பௌத்த சுவட்டைத் தேடி : கிராந்தி, சந்தைத்தோப்பு

அக்டோபர் 2012
நாகப்பட்டினம் வரலாற்று ஆர்வலர் குழுவின் முதன்மைச் செயலாளரும்,  நவம்பர் 2011 களப்பணியின்போது உடன் வந்து உதவியவருமான நண்பர் திரு க.இராமச்சந்திரன் ஒரு புத்தர் புகைப்படத்தை அனுப்பி அந்த புத்தர் சிலை நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் வட்டம் கிராந்தி என்னுமிடத்தில் இருப்பதாகக் கூறியிருந்தார்.  அச்சிலையைக் காணும் நாளை ஆவலோடு எதிர்பார்த்திருந்தேன். 

30 ஏப்ரல் 2013
நாகப்பட்டினத்திற்கு வரும்படி அவரிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. அந்த புத்தர் சிலையின் பீடத்தில் தமிழ்க்கல்வெட்டு குறிப்பு  இருப்பதாக அவர் கூறியதால், அதனைத் தெளிவிக்க  திரு தில்லை கோவிந்தராஜன் அவர்களை அழைக்க அவரும் இசைந்தார். மறுநாள் காலை 5.30 மணிக்குள் தஞ்சையை விட்டுக் கிளம்பத் திட்டமிட்டோம்.

கிராந்தி புத்தர் (அக்டோபர் 2012)
புகைப்படம் : திரு க.இராமச்சந்திரன்
1 மே  2013
விடியற்காலையில் நானும் திரு தில்லை கோவிந்தராஜன் அவர்களும் தஞ்சாவூர் பேருந்து நிலையம் வந்தோம். அரசியல் கட்சித்தலைவர் கைது செய்யப்பட்டதன் காரணமாக விடியற்காலை 4.30 மணிக்கு மேல் எந்தப் பேருந்துகளும் இயக்கப்படவில்லை என்பதை அறிந்தோம். தொடர்வண்டியில் கிளம்ப இன்னும் ஒரு மணி நேரத்திற்கு மேலாகும் என்பதை அறிந்தோம். கடைசியாக ஒரு வேன் வந்தது. எப்படியும் போகவேண்டும் என்ற ஆர்வத்திலும், நேரத்தை வீணாக்கக்கூடாது என்ற எண்ணத்திலும் வேனில் ஏறினோம்.. திருவாரூர் வந்தபின்,  பேருந்துகள் ஓடிக்கொண்டிருப்பதைப் பார்த்தபின் இருவரும் திருவாரூரில் இறங்கினோம். காலை உணவை முடித்துவிட்டு அங்கிருந்து பேருந்தில் நாகப்பட்டினம் பயணித்தோம்.

வெளிப்பாளையத்தில் எங்களுக்காகக் காத்திருந்தார் திரு இராமச்சந்திரன். திரு தில்லை கோவிந்தராஜன் அங்கிருந்த அவரது மைத்துனர் வீட்டிற்குச் சென்று அங்கிருந்து பைக்கை எடுத்துவந்தார். அவரது பைக்கில் நான் ஏறிக்கொள்ள, இர்மச்சந்திரன் தனது பைக்கில் வர மூவரும் அங்கிருந்து கிளம்பினோம். நாகப்பட்டினத்திலிருந்து கிராந்தி வந்து சேர்ந்தோம்.  ஊருக்குள் நுழையும்போது கிராமத்தினர் திரு இராமச்சந்திரனைச் சூழ்ந்துகொண்டனர். அவரிடம் ஒவ்வொருவரும் நலம் விசாரித்தனர். அவர்கள் பேசியதைப் பார்த்தபோது நெடுநாள்  நண்பரிடம் அவர்கள் பேசுவதுபோலத் தெரிந்தது. அவரும் ஒவ்வொருவருக்கும் மறுமொழி கூறிக் கொண்டே வந்தார். பெரியவர் சிறியவர் என வயதுப் பாகுபாடின்றி அனைவரும் அனைவரும் எங்களைத் தொடர ஆரம்பித்தனர். சிலையை சில சிறுவர்கள் ஆர்வமோடு பார்த்துக் கொண்டிருந்ததைக் கண்டோம். சிலையின் அருகில் சென்றோம். சிலை தரையில் படுக்க வைக்கப்பட்டிருந்தது. உடற்பகுதி தனியாகவும், தலைப்பகுதி தனியாகவும் இருந்தன. அருகிலிருந்த ஒருவர், "கடந்த முறை நீங்கள் வந்தபோது புத்தரை அமர வைத்துவிட்டுப் போய்வீட்டீர்கள். பூமி வறண்டு போச்சுங்க. அதற்குப் பின்னர் மழையே வரவில்லை. புத்தரைப் படுக்கவைத்தபின்னர்தான் மழை பெய்ய ஆரம்பித்தது என்றார்." இக்கருத்தை அருகிலிருந்த பலர் கூறினர். இந்தப் புத்தர் காரணமாகவே அங்கு மழை பெய்கிறது என்பது அவர்களது நம்பிக்கை. 

