பௌத்த சுவட்டைத் தேடி : பொறையார், நாகப்பட்டினம் மாவட்டம்

ஏப்ரல் 2012
1993இல் பௌத்த ஆய்வு தொடங்கியது முதல் அவ்வப்போது நண்பர்களும், அறிஞர்களும், ஆர்வலர்களும் எங்கு புத்தர் சிலையைப் பார்த்தாலும் அச்சிலை பற்றிய செய்தியை என்னோடு பரிமாறிக் கொள்ள ஆரம்பித்தனர். அவ்வகையில் எனக்கு ஒரு தகவல் கிடைத்தது. தமிழ்ப்பல்கலைக்கழக நூலகத்தில்  இயக்குநர் பொறுப்பில் இருந்த முனைவர் பா. சுந்தரேசன் அவர்கள் நாகப்பட்டினம் மாவட்டத்தில் பொறையார் அருகே ஒரு புத்தர் சிற்பம் இருப்பதாகக் கூறினார். நாகப்பட்டினம் மாவட்டத்தில் புத்தமங்கலம், குறும்பூர், குத்தாலம், பெருஞ்சேரி, பூம்புகார், புஷ்பவனம் ஆகிய இடங்களில் புத்தர் சிலைகளை எனது களப்பணியின்போது நான் பார்த்துள்ளேன். இவர் கூறிய பகுதியில் நான் களப்பணி மேற்கொள்ளவில்லை. அதற்கான நாளை ஆவலோடு எதிர்பார்த்தேன். சோழ நாட்டில் காணப்படும் புத்தர் சிலைகள் பெரும்பாலும் பிற்காலச் சோழர் காலத்தைச் சார்ந்தவையாகவே உள்ளன. அவ்வாறான ஒரு புதிய சிலையைக் காணப்போகிறோம் என்ற மகிழ்ச்சியோடு   பொறையார் புத்தரைக் காணும் நாளை ஆவலோடு எதிர்நோக்கியிருந்தேன்.

மே 2012
களப்பணியாக திருச்சி சென்றபோது நண்பர் முனைவர் தி.நெடுஞ்செழியன் அவர்களைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது அவர், தன் மாணவர் திரு கூ.வெற்றிவேலன் என்பவர் அப்பகுதியைச் சார்ந்தவர் என்றும், அந்த புத்தர் சிலை தொடர்பாக அவருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பு உள்ளது என்றும் கூறினார். அவரைத் தொடர்பு கொண்டபோது அவர் பொறையார்  பேருந்து நிலையம் அருகே புத்தர் சிலை இருப்பதாகக் கூறினார்.

சூன் 2012
பௌத்த சுவட்டைத் தேடி பட்டீஸ்வரம் முத்துமாரியம்மன் கோயிலுக்குச் சென்றபோது உடன் வந்த கும்பகோணம் நண்பர் சிற்பக்கலைஞர் திரு இராஜசேகரனைத் தொடர்பு கொண்டபோது, அவர் என்னுட்ன் களப்பணி வர இசைந்தார். அவருடைய பைக்கில் இருவரும் பொறையாருக்குக் கிளம்பினோம். செல்லும்போதே விசாரித்தபோது யாருக்கும் எவ்விவரமும் தெரியவில்லை. ஆங்காங்கே ஏதாவது சிலை தென்படுகிறதா என நின்று சுற்றிப்பார்த்துக்கொண்டு பயணித்தோம். அவ்வாறு விசாரித்துக்கொண்டு பொறையார் வந்தடைந்தோம். அங்கு விசாரித்தபோது புதிய பேருந்து நிலையம் அருகே ஒரு புத்தர் சிலை இருப்பதாகக் கூறினர். மற்றொருவர் ஒரு சமாதி அருகே புத்தர் இருப்பதாகக் கூறினார். புரியவில்லை. தொடர்ந்து பயணித்து பொறையார் புதியபேருந்து நிலையம் வந்துசேர்ந்தோம். பைக்கை ஓரமாக நிறுத்திவிட்டு நடக்க ஆரம்பித்தோம். அருகே ஓரிடத்தைச் சுட்டிக்காட்டி பாப்பையா சித்தர் சமாதி அருகே புத்தர் சிலை இருப்பதாகக் கூறினர்.
பொறையார் பாப்பையா சித்தர் ஜீவ சமாதி
புகைப்படம் 
:  இராஜசேகரன்

பாப்பையா சித்தர் சமாதி எனப்படும் சமாதிக்கு வந்தோம். சமாதிக்கு முன்பாக ஏதாவது சிலை இருக்கிறதா என்று பார்த்தோம். அங்கு சிலை காணப்படவில்லை. பின்னர் சமாதியைச் சுற்றி வந்தோம்.


