அசைக்க முடியாத வரலாற்று ஆவணம்: திரு கரந்தை ஜெயக்குமார்
என்னுடைய சோழ நாட்டில் பௌத்தம் நூலினைப் பற்றிய மதிப்புரையை தன்னுடைய வலைப்பூவில் பகிர்ந்த திரு கரந்தை ஜெயக்குமார் அவர்களுக்கு நன்றி. இந்நூலுக்கான முதல் மதிப்புரை இதுவே என்பதில் மகிழ்ச்சி.
--------
துபாய் புத்தர்
தேடிச் சோறுநிதந் தின்று – பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி – மனம்
வாடித் துன்பமிக உழன்று – பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து – நரை
கூடிக் கிழப்பருவ மெய்தி – கொடுங்
கூற்றுக் கிரையெனப்பின் மாயும் – பல
வேடிக்கை மனிதரைப் போல – நான்
வீழ்வே னென்றுநினைத் தாயோ?
இவரைப் பார்க்கும் பொழுதெல்லாம், முண்டாசுக் கவிஞனின், இந்தப் பாடல் வரிகள்தான் என் நினைவிற்கு வரும்.
காரணம், வேடிக்கை மனிதராய் வீழ்ந்துவிடாமல், இப்புவியில், தான் வாழ்ந்ததற்கான அடையாளத்தை, அழுத்தமாய் விட்டுச் செல்ல, இவர் மேற்கொள்ளும் முயற்சிகள்.
இவரது உழைப்பு.
இவரது தேடல்.
ஓயாத தேடல்.
ஆய்வியல் நிறைஞர் ஆய்வுப் படிப்பிற்காகத் தேடினார்.
முனைவர் பட்ட ஆய்விற்காகத் தேடினார்.
ஆய்வியல் நிறைஞர் பட்டம் பெற்றுவிட்டார்.
முனைவர் பட்டமும் பெற்றவிட்டார்.
தான் பார்த்துக் கொண்டிருந்த பணியில் இருந்தும், வயது முதிர்வு காரணமாக ஓய்வும் பெற்றுவிட்டார்.
ஆனாலும் தொடர்ந்து, ஓயாமல் தேடிக்கொண்டே இருக்கிறார்.
தனது குடும்பத்திற்காகவோ,
தான் சார்ந்த சமூகத்திற்காகவோ,
தான் சார்ந்த இனத்திற்காகவோ,
இவர் தேடவில்லை.
சுத்தமாய் சுயநலமற்ற தேடல், இவரது தேடல்.
துளியும், தன்னலமற்ற தேடல், இவரது தேடல்.
தேடலுக்கான, இவரது ஆய்வு எல்லையும் சிறிதல்ல.
சோழ நாடு.
முன்பிருந்த, ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டம், ஒருங்கிணைந்த திருச்சி மாவட்டம், புதுக்கோட்டை மாவட்டம்.
எதற்காக இந்த எல்லை?
இந்த எல்லைக்குள் எதைத் தேடினார்?
பௌத்தத்தைத் தேடினார்.
தமிழகத்தில் காஞ்சிபுரத்திற்கு அடுத்து, சோழ நாட்டில்தான் பௌத்தத்தின் தாக்கம் அதிகம்.
எனவே, சோழ நாட்டில் பௌத்தத்தைத் தேடினார்.
சோழ நாட்டு எல்லைக்குள் இவர் தேடிய பௌத்தம் எது?
கோயில்களா?
விகாரைகளா?
கோயில்கள் வழிபாட்டுத் தலங்கள்.
விகாரைகள், புத்த பிக்குகள் தங்கி, மதம் சார்ந்து பணியாற்றிய இடங்கள்.
பூம்புகாரிலும், நாகப்பட்டினத்திலும் புத்த விகாரைகள் இருந்திருக்கின்றன.
ஆனால், இன்று பூம்புகாரில் மட்டுமே, விகாரையின் எச்சம் மீதமிருக்கிறது.
புத்த கோயில்கள் இல்லை.
புத்த விகாரைகள் இல்லை.
புத்த சிலைகள் மட்டுமே, பரவலாய் காணக் கிடைக்கின்றன.
எனவே, புத்தர் சிலைகளைத் தேடினார்.
தேடிக் கொண்டே இருக்கிறார்.
நேற்று தேடினார்.
இன்றும் தேடுகிறார்.
நாளையும் தேடுவார்.
தேடித் தேடி, கண்டுபிடித்துக் கொண்டே இருக்கிறார்.
நூற்றிற்கும் மேற்பட்ட ஊர்களுக்கு நேரில் சென்று புத்தர் சிலைகளைத் தேடியிருக்கிறார்.
