மணிமேகலையின் பௌத்தப் பேரறம் : அரங்கமல்லிகா
வாழ்த்துரை
பேரா. அரங்கமல்லிகா படைத்துள்ள மணிமேகலையின் பௌத்தப் பேரறம் என்ற இந்நூல் பல்லுயிர் ஓம்பும் பௌத்தம், மணிமேகலையின் அறிவாளுமை, மணிமேகலையின் பௌத்தப் பேரறம், நவீனத்துவமும் பௌத்தப்பேரறமும், அமுதசுரபி–அன்பு-கருணை, பௌத்தமும் பாதவழிபாடும், புத்தக்காஞ்சியும் போதி அறமும், சீலமும் தானமும், ஆன்மாவும் மறுபிறப்பும், பௌத்தம் காட்டும் ஈஸ்வரம், பௌத்தத்தில் பெண் தொன்மம், இறைகாக்கும் இந்திரவிழா என்னும் 12 கட்டுரைகளைக் கொண்டுள்ளது.
மணிமேகலை என்றாலும் பௌத்தம் என்றாலும் அறம் என்ற சொல் இயல்பாக நினைவிற்கு வந்துவிடும். அவ்வாறான பிணைப்பைக் கொண்ட பேரறத்தைப் பற்றி இலக்கியம், வெளிநாட்டவர் குறிப்புகள், அறிஞர்களின் நூல்கள் போன்ற சான்றுகளைக் கொண்டு உரிய மேற்கோள்களுடன் பன்னோக்கில் விவாதித்துள்ள ஆசிரியர் மணிமேகலைக் காப்பியத்தின் சிறப்பையும், பௌத்தத்தின் சிறப்பையும் நுணுக்கமாக அணுகியுள்ளார். இந்நூலிலிருந்து சில பகுதிகளைக் காண்போம்.
“அறத்தையே மனித மனமானது நாடி அடையவேண்டும். அதற்கு அடங்கா மனமானது அடங்கும் வகையில் மனிதர்களாகிய நாம் அன்பு, இரக்கம், கருணை ஆகிய நல்ல பண்பாட்டுத் தளத்தில் செலுத்தி இயங்குவோமேயானால், மனிதர்களை எந்தத்தீய சக்தியும் நெருங்காமல் தம்மைப் பாதுகாத்துக் கொள்ளலாம். அவ்வாறு தன்னையும் தான் சார்ந்த சமூகத்தையும் காப்பது எதுவோ அதுவே அறம் எனல் தகும்.” (கட்டுரை 1)
“மணிமேகலை காப்பியத் தலைவியான மணிமேகலையின் அறிவானது விசாலமாகி அறவண அடிகளின் துணையுடன் பௌத்தத்தைப் பற்றிக்கொண்டதற்கான காரணங்களை ஆய்வுசெய்யும் வகையில், பல் வேறுபட்ட சமய மதிப்பீடுகளை அறிந்துகொள்ள அவளுடைய பௌத்த ஞானமே உறுதுணையாக அமைந்திருக்கிறது. அந்தவகையில், காப்பியங்கள் படைத்திருக்கக்கூடிய பெண் கதாபாத்திரங்களில் மணிமேகலையே அறிவைக் கடந்து ஞானத்திலும் பேராளுமை மிக்கவளாகத் திகழ்கிறாள்.” (க.2)
“பெண்கள் துறவு மேற்கொள்வது குறித்துச் சிறப்பான கருத்துக்களை மணிமேகலை கூறினாலும் பெண்களுக்கான அறம் சார்ந்த உரைகள் யாவற்றையும் எடுத்துக் கூறுகிறது மணிமேகலை…. காமத்தால் அலையுறும் மனதை அடக்குவதற்குரிய கட்டுப்பாட்டை ஐம்புலன்களால் அடக்கி, பிறருக்கு எடுத்துக்காட்டாக வாழவேண்டும் என்ற கருத்தானது பௌத்த மெய்யறமாகக் கருதப்படுகிறது.” (க.3)
“சமூக அறிவியல் கண்ணோட்டத்தில் பௌத்தம் என்பது தனிமனித ஒழுக்கத்தை ஒரு கொள்கையாகவும், வாழ்வியல் மரபாகவும் கட்டமைத்து, அதனைச் செவ்வனே நடைமுறைப்படுத்துவதை அறமாகக் கொண்டுள்ளது… பௌத்தம் கலாச்சாரக் கட்டுப்பாட்டு மடமைகள் நிறைந்த மதமும் அல்ல, மார்க்கமும் அல்ல.” (க.4)
“மணிமேகலை காப்பியம் தெய்வத்தின் அருளுக்கும் அறிவின் உயர்வுக்கும் இடையே இட்டு நிரப்பும் ஒரு கற்பனையாக அமுதசுரபியை வைத்திருப்பதனால் இது ஒரு மீமெய் கற்பனையாக மாறுகிறது. இந்த மீமெய் கற்பனைதான் கருணை என்னும் விழுமியத்தை அழுத்தமாகச் சொல்லிச் செல்கிறது.” (க.5)
