மாமனிதர் திரு ச.அப்பாண்டைராஜ்

தஞ்சாவூர் கோட்டை அமரர் திரு. சக்கரவர்த்தி முதலியார் இளைய மகன் அன்பகம் என்று எல்லோராலும் அழைக்கப்படுகின்ற, தஞ்சாவூர் ஜினாலயத்தின் அறங்காவலரும், ஏடகம் அமைப்பின் பெரும் புரவலரும் பொறுப்பாளருமான திரு அப்பாண்டைராஜ் ஐயா அவர்கள் இறந்த செய்தி எங்களுக்கெல்லாம் பேரதிர்ச்சியைத் தந்துள்ளது.

அவருடன் பழகிய அனைவருமே அவருடைய மென்மையான பேச்சு, கனிவான குணம், பழகும் இனிய பாங்கு போன்றவற்றை அறிவார்கள். அனைவரிடமும் மிகவும் அன்பாகப் பழகுவார். ஒருமுறை அவரிடம் பேசியவர்கூட அவரை என்றும் மறக்கமாட்டார்கள். அவர் ஏடகம் அமைப்பிற்கும், பழகிய என்னைப் போன்ற பலருக்கும் ஒரு பக்கபலமாக இருந்துவந்துள்ளார். சுறுசுறுப்பினையும், எப்பணியையும் ஏற்கும் துணிவையும் அவரிடமிருந்து நாங்கள் கற்றுக்கொண்டோம். வயதுவேறுபாடு பார்க்காமல் களத்தில் இறங்கி உழைக்கும் பெருமகனார்.

பணியில் தொய்வு ஏற்படும்போதெல்லாம் அவர் தந்த ஊக்கமானது எங்களை புத்துணர்ச்சியோடு முன்னெடுத்துச்செல்ல மிகவும் உதவியாக இருந்தது. எந்தவொரு சிரமமான சூழலையும் மாறாப்புன்னகையோடு எதிர்கொள்வார். நடக்கமுடியாது, சிரமம் என்று நாங்கள் நினைத்த பல பொறுப்புகளை தானே முன்னின்று நடத்திச் சென்றார். இவரால் இதெல்லாம் எப்படி சாத்தியமாகிறது என்று நாங்கள் அடிக்கடி பேசிக்கொள்வோம். அவருடன் பழக ஆரம்பித்தவுடன் எப்பணியையும் நிறைவாக முடிக்கலாம் என்ற ஓர் இனந்தெரியாத துணிவு ஏற்பட்டது.

19 நவம்பர் 2017இல் அவருடைய தலைமையில் சுரைக்குடிப்பட்டி, ஒரத்தூர், நாட்டாணி உள்ளிட்ட இடங்களுக்கு மரபு நடை மேற்கொண்டபோது பல அரிய செய்திகளைக் கற்றுக்கொள்ளும் வாய்ப்பு எங்களுக்குக் கிடைத்தது. ஆழமான செய்திகளை அனாயசமாகவும், எளிதில் புரிந்துகொள்ளும்படியும் அவர் கூறியவிதம் எங்களை வியக்கவைத்தது. பயணத்தைத் தொடங்கிய விடியற்காலை நேரத்தில் இருந்த அதே சுறுசுறுப்பினை பயண நிறைவின்போதும் கண்டோம்.










அவர், தொண்டை நாட்டில் சமணம், செஞ்சிப்பகுதியில் சமணம், நடுநாட்டில் சமணம், பாண்டிய நாட்டில் சமணம், மதுரையில் சமணம், செஞ்சியில் சமணம், குமரிப்பகுதியில் சமணம் என தமிழகத்தில் சமணம் தொடர்பான பல தடயங்களை பல்வேறு ஆராய்ச்சியாளர்கள் நூலாக வெளிக்கொணர்ந்தபோதும், தஞ்சைப்பகுதியில் சமணம் குறித்த நூல் வெளிக்கொணர வேண்டும் என்ற ஏக்கம் இருந்ததாகக் கூறியிருந்தார். அவருடைய வாழ்த்துடன் அந்த நூல் வெளிவந்தது. அதில் நாங்கள் பங்காற்றியிருப்பது எங்களுக்குக் கிடைத்த பெரும் பேறாகும். நூல் அச்சாக்கத்தின்போது இப்பகுதியில் ஜினாலயங்களுக்கு அவருடன் செல்கின்ற அரிய வாய்ப்பினை நூலாசிரியர்கள் என்ற நிலையில் நானும், மணி.மாறனும், தில்லை.கோவிந்தராஜனும் பெற்றோம். தஞ்சையில் சமணம் நூல் வெளிவருவதற்காக அவர் எடுத்துக்கொண்ட முயற்சி எங்களுக்கு மிகவும் துணையாக இருந்தது. 28 ஜூன் 2018இல் இந்நூல் வெளியிடப்பட்டது.


