பௌத்த சுவட்டைத் தேடி : திருநாட்டியத்தான்குடி

மார்ச் 2003இல் திருவாரூர் மாவட்டம் திருநாட்டியத்தான்குடியிலுள்ள புத்தரைக் கண்டோம். அதனைப் பற்றிய செய்திகள் நாளிதழ்களில் வெளியாயின

12 மே 2013

முனைவர் வீ.ஜெயபால் குழுவினருடன் கோயில் உலாவின்போது  திருநாட்டியத்தான்குடி உள்ளிட்ட 13 கோயில்களுக்குச் சென்றோம். அனைவரும் கோயிலுக்குச் சென்று வருவதற்குள் நான் உள்ளே அவசரம் அவசரமாகச் சென்று வெளியே வந்தேன். 2003இல் பார்த்த புத்தரைக் காணும் ஆவல் என்னை வேகப்படுத்தியது. அவரிடம் கூறிவிட்டு ஓட்டமும் நடையுமாக புத்தர் சிலை இருந்த மூங்கில் கொல்லையை நோக்கிச் சென்றேன். அப்போது அந்தப் புத்தர் தலையின்றி கண்டதைக் கண்டேன். அருகில் தேடிப்பார்த்தேன். தலையைக் காணவில்லை. 10 ஆண்டுகளுக்குள் தலை காணாமற்போயுள்ளதே என்ற வருத்தத்துடன் திரும்பும்போது ஒருவர், "அருகில் மற்றொரு புத்தர் சிலை வயலில் உள்ளதே, பார்க்கவில்லையா?" என்றார். திருநாட்டியத்தான்குடியில் இன்னொரு புத்தரைக் காணும் ஆவல் இருந்தபோதிலும் அடுத்தடுத்து குழுவினரோடு கோயில் உலா செல்ல வேண்டிய நிலையில் அந்தப் புத்தரைப் பார்க்காமல் திரும்பினேன். அந்தப் புத்தரைக் காணும் வாய்ப்பு அண்மையில் ஏற்பட்டது. 

27 செப்டம்பர் 2021

திருநாட்டியத்தான்குடியில் முன்னர் நான் இரு முறை பார்த்த புத்தரையும், 2013 முதல் நான் பார்க்க விரும்பிய, இதுவரை பார்த்திராத மற்றொரு புத்தரையும் பார்க்கச் சென்றேன்.  உடன் வந்த ஊர்தி ஓட்டுநர் எனக்கு மிகவும் உதவியாக இருந்தார். வரப்புகளைத்தாண்டி முதல் புத்தரைக் காணச் சென்றேன். சிறிதளவு ஓடிக்கொண்டிருந்த தண்ணீரைக் கடந்து மூங்கில் கொல்லையை அடைந்தேன். அங்கிருந்த புத்தரைக்காணவில்லையே என்று கேட்டபோது வயலில் இருந்தவர்கள் "நீங்கள் நிற்கும் இடத்தில்தான் புத்தர் சிலை உள்ளது. கவனமாகப் பாருங்கள்" என்று கூறினர். மிகவும் சிரமப்பட்டு பக்கவாட்டில் வந்து இலைகளை முற்றிலும் அகற்றிவிட்டுப் பார்த்தபோது தலையில்லாத புத்தரைக் காணமுடிந்தது.   அந்தப் புத்தரைப் பார்த்துவிட்டுத் திரும்பும்போது முந்தைய களப்பணியில் நான் விசாரித்த மற்றொரு புத்தர் சிலை தொடர்பாகக் கேட்டேன். அப்போது வயலில் இருந்தவர்கள் "அதுவும் கிட்டத்தட்ட இந்தச்சிலையைப் போலவே இருக்கும். இங்கு வந்ததுபோலவே வரப்பில் நடந்து செல்லவேண்டும். வாய்க்காலில் தண்ணீர் போவதால் பார்த்துப் போகவேண்டும். வாய்க்காலைக் கடந்தால்தான் புத்தரை அருகில் பார்க்கலாம்" என்று கூறி கைகளைக் காட்டி ஒரு மரத்தின் அடையாளத்தைக் கூறினர். 

