பௌத்த சுவட்டைத் தேடி : ஆயிரவேலி அயிலூர்முனைவர் பா.ஜம்புலிங்கம்
ஆயிரவேலி அயிலூர் என்னுமிடத்தில சிலை இருப்பதாகக் கேள்விப்பட்டு, அவ்வூரைத் தேடி புத்தர் சிலையைக் கண்டதும், முசிறி அருகே ஒரு புத்தர் சிலை இருப்பதாக தொலைக்காட்சி நிருபர் என்னை அழைக்க, அது புதிய சிலை என நினைத்துக்கொண்டு ஆவலாகச் சென்று மறுபடியும் அதே புத்தரைப் பார்த்ததும் இம்மாதப் பகிர்வு. 
 
சூன் 1999
எந்தவொரு அறிஞரைச் சந்தித்தாலும், நிகழ்வுகளில் கலந்துகொண்டாலும் புத்தர் சிலைகளைப் பற்றிய விவரங்களைக் கேட்டுத் தெரிந்துகொள்வதைப் பழக்கமாக்கிக் கொண்டிருந்த காலகட்டம். கிடைக்கும் எந்த ஒரு செய்தியும் ஆய்வுக்கு உதவும் என்பது என் நம்பிக்கை. இந்நிலையில் தமிழகத் தொல்லியல் கழகம் நடத்திய ஒரு கருத்தரங்கிற்காக பாண்டிச்சேரிக்குச் சென்றிருந்தபோது பல அறிஞர்களையும், ஆய்வாளர்களையும் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது தொல்லியல் அலுவலர் திரு சொ.சாந்தலிங்கம் அவர்கள் "ஆயிரவேலி அயிலூர் என்னுமிடத்தில் புத்தர் சிலை உள்ளது. அச்சிலையைப் பார்த்துள்ளீர்களா?" என்றார். அவ்வாறான ஒரு சிலையைப் பார்க்கவில்லை என்றேன். எனது குறிப்பேட்டில் புத்தர் சிலை உள்ள இடம் என்ற நிலையில் ஆயிரவேலி அயிலூர் என்னும் பெயரைப் பதிவு செய்தேன். சில மாதங்கள் கழித்து அங்கு செல்லும் வாய்ப்பு என்னைத்தேடி வந்தது. 

அக்டோபர் 1999
கரூருக்குக் களப்பணி சென்றபோது அங்கு எனது சகலை உடற்கல்வி ஆசிரியர் திரு திருமூர்த்தி அவர்களைச் சந்தித்தேன். அவரிடம் விசாரித்தபோது, அவர் திருச்சி மாவட்டத்திலுள்ள தொட்டியம் வட்டத்தில் ஆயிரவேலி அயிலூர் இருப்பதாகவும் தற்போது அவ்வூர் ஸ்ரீராமசமுத்திரம் என்றழைக்கப் படுவதாகவும் கூறினார். உடன் பயணத்திட்டம் வகுக்கப்பட்டது. இருவரும் மகிழ்வுந்தில் அவ்வூருக்குக் கிளம்பிோம். விசாரித்துக்கொண்டே உரிய இடத்திற்கு வந்துவிட்டோம். நாங்கள் இருவரும் மகிழ்வுந்திலிருந்து இறங்கி சிலையைப் பற்றி விசாரிக்க ஆரம்பித்ததும் அங்கிருந்த உள்ளூர் மக்கள் ஆர்வமாக எங்களைப் பற்றிக் கேட்டனர். "இங்க அதுமாதிரி சிலை எதுவும் இல்லை" என்றார் ஒருவர். "முன்னாடி இருந்துச்சி, இப்ப இல்லை" என்றார் மற்றொருவர்.     
ஆயிரவேலி அயிலூர் புத்தர், புகைப்படம்: பா.ஜம்புலிங்கம்
பின்னர் எனது ஆய்வைப் பற்றியும், சிலையின் பெருமையைப் பற்றியும் திரு திருமூர்த்தி எடுத்துக்கூறினார். அங்கிருந்த பெரியவர் திரு தண்டபாணி சிவம் அங்கிருந்தவர்களிடம்,
"நம்ம ஊருக்கு ஆய்வு பண்ணத்தான் வந்திருக்காங்க. நம்ம ஊர்ல உள்ள புத்தரைப் பத்தி பெருமையா பேசறாங்க. இது மாதிரி ரொம்ப சிலை பாத்திருக்காங்களாம். அதைப் பத்திப் படிக்கிறாங்க. அவுங்களுக்கு உதவி செய்யுங்க" என்றார். திரு ராஜாமணி சிலை இருந்த இடத்திற்கு என்னை அழைத்துச்சென்று காண்பித்தார். அருகில் சென்றபின்னர்தான் அங்கு ஒரு சிலை இருப்பதே தெரிந்தது. நேரில் சென்று பார்த்தால் மட்டுமே அச்சிலை புத்தர் என்று உறுதியாகக் கூறமுடியும். பேட்டவாய்த்தலை புத்தரைப் போல அச்சிலை இருந்தது. பினனர் புகைப்படம் எடுத்தோம். அனைவரிடமும் நன்றிகூறிவிட்டு அங்கிருந்து கிளம்பினோம்.  

