இவர் புத்தர் இல்லை, பகவர்.

மானுடம் அக்டோபர் 2024 இதழில் என்னுடைய கட்டுரை வெளியாகியுள்ளது. இதனை வெளியிட்ட மானுடம் இதழுக்கு நன்றி.
**************************************






“கும்பகோணம் நாகேஸ்வரசுவாமி திருமஞ்சன வீதியில் உள்ள ஒரு விநாயகர் கோயிலில் பகவரிஷி என்னும் பெயருள்ள புத்தர் சிலை உள்ளது. பகவன் என்பது புத்தர் பெயர்களில் ஒன்று. புத்தருக்கு விநாயகன் என்னும் பெயர் உண்டென்று நிகண்டு நூல்கள் கூறுகின்றன. புத்தர் கோயில்கள் பல பிற்காலத்தில் விநாயகர் கோயில்களாக்கப்பட்டன. இங்குள்ள விநாயகர் கோயிலும் அதில் உள்ள புத்தர் உருவமும் இதற்குச் சான்றாகும்” என்று மயிலை சீனி.வேங்கடசாமி கூறுகிறார்.[1] 

நாகேஸ்வரர் திருமஞ்சன வீதியிலுள்ள பகவத் (பகவ) விநாயகர் கோயிலின் கருவறையில் விநாயகர் சிலையும்,  முன் மண்டபத்தில் அவர் கூறிய சிலையும் உள்ளது. அவரது கருத்தை எனது ஆய்வியல் நிறைஞர் ஆய்வேட்டில் அப்படியே பதிவுசெய்தேன்.[2] 

அக்கோயிலுக்கு அருகில் பகவத் படித்துறை உள்ளது.  தஞ்சாவூர் நாயக்க மன்னர்களான செவ்வப்ப நாயக்கர், அச்சுதப்ப நாயக்கர், ரகுநாத நாயக்கர், முதலமைச்சரான கோவிந்த தீட்சிதர் மற்றும் மராட்டிய மன்னர்கள் காவிரி ஆற்றங்கரைகளை அழகுபடுத்த விரும்பிப் படித்துறைகளையும், கோயில்களையும், நீராழி மண்டபங்களையும் கட்டினர். காவிரியின் இரு கரைகளிலும் உள்ள சைவ, வைணவக் கோயில்களில் ஆண்டுதோறும் நடைபெறுகின்ற சுவாமி புறப்பாட்டின்போது திருமஞ்சனம் எனப்படும் சுவாமி நீராட்டு விழாவின்போது மக்கள் காவிரியில் நீராடி சுவாமியைத் தரிசிக்கின்றனர். கோயிலிலிருந்து புறப்பட்டுக் காவிரிக் கரையை அடையும் தெருவை திருமஞ்சன வீதி என்றே அழைப்பர். கும்பகோணத்தில் பகவத் படித்துறை, பாணாதுரை படித்துறை, ராயர் படித்துறை, மேலக்காவேரி படித்துறை, சங்கர மடப் படித்துறை என்ற படித்துறைகள் உள்ளன.[3] 