இரண்டாவது புத்தரைக் காணச் சென்றுகொண்டிருந்தபோது வரப்பில் நடந்துசென்றபோது, எதிரில் வந்தவர்கள் "உங்களால் கால்வாயைக் கடக்கமுடியுமா? மூன்றடிக்கு மேல் தண்ணீர் ஓடுகிறது. கவனமாகச் செல்லவேண்டும். சில இடங்களில் சற்று ஆழமாக இருக்கும்" என்றனர். அதைத் தாண்டினால்தான் புத்தர் உள்ள இடத்திற்குச் செல்லமுடியும் என்ற சூழலில் நான் உறுதியாக அந்தப் புத்தரைப் பார்க்க முடிவு செய்தேன். அப்போது அவர்களிடம் "மூழ்கும் அளவிற்கு ஆழம் இருக்குமா?" என்று கேட்டேன். "அந்த அளவிற்கு இருக்காது. இருந்தாலும் வரப்பிலிருந்து கால்வாயில் பிடிமானம் எதுவுமின்றி உள்ளே இறங்கும்போது கவனமாக இருங்கள்" என்று கூறினர். மூழ்கும் அளவிற்கு வந்துவிடாது என்றதும் எனக்குச் சற்று துணிச்சல் வந்தது. உடன் வந்த ஊர்தி ஓட்டுநர் என் முயற்சிக்கு ஆதரவாக இருந்தார். வரப்பில் நடக்கும்போதெல்லாம் செருப்புகளைக் கழற்றி கையில் எடுத்துக்கொண்டே வந்த நிலையில் ஓரிடத்தில் அவற்றை ஓரமாகப் போட்டுவிட்டு இலகுவாக வாய்க்காலில் இறங்குமளவிற்கு இடத்தை நோக்கிச்சென்றேன். அனைத்து இடங்களிலும் ஒரே மாதிரியாக இருந்தது. ஒரே ஒரு இடத்தில் மட்டும் வெளியில் தெரிந்த செடியின் தடினமான வேர்களைக்கண்டேன். இரு கைகளையும் பின்னுக்கு ஊன்றி அவ்வப்போது அவற்றைச் சற்று இறுக்கமாகப் பிடித்துக்கொண்டே வரப்பிலிருந்து பின்வாக்கில் சறுக்கிக்கொண்டே வாய்க்காலில் இறங்கினேன். என்னையும் அறியாமல் பள்ளிக்காலத்தில் சறுக்கு மரம் விளையாடியது நினைவிற்கு வந்தது. முதலில் கணுக்கால் அளவு தெரிந்த ஆழம் பின்னர் இடுப்பு வரை உயர்ந்தது. இறங்குவதற்கு முன்பாகப் பேண்ட் பைகளில் இருந்தவற்றை வரப்பில் வைத்துவிட்டு வந்ததால் துணி மட்டும் நனைந்தது. இறங்கிவிட்டேன். ஏறவேண்டுமே, என்ன செய்வது. வாய்க்காலிலிருந்து மேலே வரப்பினை நோக்கிப் பிடிமானமோ, சிறிய மண் மேடோ கிடைக்கிறதா என்று பார்த்துக்கொண்டே போனபோது இலகுவாக ஓரிடம் கிடைத்தது. வாய்க்காலில் இறங்கிய உத்தியைப் பயன்படுத்தி, இப்போது முன்னோக்கிய நிலையில் கைகளை ஊன்றி தத்தித்தத்தி வரப்பில் ஏறிவிட்டேன். பின்னர் புத்தரை நோக்கி நடந்தேன். அதிகமான முட்செடிகள் இருந்ததால், புத்தரின் அருகே போகமுடியவில்லை.


முடிந்தவரை நெருக்கமான கோணத்தில் ஒரு புகைப்படம் எடுத்துவிட்டு வாய்க்காலில் இறங்கிய உத்தியைப் பயன்படுத்தித் திரும்பினேன். வரப்பில் நின்றபடி புத்தரைப் பின்புலத்தில்கொண்டு மற்றொரு புகைப்படம் எடுத்துக்கொண்டேன்.  

