பௌத்த சுவட்டைத் தேடி : விடையபுரம்
24 செப்டம்பர் 2021
முனைவர் மீ.மருதுபாண்டியன் (காப்பாட்சியர், அரசு அருங்காட்சியகம், மதுரை மற்றும் திருவாரூர்) அவர்கள் என்னைத் தொடர்புகொண்டு புதூர் புத்தரைப் பற்றிய விவரங்களைக் கேட்டார். 25 கிமீ மிதிவண்டியில் பயணித்து, அந்த புத்தர் சிலையை 1999இல் கண்டதையும், தொடர்ந்து அச்செய்தி நாளிதழ்களில் வெளியானதையும் கூறினேன். அந்த புத்தரைப் பற்றிய பதிவு இருப்பதறிந்து மகிழ்ந்தார்.
அப்போது அவர் திருவாரூர் மாவட்டம் குடவாசல் வட்டம் விடையபுரத்தில் என்ற இடத்தில் ஒரு புத்தர் சிலை இருந்ததாகவும், தற்போது அச்சிலை குடவாசல் வட்டாட்சியர் அலுவலகத்தில் இருப்பதாகவும் கூறினார். அச்சிலையை இன்னும் பார்க்கவில்லை என்று கூறி முடிப்பதற்குள் அதன் புகைப்படத்தை அனுப்பிவிட்டார்.
புகைப்படத்தைப் பார்த்ததும், அதனை அனுப்பியதற்காக அவருக்கு நன்றி தெரிவித்துவிட்டு, அச்சிலையை இதுவரை நான் பார்க்கவில்லை என்று கூறினேன். "நீங்கள் பார்க்காத ஒரு சிலைகூட உண்டா? உங்களுக்குத் தெரிந்திருக்கும் என நினைத்து, நான் கூறவில்லை. நீங்கள் பார்க்காத சிலை என்று தெரிந்திருந்தால் உங்களுக்கு தெரிவித்து இருப்பேன். சோழ நாட்டில் பௌத்தம் என்றாலே உங்கள் நினைவு வந்துவிடுகிறது" என்று கூறினார். அவருடனான உரையாடல் எனக்கு நெகிழ்வினைத் தந்தது.
அவரைப் போன்ற நண்பர்களால்தான் நான் ஆய்வினை தொடர்ந்து செய்வது சாத்தியமாகிறது. அச்சிலையைக் காணும் நாளுக்காகக் காத்திருக்கிறேன் என்று கூறியவுடன் அதற்காக உதவுவதாகக் கூறிய அவருடைய பெருமனதை அறிந்து மகிழ்ந்தேன்.
27 செப்டம்பர் 2021
திருநாட்டியத்தான்குடியிலுள்ள இரு புத்தர் சிலைகளைப் பார்ப்பதற்காகச் சென்றபோது குடவாசல் சென்றேன். வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் திருமதி தி.உஷாராணி அவர்களைச் சந்தித்தேன். வளாகத்தில் உள்ள புத்தர் சிலையைப் பற்றிக் கூறினேன். அவர் அவ்வலுவலகப் பணியாளரை அனுப்பி சிலையைப் பார்க்க எனக்கு உதவும்படி கூறினார். அவருடைய உதவியுடன் சிலையைப் பார்த்தேன். நெடுக்குவாக்கில் இரு பகுதிகளாக இருந்த அச்சிலையின் ஒரு பகுதி தெளிவாகவும், மற்றொரு பகுதி தெளிவின்றியும் இருந்தது. இதைப் பார்த்தபோது ஒரு பாதி சிலையை மட்டுமே செதுக்கியதை போல் உள்ளது. சோழ நாட்டில் வேறு எந்த புத்தர் சிலையும் இவ்வாறாக நெடுக்குவாக்கில் இரு பகுதிகளாகக் காணப்படவில்லை.
9 நவம்பர் 2022இல் மேம்படுத்தப்பட்டது.
தங்களின் தேடல் தொடரட்டும் ஐயா
ReplyDeleteஅருமை ஐயா... இதற்கு பின் நெஞ்சம் கொதிக்கும் வரலாறு இருக்கிறது...
ReplyDeleteதங்களது பணி மகத்தானது.
ReplyDeleteதிருநாட்டியத்தான்குடி வரலாறு அறிய ஆவலாக உள்ளேன்.