தஞ்சாவூர் அருங்காட்சியகத்தில் புத்தர் சிலை
முதுமுனைவர் குடவாயில் பாலசுப்ரமணியன் அவர்கள் தஞ்சாவூர் அருங்காட்சியகத்தில் (தஞ்சாவூர் முன்னாள் மாவட்ட ஆட்சியரகம்) பொ.ஆ.10-11ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு புத்தர் சிலை இருப்பதாகவும், என் பௌத்த ஆய்வுக்காக அதனைப் பார்க்கும்படியும் கூறியிருந்தார்.
சோழ நாட்டில் பௌத்தம் தொடர்பான ஆய்வின்போது ஒருங்கிணைந்த தஞ்சாவூர், ஒருங்கிணைந்த திருச்சி, புதுக்கோட்டை மாவட்டங்களை உள்ளடக்கிய சோழ நாட்டில் உள்ள அருங்காட்சியகங்களில் புத்தர் கற்சிலைகளைக் காணமுடிந்தது. அவ்வாறான ஆதாரங்கள் என்னுடைய சோழ நாட்டில் பௌத்தம் (புது எழுத்து, செப்டம்பர் 2022) இடம் பெற்றுள்ளது. அந்நூலில் சோழ நாட்டில் உள்ள 63 புத்தர் சிலைகளைப் பற்றிய குறிப்புகள் தரப்பட்டுள்ளன.
தஞ்சாவூர் அருங்காட்சியகங்களில் உள்ள புத்தர் சிலைகளைப் பற்றியும் குறிப்புகளும் அந்நூலில் இடம்பெற்றுள்ளன. மதகரம், பட்டீஸ்வரத்தைச் சேர்ந்த புத்தர் கற்சிலைகள் தஞ்சாவூர் கலைக்கூடத்திலும், மாத்தூரைச் சேர்ந்த புத்தர் சிலை தமிழ்ப் பல்கலைக்கழக அருங்காட்சியகத்திலும், சோழன் மாளிகையைச் சேர்ந்த இரு புத்தர் சிலைகள் மராத்தியர் அரண்மனை அகழ்வைப்பகத்திலும் உள்ளன. சோழன்மாளிகையைச் சேர்ந்த இரு சிலைகளில் ஒரு சிலை நின்ற கோலத்தில் உள்ளது. பிற சிலைகள் அமர்ந்த நிலையில் தியான கோலத்தில் உள்ளவையாகும். தஞ்சாவூர் கலைக்கூடத்தில் நின்ற நிலையிலுள்ள நாகப்பட்டின புத்தர் செப்புத்திருமேனியும் உள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
18 பிப்ரவரி 2023இல் தஞ்சாவூர் அருங்காட்சியகம் சென்றபோது அச்சிலையைக் கண்டேன். மேலுள்ள வரிசையில் தற்போது தஞ்சாவூர் அருங்காட்சியக புத்தர் சிலையும் இணைகிறது. தஞ்சாவூர் அருங்காட்சியகத்தில் உள்ள புத்தர் சிலை அமர்ந்த நிலையில் தியான கோலத்தில் உள்ளது. சிலையின்கீழ் 10-11ஆம் நூற்றாண்டு, சோழர் காலம் என்ற குறிப்பு உள்ளது. வழக்கமாக சோழ நாட்டில் களப்பணியில் உள்ள புத்தர் சிலைகளில் காணப்படுகின்ற சற்றே மூடிய கண்கள், நீண்ட காதுகள். புன்னகை சிந்தும் இதழ்கள், தலையில் தீச்சுடர், நெற்றியில் திலகக்குறி, மேலாடை, அகன்ற மார்பு, பரந்த தோள்கள் ஆகிய சிற்பக்கூறுகளுடன் இச்சிலை உள்ளது.
தஞ்சாவூர் அருங்காட்சியகத்தில் உள்ள புத்தர் சிலையுடன் கட்டுரையாளர் |
அருங்காட்சியகங்களிலும், பிற பொதுவிடங்களிலும் காணப்படுகின்ற புத்தர் சிலைகள் சோழ நாட்டில் பௌத்தம் பரவியிருந்ததை உணர்த்துகின்ற சான்றுகளாக உள்ளன. இவற்றைப் பாதுகாத்து, இதனைப் பற்றிய பெருமைகளை வெளிக்கொணர்வது தற்போதைய தேவையாகும். இவைபோன்ற ஆதாரங்களே வரலாற்றுக்குப் பெரிதும் துணை நிற்பவையாகும். இந்நூலை ஆங்கிலத்தில் எழுதும் முயற்சியில் ஈடுபட்டுள்ளேன். அடுத்து வெளிவருகின்ற பதிப்பில் இந்த புத்தரும் இணைவார்.
|
தஞ்சாவூர் அருங்காட்சியகத்திற்கு இந்தப் புத்தர் சிலையைப் பார்க்கச் சென்றபோது மாவட்ட ஆட்சியர் திரு தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் அவர்களைக் காணும் அரிய வாய்ப்பு கிடைத்தது. அப்போது அவரிடம் அருங்காட்சியக அமைப்பிற்கு அவரைப் பாராட்டியதோடு என் பௌத்த ஆய்வினைப் பற்றிப் பேசினேன். சிறு மணித்துளிகள் நேரம் ஒதுக்கி என் கருத்தைக் கேட்ட அவருக்கு மனமார்ந்த நன்றி. அவருடைய முயற்சியைப் போற்றும் வகையில் மாணவர்கள், ஆய்வாளர்கள், பொதுமக்கள், சுற்றுலாப்பயணிகள் இவ்வருங்காட்சியத்தைப் பார்த்துப் பயன்பெற வேண்டுகிறேன்.
புத்தரைப் பார்த்தாலே மனம் அமைதி ஆகிறது...
ReplyDelete