மறுபடியும் செருப்புகளைக் கையில் தூக்கிகொண்டு, தோளிலிருந்த பையில் அனைத்தையும் போட்டுக்கொண்டு கோயில் அருகே இருந்த குளத்தை நோக்கி நடந்தேன். இடுப்பு வரை நனைந்திருந்த ஆடைகளை அலசிவிட்டு, தற்காலிகமாகப் பாதி குளியல் என்ற அளவில் உடலில் இருந்த சேற்றினையும், மண்ணையும் சுத்தம் செய்தேன். 

ஈரமான ஆடையுடன் நான் நடந்து சென்றதை சிலர் வித்தியாசமாகப் பார்த்தார்கள். என் சிந்தனை நான் பார்த்த புத்தர் சிலைகளையே சுற்றிவந்த நிலையில் எதுவும் பெரிதாகத் தெரியவில்லை. 

இரண்டாவது புத்தரைக் காண கோயில் உலாவே உதவியாக இருந்ததால், திருநாட்டியத்தான்குடி கோயிலில் பயணத்தை நிறைவு செய்துவிட்டு அங்கிருந்து கிளம்பினேன், தஞ்சையை நோக்கிப் பயணிக்க.

நன்றி : திரு ஜோதி, திரு ரகுவரன்


பேராசிரியர் இல.தியாகராசன் ஐயா அவர்கள் இயற்கை எய்திய செய்தி என்னைப் போன்ற ஆய்வாளர்களுக்கெல்லாம் ஒரு பெரிய அதிர்ச்சி. வரலாற்றுத்துறைக்கு ஒரு பேரிழப்பு.


1993-95இல் பௌத்த ஆய்வில் அடியெடுத்த வைத்தபோதிலும், அவரை முதல் முறையாகக் காணும் வாய்ப்பினை 1997இல்தான் பெற்றேன். முதல் சந்திப்பின்போது அவர் இப்பகுதியில் உள்ள புத்தர் சிலைகளைப் பற்றியும், பௌத்தம் தொடர்பான நூல்களைப் பற்றியும் கூறினார். அவர் சொன்னவற்றில் பல சிலைகளை நான் பார்த்துள்ளேன் என்று நான் கூறியபோது வியந்தார். அன்று முதல் வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் அவரைச் சந்தித்து ஆய்வு தொடரபாக உரையாடுவது வழக்கம். களப்பகுதியில் நான் கண்டுபிடித்த புத்தரைப் பற்றிய செய்திகளைப் பார்த்து மனமுவந்து பாராட்டியவர்.
பல ஆய்வாளர்கள் உருவாகக் காரணமாக இருந்தவர், எந்த நேரத்தில் சென்று கேட்டாலும் ஐயங்களைத் தெளிவிப்பவர், ஒரு நண்பரைப்போல பழகுபவர். அறிஞர்களிடம் பழகும்போது காணும் இடைவெளியை இவரிடம் காணமுடியாது. இயல்பாகப் பேசுவார். தமிழகத்தின் தலைசிறந்த தொல்லியல் அறிஞர். அரியலூர் கல்லூரி வரலாற்றுத் துறையின் மேனாள் பேராசிரியர். அன்னாரின் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கல்கள்.
25 டிசம்பர் 2021

Comments

 1. தங்களின் ஆர்வம் மட்டும் இல்லாமல், துணிச்சலும் வியக்க வைக்கிறது ஐயா...

  ReplyDelete
 2. மனம் ஒன்றிய ஈடுபாடு இருந்தால்தான் இவைகள் சாத்தியமாகும்.

  தங்களது முயற்சிகளுக்கு எமது வணக்கம்.

  ReplyDelete
 3. தங்களின் தேடல் வியக்க வைக்கிறது ஐயா

  ReplyDelete
 4. தங்களின் தேடலில் மீண்டுமொரு வைரக்கல்

  ReplyDelete

Post a Comment