளியூர்ப் பயணத்தின்போது நான் வழக்கமாக எடுத்துச் செல்வனவற்றில் ஒன்று திருநீற்றுப் பை. திரு தில்லை கோவிந்தராஜன் சரி என்று கூறவே, திருநீற்றை எடுத்துக்கொடுத்தேன். எழுத்தின்மீது திருநீற்றைச் சீராகத் தடவி பின்னர் தண்ணீரைப் பக்குவமாக அதன்மேல் பாவித்து புகைப்படம் எடுத்தார் அவர். அதில் "கிரெந்தி தெப்பிள்ளை" என எழுதப்பட்டுள்ளதாகவும், அது கி.பி. 11-12ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்றும் அவர் கூறினார்.    


களப்பணியின்போது கிராந்தி கிராம மக்களுடன் (மே 2013)
ஊர் மக்கள் இவ்வாறாக உள்ள புத்தர் சிலைகளைப் பற்றி  ஆர்வமாக விசாரித்தனர். அவர்களிடம் அம்மாவட்டத்தில் உள்ள புத்தர் சிலைகளைப் பற்றியும், இச்சிலை மட்டும் கல்வெட்டுடன் உள்ள சிறப்பையும் எடுத்துக் கூறினேன். அருகருகே இவ்வாறாக அவர்களுடைய மாவட்டத்தில் ஆறு சிலைகள் இருப்பதை அறிந்ததும் அவர்களுக்கு மகிழ்ச்சியாக இருந்தது.  புத்தரைப் பார்த்த நிறைவுடன் ஊர் மக்களுக்கு நன்றிகூறி விட்டு, அவர்களைவிட்டுப் பிரிய மனமின்றி, கிளம்பினோம்.   
திரு க.இராமச்சந்திரன், திரு சௌந்தரராஜன் உடன் முனைவர் பா.ஜம்புலிங்கம்
புகைப்படம் : திரு தில்லை கோவிந்தராஜன்

புத்தரைப் பார்த்தபின், வலிவலம் களப்பணியின்போது உடன்வந்த, வரலாற்றார்வம் கொண்ட பெரியவர் திரு சௌந்தரராஜன் அவர்களை மரியாதை நிமித்தம் சந்தித்தோம். கிராந்தி புத்தரைப் பற்றிய செய்தியை வரலாற்றுலகிற்கு அறிமுகப்படுத்தும் வகையில் பத்திரிக்கைச் செய்தியாகத் தயாரித்தார் திரு. இராமச்சந்திரன். பத்திரிக்கைச் செய்தியின் வரைவைச் செப்பம் செய்து தந்தார் பெரியவர் திரு சௌந்தராஜன். எங்களது முயற்சியையும் ஆர்வத்தையும் அவர் அதிகம் பாராட்டினார். அவருக்கு நன்றிகூறினோம்.  

சந்தைத்தோப்பு புத்தர்

இதே நாளில் எங்களை மற்றொரு புத்தர் சிலையைப் பார்க்க அழைத்துச் சென்றார் திரு ராமச்சந்திரன். வேளாங்கண்ணி அருகே சந்தைத்தோப்பு என்னுமிடத்தில் அச்சிலை இருந்தது. அமர்ந்த நிலையில் இருந்த அச்சிலை தலையின்றி இருந்தது. 32" உயரமும், 22" அகலமும் இருந்த அச்சிலையின் கையிலிருந்த தர்ம சக்கரம் சிதைந்திருந்தது. மார்பில் ஆடை அழகாக இருந்தது. வலது கை கட்டை விரல் உடைந்திருந்தது. இந்த சிலையைப் பற்றிய செய்தியை பின்னர் தருவோம் என்று திரு ராமச்சந்திரன் கூறியதன் அடிப்படையில் மனதில் ஏதோ ஒரு குறையோடு அங்கிருந்து திரும்பினோம். அந்த புத்தரைப் பற்றி பின்னொரு பதிவில் காண்போம்.

