பௌத்த சுவட்டைத் தேடி : ராசேந்திரப்பட்டினம்

13 மே 2018
சோழ நாட்டில் பௌத்தம் வலைப்பூ வாசகரான சீர்காழியைச் சேர்ந்த திரு செல்வகுமார் ராசேந்திரப்பட்டின புத்தர் சிற்பம் காணாமல் போய்விட்டதாகக் கேள்விப்பட்டதாகவும், அதன் புகைப்படம் இருப்பின் அனுப்பிவைக்கும்படியும் கூறினார். 2007இல் திரு அனந்தபுரம் கிருட்டினமூர்த்தி அவர்களுடன் மேற்கொள்ளப்பட்ட களப்பணியின்போது காணப்பட்ட இந்த சிற்பத்தைப் பற்றி நாளிதழில் வந்த செய்தியை அனுப்பிவைப்பதாகக் கூறினேன்.

14 மே 2018
மறுநாள், வலைப்பூ வாசகரான திரு அருள்முத்துக்குமரன் முகநூலில் தன் பக்கத்தில் அந்த புத்தர் சிற்பத்தைப் பார்க்கச் சென்றதையும், அது இரண்டு ஆண்டுக்கு முன்பாக திருடப்பட்டுவிட்டதாக அறிந்ததையும் குறிப்பிட்டு, திரு திருவள்ளுவன் அவர்களைச் சந்தித்த அனுபவத்தையும் பகிர்ந்திருந்தார்.

 1993 முதல் மேற்கொள்ளப்பட்டு வந்த களப்பணியின்போது சோழ நாட்டில் பல புதிய புத்தர் மற்றும் சமண தீர்த்தங்கரர் சிற்பங்களைக் காணமுடிந்தது. தொடர்ந்து மேற்கொள்ளப்படுகின்ற களப்பணி, நண்பர்கள் மற்றும் அறிஞர்களின் ஆர்வம் காரணமாக அவர்களுடைய உதவியுடன் ஆய்வு எல்லைக்கு அப்பாலும் சில சிற்பங்களைக் காணமுடிந்தது. அவற்றுள் சுந்தரபாண்டியன்பட்டினம், இராமநாதபுரம் மாவட்டம் (2002), ராசேந்திரப்பட்டினம், கடலூர் மாவட்டம் (2007) ஆகிய இடங்களைச் சேர்ந்த புத்தர் சிற்பங்கள் குறிப்பிடத்தக்கவையாகும். அந்த சிற்பத்தை 2007இல் முதல் முதலாகக் கண்டோம்.   

ஏப்ரல் 2007
ஏப்ரல் 2007இல் வரலாற்றறிஞர் திரு அனந்தபுரம் கிருட்டினமூர்த்தி அவர்களுடன் மேற்கொண்ட களப்பணியின்போது கடலூர் மாவட்டத்தில் விருத்தாச்சலம் வட்டத்தில் உள்ள ராஜேந்திரப்பட்டினம் என்னுமிடத்தில் இந்த சிற்பத்தைக் காணும் வாய்ப்பு கிடைத்தது. 98 செமீ உயரமும், 56 செமீ அலகமும் கொண்ட அமர்ந்த நிலையிலான இந்த புத்தர் சிற்பம் சோழ நாட்டிலுள்ள புத்தர் சிற்பங்களைப் போலவே அமர்ந்த நிலையில் தியான கோலத்தில் இருந்தது.  தலையில் சுருள்முடி, அதற்கு மேல் தீச்சுடர், ஆழ்ந்த தியானத்தில் கண்கள், நீண்ட காதுகள், திரண்ட தோள்கள், பரந்த மார்பு, இடது பக்கம் தோள் பட்டையிலிருந்து தொங்கிய ஆடை ஆகியவற்றைக் கொண்டிருந்தது. இந்த புத்தரை மஞ்சள் விற்கும் செட்டியார் என்று கூறினர். கூடுதல் செய்திகளுடன் இச்சிற்பம் தொடர்பான செய்திகள் நாளிதழ்களில் வெளியாயின.