சமாதியின் பின் புறம் புத்தர் சிலை இருந்தது. அந்த புத்தர் பிற புத்தரைப் போல ஆயிரமாண்டு காலத்திற்கு முந்தையது அல்ல. மிக அண்மையில் அமைக்கப்பட்டதைப்போல அச்சிலை காட்சியளித்தது. ஒரு பீடத்தின்மீது நின்ற நிலையில் இருந்த அந்த புத்தரின் தலைக்குப் பின் ஐந்து தலை நாகம் காணப்பட்டது. வலது கை அபய முத்திரையுடன் இருந்தது. இடது கையில் கமண்டலம் காணப்பட்டது.
சமாதியின் முன்பாக புத்தர் சிலை 
புகைப்படம் : இராஜசேகரன்


அங்கிருந்த திரு இன்பராஜனைச் சந்தித்தோம். அவர், "இந்த இடம் பாப்பை சித்தர் ஜீவ சமாதி பீடமாகும். அந்த சித்தருக்கு புத்தர் மேல் அதிக ஈடுபாடு இருந்ததால் இந்த புத்தர் சிலை அவருடைய சமாதியின் முன்பாக வைக்கப்பட்டுள்ளது. கடற்கரைப் பகுதியில் சர்ப்பதோஷம் இருப்பதால் இச்சிலை இங்கு வைக்கப்பட்டுள்ளது. இலங்கையிலுள்ள புத்தர் சிலைகளைப் பார்த்து, மாமல்லபுரத்தில் வடிவமைக்கப்பட்டு, 2011இல் இச்சிலை வைக்கப்பட்டது" என்று கூறினார்.

30  சூன் 2013
பொறையார் புத்தரைப் பற்றி நான் எழுதவுள்ளதைக் கூறியதும் திரு இன்பராஜன்,  அங்கேயுள்ள தன் நண்பர் திரு வினோத் என்பவருடன் தொடர்புகொள்ளும்படி கேட்டுக்கொள்ளவே அவருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டேன். அப்போது அவர், கடந்த ஆண்டு களப்பணியின்போது என்னைச் சந்திக்க முடியாதது குறித்துப் பேசிவிட்டு, பின்னர் அந்த புத்தரைப் பற்றி அப்பகுதியில் வாய்மொழியாகக் கூறப்படும் செய்திகளைத் தொகுத்துக் கூறினார். "புத்தர் சிலையின் உயரம் 12 அடி, பீடம் 5 அடி, ஆக மொத்தம் 17 அடி உயரம். பாப்பையா சுவாமிகள் முன் ஜென்மத்தில் சானாஸ்டா என்ற பெயரில் புத்தத்துறவியாக இருந்தார். தல யாத்திரையாகப் பல இடங்களுக்குச் சென்றுவிட்டு, பூம்புகார் வரும்போது அங்கேயிருந்த மக்கள் அவரை அன்போடு வரவேற்று, அருகேயுள்ள தரங்கம்பாடி என்றழைக்கப்படும் குலசேகரப்பட்டினத்திற்கு வரும்படி வேண்டுகோள் விடுத்தனர். நாகப்பட்டினத்தில் புத்த விகாரம் இருந்த காலகட்டத்தில் பொறையாரில் ஒரு புத்த விகாரம் இருந்தது. சண்டிகாதேவி விகாரம் என அழைக்கப்பட்ட அந்த விகாரத்தில் பெண் துறவிகள் மட்டுமே இருந்தனர். மக்களின் அழைப்பை ஏற்று சானாஸ்டா பொறையார் வந்து பல நாள்கள் விகாரையில் தங்கியிருந்தார். பின்னர் பரிநிர்வாணம் அடைந்தார். அடுத்த பிறவியில் அவர் பாப்பையா சுவாமிகள் எனப் பெயர் பெற்று அப்பகுதியில் வாழ்ந்து வந்தார். தற்போது பௌத்த முறைப்படி இச்சிலைக்கு பூசை நடத்தப்பெறுகிறது".   அப்பகுதியில் இவ்வாறாகக் கூறப்படும் செய்தியைக் கேட்டு எனக்கு வியப்பாக இருந்தது. இதுவரை நான் சானாஸ்டா, சண்டிகாதேவி போன்ற பெயர்களைக் கேள்விப்பட்டதில்லை.   

