மிகச் சிறந்த பொக்கிஷம்: முனைவர் க. ரவிக்குமார்

என்னுடைய சோழ நாட்டில் பௌத்தம் (புது எழுத்து, காவேரிப்பட்டிணம், 2022, அலைபேசி 98426 47101) நூலைப் பற்றிய, முனைவர் க.ரவிக்குமார் அவர்களின் மதிப்புரையைப் பகிர்வதில் மகிழ்கிறேன், அவருக்கு நன்றியுடன்.

************

ஏப்ரல் 2023 களப்பணியில் நூலாசிரியருடன் க.ரவிக்குமார்

தமிழகத்தில் புத்தர் சிலைகளை பற்றி ஆய்வு செய்வதற்கு மிகச் சிறந்த பொக்கிஷமாக விளங்குகிறது முனைவர் பா.ஜம்புலிங்கம் அவர்கள் எழுதியுள்ள சோழ நாட்டில் பௌத்தம்.

         அசோகர் காலத்தில் பௌத்தம் தமிழகத்தில் பரவிய விதத்தை அசோகரின் சாசனங்கள், தமிழ் இலக்கியங்கள் வாயிலாகவும் பௌத்த பள்ளிகள் விகாரங்கள் ஏற்படுத்தப்பட்டு  மதுரை,  காவிரிப்பூம்பட்டினம் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய பகுதியில் சிறப்புடன் இருந்தமையை கூறிய விதம் மிகவும் அருமையாக இருந்தது.  வெளிநாட்டவர் குறிப்புகள், கல்வெட்டுகள், செப்பேடுகள் உள்ளிட்ட சான்றுகள் பூம்புகார் மற்றும் நாகப்பட்டினம் புத்த விகாரங்கள்  மூலமாக புத்த மதம் இப்பகுதியில் செழிப்புடன் இருந்தமையை  இந்நூல் வாயிலாக அறிய முடிகிறது.

        முதலாம் ராஜராஜன் காலத்தில் சூடாமணி விகாரம் அமைப்பதற்காக ஆனைமங்கலம் ஊரை வழங்கியதையும் முதலாம் இராஜேந்திரன் மற்றும் முதலாம் குலோத்துங்கன் காலத்தில் இவ்விகாரம் சிறப்புடன் திகழ்ந்தது என்பதை லெய்டன் செப்பேடுகள் மூலமாக அறிய முடிகிறது.

         நாகப்பட்டினத்தில் 350 புத்த செப்பு திருமேனிகள் முதலாம் ராஜராஜன் மற்றும் முதலாம் ராஜேந்திரன் ஆகியோர் காலத்தை சார்ந்தவை என்பதை இந்நூல் மூலமாக அறிய முடிகிறது. அது மட்டுமில்லாமல் இந்திய மற்றும் வெளிநாட்டு அருங்காட்சியகங்கள், தமிழகப் பகுதியில் உள்ள தஞ்சாவூர், அய்யம்பேட்டை, செல்லூர், ரெட்டிப்பாளையம், நாகப்பட்டினம்பேராவூரணியில் காணப்படும் புத்தர் செப்பு திருமேனிகள் அமர்ந்த மற்றும் நின்ற நிலையிலும் காணப்படுகிறது என்பதை இந்நூல் விரிவாக விளக்குகிறது. நாகப்பட்டினம் புத்தர் செப்பு திருமேனிகள் பல அருங்காட்சியங்களில் காணப்படும் இடங்களை கூறிய விதம் புதிய தகவலாக உள்ளது.

     பொ.ஆ.16ஆம் நூற்றாண்டில் திருவிளந்துறை பெருஞ்சேரியில் புத்த கோயிலில் இருந்ததையும் புத்தமங்கலம், மங்களம் ஆகிய இடங்களில் காணப்படும் புத்தர் சிலைகள் மூலமாக அசோகர் காலம் முதல் தற்காலம் வரை பௌத்தம் சிறந்து விளங்கியதை எடுத்தியம்பியது அருமை.

        தஞ்சாவூர் பெருவுடையார் கோயில், தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோயில், திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி கோயில் ஆகிய கோயில்களின் சுவர்களில் காணப்படும் புத்தர் சிற்பங்கள் காணப்படுவது இந்நூல் மூலமாக புதிய தகவல்களாக உள்ளது.

           சோழ நாட்டில் பௌத்தம் செழித்து இருந்தமையை ஐயா அவர்களின் களப்பயணம் மூலமாக தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருச்சி, அரியலூர்பெரம்பலூர் மற்றும் புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் பல்வேறு பகுதிகளில் அமர்ந்த நிலையில் புத்தர் சிலைகள் கண்டுபிடிக்கப்பட்டது மற்றும் இச்சிலைகளைப் பற்றி அதன் தனிச்சிறப்புகளுடன் விரிவாக கூறிய விதம் மிகவும் சிறப்பாக உள்ளது.

         குளித்தலை குண்டாங்கல் கல்பாறை, திருநாகேஸ்வரம், பெருமத்தூர்,  பென்னகோணம் ஆகிய இடங்களில் காணப்படக்கூடிய சமண தீர்த்தங்கரர் சிலைகளை இந்நூல் விரிவாக ஆராய்கிறது.

        சோழ நாட்டிலுள்ள புத்தர் சிலைகள் மற்றும் பௌத்த மையங்கள் பொ.ஆ.10 ஆம் நூற்றாண்டு முதல் 13ஆம் நூற்றாண்டு வரையிலான காலத்தை சேர்ந்தவையாக உள்ளது என்பதையும், இன்றும் பல்வேறு இடங்களில் வழிபாட்டிலும், அருங்காட்சிகளிலும் வெவ்வேறு  பெயர்களில் காணப்படுகிறது என்பதை இந்நூல் மூலமாக அறிய முடிகிறது. சோழமண்டலம் மிகச் சிறந்த பௌத்த மையமாக திகழ்ந்தது என்பதை இறுதியாக அறிய முடிகிறது.

              இறுதியாக, பௌத்த சமயத்தை மீட்டுருவாக்கம் செய்வதில் இந்நூல் மிக உதவியாக இருக்கும் என்பதை உணர முடிகிறது.



21 டிசம்பர் 2024இல் மேம்படுத்தப்பட்டது.

Comments

  1. சிறப்பான விமர்சனம்.
    வாழ்த்துகள் ஐயா

    ReplyDelete

Post a Comment