2007இல் காணப்பட்ட சிற்பம் தற்போது காணப்படவில்லையே என்பதை அறியும்போது வேதனையாக இருந்தது. சமயக்காழ்ப்புணர்வும், பண்பாட்டைப் பாதுகாக்கத் தவறும் நிலையுமே இதுபோன்ற நிகழ்வுகளுக்குக் காரணமாகின்றன. இவற்றைப் பாதுகாக்கவேண்டும் என்ற உணர்வு நம்மிடையே எழ வேண்டும். கலையையும், பண்பாட்டையும், சமயப் பெருமையினையும் வெளிப்படுத்துகின்ற இது போன்ற சான்றுகளே நம் வரலாற்றுக்குத் துணை புரிவன என்பதை மறந்துவிடலாகாது.  

30 ஆகஸ்டு 2018 அன்று மேம்படுத்தப்பட்டது.

உங்களுடன் பகிர்ந்துகொள்ள மற்றொரு செய்தி : 
மின்னம்பலம் தளத்தில் 22 ஏப்ரல் 2018இல் வெளியாகியுள்ள "சூடாமணி புத்த விகாரும் அம்பேத்கர் நாள் விழாவும்!"என்ற தன்னுடைய கட்டுரையில் திரு ஸ்டாலின் ராஜாங்கம் என் ஆய்வினை மேற்கோளாகக் காட்டியுள்ளார். "சோழ நாட்டின் பகுதிகளாக இருந்தவை எனக் கருதப்படும் இன்றைய தஞ்சை, நாகை, திருவாரூர், கடலூர் போன்ற மாவட்டங்களில் பெளத்தம் செழிப்புற்று இருந்திருக்கின்றன. அதன் தடங்களை வெளிப்படையாகவும் மறைமுகமாகவும் இன்றளவும் காணலாம். பெளத்தச் சிற்பங்கள், புத்தர் சிலைகளாகவும் சைவ, வைணவக் கோயில்களாகவும் அறியப்படுவனவற்றுள் பிற வடிவங்களாவும் கண்டறியப்பட்டுள்ளன. சோழ நாட்டில் பெளத்தம் என்னும் தலைப்பில் ஆய்வு மேற்கொண்டதோடு அறுபதுக்கும் மேற்பட்ட புத்தர் சிலைகளைக் கண்டறிந்த பா.ஜம்புலிங்கம் அவர்களின் ஆய்வை இவ்விடத்தில் கருத்தில்கொள்ள வேண்டும்........"

I learnt from FB postings that the Buddha, which we saw during the field study in Rajendrapattinam of Cuddalore district, is missing now. Though not my study area, I found some Buddha and Jain Tirtankaras like this. It is time that one should know the importance of the statues which are the symbols of our civilization and history. Awareness should be created to protect the statues.  

Comments

  1. தங்களது மகத்தான பணி இன்னும் மேம்பட்டு வளரட்டும். வாழ்க வையகம்.

    ReplyDelete
  2. நாம் நமது பண்பாட்டையும், பழமையையும் காப்பதில் சுணக்கம் காட்டுகிறோம். உங்கள் மகத்தான பணி தொடரட்டும்.

    ReplyDelete
  3. பாதுக்காக்க வேண்டியதை விட்டு அற்பமான பொருட்களை பாதுகாத்துக்கிட்டிருக்கோம்ன்னு நினைக்கும்போது மனசு வலிக்குதுப்பா.

    ReplyDelete
  4. தங்க்ளது மகத்தான பணி தொடர்ந்து நமது பண்பாட்டு நாகரீக அடையாளங்களைக் காத்து பெருமை சேர்க்கட்டும் ஐயா.

    எங்களின் வாழ்த்துகள்

    ReplyDelete
  5. காணாமல் போன சிலைஎப்படிப் போயிருக்கும் திருட்டா உங்களுக்கு மேலும் களப்பணிக்கான வாய்ப்பு

    ReplyDelete
  6. தங்களின் இடையறாத சீரிய பணி சிறந்திட மனப்பூர்வ வாழ்த்துகள்.

    ReplyDelete
  7. Mr Saju (thro email: saju.madhavankutty@gmail.com)
    Sir, it's shocking, Pls get back...

    ReplyDelete

Post a Comment