சோழ மண்டலத்தில் பௌத்தம் : டாக்டர் மு.நீலகண்டன்

டாக்டர் மு. நீலகண்டன் எழுதியுள்ள சோழ மண்டலத்தில் பௌத்தம் என்னும் நூல் சோழ மண்டலம் வரலாற்றுப்பின்னணி (பக்.13-33), சோழ மண்டலத்தில் பௌத்த தாக்கம் (பக்.34-44), சோழ மண்டலத்தில் பௌத்தப் பெரியோர்கள் (பக்.45-50), சோழ மண்டலத்தில் பௌத்த வழிபாடு (பக்.51-63), சோழ மண்டலத்தில் பௌத்த தடயங்கள் (பக்.64-122), சோழ மண்டலத்தில் பௌத்தம் வீழ்ச்சி (பக்.123-125) என்னும் ஆறு தலைப்புகளைக் கொண்டு அமைந்துள்ளது.




முதல் இயலில் சோழ மண்டலம் என்ற வரையறையான பிரிக்கப்படாத தஞ்சை, திருச்சிராப்பள்ளி மாவட்டங்கள், தென்னாற்காடு, புதுக்கோட்டை மாவட்டங்களின் சில பகுதிளைக் கொண்ட நிலப்பரப்பு, வரலாற்றுப்பின்னணியில் தமிழ்நாட்டின் எல்லைகள், கால வாரியாக சோழ மண்டல வரலாறு, சோழர் தலைநகர்கள், சங்க இலக்கியச் சான்றுகள், கல்வெட்டு சான்றுகள் ஆகியவற்றைப் பற்றி ஆராயப்பட்டுள்ளன.

பௌத்தத்தாக்கம் என்ற தலைப்பின்கீழ் புத்தரின் நான்கு தத்துவங்கள், தமிழ்நாட்டில் கி.மு.மூன்றாம் நூற்றாண்டு முதல் பௌத்தத்தின் பரவல், வெளிநாட்டவர் குறிப்புகள், பௌத்த மதத்தின் செல்வாக்கு, பௌத்தர் சமயக்கல்வி ஆகியவை பற்றி விளக்கப்பட்டுள்ளன.

சோழ மண்டலத்தில் பெயர் பெற்ற பௌத்தப் பெரியோர்களான சங்கமித்திரர், அறவண அடிகள், புத்ததத்தர், புத்தமித்திரர், பெருந்தேவனார், தீபங்கரதேரர், காசப தேர், சாரிபுத்தர் ஆகியோரைப் பற்றி அடுத்த இயலில் விவாதிக்கப்பட்டுள்ளன.

சோழ மண்டலத்தில் பௌத்த வழிபாடு என்ற தலைப்பில் புத்தரின் மறைவிற்குப் பின் பௌத்தம் இரண்டாகப் பிரிந்தது, அதன் நிலையில் மாற்றம், சோழ மண்டலத்தில் உள்ள புத்தத் தலங்கள், புகார் மற்றும் மணிபல்லவத்தில் புத்த வழிபாடு, அவலோகிதர், கந்திற்பாவை, பௌத்த பெண் தெய்வங்கள் வழிபாடு, சாத்தன் வழிபாடு, புத்த வந்தனம் ஆகியவற்றைப் பற்றி பதியப்பட்டுள்ளன.

சோழ மண்டலத்தில் பௌத்த தடயங்கள் என்ற தலைப்பின்கீழ் தஞ்சை, கும்பகோணம் (இது இன்னும் மாவட்டம் ஆகவில்லை. நூலில் கும்பகோணம் மாவட்டம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது, வரைபடமும் தரப்பட்டுள்ளது), மயிலாடுதுறை, திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை, தென்னாற்காடு, புதுக்கோட்டை, நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் உள்ள புத்தர் சிலைகள், இப்பகுதியில் உள்ள விகாரைகள், கோயில்கள், நாகப்பட்டின புத்தர் படிமங்கள், அவலோகிதேஸ்வரர், மைத்ரேயர், தாரா உள்ளிட்ட சிற்பங்கள் ஆகியவற்றைப் பற்றி உரிய சான்றுகளுடன் முன்வைக்கப்படுகின்றன.

சோழ மண்டலத்தில் பௌத்தத்தின் வீழ்ச்சிக்கான காரணங்களும், சூழலும் இறுதி இயலில் நோக்கப்படுகின்றன.

நிறைவாக, சோழ மண்டலம் மட்டுமல்ல தமிழகம் முழுவதும் பௌத்தம் மறைந்தே போயிற்று, தமிழகத்தில் மறைந்தாலும், அதன் வேர்கள் ஆங்காங்கே காணப்படுகின்றன என்றும், தற்போது பௌத்தம் பற்றிய செய்திகள் பல நுண்தளங்களில் ஆய்வு செய்யப்படுகின்றன என்றும் கூறுகிறார் நூலாசிரியர்.

பின்னிணைப்பாக வரைபடங்களும், புத்தர் சிலைகளின் ஒளிப்படங்களும் காணப்படுகின்றன. உரிய இடங்களில் நூலாசிரியர் மேற்கோள்களைத் தந்துள்ளார். பல இடங்களில் அவர் களப்பணி சென்றதையும் மேற்கோளாகச் சுட்டிக்காட்டியுள்ளார். இந்தியாவின் பிற மாநிலங்களிலும், வெளிநாட்டு அருங்காட்சியகங்களிலும் உள்ள புத்தர் சிலைகளின் ஒளிப்படங்களை இணைத்துள்ளார்.

இந்நூலில் பல சான்றுகளைத் தந்துள்ள விதம் போற்றத்தக்க வகையில் உள்ளது. அவர் மேற்கொண்ட களப்பணிகளை நூலின் மூலம் நன்கு அறியமுடிகிறது. சோழ மண்டலத்தில் (சோழ நாட்டில்) இன்று வரை கிடைக்கப்பெற்ற பௌத்தம் தொடர்பான தகவல்களைக் கொண்டு இந்நூல் உருவாக்கப்பட்டுள்ளதாக முன்னுரையில் நூலாசிரியர் குறிப்பிடுகிறார். அவருடைய முயற்சி போற்றத்தக்கது. அவருக்கு என்னுடைய மனம் நிறைந்த வாழ்த்துகள்.

நூல் : சோழ மண்டலத்தில் பௌத்தம் வரலாற்று ஆய்வு
ஆசிரியர் : டாக்டர் மு.நீலகண்டன்
பதிப்பகம்: Coral. 8. 6th Cross. 8th Main Road, Vaishnavi Naar, Thirumullaivoyal, Chennai 600 109. அலைபேசி 90430 50699, மின்னஞ்சல் coralbooks2016@gmail.com
பதிப்பாண்டு:  2021
விலை ரூ.250 

Comments

  1. மதிப்பீடு அருமை...

    வாழ்த்துகள்...

    ReplyDelete

Post a Comment