11 மார்ச் 2019
11 மார்ச் 2019 அன்று, விஷ்வபாரதி மத்திய பல்கலைக்கழகத்தின் (சாந்திநிகேதன், கொல்கத்தா, மேற்கு வங்காளம்) தமிழ்த்துறையில் முனைவர் பட்ட ஆய்வு மேற்கொண்டு வரும் திரு தமிழ் சங்கர், தன் ஆய்வு தொடர்பாக என்னைக் காண வந்திருந்தார். அப்போது திரு இராமச்சந்திரன் அவர்களைத் தொடர்பு கொண்டு ஆய்வாளரை அவருக்கு அறிமுகப்படுத்தினேன். அப்போது அவரிடம் சந்தைத்தோப்பு புத்தர் தொடர்பாகப் பேசியபோது தேர்தலுக்குப் பின்னர் இது தொடர்பாக எழுதுவோம் என்றார். அவரிடம் பேசியது மன நிறைவினைத் தந்தது. பரந்த மனது கொண்ட அவருடைய ஆய்வுத்தாகம் எல்லையற்றது. அவருடைய ஆர்வத்திற்கு நன்றி கூறினேன்.   


நன்றி :
கிராந்தியில் புத்தர் சிலை இருப்பதைத் தெரிவித்து உடன் வந்த திரு க.இராமச்சந்திரன், களப்பணியின்போது உடன்வந்த திரு தில்லை கோவிந்தராஜன், கிராந்தி கிராம மக்கள், திரு சௌந்தரராஜன் பத்திரிக்கைச் செய்தி நறுக்கை அனுப்பி உதவிய திரு அனந்தபுரம் கோ.கிருட்டினமூர்த்தி, திருமதி செல்வராணி சரவணன் மற்றும் திரு வே.சித்திரவேலு 

பத்திரிக்கைச் செய்தியை கிராந்தியில் கண்டுபிடிக்கப்பட்ட புத்தர் சிலையைப் பற்றிய செய்தியை வெளியிட்ட கீழ்க்கண்ட பத்திரிக்கைகள் உள்ளிட்ட அனைத்து பத்திரிக்கைகள்.

நாகை அருகே புத்தர் சிலை கண்டெடுப்பு, தினமலர், 2.5.2013
நாகை அருகே பல நூற்றாண்டுகளுக்கு முந்தைய புத்தர் சிலை கண்டெடுப்பு, தினத்தந்தி, 2.5.2013
நாகை அருகே சோழர் கால புத்தர் சிலை, தினமணி, 2.5.2013
Chola era Buddha statue found, Deccan Chronicle, 5.5.2013

-----------------------------------------------------------------------------------------------------------------------
புத்தர் அறவுரை

சிற்றின்ப நாட்டத்துடன் வாழ்பவனும், புலனடக்கமற்றவனும், அளவறிந்து உண்ணாதானும், சோம்பலுடையவனும் முயற்சியற்றவனுமான ஒருவனை வலிமையற்ற மரத்தைப் பெருங்காற்று வீழ்த்துவது போல மாரன் வீழ்த்துவது உறுதி. -தம்ம பதம்  7
(தம்ம பதம், தமிழாக்கம்: நா.செயப்பிரகாசு, தமிழ்ப்பல்கலைக்கழகம், தஞ்சாவூர், 2002)  


In search of imprints of Buddha: Kiranthi, Nagapattinam district
On the basis of the information given by Mr.K.Ramachandran, myself alongwith Mr.Thillai Govindarajan went to Kiranthi in Nagapattinam district to find a Buddha in sitting posture. This is the very first time a Buddha statue, having clear Tamil inscription in the pedestal was found in Tamil Nadu. In Nagapattinam district Buddha statues were also found in Buddhamangalam, Kurumbur, Kutthalam, Perunjeri, Poompuhar and Pushpavanam. English version of the article will appear on 15th June.

-----------------------------------------------------------------------------------------------------------------------
கவிதை வடிவில் தம்ம பதம்

