பௌத்த சுவட்டைத் தேடி : திருக்கோயில்பத்து

மார்ச் 2015

தஞ்சாவூர் மாவட்டம் அம்மாப்பேட்டை அருகில் திருக்கோயில்பத்து என்னும் இடத்தில் ஒரு புத்தர் சிலையை வரலாற்றறிஞர் முதுமுனைவர் குடவாயில் பாலசுப்ரமணியன் கண்டுபிடித்த செய்தி நாளிதழில் வெளியானது. பழமையான சிவன் கோயிலின் புதுப்பித்தலின்போது அச்சிலை கண்டுபிடிக்கப்பட்டதாக அதில் கூறப்பட்டிருந்தது. அச்சிலையைக் காணும் நாளுக்காக ஆவலோடு காத்திருந்தேன்.

31 டிசம்பர் 2021
அந்தப் புத்தரைக் காண நண்பர் கரந்தை ஜெயக்குமாரும் நானும் பயணித்தோம். தஞ்சாவூரிலிருந்து சாலியமங்கலம், அம்மாப்பேட்டை வழியாகச் சென்றோம். அம்மாப்பேட்டையின் வலது புறத்தில் செல்லும் சாலை இரு பிரிவாகப் பிரிகிறது. வலது புறச்சாலை திருக்கோயில்பத்தினை நோக்கியும், இடது புறச்சாலை அருந்தவபுரத்தை நோக்கியும் செல்கின்றன. அம்மாப்பேட்டையிலிருந்து சுமார் 5 கி.மீ. தொலைவிலுள்ள கோயில்பத்து என்றழைக்கப்படுகின்ற திருக்கோயில்பத்து என்னும் இடத்திற்குச் சென்றோம். 
 















அங்குள்ள வஜ்ரபுரீஸ்வரர் கோயில் எனப்படுகின்ற சிவன் கோயிலின் திருப்பணி தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. கோயிலின் வலது திருச்சுற்றில் தலையில்லாத புத்தர் சிலை இருந்தது. (சிலை சிகப்பு வண்ண வட்டமிட்டு காட்டப்பட்டுள்ளது) 69 செ.மீ. உயரமுள்ள இச்சிலை பிரபை, பரந்த மார்பு, திண்ணிய தோள்கள், கழுத்தில் திரிவாலி எனப்படுகின்ற மூன்று மடிப்புகள், மடியில் இடது உள்ளங்கையின்மீது வானோக்கிய நிலையில் வலது உள்ளங்கையில் தர்மசக்கரக்குறி, மார்பிலும் இடுப்பிலும் ஆடை ஆகிய சிற்பக்கூறுகளுடன் இருந்தது. 

தஞ்சாவூர் மாவட்டத்தில் அருந்தவபுரம், கோபிநாதப்பெருமாள்கோயில், சோழன்மாளிகை, திருவலஞ்சுழி, பட்டீஸ்வரம், பெரண்டாக்கோட்டை, மணலூர், மதகரம், மாத்தூர், மானம்பாடி, முழையூர், விக்ரமம், வையச்சேரி ஆகிய இடங்கள் புத்தர் சிலைகள் உள்ள/இருந்த இடங்களாகும்.

சமயக் காழ்ப்புணர்வும், கலை ரசனையில்லா நிலையும் ஓர் அழகான சிலை சிதைந்திருப்பதற்குக் காரணங்களாக இருந்தன. வேதனையாக இருந்தது. காரணமாக தலையில்லாத புத்தரைப் பார்த்துவிட்டு சற்றே கனத்த மனத்துடன் அங்கிருந்து திரும்பினோம், தஞ்சாவூரை நோக்கி. 

நன்றி : 
உடன் வந்ததோடு, காணொலிப்பதிவினை உருவாக்கி வெளியிட்ட நண்பர் கரந்தை ஜெயக்குமார் அவர்களுக்கு. 

27 நவம்பர் 2023இல் மேம்படுத்தப்பட்டது.

Comments

  1. மிகவும் வருத்தமாக உள்ளது...

    ReplyDelete
  2. முனைவர் அவர்களோடு கரந்தையார் அவர்கள் பணியும் இணைந்தது பெருமையே...

    காணொலிக்கு சென்று வந்தேன்.

    ReplyDelete
  3. தங்களோடு இணைந்து பயணிக்க கிடைத்த வாய்ப்பினை எண்ணி மகிழ்கிறேன் ஐயா

    ReplyDelete
  4. தலையில்லா புத்தர் சிலை.... வேதனை. சிற்பங்களை, புராதனச் சின்னங்களை அழிக்கும் எண்ணம் ஏனோ அந்த மாக்!

    ReplyDelete
  5. தங்களுடன் இணைந்து களப்பணிகள் செய்வதற்கு நாங்கள் கொடுத்து வைக்கவில்லை அய்யா..
    உங்கள் களப்பணி சிறக்க வாழ்த்துக்கள் அய்யா..

    ReplyDelete
  6. பௌத்த சுவட்டைத் தேடி : திருக்கோயில்பத்து - உங்களது சிரத்தைக்கு பாராட்டுகள். எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி சார் முனைவர் ஜம்புலினக்ம் - சோழ நாட்டில் பௌத்தம்
    BUDDHISM IN THE CHOLA NADU

    ReplyDelete
  7. Please make a heritage walk for Buddhism monuments in Thanjavur sir

    ReplyDelete

Post a Comment