அருங்காட்சியகத்திற்குள் சென்று வந்த அனுபவம் : முனைவர் க.ஜெயபாலன்
சோழ நாட்டில் பௌத்தம் (புது எழுத்து, காவேரிப்பட்டிணம், 2022, அலைபேசி 98426 47101) நூலைப் பற்றி, முனைவர் க.ஜெயபாலன் அவர்கள் முகநூலில் எழுதியுள்ள மதிப்புரையைப் பகிர்வதில் மகிழ்கிறேன், அவருக்கு நன்றியுடன்.
*************
அருங்காட்சியகத்திற்குள் சென்று வந்த அனுபவம்...
முனைவர் க.ஜெயபாலன் |
சமகாலத் தமிழ் அறிவுலகில் பௌத்தம் குறித்த ஆய்வுகளில் புத்தபகவன் சிலைகள் சார்ந்து கள ஆய்வை மேற்கொண்டு பல புதிய ஆய்வுத்தடங்களைப் பதித்து வருவதில் மிக முக்கியமானவராகக் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக அரும்பணி ஆற்றி வருபவர் முனைவர் பா. ஜம்புலிங்கம் ஐயா அவர்கள்.
அதிகமாக எழுத்துப்பணிகளை மேற்கொள்ளும் சிலர் கள ஆய்வுகளை மேற்கொள்வதில்லை. கள ஆய்வுகளை மேற்கொள்ளும் சிலர் எழுத்தை விரும்புவதில்லை. ஆய்வையும் மேற்கொண்டு அதே நேரம் நிறைவாக எழுதுவதிலும் ஆழமாக ஆய்வுத்துறையில் பயணிப்பதில் அழுத்தமான முத்திரையை ஐயா முனைவர் பா ஜம்புலிங்கம் அவர்கள் பதித்து வருகிறார்.
முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் செய்யப்பட்ட முனைவர் பட்ட ஆய்வினை மனதில் தேக்கி வைத்து அப்பொருள் தொடர்பாகவே தொடர்ந்து பயணித்து புதிய புதிய செய்திகளை கண்டறிந்து அவர் உருவாக்கிய ஒரு செம்பதிப்பான நூல் என்று "சோழ நாட்டில் பௌத்தம்" என்ற இந்த நூலைக் குறிப்பிடலாம்.
இந்தியாவின் நிலப்பரப்பு பெரும் பகுதியாக உள்ளதாலும், பல்வேறு மொழிகள் பண்பாடுகள் கொண்ட பகுதியாகவும் உள்ளதாலும், இந்தியாவைத் துணைக்கண்டம் என்று பலரும் அழைப்பதுண்டு. அவ்வகையில் ஒவ்வொரு மாநிலத்திலும் இருக்கின்ற பௌத்தம் குறித்து பல்வேறு ஆய்வுகள் ஐரோப்பியர்களால் 19ஆம் நூற்றாண்டின் இறுதியிலேயே கண்டறிந்து எழுதப்பட்டன. 1950, 60, 70களில் பல சுதேசிய அறிஞர்கள் மேற்கொண்டு சென்றனர். இன்னும் சமகாலத்திலும் கூட வெளிவந்து கொண்டு இருக்கின்றன.
அதைப்போலவே தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பௌத்தம் பெற்றிருக்கின்ற வளர்ச்சிகள் குறித்து மிக விரிவாக ஆய்வு செய்ய வேண்டிய தேவை உள்ளது. இதை 1990களிலேயே தொடங்கிய பெருமை ஐயா பா.ஜம்புலிங்கம் அவர்களுக்கு உண்டு.
இந்த நூலை ஒரு முறை இலேசாகப் புரட்டிப் பார்க்கும் பொழுதே நூலின் கருத்துகளுக்குக் கொடுக்கப்பட்டுள்ள அதே முக்கியத்துவம் ஒவ்வொரு பகுதியிலும் கிடைத்திருக்கின்ற புத்தர் சிலைகளுக்கும் அந்தச் சிலைகளை மிக சிறப்பாகப் படம் எடுத்து அதை மிகச் சிறந்த தாளில் செழுமையான வண்ணத்துடன் அச்சிட்டு இருப்பதை காணும்பொழுது ஆய்வுப் பொருளை எந்த அளவுக்கு உயர்ந்த தன்மையில் வழங்க வேண்டும் என்பதை வளரும் பல ஆய்வாளர்களுக்கு இந்நூல் ஆசிரியர் உணர்த்துகின்றார். வளர்ந்த பெரியவர்களுக்கும் பௌத்தம் என்னும் சிறப்பான உயர்ந்த கருத்தினை வாழ்க்கை முறையினை புத்த பகவனின் திருநாமத்தை, அவரின் பெருமைகளை எவ்வளவு உயர்வாக வழங்க வேண்டும் என்பதையும் சொல்லாமல் சொல்லுகிறார்.
