பௌத்த சுவட்டைத் தேடி : அய்யம்பேட்டை

ஆய்வுக்காகப் பதிவு செய்தபோது களப்பகுதியில் புதியதாக நாகப்பட்டின புத்த செப்புத்திருமேனியைத் தேடும் முயற்சியிலும் ஈடுபட்டேன்.  ஒரு நாகப்பட்டினபுத்தர் செப்புத்திருமேனியைத் தேடிக் கண்டுபிடிக்கும் முயற்சியில் 1993இல்  இறங்கியபோதும், அவ்வாறான ஒரு திருமேனியைக் காணும் வாய்ப்பு 1999இல் கிடைத்தது.   எங்கள் கண்டுபிடிப்பு பற்றிய இரண்டாவது நாளிதழ் செய்தியாகும். (முதல் செய்தி மீசை புத்தரைப் பற்றியது)

அய்யம்பேட்டை நாகப்பட்டின புத்தர் செப்புத்திருமேனி (1999) 
புகைப்படம் ஜம்புலிங்கம்


நாகப்பட்டினத்தில் கி.பி.1856இலிருந்து 350க்கும் மேற்பட்ட புத்த செப்புத்திருமேனிகள் கிடைத்துள்ளன. அவை உள்நாட்டு வெளிநாட்டு அருங்காட்சியகங்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.  திரு அய்யம்பேட்டை செல்வராஜ் அவர்களுடன் மேற்கொண்ட களப்பணியின்போது ஒரு நாகப்பட்டின புத்தர் செப்புத்திருமேனியைக் காணும் வாய்ப்பு கிடைத்தது. அய்யம்பேட்டையில் தனியாரிடம் வழிபாட்டில் உள்ள அத்திருமேனியை முனீஸ்வரர் என்று வழிபட்டுவருகின்றனர். 

அமர்ந்த நிலையில், தரையைத் தொட்ட கோலத்தில் உள்ள அத்திருமேனியை முனீஸ்வரர் என்று கூறி மூன்று தலைமுறைகளாக வழிபட்டு வருகின்றனர். வலது கை தரையைத் தொட்டமர்ந்த நிலையிலும், இடது கை தியான முத்திரையில் மடியில் வைக்கப்பட்ட நிலையிலும் உள்ளன. முகம், உடலமைபுப, மேலாடை தெளிவாகக் காணப்பெறவில்லை. கொல்கத்தாவிலுள்ள தேசிய அருங்காட்சியகத்திலிருந்து பெறப்பட்ட புத்தர் புகைப்படங்களில் ஒன்றினை ஒத்த கலையமைதியோடு இந்த புத்தர் செப்புத்திருமேனி உள்ளது.

 


அத்திருமேனியைப் பற்றி அவர் தந்த செய்தி இதழ்களில் வெளிவந்தது. அவற்றில் இந்த புத்தரைப் பற்றி விவரமாகக் கூறியுள்ள அவர், "சோழ தேசத்தில் பௌத்தம் என்ற தலைப்பில் தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் டாக்டர் பட்ட ஆய்வை மேற்கொண்டுள்ள தத்துவத்துறை ஜம்புலிங்கம் தொகுத்துள்ள நாகையில் இருந்து கிடைத்த புத்தரின் திருமேனி புகைப்படத் தொகுப்பு ஒப்பாய்வும் மேற்கூறிய தகவல்களை உறுதி செய்கிறது" என்று ஆய்வினை மேற்கோள் காட்டியுள்ளார்.  
சென்னையிலுள்ள அரசு அருங்காட்சியகத்தில் அதிக எண்ணிக்கையிலான நாகப்பட்டின புத்தர் செப்புத்திருமேனிகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. தஞ்சாவூரிலுள்ள கலைக்கூடத்தில் ஒரு செப்புத்திருமேனி உள்ளது. அதற்கு அடுத்தாற்போல இவ்வகை செப்புத்திருமேனி உள்ள இடம் என்ற பெருமையை தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள அய்யம்பேட்டை பெறுகிறது. இவ்வாறான செப்புத்திருமேனிகள் சோழ நாட்டில் அண்மைக்காலத்தில் பிற இடங்களில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 

இத்திருமேனியைப் பார்க்கச் சென்றதும், நாளிதழ்களில் செய்தி வந்ததும் மறக்க முடியாத அனுபவமாகும். களப்பணியின்போது கண்ட ஒரே நாகப்பட்டின புத்தர் செப்புத்திருமேனி இதுவேயாகும்.  

நன்றி   
திரு அய்யம்பேட்டை செல்வராஜ்
செய்தி வெளியான நாளிதழ்கள்

26 அக்டோபர் 2022இல் மேம்படுத்தப்பட்டது. 

Comments

  1. மிகவும் மகிழ்ச்சி... வாழ்த்துகள் ஐயா...

    ReplyDelete
  2. நன்றி அய்யா தங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. மிக்க நன்றி ஐயா.....என்னிடம்கூட இந்த news paper clippings இலலை.ஐயா.... (வரலாற்றறிஞர் திரு அய்யம்பேட்டை செல்வராஜ்முகநூல் மூலமாக : Selvaraj Nayakkavadiyar)

    ReplyDelete
  4. / புத்த செப்புத்திருமேனி ஒன்றையாவது கண்டுபிடிக்கவேண்டும் / ஆய்வின் போது தற்செயலாகக் கண்டு பிடிக்கப்படுவது அல்லவா சிலைகள் வாழ்த்துகள்

    ReplyDelete
  5. வாழ்த்துக்கள் ஐயா...

    ReplyDelete
  6. ஒரு பேராசிரியர் செய்ய வேண்டியதைத் தாங்கள் செய்து வருகிறீர்கள். அதற்கு இந்தத் தமிழுலகம் நன்றிக்கடன் பட்டிருக்கிறது.

    ReplyDelete
  7. வாழ்த்துகள்!! அய்யா..........

    ReplyDelete
  8. வாழ்த்துகள் அய்யா உங்களின் பணிகள் என்றும் வரலாற்றில் நிலைத்து நிற்கும்.

    ReplyDelete

Post a Comment