தொடர்ந்து தஞ்சாவூர் ஜினாலயத்தில் நடைபெற்ற விழாவில் எங்களைப் பாராட்டி மகிழ்ந்தார். அவருடைய பேச்சு எங்களுக்குப் பெரும் ஊக்கத்தைத் தந்தது.



சமூக வலைத்தளங்களில் அன்னாரைப் பற்றி நண்பர்கள் எழுதியுள்ள பதிவுகளைப் படித்தபோது அவரைப் பற்றி மேலும் அதிகமாக அறியமுடிந்தது. சாதிக்க வேண்டும் என்று தொடர்ந்து பணியாற்றிக்கொண்டிருந்த அவர் என் போன்றோருக்கெல்லாம் ஒரு முன்மாதிரியாகவே திகழ்கின்றார்.

உங்கள் புன்சிரிப்பு என்றும் எங்கள் மனதில் இருந்துகொண்டே இருக்கும். உங்களுடைய ஆசியுடன் நாங்கள் பணிகளைத் தொடர்ந்து மேற்கொள்வோம் ஐயா.

இந்த அஞ்சலிப்பதிவு முக்குடை ஜூன் 2024 இதழில் வெளியானது.




24 ஜூன் 2024இல் மேம்படுத்தப்பட்டது.

Comments

  1. ஐயாவுக்கு, எமது ஆழ்ந்த அனுதாபங்கள்.

    ReplyDelete
  2. Anonymous06 May, 2024

    இழப்பில் வாடுகிறோம்.

    ReplyDelete
  3. வாசுகி06 May, 2024

    எனக்கு தஞ்சையில் சமணம் புத்தகம் வழங்கினார். நான் அதை படித்துவிட்டு உங்களிடம் கூட நான் சில சந்தேகங்கள் கேட்டுள்ளேன் ஐயா. நீங்கள் பௌத்தம் குறித்து பேச சென்னை பல்கலைக்கழகம் வந்த போது நாம் பேசினோம். சுரக்குடிபட்டி, நட்டாணி, ஒரத்தூர் சென்ற ஆண்டு நான் சென்று வந்துவிட்டு அவரிடம் பேசினேன். என்னை மிகுந்த ஊக்கப்படுத்தும் அவரை இழந்தது மிக வருத்தமாக உள்ளது. தங்கள் பதிவு அவருக்கு நாம் செய்யும் அஞ்சலி ஐயா.‌
    வாசுகி

    ReplyDelete
  4. Anonymous06 May, 2024

    ஓம் சாந்தி
    தஞ்சை கோயில் நிர்வாகத்தில், மேலாண்மை திறனால், வைப்பு நிதி உருவாக்கி தடம் பதித்தவர்.
    தீபன்குடியில் தீப விழா தொடங்கி அதை நல் ஞான விழாவாகக்கி, கோயில் புதுப்பிற்கு வழி வகுத்தார்
    சோழ மண்டல முகவரி புத்தகம் வெளியிட்டில் அவரது பங்கு மகத்தானது.

    ReplyDelete
  5. Anonymous06 May, 2024

    அனுமந்தகுடி ஸ்ரீபார்சுவநாத பகவானை சித்திரை மாதம் முதல் நாளன்று தரிசிக்கச் செல்வது என்று தீர்மானித்து தஞ்சை சமணர்களை ஒருங்கிணைத்து அழைத்துச் சென்றதும் ஈண்டு நினைவு கூரத்தக்கது.

    ReplyDelete

Post a Comment