அட்டைப்படத்திலும் தொடக்கப் பகுதிகளிலும் சிதைக்கப்பட்ட புத்தரை பார்க்கின்றபோது இடைக்காலத்தில் புத்தரின் திருநாமத்தை அவரின் அருமையை அறியாமல் நாம் எவ்வாறு புத்தர் சிலைகளை சேதப்படுத்தி இருந்தோம் என்பதை நமது அறியாமையை நமக்கே நூல் ஆசிரியர் உணர்த்துகின்றார். உள்ளே செல்லச் செல்ல உள்ளே காணும் பல்வேறு ஊர்களில் இருக்கின்ற புத்தர் படங்களை காணும் பொழுது "புத்தரின் திருநாமம் எல்லையற்ற பெருமையோடு உலகமெங்கும் போற்றப்படுகிறது" என்று பாபாசாகேப் அண்ணல் அம்பேத்கர் அவர்கள் குறிப்பிட்டதைப் போல தமிழ் மண்ணில் 2000 ஆண்டுகளாக எந்த அளவுக்கு புத்தரின் திருநாமம் போற்றி புகழப்பட்டது; வணங்கப்பட்டது என்பதை நூலாசிரியர் உணர்த்துகிறார்.
எல்லாவற்றையும் கூற வேண்டிய அவசியம் இல்லை. ஆசிரியர்கள் சரியாக வாழ்ந்து காட்டும் பொழுது அந்த வாழ்க்கையே செய்தியாக மனிதர்களிடம் சென்று சேருகிறது. அந்த வகையில் நூலாசிரியர் பல விஷயங்களை தனது செயல்பாடுகளில் உணர்த்துகிறார்.
"ஆய்வியல் நிறைஞர், முனைவர் பட்ட ஆய்வுகளுக்காகவும், தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்ற கள ஆய்வுகளின்போது திரட்டப்பட்ட தரவுகளையும் அடிப்படையாகக் கொண்டு சோழ நாட்டில் நூற்றுக்கணக்கான ஊர்களுக்கு நேரில் களப்பணி சென்று அங்குள்ள பௌத்தச்சுவடுகளை ஆவணப்படுத்த மேற்கொள்ளப்பட்டுள்ள ஒரு முயற்சியே இந்நூல்" என்று என்னுரையில் நூல் ஆசிரியர் குறிப்பது கவனத்திற்குரியவை. ஆவணப் படுத்துதல் என்பதை இவ்வளவு நன்கு உணர்ந்து நூலாசிரியர் செயல்படுகிறார் என்பதை இது காட்டுகிறது. மேலும் மறைக்கப்பட்ட வரலாற்றில் இருந்து மறைத்தாலும் மறைக்க முடியாமல் எழுந்து நிற்கும் பௌத்தத் தரவுகளை சான்றுகளை எடுத்து வெளியே உரைப்பது என்பது சவால் நிறைந்த ஒரு பணியாகும். இத்தகு பணியைத் தான் 100 ஆண்டுகளுக்கு முன்னரேயே மிகப்பெரிய அளவில் பண்டித அயோத்திதாசர் அவர்கள் மேற்கொண்டார். இலக்கியத் துறையில் டாக்டர் உ.வே.சா அவர்கள் மேற்கொண்டார். இவ்வகையில் பல்வேறு வரலாற்று அறிஞர்களும் தொல்லியல் அறிஞர்களும் 100 ஆண்டுகளுக்கு முன்னரே ஐரோப்பியர்கள் தொடங்கிய தொல்லியல் ஆய்வுகளைத் துணைக்கொண்டு தொடர்ந்து மேற்கொண்டு இந்தியா முழுவதும் மறைந்து கிடந்த பௌத்த வரலாறுகளை வெளியே கொண்டு வந்த தந்தனர். அந்தப் பின்புலத்தில் நின்று மயிலை சீனி வேங்கடசாமி போன்ற அறிஞர்கள், இலக்கிய துறையில் சோ.ந. கந்தசாமி போன்ற அறிஞர்கள், ப. ராமஸ்வாமி போன்ற வாழ்க்கை வரலாற்று மற்றும் பௌத்த தத்துவ நூல் ஆசிரியர்கள் என பலரும் தொடர்ந்து இயங்கி பௌத்தத்திற்கான பங்களிப்பினை நன்கு தமிழ் உலகில் கடந்த 100 ஆண்டுகளில் நிறுவினர். அதன் நீட்சியாகவே ஐயா ஜம்புலிங்கம் அவர்கள் இன்னும் நுட்பமாக உள்ளே சென்று கலை ஆய்வுகளை மேற்கொள்ளுகிறார். பண்டைய காலத்தில் தொ.மு பாஸ்கர தொண்டைமான் சமகாலத்தில் மாமல்லபுரம் சிற்பங்களில் இருந்து பலவற்றை ஆராய்ந்து ஐயா பாரதி புத்திரன், இளம் போதி போன்ற ஆய்வாளர்கள் தொடர்ந்து சிலைகள் தொடர்பான ஆய்வுகளில் நுட்பமாக ஈடுபட்டு வருகின்றனர். அவ்வகையில் ஜம்புலிங்கம் ஐயா அவர்கள் சோழ நாட்டு பகுதிகள் அனைத்திலும் பயணித்து பல செய்திகளை விரிவாக கொண்டு வந்துள்ளார்.
