சோழ நாட்டில் பௌத்தம் களப்பயண அனுபவங்கள் : வியாழன் வட்டம்
தஞ்சாவூர், தமிழ்ப் பல்கலைக்கழக அயல்நாட்டுத் தமிழ்க்கல்வித்துறை சார்பாக வியாழ வட்ட ஆய்வரங்கக் கட்டுரைத் தொகுப்பான வாவி நூல் வெளியீட்டு விழாவும், “சோழ மண்ணில் பௌத்தம் : களப்பயண அனுபவங்கள்” என்ற தலைப்பிலான வியாழ வட்டச் சிறப்பு ஆய்வளிக்கை நிகழ்வும் 12.9.2024இல் தமிழ்ப் பல்கலைக்கழக பனுவல் அரங்கில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் வாவி நூலை வெளியிடும் அரிய வாய்ப்பினைப் பெற்றேன். இது, என்னுடைய சோழ நாட்டில் பௌத்தம் நூல் வெளியீட்டிற்கு அடுத்து நான் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் கலந்துகொண்ட இரண்டாவது நிகழ்வாகும். நூல் வெளியீட்டிற்குப் பிறகு களப்பயண அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டேன்.
ஒருங்கிணைந்த தஞ்சாவூர், திருச்சி, புதுக்கோட்டை மாவட்டங்களை உள்ளடக்கிய சோழ நாட்டில் பல புத்தர் சிலைகளைக் காணமுடிந்தது. கும்பகோணம் பகுதியில் திருவிளந்துறை புத்தர் கோயில் இருந்ததற்கான கும்பேஸ்வரர் கோயிலில் உள்ள கல்வெட்டு மிகவும் முக்கியமான சான்றாக உள்ளது.
அங்கிருந்து பயணிக்க ஆரம்பித்தால் பட்டீஸ்வரம், பழையாறை, முழையூர், கோபிநாதப்பெருமாள்கோயில், திருவலஞ்சுழி, பாபநாசம் அருகில் மதகரம், அய்யம்பேட்டை அருகில் மணலூர், வையச்சேரி ஆகிய இடங்களில் புத்தர் சிலைகள் உள்ளன/இருந்தன. சில சிலைகள் தலையின்றியும், சில சிலைகளின் தலைகள் மட்டும் உள்ளன. முந்தைய களப்பணியில் பார்த்தவற்றில் சில சிலைகள் சுவடின்றி மறைந்துபோனதை அறியமுடிந்தது. இவற்றில் பழையாறைப் பகுதியில் அதிகமான புத்தர் சிலைகளைக் காணமுடிந்தது. இச்சிலைகள் பழையாறைக்கு அருகில் உள்ள பல இடங்களில் பௌத்தம் செழித்திருந்ததை உறுதிப்படுத்துகின்றன.
அருங்காட்சியகங்கள் என்ற நிலையில் தஞ்சாவூரில் கலைக்கூடம் (மதகரம், பட்டீஸ்வரம்), மராத்தியர் அரண்மனை அகழ்வைப்பகம் (சோழன்மாளிகை), தமிழ்ப் பல்கலைக்கழக அருங்காட்சியகம் (மாத்தூர்), தஞ்சாவூர் அருங்காட்சியகம் (தஞ்சாவூர்) ஆகிய நான்கு அருங்காட்சியகங்களிலும், சென்னை, அரசு அருங்காட்சியகத்தில் திருவலஞ்சுழியைச் சேர்ந்த புத்தர் சிலை உள்ளது. சென்னை, அரசு அருஙகாட்சியகத்திற்கு அடுத்தபடியாக தஞ்சாவூர், கலைக்கூடத்தில் நாகப்பட்டின புத்தர் செப்புத்திருமேனி உள்ளது. இச்சான்றுகள் பௌத்தம் பரவியிருந்ததை எடுத்துக்காட்டுகின்ற சான்றுகளாக உள்ளன.
இக்கருத்தரங்கில் கலந்துகொண்டபோது, சுமார் 20 வருடங்களுக்கு முன் இதே துறை நடத்திய கருத்தரங்கில் பங்குபெற்றது நினைவிற்கு வந்தது. தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் என்னுடைய முனைவர்ப்பட்ட வாய்மொழித்தேர்வு முடிந்து சில நாள்களுக்குப் பின், 28-29.3.2002இல், தமிழ்ப் பல்கலைக்கழக அயல்நாட்டுத் தமிழ்க் கல்வித்துறை சார்பாக நடைபெற்ற அயல்நாடுகளில் தமிழ் வளர்ச்சி (மொழி, இலக்கியம், கலை) என்ற கருத்தரங்கில் "விக்டோரியா ஆல்பர்ட் அருங்காட்சியகத்தில் நாகப்பட்டின கலைப் பாணியிலான புத்த செப்புத்திருமேனிகள்" என்ற தலைப்பில் கட்டுரை வாசித்து, நண்பர்களின் பாராட்டைப் பெற்றேன்.
-------------------------------------------------------------------------------------------
நன்றி: வியாழன் வட்டம், தினமணி நாளிதழ்
-------------------------------------------------------------------------------------------
பயணங்கள்
ReplyDeleteதமிழ்த்தொண்டு
தொடர வாழ்த்துக்கள்
கலியுகன்கோபி சென்னை
வாழ்த்துகள் வாழ்த்துகள்
ReplyDeleteவாழ்த்துகள் ஐயா
ReplyDelete