களப்பணியில் கண்டுபிடிக்கப்பட்ட சமண தீர்த்தங்கரர் சிற்பங்கள் (2009-2011)
புத்தரது சிற்பங்களைத் தேடிக் களப்பணிக்குச் சென்றபோது பல இடங்களில் சமண தீர்த்தங்கரர் சிலைகளைக் காணமுடிந்தது. புத்தர் அல்லாத சிலைகளைப் பற்றி அதிகமாக விவரங்களை அக்காலகட்டத்தில் நான் தொகுக்க இயலாத நிலையில் அவற்றைப் பற்றிய சிறிய குறிப்புகளை என்னுடைய முனைவர்ப் பட்ட ஆய்வேட்டில் இணைத்தேன். அவற்றைப் பற்றி பிறிதொரு பதிவில் பார்த்தோம்.
நானும் புதுதில்லி, நேரு டிரஸ்ட் திட்டத்தினை (G.Thillai Govindarajan, Jainism in Thanjavur district, Tamil Nadu, Nehru Trust for the Indian Collections at the Victoria & Albert Museum, New Delhi, 110 011, Project Report, May 2010) மேற்கொண்ட தில்லை. கோவிந்தராஜனும் இணைந்து மேற்கொண்ட களப்பணியின்போது கண்டுபிடிக்கப்பட்ட சமண தீர்த்தங்கரர் சிற்பங்களைப் பற்றிய செய்திகள் நாளிதழ்களில் வெளிவந்தன. அவை உள்ளிட்ட, அக்காலகட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்ட சமண தீர்த்தங்கரர் சிற்பங்களைப் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.
செருமாக்கநல்லூர் (ஜூன் 2009)
தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் வட்டம், செருமாக்கநல்லூரில் சபரிமூக்காயி அம்மன் திடலில் 24ஆவது சமண தீர்த்தங்கரர் சிற்பம் உள்ளது. மூன்றடி உயரம்,, இரண்டேகால் அடி அகலம் கொண்டுள்ள இந்தச் சிலை பத்மாசன யோக நிலையில் பீடத்தில் உள்ளது. சிம்மாசனம், சாமரம் வீசும் யக்சர்கள், முக்குடை, மரம் போன்ற அமைப்புகளுடன் இள்ள இச்சிலையில் முகமும், தலையின் மேற்புறத்தில் உள்ள முக்குடையும் சிதைந்துள்ளன. இந்தச் சிலை பிற்கால சோழர் காலத்தைச் சேர்ந்தது. சோழர் கால கல்வெட்டின்மூலம் இந்த ஊரில் சிறுமாக்கநல்லூர் கன்னிக்கீரன் என்ற அரசு அகிரி வாழ்ந்ததாக அறிமுடிகிறது. அதேபோல, இவ்வூருக்கு அருகில் பெருமாக்கநல்லூர் என்ற ஊரும் உள்ளது. இந்தச் சிலையை உள்ளூர் மக்கள் கருப்பசாமி என்று பெயரிட்டு வழிபடுகின்றனர். தினமும் சிலைக்கு வழிபாடு நடத்துவதுடன், ஆடி வெள்ளியின்போது சிறப்பு பூஜைகளும் செய்கின்றனர்.
சுரைக்குடிப்பட்டி (பிப்ரவரி 2010)
நாகப்பட்டினம் மாவட்டம் பூதலூர் அருகே சுரைக்குடிபட்டி கிராமத்தில் அய்யனார் கோயில் உள்ளது. அங்கு சமண தீர்த்தங்கரர் சிற்பம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மூன்றேகால் அடி உயரமும், இரண்டரை அடி அகலமும் கொண்ட இந்த சிற்பம் ஒரு பீடத்தின்மீது அமர்ந்த நிலையில் தியான கோலத்தில் சிம்மாசனத்தில் உள்ளது. சிற்பத்தின் இரண்டு பக்கங்களிலும் நின்ற நிலையில் யக்சர்கள் காணப்படுகின்றனர். தலைக்கு மேல் முக்குடை உள்ளது. நீண்ட காதுகளும், மூடிய நிலையில் கண்களும் கொண்ட இச்சிற்பம் திகம்பரமேனியாக உள்ளது. இச்சிற்பம் பிற்காலச் சோழர் காலத்தைச் சேர்ந்ததாகக் கூறப்படுகிறது.
நாளிதழ் செய்தியின் (பழங்காலச்சிலை குறித்து ஆய்வு, தினமணி, 21 ஆகஸ்ட் 2010, ப.4) அடிப்படையில் களப்பணி மேற்கொண்டோம். வேதாரண்யத்தை அடுத்த பஞ்சநதிக்குளம் மேற்கு ஊராட்சியில் முள்ளியாற்றுக்குள் மக்கள் துணி துவைக்க பயன்படுத்திவரும் 11ஆம் நூற்றாண்டு சமணர் சிற்பம் என்பது தெரிய வந்தது. தலை பகுதி காணப்படாத சமணர் கல்சிலைஅமர்ந்த நிலையில் தியான கோலத்தில் உள்ளது. இரு பக்கங்களிலும் யக்சிகள் காணப்படுகிறது. பீடத்தின் வலது பக்கத்தில் சிம்மம் காட்டப்பட்டுள்ளது. பீடத்துடன் 57செமீ உயரம், 45 செமீ அகலம் உள்ளது. நாகை மாவட்டத்தில் ஏற்கெனவே நாகை வெளிப்பாளையம், புளியகுடி ஆகிய இடங்களில் சமணர் சிலைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. மேலும் இந்த பகுதியில் தொடர்ந்து ஆய்வுகள் மேற்கொள்ளப்படவுள்ளது.
தோலி (நவம்பர் 2011)
திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகே உள்ள தோலி கிராமத்தில் 24ஆவது சமண தீர்த்தங்கரரான மகாவீரர் சிற்பம் அண்மையில் கண்டெடுக்கப்பட்டது. இந்த சிற்பம் 32 அங்குலம் உயரமும், 19 அங்குலம் அகலமும் கொண்டது. இந்தச்சிலை பத்மாசனத்தில் தியான கோலத்தில் உள்ளது. சிம்மாசனம், சாமரம் வீசும் யட்சர்கள், முக்குடை போன்ற அமைப்புகள் இந்தச் சிற்பத்தில் காணப்படுகின்றன. நீண்ட காதுகளும், மூடிய நிலையில் கண்களும் கொண்ட இந்தச் சிலை திகம்பர மேனியாக உள்ளது. தலையின் பின்புறம் பிரபை காணப்படுகிறது. இது பிற்காலச்சோழர் காலத்தைச் சேர்ந்ததாகும். காவிரி டெல்டா மாவட்டப் பகுதிகளான வேம்பழகன்காடு, முன்னியூர், செங்கங்காடு, தம்ளாம்புலியூர், பஞ்சநதிக்குளம், நாகப்பட்டினம், புலியூர் செராங்குடி ஆகிய ஏழு இடங்களில் சமண சிற்பங்கள் இதுவரை கண்டறியப்பட்டுள்ளன. இதன்மூலம் இப்பகுதியில் சமணம் தழைத்திருந்ததை அறியமுடிகிறது.
-------------------------------------------------------------------------------------------
நன்றி: திரு அய்யம்பேட்டை செல்வராஜ்,
திரு கோ.தில்லை கோவிந்தராஜன், நாளிதழ்கள்
-------------------------------------------------------------------------------------------
12 மார்ச் 2025இல் மேம்படுத்தப்பட்டது.
Comments
Post a Comment