இருப்பினும் அவர் கூறிய செய்திகளைக் கேட்டுக்கொண்டேன். தமிழகத்தில், குறிப்பாக சோழ நாட்டில் மிகவும் வேலைப்பாடமைந்த புத்தர் கற்சிலைகளையும், செப்புத்திருமேனிகளையும் களப்பணியின்போது பார்த்துள்ளேன். அவை குறித்துப் படித்துள்ளேன். இந்நிலையில் சோழர் காலத்தைச் சேர்ந்த புத்தராக இருக்கும் என்று எண்ணிச் சென்று அவ்வாறான புத்தர் காணப்பெறவில்லையே என்ற ஏக்கம் இருந்தபோதிலும், ஒரு புதிய புத்தரைக் கண்ட மன நிறைவுடன் அங்கிருந்து கிளம்பினோம்.  

நன்றி:
சிலை இருப்பதைத் தெரிவித்த முனைவர் பா.சுந்தரேசன்
மேலும் விவரம் தந்த முனைவர் தி.நெடுஞ்செழியன்
சிலை இருப்பதை உறுதி செய்த திரு கூ.வெற்றிவேலன்
களப்பணியின்போது செய்தி தந்துதவிய திரு இன்பராஜன்
கூடுதல் செய்திகளைத் தொலைபேசியில் தந்த திரு வினோத்
களப்பணியில் உடன் வந்து உதவிய திரு என்.ராஜசேகரன்  


-----------------------------------------------------------------------------------------------------------------------
புத்தர் அறவுரை
சிற்றின்ப நாட்டமில்லாதானும்,  புலனடக்கம் உள்ளவனும், அளவறிந்துண்பானும் முழு நம்பிக்கையும் முழு முயற்சியும் உடையனுமானவனை மலைப்பாறையைக் காற்று வீழ்த்தவியலாதது போன்று மாரன்  வீழ்த்த இயலாது.  -தம்ம பதம்  8
சூழல்
சகோதரர்கள் இருவர் பௌத்தத் துறவியாயினர். அவருள் மூத்தவர் முழு நம்பிக்கையும் முயற்சியும் உடையவர். இளையவர் தனது மனைவியரது தூண்டுதலின்படி துறவு நெறியை விட்டு  நீங்கினார். மூத்தவர் தூண்டுதலுக்கு ஆளாகாமல் பொய்தீர் ஒழுக்கநெறி நின்று உய்ந்தார். இவர் இருவர் குறித்தும் புத்தர் கூறியவை இவ்விரு பாடல்களும்.
(தம்ம பதம், தமிழாக்கம்: நா.செயப்பிரகாசு, தமிழ்ப்பல்கலைக்கழகம், தஞ்சாவூர், 2002)  


In search of imprints of Buddha: Porayar, Nagapattinam district
On the basis of the information given by Dr.B.Sundaresan, I had been to Porayar, Nagapattinam district,  to find a Buddha statue, with the help of my friend Mr.N.Rajasekaran. To my surprise I came toknow that this Buddha did not belong to Chola period and it was set up very recently. English version of the article will appear on 15th July.

-----------------------------------------------------------------------------------------------------------------------
கீழ்க்கண்ட முகநூலில் சோழ நாட்டில் புத்தர் சிலைகள் தொடர்பான செய்திகளைக் காணலாம் : http://www.facebook.com/buddhismincholacountry.   

Comments

 1. பாப்பையா சுவாமிகளின் முன் ஜென்மச் செய்திகள் வியப்பைத் தருகின்றன அய்யா. இச் செய்தியில் ஏதேனும் உண்மை இருக்க வேண்டும், இல்லையேல் சித்தரின் மடத்தில் புத்தருக்கு என்ன வேலை.தங்களின் களப் பணி தொடரட்டும்.

  ReplyDelete
 2. அறியாத தகவல்கள் ஐயா...

  மிக்க நன்றி...

  ReplyDelete
 3. தங்களுடைய களப்பணி தொடர வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 4. புகைப்படம் பெரியதாக இருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்.

  ReplyDelete
 5. புகைப்படம் பெரியதாக இருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்.

  ReplyDelete
 6. Sir pl let me know once English version is uploaded.

  Anil
  aygaikwad@gmail.com

  ReplyDelete
 7. Anonymous03 July, 2013

  ariya, periya paniyinmoolam ariyavaikkum seithihal anaiththum arumai! arumai!! arumai!!!

  Porayaar silai - buththap
  periyar silai

  Thangalin kala aaivuch sevaip pani vaazha!

  ReplyDelete
 8. Dear Sir,
  My best wishes for your continuous search of buddha in Tamilnadu
  Yours,
  Dr.P.Perumal

  ReplyDelete

Post a Comment