29.1.2012/30.1.2012
ஆம்பூரில் நடைபெற்ற கல்வெட்டறிஞர் திரு அனந்தபுரம் கிருட்டினமூர்த்தி அவர்களுடைய மகன் திரு மலையமான் திருமணத்திற்குச் சென்றுவிட்டு நானும் திரு தில்லை கோவிந்தராஜன் அவர்களும் பேருந்தில் தஞ்சாவூர் நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்தோம். இரவு 12.00 மணிக்கு மேல் இருக்கும். திரு தில்லை கோவிந்தராஜன் என்னிடம், "பின் இருக்கையில் உள்ள இருவர் புத்தர் சிலையைப் பற்றி பேசுகின்றார்கள், என்னவென்று கேட்கலாம்" என்றார். புத்தர் என்றதும் என் தூக்கம் கலைந்துவிட்டது. (அதற்கு முதல் நாள் திரு திருக்கவிலூர் நடராஜன் அவர்களுடன் நாங்கள் திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள காப்பலூர் குந்துநாதர் சமணக்கோயில், ரெண்டேரிப்பட்டு நேமிநாதர் கோயில், குன்னத்தூர் ஆதிநாதர் கோயில் ஆகிய மூன்று சமணக்கோயில்கள் உள்ளிட்ட சில கோயில்களுக்குச் சென்றிருந்தோம்.) திரு தில்லை கோவிந்தராஜன் அவர்களிடம் "நேற்றுதான் மூன்று சமணக்கோயில்கள் பார்த்தோம். தற்போது புத்தர் சிலையா?" என்று கேட்டுக்கொண்டே அவர்களிடம் பேச ஆரம்பித்தேன். அவர்களில் ஒருவர் பத்திரிக்கை நிருபர் என்றும், மற்றொருவர் தனியார் ொலைக்காட்சி நிருபர் என்றும் அறிமுகப்படுத்திக்கொண்டனர். எனது ஆய்வைப் பற்றிக் கூறியபின் தொலைக்காட்சி நிருபர் திரு கே.ஆர்.கே.குமார் முசிறி அருகில் புத்தர் சிற்பம் உள்ளதாகவும், அச்சிற்பத்தைப் பற்றி செய்தி தயாரிக்க உள்ளதாகவும் கூறினார்.  மேலும் பேச ஆரம்பித்தேன். அப்பகுதியில் உள்ள புத்தர் சிலைகளைப் பற்றியும், அவற்றைப் பற்றி என்னுடைய ஆய்வேட்டில் குறிப்பிட்டுள்ளது பற்றிக் கூறியதும் அவர் தான் கூறும் சிற்பத்தை இதுவரை யாரும் பார்த்திருக்க வாய்ப்பில்லை என்றார். எனக்கு உடனே பார்க்க ஆசை வரவே விடியற்காலை அவர் இறங்கும் இடத்திலேயே இறங்கிவிடலாமா என யோசித்தேன். விடியற்காலையில் இறங்கினாலும் அந்த இடத்திற்குச் செல்லும் முதல் பேருந்து வரும் வரை காத்திருக்கவேண்டுமே? என்ன செய்வது, ஒரே குழப்பம். இறுதியில் தஞ்சாவூர்  சென்றுவிட்டு, உடன் திரும்புவது என முடிவெடுத்தேன். அவரும் ஒத்துக்கொண்டார். 
30.1.2012
பயணக்களைப்பு தீர்வதற்குள் மறுபடியும் பயணிக்கவேண்டிய நிலை. பார்க்கப்போவது புதிய புத்தர் என்றதும் எனது ஆர்வம் இன்னும் அதிகமானது. காலை தஞ்சாவூர் வந்து சேர்ந்து சில நிமிடங்களுக்குள் களப்பணிக்கான ஆயத்தங்களுடன் கிளம்பினேன். நிருபர் கூறியபடி திருச்சியிலிருந்து சேலம் செல்லும் பேருந்தில் ஏழுர்ப்பட்டி நிறுத்தத்தில் இறங்கினேன். அவரைத் தொடர்புகொண்டேன். பைக்கில் வந்து 13 கிமீ தொலைவில் உள்ள காட்டுப்புத்தூர் அழைத்துச்சென்றார். எனது முந்தைய களப்பயணத்தின்போது மகிழ்வுந்தில் இவ்வழியாகச் சென்ற நினைவு எனக்கு இருந்தது. அங்கிருந்து சில நிமிடங்களில் ஆயிரவேலி அயிலூர் வந்தடைந்தோம். முன்பு சந்தித்த திரு தண்டபாணி சிவம் (சுமார் வயது 80) அவர்களைச் சந்தித்தோம். அவருக்குக் காது கேட்கவில்லை. நான் அங்குள்ள புத்தர் சிலையைப் பற்றியும், கடந்த முறை நாங்கள் சிலையைப் பார்க்கவந்ததையும் கூறினேன். கொஞ்சம் கொஞ்சமாகப் புரிந்துகொண்டார். புன்னகையுடன் எங்களைப் பாராட்டிவிட்டு, சிலை இருக்கும் இடம் பற்றித் தெளிவாகக் கூறினார். பின்னர் அங்கிருந்து நகர்ந்தோம். ஒரு கடையில் சிலையைப் பற்றி விசாரித்தோம். அங்கிருந்தவர், "முன்பு அங்கு ஒரு சிலை இருந்ததாகவும், தற்போது அது இல்லை" என்றும் கூறினார். மறுபடியும் விசாரித்தோம். தெளிவான பதில் கிடைக்கவில்லை. மறுபடியும் ஒருவரிடம் விசாரித்தபோது அவர், "நீங்கள் கேட்கும் சிலை ஆதிதிராவிடர் தெருவில் உள்ளது" என்றார்.
ஆயிரவேலி அயிலூர் புத்தர், புகைப்படம்: திரு கே.ஆர்.கே.குமார்