காடு, மேடு, வயற்காடு, ஆற்றங்கரைகள் என இன்றைய நவீனத்துவத்தின் வெளிச்சம் கொஞ்சம்கூடப் படாத சின்னஞ் சிறு கிராமங்களில் எல்லாம் சுற்றித் திரிந்திருக்கிறார்.
பேருந்துப் பயணம்.
வாடகை மிதிவண்டிப் பயணம்.
இரண்டும் இல்லையேல், நடைப் பயணம்.
அசராத பயணமே இவரது வாழ்வாகிப் போனது.
புத்தர், புத்தர்.
ஒரே சிந்தனை.
19 புத்தர் சிலைகளைக் கண்டுபிடித்திருக்கிறார்.
புத்தரைத் தேடிப்போய், 13 சமண தீர்த்தங்கரர் சிலைகளையும் கண்டுபிடித்திருக்கிறார்.
நாகையில் ஒரு புத்தர் செப்புத் திருமேனியையும் கண்டுபிடித்திருக்கிறார்.
புத்தர் யார்?
சமணர் யார்?
எப்படி அறிவது?
நெற்றியில் திலகம் இருந்தால் புத்தர்.
உடலில் ஆடை இருந்தால் புத்தர்.
உள்ளங்கையில் தர்மச் சக்கரம் இருந்தால் புத்தர்.
இவையெல்லாம் இல்லாவிட்டால் சமணர்.
தேடிக் கொண்டே இருக்கிறார்.
கடந்த முப்பது ஆண்டுகளாகத் தேடிக்கொண்டே இருக்கிறார்.
2017 இல் பணி நிறைவு.
ஆனாலும் தேடிக் கொண்டே இருக்கிறார்.
இவரது முப்பது ஆண்டுகாலத் தேடல்.
முப்பது ஆண்டுகால கண்டுபிடிப்புகள்.
ஒரு நூலாய் மர்ந்திருக்கிறது.
சோழ நாட்டில் பௌத்தம்
வாழ்வு
முழுமையாய்
முகம் காட்டுகிறது.
நூலினைக் கையில் ஏந்தும் பொழுதே, புத்தச் செப்புத் திருமேனியைக் கைகளில் தாங்கும் ஓர் உணர்வு, உள்ளத்தே எழுந்து, பொங்கி வழிகிறது.
நூலின் இடது பக்கங்களில் முழுமையாய் புத்தர் சிலைகள்.
வலது பக்கங்களில், அந்தந்த புத்தர் சிலை பற்றியத் தகவல்கள்.
தலையில்லாத புத்தர்.
உடலின்றி, தலை மட்டுமே மீதமிருக்கும் புத்தர்.
காலவோட்டத்தில், சமயக் காழ்ப்புணர்ச்சியுடன் சிதைக்கப்பட்ட புத்தர் சிலைகள்.
பார்க்கப் பார்க்க, படிக்கப் படிக்க மனதை வேதனை வாட்டுகிறது.
இவரால் கண்டுபிடிக்கப்பட்ட, மீசையுடன் கூடிய, உலகின் ஒரே ஒரு புத்தர் சிலையினைக் காணும்பொழுது, மனதில் மகிழ்ச்சி எழுகிறது.
துபாய் புத்தரைக் கண்டுபிடித்திருக்கிறார்.
ஒரு ஊரில் இருக்கும், இந்த புத்தர் சிலையில், காலை வேளையில், கழுத்தில் மாலை, புத்தம் புது மாலை இருந்தால், அந்த ஊரைச் சார்ந்த யாரோ, துபாய்க்குப் போகிறார்கள் என்று பொருள்.
துபாய் புத்தர்.
ஒரு ஊரில், இருக்கும் புத்தர் சிலையை, திருமணம் ஆகாத பெண்கள் சுற்றி வந்து, புத்தருக்கு அருகில் நின்று புகைப்படம் எடுத்துக் கொள்கிறார்கள்.
விரைவில் திருமணம் ஆகிறது.
திருமணத்திற்குப் பின், கணவரோடு சேர்ந்து வந்து, புத்தரோடு ஒரு புகைப்படம்.
இரு புகைப்படங்களும் வீட்டின் சுவற்றில் இடம் பிடித்து, புத்தரின் பெருமையினை இன்றும் சொல்கின்றன.
இந்துக்களால் வணங்கப்படும் புத்தர்.
இந்துக்களால் போற்றப்படும் புத்தர்.
பக்கத்துக்குப் பக்கம் சுவை கூடுகிறது.
இதுநாள் வரை சிற்பம் என்றாலும், சிலை என்றாலும் ஒன்று என்றுதான் நினைத்திருந்தேன்.