“சமண சமயத் துறவியர் உண்ணா நோன்பிருந்து மாண்ட இடங்களில் கல்வெட்டுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதனை நிசீதிகை கற்கள் என அழைக்கின்றனர்….மணிமேகலையில் புத்தரின் பாதத்தைப் பீடமாக அமைத்து வழிபடும் மரபு உறுதிப்படுத்தப்படுகின்றது.” (க.6)
“பெரும்பாலும் காஞ்சியிலிருந்து சென்ற பௌத்தத் துறவிகள் மஹாயான பௌத்தத்தை முன்னெடுத்தார்கள்….நூறு முறை சென்றாலும், நூற்றியோராவது முறை நமக்கென கருத்துகளை அள்ளித்தரும் வரலாற்றுச் சிறப்புமிக்க நகரே காஞ்சிபுரம் ஆகும். முத்தி தரும் அறச்சான்றோர்கள் நிறைந்த நகர் மட்டுமல்லாது, பேரெழில் கூட்டும் இயற்கையழகுக்கு முதன்மையானது காஞ்சிபுரமேயாகும்.” (க.7)
“தவசீலத்தைப் பெற்றவர்களின் அறநெறியால் வந்த பொருளானது, தான் சார்ந்திருக்கின்ற அனைவருக்கும் பயன்படும் தன்மை பெற்றப் பொருளாகவும், தானம் தவமிரண்டும் தங்கி வாழும் வாழ்க்கையை நிலைநாட்டும் பொருளாகவும் அமையும்.” (க.8)
“புத்தரின் கோட்பாட்டின்படி உடலும் உயிரும் ஒன்றையொன்று தொடர்புடையதாயினும், உயிரே ஆன்மாவாகச் செயல்படுகிறது. அது வடிவமற்றது. அது ஒருமுறை பிரிந்துவிட்டால் மீண்டும் பிறப்பதில்லை. எனவே மறுபிறப்பு என்பது இல்லை என்றே எடுத்துரைக்கிறார்.” (க.9)
“பௌத்தம் தனது கொள்கையில் கடவுள் கோட்பாட்டை அறவே மறுக்கிறது. மேலும், அறநெறியில் நின்று மக்களுக்காகச் சேவை செய்யும் ஆற்றல் பெற்றவர்கள் மனிதர்களில் தெய்வீக நிலையை அடையலாம் என்னும் கருத்தை வலியுறுத்துகிறது.” (க.10)
“தெய்வத்தன்மைப் பொருந்திய மணிமேகலையின் நிலையானது தமிழ்ச் சமூகத்தில் பௌத்த அறம் ஏற்றப் பெண்களை நினைவுபடுத்துகின்றது. மணிமேகலாத் தெய்வம் தொடங்கிப் பல்வேறு தெய்வங்களின் வரலாறுகள் காப்பியம் முழுவதுமாகப் பேசப்பட்டு இருக்கின்றன.” (க.11)
“இந்திர விழா நடக்க வேண்டியது இந்திரனை மட்டுமல்ல, சதுக்கப்பூதத்தை மகிழ்ச்சியுறச் செய்வதாகவும், ஆன்ம அமைதிப்படுத்துவதாகவும் உள்ளது. பௌத்த மதம் சொல்லும் ஒழுக்கச் சீலங்களை மக்கள் கடைப்பிடிக்க வேண்டியிருப்பதைச் சதுக்கப்பூதம் கவனித்துக்கொள்கிறது. மேலும், இந்திர விழா இயற்கையின் கொடைக்கான நன்றி விழாவாகவும் மணிமேகலை குறிப்பிடுகிறது.” (க.12)
ஒவ்வொரு உட்தலைப்பையும் ஒட்டி ஆசிரியர் நிறுவியுள்ள கருத்துகள் அந்தந்த தலைப்பிற்குச் சிறப்பு சேர்க்கிறது. முந்தைய வரலாற்றறிஞர்களின் கூற்றுகளைத் தேடி, பிற சான்றுகளையும் இணைத்து, உரிய இடத்தில் மிகவும் எளிதாகப் புரிந்துகொள்ளும் வகையில் நிறுவியுள்ள நூலாசிரியரின் பெருமுயற்சி பாராட்டத்தக்கதாகும். அறம், ஆன்மா, சீலம், மறுபிறப்பு, தானம் உள்ளிட்ட பல சொற்களுக்கு அரிதின்முயன்று அதற்கான விளக்கங்களை பல ஒப்புமைகளோடு ஆராய்ந்துள்ளார்.
