சோழ நாட்டில் பௌத்தம் : நூல் மதிப்புரை : இ. ஜெயபிரகாஷ்

என்னுடைய சோழ நாட்டில் பௌத்தம் (புது எழுத்து, காவேரிப்பட்டிணம், 2022, அலைபேசி 98426 47101) நூலைப் பற்றிய, முனைவர் இ.ஜெயபிரகாஷ் அவர்களின் மதிப்புரையைப் பகிர்வதில் மகிழ்கிறேன், அவருக்கு நன்றியுடன்.
************

வெள்ளனூர் புத்தருடன் ஜெயபிரகாஷ் 




ஆய்வின் ஊடாக வெளிவந்துள்ள "சோழநாட்டில் பௌத்தம்" என்ற ஆய்வுப்புத்தகம் நம் கவனத்தைப் பெரிதும் ஈர்த்துள்ளது.

இவர் தனது ஆய்வியல் நிறைஞர் பட்டத்திற்காக தஞ்சாவூர் மாவட்டத்தை முதன்மைப்படுத்தி பௌத்தம் சார்ந்த ஆய்வை "Buddhism in Tamilnadu with special reference to Thanjavur district" என்ற தலைப்பில் நிகழ்த்தி, மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தில் 1995ஆம் ஆண்டு பட்டம் பெற்றார்.

"சோழநாட்டில் பௌத்தம்" என்ற தலைப்பில் ஆராய்ச்சியை மேற்கொண்டு 1999ஆம் ஆண்டு தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார். இவ்வாறு கல்விப்புலம் சார்ந்து ஏறக்குறைய பத்தாண்டுகள் பௌத்தம் சார்ந்த ஆய்வில் பா.ஜம்புலிங்கம் ஈடுபட்டுள்ளார்.

கல்விப்புலம் சார்ந்த ஆய்வுக்காலம் நிறைவுற்ற பிறகும் தொடர்ந்து பௌத்த ஆய்வில் ஈடுபட்டு வருகிறார் என்பதும் கவனிக்கத்தக்கது. எனவே, ஏறக்குறைய முப்பதாண்டுகளாக தொடராய்வின் ஊடாக கடுஞ்சிரத்தையான ஆய்வை விடாமுயற்சியுடன் ஆய்வுசெய்து வருபவர் முனைவர் பா. ஜம்புலிங்கம் என்றால் அது மிகையாகாது. இத்தகைய நீண்ட காலத்தின் ஊடாக அவர் மேற்கொண்ட ஆய்வு "சோழநாட்டில் பௌத்தம்" என்ற ஆய்வுப்புத்தகமாக நம்மிடையே வந்திருப்பது ஒரு திருவிழாதான்!

தமிழ்நாட்டு நிலப்பரப்பு சார்ந்தவற்றோடு பௌத்தம் தொடர்பான பேரியல் மற்றும் நுண்ணியல் ஆய்வுகள் கடந்த ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக ஆங்கிலத்திலும் தமிழ்மொழியிலும் தொடர்ந்து வெளிவந்துள்ளன. இந்த வரிசையில் பிராந்திய நிலப்பரப்பு சார்ந்து தனித்த அடையாளத்தோடு "சோழநாட்டில் பௌத்தம்" வெளிவந்திருப்பது சிறப்புக்குரியது.

இந்நூலில் உள்ள பௌத்த விகாரங்கள் மற்றும் கோயில்கள், நாகப்பட்டினப் புத்தர் செப்புத் திருமேனிகள், புத்தர் சிற்பங்கள், புத்தர் சிலைகள் ஆகிய தலைப்பில் அமைந்த உள்ளடக்கப் பிரிவுகள் ஆய்வோடு மிக நெருக்கமானவை. ஆய்வாளர் மேற்கொண்ட களப்பணியின் ஊடான சிரத்தையான ஆய்வை இப்பகுதிகளில் காணுவதே இவ்வாய்வின் உயிரோட்டத் தன்மையை வெளிப்படுத்தும்.

தனது ஆய்வின் ஊடாக ஆய்வாளர் முதன் முதலில் பதினேழு இடங்களைச் சேர்ந்த புத்தர் சிலைகளைக் கண்டுபிடித்திருப்பது இவ்வாய்வின் மிகச் சிறந்த அம்சமாகும். இவருக்குப் பிந்தைய ஆய்வாளர்கள் இது பற்றிய இருட்டடிப்பு செய்வதும் குறிப்பிடத்தக்கது.

இவ்வாய்வில் ஆய்வுப்பரப்பிற்குள் கிடைத்த புத்தர் சிலைகளின் உருவத்தோற்றம், வடிவமைப்பு பற்றி கூறுவது மிக முக்கியமானதாக இருக்கிறது என்றால் சில இடங்களில் புத்தர் சிலைக்குப் பின்பற்றப்படும் பண்பாட்டு முறைகளை ஆய்வாளர் பதிவு செய்திருப்பது மேலும் இவ்வாய்வுக்கு முக்கியத்துவத்தைக் கூட்டிச்செல்கிறது. இது புத்தர் சிலைகளை மையப்படுத்தி பௌத்தப் பண்பாட்டைக் கட்டமைபதற்கு அடிப்படையாக இருக்கிறது எனலாம். புத்தர் சிலைகளுக்கு சில இடங்களில் வழங்கப்படும் வெவ்வேறு பெயர்களையும் ஆய்வாளர் பதிவு செய்திருப்பது தமிழ்ப்பௌத்தம் சார்ந்த ஆய்வுப்போக்கிற்கும் வழிவகுக்கிறது.

