பௌத்த சுவட்டைத் தேடி : மீண்டும் புத்தமங்கலம்

டிசம்பர் 1999

என் ஆய்வின்போது  மேற்கொண்ட களப்பணியில் புத்தமங்கலம் என்ற பெயரில் மூன்று ஊர்களைக் காணமுடிந்தது. முனைவர் பட்ட ஆய்வினை அளித்த காலகட்டத்தில் இவற்றில் கீழ்வேளூர் அருகில் உள்ள புத்தமங்கலத்தில் ஒரு புத்தர் சிலையைக் கண்டேன். இச்சிலை அமைக்கப்பட்டுள்ள பீடத்தில் 'புத்தம் சரணம் கச்சாமி, சங்கம் சரணம் கச்சாமி, தர்மம் சரணம் கச்சாமி' என்ற சொற்றொடரைக் காணமுடிந்தது. இப்பெயரில் உள்ள ஊர்களில் இங்கு மட்டுமே புத்தர் சிலை உள்ளது. 
புத்தமங்கலம் புத்தர் கோயில் (1999), புகைப்படம் :  பா.ஜம்புலிங்கம்



புத்தமங்கலம் புத்தர் (1999), புகைப்படம் :  பா.ஜம்புலிங்கம்


செப்டம்பர் 2021
1999க்குப் பின்னர், முன்னர் பார்த்த அச்சிலை மறுபடியும் காண்பதற்காக களப்பணி மேற்கொண்டேன்.  தஞ்சாவூரிலிருந்து திருவாரூர் வழியாக கீழ்வேளூர் சென்று அங்கு தேரடியை ஒட்டி அமைந்துள்ள சாலையில் புத்தமங்கலத்திற்குச் சென்றேன். சுமார் 2 கி.மீ. தூரம்.முந்தைய களப்பணி நினைவிற்கு வந்தது. அப்போது சிறிது தூரம் சேறும் சகதியுமாக நடந்து போகச் சிரமப்பட்டுச்சென்றேன்.  இப்போதும் சற்றொப்ப அதே அனுபவம். ஒரு கி.மீ. நடந்து சென்றபின், அங்கு சாலை அமைக்கும் பணி நடைபெற்றுவருவதால் நடக்க சிரமப்பட்டேன். வழக்கம் போல சிலை உள்ள இடத்தை விசாரித்தபோது  அனைவரும்  "வெளிநாட்டுக்காரர்கள் வருவார்களே? அந்தப் புத்தர் கோயிலுக்குத்தானே?" என்று கேட்டனர். "போகும் வழியில் நாய்கள் அதிகமாக இருக்கும் கவனமாகச் செல்லுங்கள்" என்று கூறினர். 

பள்ளிக்காலத்தில் நான் நாய்க்கடியால் அவதிப்பட்டுள்ளேன். ஆதலால் எனக்கு நாயைக் கண்டாலே ஒவ்வாமை. என்னைக் கடித்த நாய் உயிருடனும், எந்த பாதிப்புமின்றி இருந்தால்தான் எனக்கு நல்லதாம், இல்லாவிட்டால் என் உடல் நலன் பாதிக்கும் என்று கூறி என்னுடைய ஆத்தா அந்த நாய் உயிருடன் இருக்கிறதா என்று தினமும் போய்ப் பார்த்துவந்ததெல்லாம் நினைவிற்கு வந்தது. மிகவும் கவனமாகச் சென்றேன். சென்றவழியில் நாய்கள் என்னைப் பார்த்தபோது அதைப் பார்க்காததுபோலவே நடந்து சென்றேன். ஒருவழியாகக் கோயிலை நெருங்கினேன். 




இப்போது பராமரிப்பின்றி அக்கோயில் இருந்ததைக் காணமுடிந்தது. அவ்விடத்திற்குச் சென்று உள்ளே புத்தரைக் காண்பது மிகவும் சிரமமாக இருந்தது. உள்ளே சென்றேன். வழக்கம்போல் புத்தர் அமைதியுடன் இருந்தார். அவரைக் கண்டதும் மன நிறைவு. சோழ நாட்டுப் புத்தர் சிலைகளில் முகம் முற்றிலும் தோய்ந்து அடையாளம் தெரியாமல் இருப்பது இச்சிலைதான்.  அதற்கு முன்பாக நான் எடுத்துச்சென்றிருந்த துணியை வைத்து சிலையையும், சிலையுள்ள மேடையையும், சிலைக்குப் பின்னும் சுத்தமாகத் துடைத்தேன். அருகிலுள்ள வீட்டில் தண்ணீர் கேட்டேன். ஒரு பெரிய பிளாஸ்டிக் பக்கெட்டில் தண்ணீரும், ஒரு மக்கும் தந்தார்கள். தண்ணீரால் சிலையைச் சுத்தமாகக் கழுவி, பின்னர் புகைப்படம் எடுத்தேன். 

புத்தமங்கலம் புத்தர் கோயில் (2021), புகைப்படம் :  பா.ஜம்புலிங்கம்

புத்தமங்கலம் புத்தர் கோயில் (2021), புகைப்படம் :   பா.ஜம்புலிங்கம்

புத்தமங்கலம் புத்தர் கோயிலில் புத்தருடன் ஆய்வாளர் (2021)

பீடத்தில் அமர்ந்த நிலை, தியான கோலம், தலையில் ஞானத்தை உணர்த்தும் தீச்சுடர், பரந்த மார்பு, திண்ணிய தோள்கள், மார்பிலும் இடுப்பிலும் ஆடை, நெற்றியில் திலகக்குறி, வலது உள்ளங்கையில் தர்மசக்கரக்குறி ஆகியவற்றுடன் அச்சிலை இருந்தது. 


சிலையைப் பார்க்கவும், சுத்தம் செய்யவும் உதவிய உள்ளூர் மக்களுக்கு நன்றி கூறினேன். இக்கோயில் முன்பிருந்த பொலிவை மறுபடியும் பெற வேண்டும் என்ற விழைவுடன் அங்கிருந்து கிளம்பினேன், அஸ்தமனமாகும் சூரியனை ரசித்துக்கொண்டே.   
------------------------------------------------------------------------------------------------

மும்பையிலிருந்து வெளிவருகின்ற கால நிர்ணய் 2025 காலண்டரில் என் கட்டுரை வெளியாகியுள்ளது. அதனைப் பகிர்வதில் மகிழ்கிறேன், கால நிர்ணய்க்கு நன்றியுடன்.

புத்தரைத் தேடிப் புத்தமங்கலம் பயணம்





நன்றி: கால நிர்ணய் 2025 நாள்காட்டி, மும்பை

25 டிசம்பர் 2024இல் மேம்படுத்தப்பட்டது.

Comments

  1. தொடர்ந்து உங்கள் கடின உழைப்பால் எங்களுக்கு அரிய தகவல்களைத் தருகிறீர்கள்..மிக்க நன்றி ஐயா.
    சிலையை நீங்கள் சுத்தம் செய்ய நினைத்தது பெரிது..அதற்கு நீரும் கொடுத்து உதவிய ஊர் - மிகச் சிறப்பு.

    ReplyDelete
  2. சிறப்பான பணி. உங்கள் ஆர்வமும் செயலாக்கமும் பாராட்டுக்குரியவை ஐயா.

    ReplyDelete
  3. ஆய்தலும் சிறப்பு; ஆவணமும் சிறப்பு

    ReplyDelete

Post a Comment