கில்பர்ட் சிலேட்டர் என்ற ஐரோப்பிய அறிஞர் சென்னை பல்கலைக்கழக பொருளாதாரத் துறையில் பேராசிரியராக இருந்த பொழுது இரண்டே இரண்டு தமிழக கிராமங்களை எடுத்து ஆய்வு செய்து அதன் மூலமாக ஆசிய கிராமிய வாழ்வின் பொருளாதார கூறுகளை ஐரோப்பிய உலகிற்கு வெளிப்படுத்தினார். ஆய்வு செய்கின்ற இடம் கிராமமோ அல்லது ஒரு பகுதியோ எதுவாக இருந்தாலும் அதன் மூலமாக ஒரு முழுமையான சித்திரத்தை அறிஞர்களால் கொண்டு வர இயலும்.அந்த அளவில் சோழ நாட்டில் பௌத்தம் என்ற இந்த ஆய்வு மிக விரிவாக அமைகிறது.
இது தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் விரித்துச் செல்லத்தக்க ஆய்வாகும். சமகாலத்தில் வாழ்ந்து வருகின்ற 75 வயதை தொட்டில் ஐயா டாக்டர் மு. நீலகண்டன் அவர்கள் இவ்வகையில் "கொங்கு நாட்டில் பௌத்தம்", "பாண்டிய நாட்டில் பௌத்தம்", "தொண்டை மண்டலத்தில் பௌத்தம்" என்று பல்வேறு மண்டலங்களில் இருந்த பௌத்த வரலாறுகளையும் எழுதி உள்ளார்.
கடந்த 20 ஆண்டுகளில் தமிழகத்தில் பிக்கு போதிபாலரின் பௌத்த சமயப் பணிகள், அறிவுப்பணிகள் அனைவரும் அறிந்து வியந்து பாராட்டிய ஒன்று என்றால் மிகை இல்லை. அதைப்போலவே தியானம் மற்றும் பௌத்த தம்மம் குறித்த நூல்களை எழுதுவதில் ஐயா ஓ.ரா.ந. கிருஷ்ணன் அவர்கள் பல்வேறு பணிகளை தொடர்ந்து செய்து வருவது அனைவரும் அறிந்ததே. இவ்வாறாகவே தமிழகத்தின் பௌத்தச் சான்றோர்கள் பலர் பௌத்தம் குறித்து பல களங்களில் ஆய்வு செய்து வருகின்ற வேளையில் வரலாறு+இலக்கியம்+ நுண்கலை+கள ஆய்வு என்ற அனைத்தையும் இணைத்து முனைவர் ஜம்புலிங்கம் ஆகிய அவர்கள் பயணிப்பதை இந்த நூல் காட்டுகிறது.
பன்மொழி அறிவும் பன்முகப் பார்வைகளும் தான் ஆய்வை மென்மேலும் நகர்த்தும் வல்லமை கொண்டதாகும். அவ்வகையில் நூல் ஆசிரியர் பல்வேறு பழைய அறிஞர்களின் செய்திகளை மட்டுமல்லாமல் சமகாலத்தில் பௌத்தம் குறித்து எழுதுகின்ற பல அறிஞரையும் கூட மறவாமல் குறிப்பிட்டு அவர்களின் கருத்துக்களை மேற்கோள் காட்டுகின்றார்.
"பண்பட்ட அறிஞர்கள் உலகியல் இருப்பு குறித்து அஞ்சுவதில்லை. உண்மையான இருப்பை அவர்கள் உணர்ந்தவர்கள். அதனால்தான் அவர்களிடம் அஞ்சாமை சுடர் விடுகிறது" என்ற கருத்தை நிறைய சான்றோர்களைப் பற்றிய ஏடுகளில் காண முடியும். அவ்வகையில் பௌத்தம் என்ற பேர் ஆளுமையை ஆழ்ந்து செல்லுகின்ற பாதையில் கிடைத்த அத்தனை நல்ல செய்திகளையும் நல்ல மனிதர்களையும் அறிமுகப்படுத்திக் கொண்டே நூலாசிரியர் செல்வது "என் கைகளை ஒருபோதும் நான் மறைத்துக் கொள்ளவில்லை. நான் அறிந்த அனைத்தையும் உங்களுக்கு வழங்கி இருக்கிறேன்; இன்னும் ஏதேனும் ஐயம் இருந்தால் கேளுங்கள்" என்று மகாபரிநிப்பாண சுத்தாவில் புத்தர் கூறுவதை நினைவுறுத்துகிறது.
