பௌத்த சுவட்டைத் தேடி : வளையமாபுரம்
2023 ஜனவரியுடன் இவ்வலைப்பூவில் 12 ஆண்டுகளை நிறைவு செய்கிறேன். என் ஆய்விற்குத் துணைநிற்கும் அனைவருக்கும் மனமார்ந்த நன்றி.
சோழ நாட்டில் பௌத்தம் என்ற என்னுடைய நூல் அண்மையில் வெளியாகியுள்ளது. இந்நூலின் மேலட்டையில் வளையமாபுரத்தில் சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்னர் களப்பணியின்போது கண்ட புத்தர் சிலையின் ஒளிப்படம் இடம்பெற்றுள்ளது. நூலின் வடிவமைப்பைப் பாராட்டிய நண்பர்களில் சிலர் புத்தர் சிலைக்குப் பின் அமைக்கப்பட்டுள்ள இயற்கையான காட்சி படத்திற்கு அழகூட்டுகிறது என்று கூறியிருந்தனர். இந்தச் சிலை, வயலில் இருந்தது. உள்ளது உள்ளபடியே களப்பணியின்போது அச்சிலையை ஒளிப்படம் எடுத்தேன். அதுவே அட்டையில் இடம்பெற்றுள்ளது என்பதைத் தெரிவிப்பதில் மகிழ்கிறேன். அங்கு சென்றுவந்த அனுபவத்தை இப்பதிவில் காண்போம்.
1995
திருவாவடுதுறை ஆதீனம் நடத்திய சைவ சித்தாந்த நேர்முகப் பயிற்சியின்போது (1995-97) தஞ்சாவூர் மையத்தில் சைவ சித்தாந்த வகுப்பிற்குச் சென்றேன். என் ஆய்வினைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கும்போது ஆசிரியர் திரு சௌரிராஜன், வளையமாபுரத்தில் மூன்று புத்தர் சிலைகள் இருந்ததாகவும், அங்கு சென்றால் அதனைப் பற்றி அறியலாம் என்றும் கூறினார். அக்காலகட்டத்தில் சோழ நாட்டில் புத்தர் சிலைகள் உள்ள இடங்களைப் பற்றி விவாதிக்கும்போது, வளையமாபுரத்தில் ஒரு புத்தர் சிலை இருப்பதாக சில நண்பர்கள் உறுதி செய்தனர். ஆய்வியல் நிறைஞர் ஆய்வேட்டினை மதுரை காமராசர் பல்கலைக்கழகத்திற்கு விரைவில் அளிக்கவேண்டியிருந்ததால் உடன் களப்பணியினை மேற்கொள்ள முடியவில்லை.
ஜனவரி 1999
முனைவர் பட்ட ஆய்வேட்டிற்காக களப்பணி மேற்கொண்டபோது வலங்கைமான் சென்றேன். அப்பகுதியில் விசாரித்தபோது எங்கோ வயலில் புதைந்துள்ளதாகவும், அறுவடைக்குப் பின் வந்தால் காணலாம் என்றும் தெரிவித்தனர்.
ஏப்ரல் 2007
எட்டு ஆண்டுகள் கழித்து அங்கு செல்லும் வாய்ப்பு கிடைத்தது. தஞ்சாவூரிலிருந்து கும்பகோணம் சென்று அங்கிருந்து என் கும்பகோணம் நண்பருடன் பைக்கில் வலங்கைமான் சென்றேன். பல இடங்களில் விசாரித்தேன். வலங்கைமான்-நல்லாம்பூர் சாலையில் வளையமாபுரம் என்னுமிடத்தில் ஒரு சிலை உள்ளதாகவும், ஒத்தப்புளிய மரம் இருக்கும் இடத்தின் அருகே தோப்பின் அருகில் சென்று விசாரிக்கும்படியும் கூறினர். இருவரும் விசாரித்துக்கொண்டே சென்றோம். தூரத்திலிருந்து பார்த்தபோது சிலையின் பிற்பகுதியைக் கண்டோம். வயலில் இறங்கி, சிலையை நெருங்கி முன் பக்கம் பார்த்தபோது அது புத்தர் சிலை என்பதை அறிந்தேன். அச்சிலை தலையில்லாமல், அமர்ந்த நிலையில் தியான கோலத்தில் கம்பீரமாக இருந்த புத்தர் சிலையாகும். இருட்ட ஆரம்பித்ததால் அங்கிருந்து திரும்பினோம்.