சிறிது நேரத்திற்குள் சிலை இருக்குமிடத்திற்கு வந்துவிட்டோம். முந்தைய களப்பணியின்போது பார்த்த திரு ராஜாமணி (53) அவர்களைச் சந்தித்தோம். "என்னோட தாத்தா காலத்திலிருந்து இந்த சிலை இருக்கு. சுமார் 75 வருடங்கள் இருக்கும். இச்சிலையை நாங்கள் கும்பிடுகிறோம். ஆல மரம் விழுந்ததால் தலைப்பகுதி கொஞ்சம் சிதைந்துவிட்டது" என்றார். பார்த்ததும் எனக்கு புதூரில் புத்தரை வழிபடுவது நினைவிற்கு வந்தது. நானும், திரு ராஜாமணி அவர்களும் சிலையின் அருகில் நின்றுகொண்டு பேசுவதைப் பதிவு செய்தார் நிருபர். ஓரிரு நாளில் அச்செய்தி ஒளிபரப்பாகும் என்றார். 1999இல் நான் பார்த்த புத்தரைப் பார்க்க அவரால் எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தமைக்காக அவருக்கும், உள்ளூர் மக்களுக்கும் நன்றி கூறிவிட்டுக் கிளம்பினேன்.  மனதில் எங்கோ ஒரு மூலையில் புதிய புத்தரைக் காணமுடியவில்லையே என்ற ஏக்கம் இருந்துகொண்டே வந்தது, நான் தஞ்சாவூர் வந்து சேரும்வரை.
நன்றி  
திரு ொ.சாந்தலிங்கம், முதல் களப்பணியில் உடன் வந்த திரு திருமூர்த்தி, ூக்கத்தையும் பொருட்படுத்தாது புத்தரை நினைவூட்டிய திரு தில்லை கோவிந்தராஜன், இரண்டாவது களப்பணியின்போது உடன் வந்ததோடு புகைப்படம் தந்து உதவிய கேப்டன் டிவி ொலைக்காட்சி நிருபர் திரு கே.ஆர்.கே.குமார் இரு களப்பணிகளின்போதும் உதவிய பெரியவர் திரு தண்டபாணி சிவம்திரு ராஜாமணி  மற்றும் ஆயிரவேலி அயிலூர் ஊர் மக்களுக்கு என்  மனமார்ந்த நன்றி.        
 -----------------------------------------------------------------------------------------------------------------------
புத்தர் அறவுரை