கிராந்தி புத்தர் (2013)
புகைப்படம் : முனைவர் பா.ஜம்புலிங்கம்


முந்தைய களப்பணிகளின்போது திருவாரூர் மாவட்டம் திருநாட்டியத்தான்குடி மற்றும் அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் ஆகிய இடங்களில் மழையுடன் தொடர்புபடுத்தி புத்தர் சிலையைப் பற்றிக் கூறியதை நான் கேட்டுள்ளேன்.  அவற்றைப் பற்றிப் பிறிதொரு கட்டுரையில் விவாதிப்போம்.
கிராந்தி புத்தர் அருகில் திரு தில்லை கோவிந்தராஜன், முனைவர் பா.ஜம்புலிங்கம்
புகைப்படம் : திரு க. இராமச்ச்நதிரன்

சிலையைப் பார்த்தோம். சோழ நாட்டில் காணப்படுகின்ற அனைத்துக் கூறுகளுடனும் அச்சிலை இருந்தது. 1993 முதல் மேற்கொள்ளப்பட்டவரும் களப்பணியின்போது நாகப்பட்டினம் மாவட்டத்தில் குத்தாலம், குறும்பூர், புத்தமங்கலம், பூம்புகார், பெருஞ்சேரி, புட்பவனம் ஆகிய இடங்களில் நான் புத்தர் சிலைகளைப் பார்த்துள்ளேன். அவற்றில் பூம்புகாரில் உள்ள சிலை மட்டும் நின்ற நிலையில் உள்ளது. தற்போது காணப்பெறும் சிலை உட்பட பிற அனைத்து சிலைகளும் அமர்ந்த நிலையில் தியான கோலத்தில் உள்ளன.  சிலையின் பீடத்தில் உள்ள எழுத்து தெரிவதற்காக அதன்மீது சாக்பீஸோ கோல மாவோ தடவி, தண்ணீர் தெளித்துப் பார்ப்பதற்காக அவற்றை அருகிலிருந்தவர்களிடம் கேட்டோம். கோலமாவும் கிடைக்கவில்லை. சாக்பீஸ் எடுக்கச் சென்றவர்களும் வரவில்லை. தெளிவாகப் படிக்க எழுத்தின்மீது திருநீற்றைப் பயன்படுத்தலாமா என்றேன். வெளியூர்ப் பயணத்தின்போது நான் வழக்கமாக எடுத்துச் செல்வனவற்றில் ஒன்று திருநீற்றுப் பை. திரு தில்லை கோவிந்தராஜன் சரி என்று கூறவே, திருநீற்றை எடுத்துக்கொடுத்தேன். எழுத்தின்மீது திருநீற்றைச் சீராகத் தடவி பின்னர் தண்ணீரைப் பக்குவமாக அதன்மேல் பாவித்து புகைப்படம் எடுத்தார் அவர். அதில் "கிரெந்தி தெப்பிள்ளை" என எழுதப்பட்டுள்ளதாகவும், அது கி.பி. 11-12ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்றும் அவர் கூறினார்.    


களப்பணியின்போது கிராந்தி கிராம மக்களுடன் (மே 2013)
ஊர் மக்கள் இவ்வாறாக உள்ள புத்தர் சிலைகளைப் பற்றி  ஆர்வமாக விசாரித்தனர். அவர்களிடம் அம்மாவட்டத்தில் உள்ள புத்தர் சிலைகளைப் பற்றியும், இச்சிலை மட்டும் கல்வெட்டுடன் உள்ள சிறப்பையும் எடுத்துக் கூறினேன். அருகருகே இவ்வாறாக அவர்களுடைய மாவட்டத்தில் ஆறு சிலைகள் இருப்பதை அறிந்ததும் அவர்களுக்கு மகிழ்ச்சியாக இருந்தது.  புத்தரைப் பார்த்த நிறைவுடன் ஊர் மக்களுக்கு நன்றிகூறி விட்டு, அவர்களைவிட்டுப் பிரிய மனமின்றி, கிளம்பினோம்.   
திரு க.இராமச்சந்திரன், திரு சௌந்தரராஜன் உடன் முனைவர் பா.ஜம்புலிங்கம்
புகைப்படம் : திரு தில்லை கோவிந்தராஜன்

புத்தரைப் பார்த்தபின், வலிவலம் களப்பணியின்போது உடன்வந்த, வரலாற்றார்வம் கொண்ட பெரியவர் திரு சௌந்தரராஜன் அவர்களை மரியாதை நிமித்தம் சந்தித்தோம். கிராந்தி புத்தரைப் பற்றிய செய்தியை வரலாற்றுலகிற்கு அறிமுகப்படுத்தும் வகையில் பத்திரிக்கைச் செய்தியாகத் தயாரித்தார் திரு. இராமச்சந்திரன். பத்திரிக்கைச் செய்தியின் வரைவைச் செப்பம் செய்து தந்தார் பெரியவர் திரு சௌந்தராஜன். எங்களது முயற்சியையும் ஆர்வத்தையும் அவர் அதிகம் பாராட்டினார். அவருக்கு நன்றிகூறினோம்.  