பகவர் தொடர்பான  ஒரு கதையை உள்ளூரில் கூறி வருகின்றனர். அது கோயிலில் ஓவியமாகத் தீட்டப்பட்டிருந்தது. "வேதாரண்யத்தில் தன் சீடருடன் வசித்துவந்தவர் பகவர். ஒரு நாள் பகவரின் வயதான தாயார் அவரிடம், தான் காலமான பிறகு, தன் அஸ்தியை அது எவ்விடத்தில் மலர்களாக மலர்கிறதோ அவ்விடத்தில் கரைக்குமாறு கேட்டுக்கொண்டார். தாயாரின் மறைவுக்குப் பிறகு, பகவர் தன் சீடருடன் தாயாரின் அஸ்தியை எடுத்துக்கொண்டு தீர்த்த யாத்திரை செல்கிறார். கும்பகோணம் வந்து காவிரி நதியில் நீராடும்போது அவருடைய சீடர் பெட்டியைத் திறந்துப் பார்க்க,  அதில் மலர்கள் இருக்கக் கண்டு குரு கோபிப்பாரோ என்று பயந்து மூடி விடுகிறார். இச்செயல் குருவிற்குத் தெரியாது. பின்னர் அவர் காசிக்குச் செல்கிறார். அங்கு அஸ்தி மலராக மாறவில்லை. அப்போது அருகிலிருந்த சீடர் கும்பகோணத்தில் நடந்ததைக் கூறுகிறார். மீண்டும் கும்பகோணம் அடைந்து காவிரியாற்றில் புனித நீராடிவிட்டு அஸ்தி மலர்களாக மாறியிருப்பது கண்டு மிக்க மகிழ்ச்சியடைந்து அஸ்தியைக் கரைக்கிறார். கும்பகோணத்துக்கு காசியைவிடவும் வீசம் அதிகம் என்று காட்டியருளிய மரத்தடியில் இருந்த விநாயகரை இங்கேயே தங்கி தன் சீடருடன் வழிபடவே அன்று முதல் இந்த கணபதிக்கு பகவத் விநாயகர் என்ற பெயர் வரலாயிற்று. காசிக்கு வீசம் பெரிது கும்பகோணம் என்று உணர்த்தும் வகையில் பகவரின் வலது கை முத்திரை  உள்ளது".  



பகவர், பகவ விநாயகர் கோயில், கும்பகோணம்

முனைவர் பட்ட ஆய்வின்போது புத்தர் சிலைகளின் கலையமைதியில் பகவர் சிலை இல்லாததையும், புத்தருக்கும், பகவருக்கும் இடையேயான சிற்பக்கூறுகளில் வேறுபாடுகளையும் காணமுடிந்தது. இங்குள்ள புத்தர் சிலைகள் அமர்ந்த நிலையில் தியான கோலத்தில் சற்றே மூடிய கண்கள், நீண்ட காதுகள், புன்னகை சிந்தும் இதழ்கள், நெற்றியில் திலகக்குறி, தலையில் வரிசையாக அழகிய சுருள் முடி, அதற்கு மேல் ஞானத்தை உணர்த்தும் தீச்சுடர், தலைக்குப் பின் பிரபை, கழுத்தில் திரிவாலி எனப்படுகின்ற மூன்று மடிப்புகள், அகன்ற மார்பு, பரந்த தோள்கள், மேலாடை, மடியில்  இடது உள்ளங்கையின்மீதுள்ள வானோக்கிய வலது உள்ளங்கையில் தர்மசக்கரக்குறி, இடுப்பில் ஆடை ஆகியவற்றுடனோ, இவற்றில் பல கூறுகளுடனோ உள்ளன. தஞ்சாவூர், கலைக்கூடத்தில் உள்ள, தஞ்சாவூர் மாவட்டம் பட்டீஸ்வரத்தைச் சேர்ந்த புத்தர் சிலைச் சான்றாகக் கொள்ளலாம்.[4] குறிப்பாக தலையில் உள்ள தீச்சுடரைக் கொண்டே அது புத்தர் சிலை என்று உறுதியாகக் கூறலாம். அவ்வாறே நெற்றியில் திலகக்குறியும், உள்ளங்கையில் தர்மசக்கரக்குறியும் முக்கிய இடத்தைப் பெறுகின்றன. 


புத்தர், பட்டீஸ்வரம் (கலைக்கூடம், தஞ்சாவூர்) 