 
அண்மையில் நான் படித்த நூல் தமிழில் யாழன் ஆதி மொழிபெயர்த்துள்ள தம்ம பதம். இதற்கு முன் பிக்கு சோமானந்தா மொழிபெயர்ப்பினையும் (தம்ம பதம், மகாபோதி சொசைட்டி, சென்னை, 1996), நா.செயப்பிரகாசு மொழி பெயர்ப்பினையும் (தம்ம பதம், தமிழ்ப்பல்கலைக்கழகம், தஞ்சாவூர், 2002), Narada Thera மொழிபெயர்ப்பினையும் (The Dhammapada, Rpt and free distribution by The Corporate Body of the Buddha Educational Foundation, Taiwan, ROC, 1993) நான் படித்துள்ளேன். தம்மபதம், திரிபிடகங்களில் ஒன்றான சுத்தப்பிடகத்தில் ஐந்து பெரும் பிரிவுகளில் ஒன்றான குந்தக நியாகத்தின் ஒரு பகுதி. தம்ம பதம் நூலிலுள்ள கருத்துக்கள் அனைத்தும் புத்தரால் கூறப்பெற்றவை எனினும் அவையனைத்தும் இப்பொழுதுள்ள இதே வடிவத்தில் கூறப்பெற்றனவெனக் கொள்ளவியலாது. பிற மொழிபெயர்ப்புகளுக்கும் யாழன் ஆதியின் மொழிபெயர்ப்புக்கும் இடையேயான ஒரு வேறுபாடு, அவர் அதனை தமிழில் கவிதை நடையில், பொருண்மைகளை 26 தலைப்புகளாகப் பிரித்து எளிதாகப் புரியும்படி தந்துள்ளார். மழை புகும்/சரியாக வேயப்படாதக் கூரைக்குள்/ஆசைபுகும்/சரியாகப் பக்குவப்படாத/மனதுக்குள் (13), நீரினின்று எடுத்து/நிலத்தில் விடப்பட்ட மீன் துள்ளும்/மனமும் துள்ளும்/துள்ளுவதை/அடக்குவதே/நல்லது (34), பயனற்ற வார்த்தைகளால்/புனையப்பட்ட ஆயிரம்/ கவிதைகளைவிட/பயனுடைய ஒரு/கவிவரி/அமைதியை நல்கும் (101), வானம்/ பெருங்கடல் மையம்/மலைக்குகை/உலகில் வேறெந்த இடத்திற்குச் சென்றிடினும்/மரணத்தை அவர் வெல்லமுடியாது (128), தனிமையில் அமர்ந்து/ தனிமையில் இருந்து/தனிமையில் தியானிதது/தனிமையில்/அடக்கமாயிருப்பவர்/காட்டிலும் மகிழ்வர் (305), கண்களை அடக்குதல்/காதுகளை அடக்குதல்/ மூக்கை அடக்குதல்/நாவை அடக்குதல்/நல்லது நல்லது (360),  இன்சொல் பேசி/உண்மை உரைத்து/போதித்து/யாரையும்/தன் பேச்சால் புண்படுத்தாதவரே அறவோர் (408).   பல அரிய தத்துவங்களை சிறிய கவிதை நடையில் கொண்டுள்ளது இந்நூல் (தம்ம பதம், தமிழில் யாழன் ஆதி, புத்தர் ஒளி பன்னாட்டுப்பேரவை-சென்னைக்கிளை, சென்னை, 044-22291492).   [தமிழ்ப்பண்பாட்டில் பௌத்தம் என்ற தலைப்பில் 24.3.2013 அன்று சென்னையில் நடந்த பன்னாட்டுக்கருத்தரங்கில் கலந்து கொண்டு, கட்டுரை வழங்கியபோது பெறப்பட்ட அன்பளிப்பு] 

கீழ்க்கண்ட முகநூலில் கண்டுபிடிப்பு பற்றிய செய்திகளைக் காணலாம். 
http://www.facebook.com/buddhismincholacountry
11 மார்ச் 2019இல் மேம்படுத்தப்பட்டது.

Comments

 1. பல தகவல்களுடன் அரிய பகிர்வு...

  இணைப்புகளுக்கும் நன்றி...

  ReplyDelete
 2. தங்களின் அயரா பணி வியக்க வைக்கின்றது அய்யா. புத்தரால் தான் மழை பொழிகின்றது என்ற அப்பகுதி மக்களின் நம்பிக்கை மெய்யாகட்டும்.

  ReplyDelete
 3. கண்டெடுக்கப் பட்ட சிலைகள் பாதுகாப்பாக அருங்காட்சியகத்துக்குள் சேர்ப்பிக்கப் படுகிறதா.?

  ReplyDelete
 4. Anonymous03 June, 2013

  Dear Dr Jambulingam. I think that "A few generation back you born , worshipped and roled as a best disciple of Lord Buddha
  B.vijayan
  civilEngineer

  ReplyDelete
 5. தங்கள் முயற்சி தொடரட்டும். அந்தந்த ஊர் மக்களே இச்சிலைகளைப் பாதுகாக்கும் பணியை மேற்கொள்வது தான் சிக்கனமானது.

  ReplyDelete
 6. Anonymous11 June, 2013

  thangalin ariya uzhaippu naalukku naal puththam puthiya thahavalhalaik konduvandhu saerkkiradhu. mahizhchchiyum paaraattukkalum.- munaivar su.madhavan

  ReplyDelete
 7. சிறப்பான பதிவு அய்யா நன்றி

  ReplyDelete

Post a Comment