தீவினையாளன் இம்மையிலும் துன்புறுகிறான், மறுமையிலும் துன்புறுகிறான். அவன் (இம்மை மறுமையாகிய) இருமையிலும் துன்புறுகிறான். அவன் தான் செய்த தீச்செயலைக் கண்டு வருந்துகிறான், துன்புறுகிறான். -தம்ம பதம்  15

சூழல்

புத்தர் காலத்தில் இராஜகிரியில் கந்தன் என்னும் பன்றிக்கறி விற்பவன் ஒருவன் இருந்தான். அவன் நாளும் பன்றிகளை மிகவும் கொடூரமான முறையில் துன்புறுத்திக் கொன்று வந்தான். அவன் பன்றியின் நான்கு கால்களையும் நான்கு புறம் இழுத்துக் கட்டிக் கட்டையால் நையப்புடைப்பான். பின்னர் கொதிக்கும் வெந்நீரை வாய்வழியாக ஊற்றுவான். அந்நீர் பின்புற வழியாக சுத்தமான நிலையில் வெளியே வரும் வரையில் ஊற்றிப் பின் கொல்வான். இவ்வாறு ஐம்பத்திரண்டு ஆண்டுகள் வாழ்ந்தான். இறுதிக் காலத்தில் அவன் வினைக்கேற்ப அவன் உடல் கடுமையான வெப்பத்தாலும், வேதனையாலும் ஏழு நாள்கள் துடித்து இறந்தான். இது பற்றிப் புத்தரிடம் கூறியபொழுது புத்தர் கூறிய பாடல் இது. 

(தம்ம பதம், தமிழாக்கம்: நா.செயப்பிரகாசு, தமிழ்ப்பல்கலைக்கழகம், தஞ்சாவூர், 2002)  


In search of imprints of Buddha: Ayiraveli Ayilur
I came to know that there was a Buddha in Ayiraveli Ayilur (June 1999) and visited the place (October 1999), After more than a decade, having came to know that there there was a Buddha in that area I went to that place alongwith the person who informed me of that and to my surprise the place was the same which I visited earlier. English version of the article will appear on 15th of this month.
-----------------------------------------------------------------------------------------------------------------------
கீழ்க்கண்ட முகநூலில் சோழ நாட்டில் புத்தர் சிலைகள் தொடர்பான செய்திகளைக் காணலாம் : http://www.facebook.com/buddhismincholacountry.

Comments

 1. தங்கள் அயராத ஆராய்ச்சி பாராட்டுக்குரியது. ஆனால் இவ்வாறு தங்களால் கண்டுபிடிக்கப்படுவன, உள்ளூர்க்காரர்களால் சரியான முறையில் பாதுகாக்கப்படுமா என்பது தெரியவில்லையே!

  ReplyDelete
 2. ஆயிரவேலி அயிலூர் புத்தர் சிலை தகவல்கள் அருமை. தொடரட்டும் தங்களின் களப்பணி. நன்றி

  ReplyDelete
 3. மிகவும் சிறப்பான விளக்கங்கள் + பகிர்வு... & தகவல்கள்... நன்றி... வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 4. தங்கள் ஆய்வுப் பணி வெற்றிகரமாகச் சென்று கொண்டிருக்கிறது. தொடரட்டும் வெற்றிப்பணி.வாழ்த்துக்கள்.

  அ. கலைமணி

  ReplyDelete
 5. பௌத்த சுவட்டைத் தேடி : ஆயிரவேலி அயிலூர்
  Dr B Jambulingam
  அவர்களின் பௌத்த மதம் பற்றிய தேடுதல் பற்றி அருமையான கட்டுரை, எனது பக்கத்தில் பகிர்கிறேன்.
  நன்றி சார் Dr B Jambulingam.

  ReplyDelete

Post a Comment