சோழ நாட்டில் தஞ்சாவூர்  (அருந்தவபுரம், கோபிநாதப்பெருமாள்கோயில், சோழன்மாளிகை, தஞ்சாவூர், திருவலஞ்சுழி, பட்டீஸ்வரம், பழையாறை, பெரண்டாக்கோட்டை, மணலூர், மதகரம், மாத்தூர், மானம்பாடி, முழையூர், விக்ரமம், வையச்சேரி), திருவாரூர் (இடும்பவனம், இலையூர், உள்ளிக்கோட்டை, கண்டிரமாணிக்கம், கோட்டப்பாடி, சீதக்கமங்கலம், திருநாட்டியத்தான்குடி, திருப்பாம்புரம், புதூர், மன்னார்குடி, வலங்கைமான், வளையமாபுரம், விடையபுரம்), நாகப்பட்டினம் (கிராந்தி, சந்தைத்தோப்பு, புத்தமங்கலம், புஷ்பவனம்), மயிலாடுதுறை (எழுமகளூர், குத்தாலம், சின்னமேடு, பெருஞ்சேரி), திருச்சி (ஆயிரவேலி அயிலூர், கீழ்க்குறிச்சி, குழுமணி, திருச்சி, திருப்பராய்த்துறை, பேட்டைவாய்த்தலை, மங்கலம், முசிறி, வெள்ளனூர்), அரியலூர் (அரியலூர், கீழக்கொளத்தூர், குழுமூர், சுத்தமல்லி, பிள்ளைபாளையம், பெரிய திருக்கோணம், முத்துசேர்வைமடம், ராயம்புரம், விக்ரமங்கலம்,   ஜெயங்கொண்டம்), பெரம்பலூர் (ஒகளூர், பரவாய்), புதுக்கோட்டை (கரூர், வன்னிச்சிப்பட்டினம்) ஆகிய மாவட்டங்களில் புத்தர் சிலைகள் உள்ளன. 

புத்தர் சிலைகளின் அமைப்பின் அடிப்படையில் நோக்கும்போது இக்கோயிலில் உள்ள சிலை புத்தர் இல்லை என்பதை  அறியமுடிந்தது. பகவர் சிலையின் தலைமுடி, வலது கை முத்திரை, இடது கை அமைப்பு, மார்பிலும் இடுப்பிலும் உள்ள ஆடை உள்ளிட்ட எதுவும் இப்பகுதியில் உள்ள புத்தர் சிலைகளுடன் பொருந்தி வரவில்லை.  ஆய்வியல் நிறைஞர் ஆய்வேட்டில் மயிலை சீனி. வேங்கடசாமியின் கருத்தை மேற்கோள் காட்டி எழுதியிருந்ததற்கு மாறாக, அது புத்தர் சிலையாக இருக்க வாய்ப்பில்லை என்று முனைவர்ப் பட்ட ஆய்வேட்டில் பதிவு செய்தேன்.[5]  சோழ நாட்டில் 60க்கும் மேற்பட்ட இடங்களில் புத்தர் சிலைகள் உள்ளன.[6]  தொடர் களப்பணியும், புத்தர் சிலைகளுடன் ஒப்பு நோக்கலும் பகவ விநாயகர் கோயில் முன் மண்டபத்தில் உள்ள சிலை புத்தர் இல்லை, பகவர் என்பதைத் தெளிவுபடுத்தியது.

 

குறிப்புகள்

1. வேங்கடசாமி, மயிலை சீனி.  (1957). பௌத்தமும் தமிழும், திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக்கழகம், சென்னை. 

2.Jambulingam, B. (1995). Buddhism in Tamil Nadu with special reference to Thanjavur district. M.Phil. Dissertation. Madurai Kamaraj University, Madurai.

3.தேனுகா, திருமஞ்சனக் கோயில்களும் நீராழி மண்டபங்களும், இந்து தமிழ் திசை, 14 செப்டம்பர் 2014.

4.தஞ்சாவூர், கலைக்கூடத்தில் உள்ள, பட்டீஸ்வரத்தைச் சேர்ந்த புத்தர் சிலையின் ஒளிப்படம் ஒப்புநோக்கலுக்காகத் தரப்பட்டுள்ளது.

5.ஜம்புலிங்கம், பா. (1999). சோழ நாட்டில் பௌத்தம். முனைவர்ப் பட்ட ஆய்வேடு, தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்.

6.ஜம்புலிங்கம், பா. (2022). சோழ நாட்டில் பௌத்தம். புது எழுத்து. காவேரிப்பட்டிணம்.

 

Comments