பௌத்த சுவட்டைத் தேடி : காஞ்சிபுரம்

1993இல் ஆய்வுக்களத்தில் இறங்கியபோது தஞ்சாவூர் மாவட்டத்திலும், சோழ நாட்டிலும் உள்ள பௌத்த சமயம் தொடர்பான சான்றுகளை வரலாற்றறிஞர் மயிலை சீனி வேங்கடசாமி உள்ளிட்டோரின் நூல்களிலும் கண்டேன்.  கள எல்லைக்கு அப்பாற்பட்டு பிற இடங்களைக் காண விருப்பம் இருந்தபோதிலும் பொருளாதார சூழல், நேரமின்மை காரணமாகச் செல்லும் வாய்ப்பு எழவில்லை. 

என்னுடைய ஆய்வுக்கு முதலில் நான் எடுத்துக்கொண்டது மயிலை சீனி வேங்கடசாமியின் பௌத்தமும் தமிழும் நூலாகும். அதில் அவர் கூறியிருந்த இடங்களில் என்னை அதிகம் ஈர்த்தது காஞ்சிபுரம் பகுதியாகும். காஞ்சிபுரத்தில் உள்ள, அவரும் அவருக்குப் பின் வந்த அறிஞர்களும் குறிப்பிட்டுள்ள, புத்தர் சிலைகளைக் காண ஆவல் தொடர்ந்துகொண்டே இருந்தது. 

ஆய்வியல் நிறைஞர் (Buddhism in Tamil Nadu with special reference to Thanajvur district,  Madurai Kamaraj University, Madurai, 1995), முனைவர்ப் பட்ட (சோழ நாட்டில் பௌத்தம், தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர், 1999) ஆய்வேடுகளையும், (என் ஆய்வு நூலின் தமிழ்ப்பதிப்பையும் (முனைவர் பா.ஜம்புலிங்கம், சோழ நாட்டில் பௌத்தம், புது எழுத்து, காவிரிப்பட்டிணம், 2022) ஆங்கிலப்பதிப்பையும் (Dr. B.Jambulingam,  Buddhism in Chola Nadu, Pudhu Ezuthu, 2023) வெளிக்கொணர்ந்து இரண்டாண்டுகளுக்குப் பின்னரே அந்த விருப்பம் நிறைவேறியது. குடும்பத்துடன் காஞ்சிபுரத்திலுள்ள புகழ்பெற்ற சைவ, வைணவக் கோயில்களுக்குச் சென்ற ஆண்டு சென்றபோது ஏகாம்பரேஸ்வரர் கோயில் சுவற்றில் உள்ள புத்தரின் புடைப்புச்சிற்பங்களைக் காணும் வாய்ப்பினைப் பெற்றேன்.  

சென்னையில் அயோத்திதாசர் ஆதவன் விருது பெற்ற நிகழ்விற்குப் பின்னர் 25.6.2025இல் காஞ்சிபுரம் சென்றபோது கச்சபேஸ்வரர் கோயிலிலும், காமாட்சியம்மன் கோயிலிலும் புத்தரின் புடைப்புச் சிற்பங்களைக் கண்டேன். அதே நாளில் சில புத்தரின் கற்சிலைகளையும் கண்டேன்.

காஞ்சிபுரத்தில் அரசு கா.மு.சுப்பராய முதலியார் மேல்நிலைப்பள்ளியில் அமர்ந்த நிலையில் தியான கோலத்தில் புத்தர் சிலை உள்ளது. சோழ நாட்டில் காணப்படுகின்ற புத்தர் சிலைகளைப் போன்ற அமைப்பில் இச்சிலை உள்ளது.

சிவகாஞ்சி காவல் நிலைய வளாகத்தில் அமர்ந்த நிலையில் தியான கோலத்தில் புத்தர் சிலை அழகான தாமரைப்பீடத்தின்மீது உள்ளது. 


கருக்கினில் அமர்ந்தாள் கோயிலில் அருகருகே இரு புத்தர் சிலைகள் உள்ளன. இவற்றுள் ஒரு சிலை தரையைத் தொட்டமர்ந்த கோலத்தில் உள்ளது. இவ்வாறான கோலத்தில் உள்ள சிலை சோழ நாட்டில் காணப்படவில்லை.  மற்றொரு சிலை அமர்ந்த நிலையில் தியான கோலத்தில் வழக்கமான கூறுகளுடன் உள்ளது.




அன்றே திருவண்ணாமலை கணிகிலுப்பையில் ஒரு விநாயகர் கோயிலில் இரு சிலைகள் உள்ளன.  முதல் சிலை அமர்ந்த நிலையில் உள்ள புத்தர் சிலையாகும். அதன் பீடத்தில் மூன்று சிங்கங்கள் காணப்படுகின்றன. அருகில் மற்றொரு சிலையைக் கண்டேன். கோயிலுக்கு வெளியில், சிறிது தூரத்தில் எதிர்ப்புறத்தில் ஒரு கல் தூண் உள்ளது. 





காஞ்சிபுரம், திரு மோகன்ராஜுடன் 

சோழ நாட்டில் பௌத்தம் வலைப்பூவின் மூலமாக எனக்கு அறிமுகமான காஞ்சிபுரத்தைச் சேர்ந்த திரு மோகன்ராஜ் அவர்களின் வழிகாட்டல் எனக்கு களப்பணியின்போது மிகவும் உதவியாக இருந்தது. 

சென்னை, மஹாபோதி சங்கத்தில் 2025ஆம் ஆண்டுக்கான மாதாந்திர பெளத்த நாள்காட்டியை மஹாபோதி சங்க பிக்கு சந்தரத்ன தேரர் அவர்களிடமிருந்து பெற்ற இனிய தருணங்கள். அருகில் உபாசகர் வே. சந்திரசேகர். (ஜூன் 2025)

Comments

  1. மிகச் சிறப்பான பதிவு வாழ்த்துக்கள் ஜம்புலிங்கம்...

    ReplyDelete
  2. விருதிற்குப்பிறகும்
    விரிவான ஆய்வு
    கூர்மையான தேடல்
    கலியுகன்கோபி சென்னை

    ReplyDelete
  3. காவல் நிலைய வளாகத்தில் புத்தர்.
    வியப்பாக இருக்கிறது ஐயா

    ReplyDelete
  4. புத்த வடிவ வேறுபாடுகள் சிந்திக்க வைத்து மேலும் காணவைக்கின்றன. சிறந்த பணி; இடைநில்லாபணி. வாழ்த்துகள்.

    ReplyDelete

Post a Comment