ஜப்பானிய அறிஞர் சு-ஹிகா-சகா தமிழகத்தில் பௌத்தம் புதிய அணுகுமுறை என்று 1990களில் சிறப்பானதொரு நூலை ஆசியவியல் நிறுவனம் மூலம் வெளியிட்டார். சோழ நாட்டு பொருளாதார உறவுகள் பற்றி சிறப்பானதொரு ஆய்வை ஜப்பானிய அறிஞர் நொபுரு கராஷிமா அவர்கள் வெளியிட்டார். இலங்கையிலிருந்து நவாலியூர் சோ. நடராசா அவர்கள் சிங்கள மொழியையும் பயின்று தமிழுக்கும் சிங்களத்துக்குமான பல முன்னோடி பணிகளை மேற்கொண்டார் தம்ம தேரர் என்று தமது பெயரையும் மாற்றிக் கொண்டார். சிங்கள பௌத்த அறிஞர் திவுலபிட்டிய தம்மரத்தின தேரர் என்று பெயரைக் கொண்டு தமிழுக்கும் பௌத்தத்தைக்கும் ஆன உறவுகளை மிக விரிவாக ஆராய்ந்துள்ளார். ஐயா ஜம்புலிங்கம் அவர்களின் நூலை காணும் பொழுது தமிழ்நாட்டில் செழித்து இருந்த இந்த பௌத்த மரபுகள் குறித்து தமிழக பௌத்த கலாச்சார வரலாறுகள் குறித்து ஆசியவியல் அறிஞர்களோடு இணைந்து தமிழக பௌத்த வரலாற்றை உலக அரங்கில் ஓங்கி ஒலிக்க வேண்டிய தேவை தமிழர்களுக்கு உண்டு என்பதை இங்கு கண்டிப்பாக கூற வேண்டும்.
ஏற்கனவே தமிழகத்தில் நிலவி இருந்த பௌத்தம் குறித்த ஆய்வுகளில் இலங்கை அறிஞர் ஆ. வேலுப்பிள்ளை, பீட்டர் சால்க்,ஆனிமோனியஸ் உள்ளிட்ட பல அறிஞர்களும் மிக விரிவாக உரைத்துள்ளனர்.
அண்மையில் காலமான ஒரிசா பாலு ஐயா அவர்களும் கூட தமிழகத்திற்கும் பல்வேறு ஆசிய நாடுகளுக்கும் உலகுக்குமான தொடர்பில் பௌத்தம் பெரும் இடம் வகிக்கிறது என்பதைக்கூறியுள்ளார்.
சைவ, வைணவ, சமண, பௌத்த சமய முரண்பாடுகளைக் கடந்த 1500 ஆண்டுகளுக்கு முன்னர் எவ்வாறு கொண்டோமோ அதைப்போலவே அதே கண்ணோட்டத்தை சமகால ஜனநாயக பகுத்தறிவு சமத்துவ உணர்வு கொண்ட கணிப்பொறி உலகத்தில் தமிழர்கள் கொள்வதில்லை;கொள்ளவும் முடியாது.சமத்துவ உணர்வுகளும் மற்றும் தொடர் மாற்றம் என்ற அநிச்சா தத்துவமும் பழைய கால முரண்பாடுகளை அப்படியே வைத்திருக்கச் சொல்லவில்லை. கால மாற்றத்திற்கு ஏற்பவும் உலக வளர்ச்சி ஏற்பவும் நமது ஆய்வுகளை முன்னெடுத்துச் செல்வதற்கானப் புள்ளிகளை எடுத்து முன்னே நகர்த்தக் கூறுகின்றன. அவ்வகையில் இந்த ஆய்வு முன்னெடுத்தும் ஆய்வாகும்.
இந்நூலில் வந்துள்ள புதிய செய்திகள் குறித்தும் இன்னும் விரிவாக இன்னொரு பதிவில் எழுதுவோம். நூலாசிரியர் ஐயா ஜம்புலிங்கம் அவர்களுக்கு இனிய நல்வாழ்த்துக்கள். இவ்வகையில் இன்னும் பல்வேறு நூல்களை ஐயா அவர்கள் எழுத வேண்டும். இந்நூலை வெளியிட்டுள்ள "புது எழுத்து" பதிப்பகத்திற்கும் இனிய நல்வாழ்த்துக்கள்.
21 டிசம்பர் 2024இல் மேம்படுத்தப்பட்டது.
Comments
Post a Comment