இந்த எண்ணத்தை மாற்றியிருக்கிறது, இந்த நூல்.
புத்தர் சிற்பங்கள்.
புத்தர் சிலைகள்.
இந்நூலின் இரு அத்தியாயங்கள் இவை.
கோயில் சுவர்களில், கோயிலின் கருவறையின் வெளிச் சுவற்றில் செதுக்கப் பெற்றிருப்பவை சிற்பங்கள்.
தனியாக, முப்பரிமாண உருவத்தில் அமர்ந்திருப்பவை அல்லது நிற்பவை சிலைகள்.
தஞ்சைப் பெரிய கோயிலில், கும்பகோணம் ஐராவதீஸ்வரர் கோயிலில், திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி கோயிலில் இடம் பிடித்திருக்கும், புத்தர் சிற்பங்களைத் தெளிவானப் படங்களோடு, இவர் காட்டும் பொழுது வியப்பு ஏற்படுகிறது.
இந்து கோயில்களில், பௌத்த சிற்பங்கள்.
எத்துணைமுறை இந்த கோயில்களுக்குச் சென்றிருப்பேன்.
ஆனால் ஒருமுறை கூட, இச்சிற்பங்களைக் கண்டதில்லையே எனும் எண்ணம் சுடுகிறது.
காரணம், எது கண் சாதாரணக் கண்.
எனது பார்வை மேலோட்டப் பார்வை.
ஆனால், இவரது கண் ஆய்வுக் கண்.
இவரது பார்வை ஆய்வுப் பார்வை.
சோழ நாட்டில் பௌத்தம்
ஒவ்வொரு பக்கத்திலும் இடம் பெற்றிருக்கும்
ஒவ்வொரு படமும் அழகு, தெளிவு.
இந்நூலுக்காகப் புகைப்படும் எடுப்பதற்காகவே மீண்டும் ஒருமுறை பயணித்திருக்கிறார்.
சோழ நாட்டில் பௌத்தம்
நூல் என்று
எளிமையாகக் கூறிவிட முடியாது.
ஆவணம்.
சோழ நாட்டு பௌத்தம்
பற்றிய,
அசைக்க முடியாத, மறுக்க முடியாத
ஒரு வரலாற்று ஆவணம்.
இந்நூல்
இவரது வாழ்நாள் உழைப்பு.
தஞ்சாவூர், தமிழ்ப் பல்கலைக் கழகத்தில், ஒரு சாதாரண தட்டச்சு சுருக்கெழுத்தாளராக நுழைந்து, தன்னைத் தகவமைத்துக் கொண்டு, இனி தன் வழி பௌத்த வழி என அறுதியிட்டு, உறுதியாய் முடிவெடுத்து, எம்.ஃ.பில்., ஆய்வில் பௌத்தம், முனைவர் பட்ட ஆய்வில் பௌத்தம், தன் வாழ்நாள் ஆய்வே பௌத்தம், பௌத்தம் என புத்தரின் காலடிச் சுவடுகளைத் தேடுவதையே, தன் வாழ்நாள் பணியாக சிரமேற்கொண்டு செயலாற்றிவரும்,
பாராட்ட வார்த்தைகள் இல்லை.
சோழ நாட்டில் பௌத்தம்
இன்னும் பல நூறாண்டுகள் கடந்தாலும்,
முனைவர் பா.ஜம்புலிங்கனாரின்
பெயர் சொல்ல
இந்த ஒரு நூல் போதும்.
சோழ நாட்டில் பௌத்தம்
அவசியம் அனைவரும்
வாசித்து அறிய வேண்டிய,
உணர வேண்டிய வரலாற்று ஆவணம்.
படித்துப் பாருங்கள்.
புதிய பார்வை கிடைக்கும்.
புத்தம் புது புரிதல் பிறக்கும்.
சோழ நாட்டில் பௌத்தம்
படிமம்,
புது எழுத்து வெளியீடு,
2/203, அண்ணா நகர்,
காவேரிப் பட்டினம்,
கிருஷ்ணகிரி மாவட்டம்- 635 112
தமிழ்நாடு.
98426 47101
63742 30985
திரு கரந்தை ஜெயக்குமார் தளத்தில் வாசிக்க :
துபாய் புத்தர், கரந்தை ஜெயக்குமார் வலைப்பூ, 23 நவம்பர் 2022
நூல் தேவைக்குத் தொடர்புகொள்ள : 98426 47101
21 டிசம்பர் 2024இல் மேம்படுத்தப்பட்டது.
அங்கும் படித்து இருந்தேன் வாழ்த்துகள்.
ReplyDeleteவாழ்த்துகள் ஐயா...
ReplyDeleteமகிழ்ந்தேன் ஐயா
ReplyDelete