சந்தைத்தோப்பு புத்தர்

இச்சிலையைக் காணச்சென்றபோது சந்தைத்தோப்பு என்னுமிடத்தில் மற்றொரு புத்தர் சிலையைப் பார்த்தது ஓர் மறக்கமுடியாத அனுபவம். இதே நாளில் எங்களை மற்றொரு புத்தர் சிலையைப் பார்க்க அழைத்துச் சென்றார் திரு ராமச்சந்திரன். வேளாங்கண்ணி அருகே சந்தைத்தோப்பு என்னுமிடத்தில் அச்சிலை இருந்தது. அமர்ந்த நிலையில் இருந்த அச்சிலை தலையின்றி இருந்தது. 32" உயரமும், 22" அகலமும் இருந்த அச்சிலையின் கையிலிருந்த தர்ம சக்கரம் சிதைந்திருந்தது. மார்பில் ஆடை அழகாக இருந்தது. வலது கை கட்டை விரல் உடைந்திருந்தது. இந்த சிலையைப் பற்றிய செய்தியை பின்னர் தருவோம் என்று திரு ராமச்சந்திரன் கூறியதன் அடிப்படையில் மனதில் ஏதோ ஒரு குறையோடு அங்கிருந்து திரும்பினோம். அந்த புத்தரைப் பற்றி பின்னொரு பதிவில் காண்போம்.

11 மார்ச் 2019
விஷ்வபாரதி மத்திய பல்கலைக்கழகத்தின் (சாந்திநிகேதன், கொல்கத்தா, மேற்கு வங்காளம்) தமிழ்த்துறையில் முனைவர் பட்ட ஆய்வு மேற்கொண்டு வரும் திரு தமிழ் சங்கர், தன் ஆய்வு தொடர்பாக என்னைக் காண வந்திருந்தார். அப்போது திரு இராமச்சந்திரன் அவர்களைத் தொடர்பு கொண்டு ஆய்வாளரை அவருக்கு அறிமுகப்படுத்தினேன். அப்போது அவரிடம் சந்தைத்தோப்பு புத்தர் தொடர்பாகப் பேசியபோது தேர்தலுக்குப் பின்னர் இது தொடர்பாக எழுதுவோம் என்றார். அவரிடம் பேசியது மன நிறைவினைத் தந்தது. பரந்த மனது கொண்ட அவருடைய ஆய்வுத்தாகம் எல்லையற்றது. அவருடைய ஆர்வத்திற்கு நன்றி கூறினேன்.   









நன்றி :
சிலை இருப்பதைத் தெரிவித்த திரு க.இராமச்சந்திரன், 
உடன்வந்த திரு தில்லை கோவிந்தராஜன், 
கிராந்தி கிராம மக்கள், திரு சௌந்தரராஜன் 
நாளிதழ் நறுக்குகளை அனுப்பி உதவிய திரு அனந்தபுரம் கோ.கிருட்டினமூர்த்தி, திருமதி செல்வராணி சரவணன், திரு வே.சித்திரவேலு, செய்தியை வெளியிட்ட நாளிதழ்கள்:
நாகை அருகே புத்தர் சிலை கண்டெடுப்பு, தினமலர், 2.5.2013
நாகை அருகே பல நூற்றாண்டுகளுக்கு முந்தைய புத்தர் சிலை கண்டெடுப்பு, தினத்தந்தி, 2.5.2013
நாகை அருகே சோழர் கால புத்தர் சிலை, தினமணி, 2.5.2013
Chola era Buddha statue found, Deccan Chronicle, 5.5.2013

20 அக்டோபர் 2022இல் மேம்படுத்தப்பட்டது.

Comments

  1. பல தகவல்களுடன் அரிய பகிர்வு...

    இணைப்புகளுக்கும் நன்றி...

    ReplyDelete
  2. தங்களின் அயரா பணி வியக்க வைக்கின்றது அய்யா. புத்தரால் தான் மழை பொழிகின்றது என்ற அப்பகுதி மக்களின் நம்பிக்கை மெய்யாகட்டும்.

    ReplyDelete
  3. கண்டெடுக்கப் பட்ட சிலைகள் பாதுகாப்பாக அருங்காட்சியகத்துக்குள் சேர்ப்பிக்கப் படுகிறதா.?

    ReplyDelete
  4. Anonymous03 June, 2013

    Dear Dr Jambulingam. I think that "A few generation back you born , worshipped and roled as a best disciple of Lord Buddha
    B.vijayan
    civilEngineer

    ReplyDelete
  5. தங்கள் முயற்சி தொடரட்டும். அந்தந்த ஊர் மக்களே இச்சிலைகளைப் பாதுகாக்கும் பணியை மேற்கொள்வது தான் சிக்கனமானது.

    ReplyDelete
  6. Anonymous11 June, 2013

    thangalin ariya uzhaippu naalukku naal puththam puthiya thahavalhalaik konduvandhu saerkkiradhu. mahizhchchiyum paaraattukkalum.- munaivar su.madhavan

    ReplyDelete
  7. சிறப்பான பதிவு அய்யா நன்றி

    ReplyDelete
  8. Great Work.

    ReplyDelete

Post a Comment