மே 2007
அங்கு தனியாகச் சென்றேன். வயலில் சிலை இருந்தது. முன்பு அந்த இடம் மண் மேடாக இருந்ததாகவும், அதனை சமப்படுத்தும்போது உடல் பகுதி தனியாகவும், தலைப்பகுதி தனியாகவும் கிடைத்ததாகவும் கூறினர். வயலில் நான் பார்த்தபோது உடல் பகுதி மட்டுமே இருந்தது. 92 செமீ உயரம் கொண்ட அச்சிலை, நான் பார்த்த அழகான சிலைகளில் ஒன்றாகும். வயலில் வேலை பார்த்துக்கொண்டிருந்தவர்கள் நான் சிலையைச் சுத்தம் செய்வதையும் படம் எடுத்தையும் பார்த்துக்கொண்டிருந்தனர். இச்சிலை சோழ நாட்டில் காணப்படுகின்ற பிற புத்தர் சிலைகளுக்குரிய கூறுகளான அகன்ற மார்பு, பரந்த தோள்கள், வலது கையில் தர்மசக்கரக்குறி, மார்பிலும் இடுப்பிலும் ஆடை போன்ற கூறுகளைக் கொண்டுள்ளது. அருகில் தலைப்பகுதி அண்மைக்காலம் வரை இருந்ததாகவும் கதிர் அடிப்பதற்காக அவ்வப்போது தலையை எடுத்துச் சென்றுவிடுவதாகவும் கூறினர். சிலைக்கு முன்புறம் சிறு செடி கொடிகளை அகற்றிவிட்டு, சிலை முழுமையாகத் தெளிவாகத் தெரியும் வகையில் சுத்தம் செய்து அதனை ஒளிப்படம் எடுத்தேன். நான் ஒளிப்படம் எடுத்தபோது வயலில் பணியாற்றிக்கொண்டிருந்தோர் ஆர்வமாகப் பார்த்தனர். பலர் மும்முரமாக தத்தம் பணியில் ஈடுபட்டிருந்தனர். அவர்களிடம் சிலையின் தலைப்பகுதியைப் பற்றிக் கேட்டேன். அருகில் இருப்பதாகக் கூறினர். பல இடங்களில் அதனைத்தேட முயற்சித்தேன். எங்கும் தலைப்பகுதியைக் காணவில்லை. என்றாவது ஒரு நாள் தலைப் பகுதி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் ஊர் மக்களுக்கும் உதவியவர்களுக்கும் நன்றி கூறினேன். தலையின்றி இருந்த இந்த புத்தரின் அழகு என் மனதில் ஆழப்பதிந்தது. தொடர்ந்து இந்த புத்தரைப் பற்றிய செய்தி பல நாளிதழ்களில் வெளியாயின.
ஜூன் 2007
நாளிதழ் செய்திகளைப் பார்த்து, அலுவலகத்திற்கு பாராட்டு தெரிவிக்க வந்த நண்பர் 30 வருடங்களுக்கு முன் வளையமாபுரத்தில் இரு புத்தர் சிலைகள் இருந்ததாகவும் பெரிய சிலையின் உடற்பகுதியும் தலைப்பகுதியும் தனித்தனியாக இருந்ததாகவும், மற்றொரு சிலை அரை அடி உயரமே இருந்ததாகவும கூறினார். அடுத்தடுத்து விசாரித்தபோது மற்றொரு சிலையைப் பற்றி எவ்வித தகவலும் கிடைக்கவில்லை.
வளையமாபுரம் புத்தர்
ஒளிப்படம் : பா. ஜம்புலிங்கம்
நன்றி
திரு சௌரிராஜன், திரு சுப்ரமணியன், திரு தீனதயாளன், திரு கா.சண்முகம், மற்றும் செய்தி வெளியிட்ட இதழ்கள்
தங்களது பணி மேலும் சிறக்க வாழ்த்துகள்.
ReplyDeleteஇனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்களும்கூடி....
அருமை...
ReplyDeleteஅனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள்...