மயிலை சீனி. வேங்கடசாமி கும்பகோணம் விநாயகர் கோயிலில் உள்ள ஒரு புத்தர் சிலையைப் பற்றி குறிப்பிட்டுள்ளார். இச்சிலையைப் பற்றி ஆய்வாளர் ஜம்புலிங்கம் "புத்தர் சிலைக்குரிய சிறப்புக்கூறுகள் இல்லாததால் இச்சிலை புத்தர் சிலை இல்லை என்பது தெளிவாகிறது" (ப.167) என்று குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாகா இவர் அளித்துள்ள புகைப்படத்தைக் காண்கிறபோது இச்சிலை புத்தர் சிலை என்று அறியமுடிகிறது. ஆய்வாளர் இச்சிலையின் தோற்ற வடிவத்தை தான் கண்ட மற்ற புத்தர் சிலைகளுடன் ஒப்பிட்டதன் விளைவாக இக்கருத்திற்கு வந்துள்ளார் எனலாம். இச்சிலை தோற்ற வடிவத்தில் இப்பகுதியில் உள்ள மற்ற சிலைகளில் மாறுபட்டிருந்தாலும், இவ்வாறு மாறுபட்டிருப்பதே இப்புத்தர் சிலையின் சிறப்பம்சம் எனலாம். ஆய்வாளர் பா. ஜம்புலிங்கம் அவர்கள் இது குறித்த மறுபரிசீலனையை அல்லது மறு ஆய்வை செய்வார் என்று எதிர்பார்க்கிறேன்.

சோழநாட்டில் பௌத்தம் என்ற இவ்வாய்வில் சுரேஷ் B. பிள்ளை அவர்களின் Introduction to the study of Temple Art என்ற புத்தகத்தை நேரடியாகப் பயன்படுத்தி இருந்தால் கோட்பாட்டு ரீதியிலான பௌத்தம் சார் கட்டமைப்புக்கு வழிவகுத்திருக்கும் என்று எண்ணுகிறேன்.

ஆய்வாளர் முனைவர் பா. ஜம்புலிங்கத்தின் "சோழநாட்டில் பௌத்தம்" நூல் சிறப்பாக உள்ளது. என் போன்ற ஆய்வாளர்களுக்கு ஒரு வழிகாட்டி நூலாகத் திகழ்கின்றது. சோழநாட்டில் பௌத்தம் என்ற நூலைப் புரிந்துகொள்வதற்கு அவருடைய களப்பணி அனுபவம் விரிவாக எழுதப்பட்டு தனி நூலாக வரவேண்டும்.

நவீனகால பௌத்தக் கட்டமைப்பில் கள ஆய்வு தவிர்க்க முடியாததாகவும் இன்றியமையாததாகவும் இருந்து வருகிறது. அதை செம்மையுற செய்த முனைவர் பா. ஜம்புலிங்கம் அவர்களின் களப்பணி அனுபவம் என்னைப் போன்ற ஆய்வாளர்களுக்கு அனுபவத்தையும் ஊக்கத்தையும் அளிக்கும் என்ற எண்ணத்தில் அவருடைய களப்பணி அனுபவம் விரைவில் நூலாக வரவேண்டும் என்ற கோரிக்கையை ஆய்வாளரிடம் வைத்துக்கொள்கிறேன்.

பணி ஓய்வுக்குப் பிறகும் ஆய்வுக்கு ஓய்வு தராத முனைவர் பா. ஜம்புலிங்கம் அவர்களுக்கு வாழ்த்துகள். இவருடைய இவ்வாய்வு மேலும் பல ஆய்வுகளுக்குக் களம் அமைத்துக் கொடுத்திருக்கிறது. புத்தர் சிலைகள் பற்றி ஆய்வுமேற்கொள்ளும் புதிய ஆய்வாளர்களுக்கு அவரே முனமுவந்து வழிகாட்டுவதும் வழிப்பாதையைக் காட்டுவதும் அவரின் ஆய்வின் நேர்மையைக் கடந்த ஆய்வின் மகோன்னதமாகும். காலம் சொல்லும் ஆய்வாளருக்கு வாழ்த்துகள்! 

Comments

  1. அருமை ஐயா... வாழ்த்துகள்...

    ReplyDelete
  2. அருமையான விமர்சனம். வாழ்த்துகள் ஐயா

    ReplyDelete
  3. சிறப்பு ஆய்வாளர் இருவருக்கும்

    ReplyDelete
  4. அருமை இருவருக்கும் வாழ்த்துகள்

    ReplyDelete

Post a Comment