ஏகாம்பரநாதர், கச்சபேஸ்வரர், காமாட்சியம்மன் கோயில்களில் உள்ள புத்தர் சிற்பங்கள், கருக்கினில் அமர்ந்தாள் கோயில் உள்ளிட்ட கோயில்களில் உள்ள புத்தர் சிலைகளைப் பற்றி நூலாசிரியர் விவாதிக்கும்போது காஞ்சிபுரத்தில் இந்த மூன்று கோயில்களில் நான் பார்த்த புத்தர் சிற்பங்களும், புத்தர் சிலைகளும் நினைவிற்கு வந்தன. அத்துடன் சோழ நாட்டில் நான் பார்த்த 60க்கும் மேற்பட்ட புத்தர் சிலைகளும், பூம்புகாரிலுள்ள புத்த பாதமும், புத்த விகாரையின் எச்சங்களும், பெருஞ்சேரி, புத்தமங்கலத்திலுள்ள புத்தர் கோயில்களும் நினைவிற்கு வந்தன.
சுமார் 2500 ஆண்டுகளுக்கு முந்தைய காலத்திற்கு நம்மை அழைத்துச் சென்று, அங்கிருந்து பௌத்தம் பற்றிய ஒரு பறவைப்பார்வையைத் தர ஆரம்பித்து, தொடர்ந்து பயணித்து பல சான்றுகள் மூலமாக இன்றைய சூழலுக்குப் பொருந்தி வரும் நிலை வரை விவாதித்து, தற்காலத்தில் பௌத்தமானது கலை, சமயம், பண்பாடு என்ற பல்வேறு தளங்களில் ஏற்படுத்தியுள்ள பெரும் தாக்கத்தை வெளிப்படுத்தியுள்ள விதம் போற்றத்தக்க வகையில் அமைந்துள்ளது. நல்ல பொருண்மையைத் தெரிவு செய்து அதனடிப்படையில் ஓர் அரிய நூலைப் படைத்துள்ள ஆசிரியருக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள்.
நூல் : மணிமேகலையின் பௌத்தப் பேரறம்
ஆசிரியர் : அரங்கமல்லிகா
பதிப்பகம் : தமிழ் மரபு அறக்கட்டளை பதிப்பகம் (https://tamilheritage.org/ மின்னஞ்சல் mythforg@gmail.com)
பதிப்பாண்டு : ஆகஸ்ட் 2025
விலை : ரூ.300
நூலாசிரியர் கேட்டு, நான் அனுப்பியிருந்த புத்த பாதம், புத்த விகார எச்சங்கள் தொடர்பான நான்கு ஒளிப்படங்கள் இந்நூலில் பக்.217, 218இல் இடம்பெற்றிருப்பதறிந்து மகிழ்ச்சி.
-------------------------------------------------------------------------------------------
நூலில் வெளியான என்னுடைய வாழ்த்துரை
-------------------------------------------------------------------------------------------
இது அருமையான வாழ்த்துரை மட்டுமல்ல , நூலின் உள்ளடக்கத்தை திறம்பட சுருங்க சொன்ன மதிப்புரையும் கூட.
ReplyDeleteநூலினை வாசிக்கத் தூண்டும் வாழ்த்துரை
ReplyDeleteஅய்யா அவர்கள் வாழ்த்தும் பாராட்டும் கூட பறவை பார்வை நன்றிகள்
ReplyDelete