அரியலூர் மாவட்டத்தில் பௌத்தம்






அரியலூர் மாவட்டத்தில் பௌத்தம்

தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை, திருச்சி, கரூர், பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை மாவட்டங்களை உள்ளடக்கிய சோழ நாட்டில் பௌத்த சமயச் சான்றுகள் காணப்படுகின்றன.

அரியலூர் மாவட்டத்தில் அரியலூர், கீழக்கொளத்தூர், குழுமூர், சுத்தமல்லி, பிள்ளைபாளையம், பெரிய திருக்கோணம், முத்துசேர்வைமடம், ராயம்புரம், விக்ரமங்கலம், ஜெயங்கொண்டம் ஆகிய இடங்களில் அமர்ந்த நிலையில் தியான கோலத்தில் புத்தர் சிலைகள் உள்ளன. இவற்றில் சில சிலைகள் அருங்காட்சியகங்களில் உள்ளன.

கங்கைகொண்ட சோழபுரம், இராசேந்திரசோழன் அகழ்வைப்பகத்தில் அரியலூரையும், கீழக்கொளத்தூரையும் சேர்ந்த புத்தர் சிலைகள் உள்ளன. அரியலூர் புத்தர் சிலை சற்றே மூடிய கண்கள், நீண்ட காதுகள், நேர்த்தியான வரிசையில் அமைந்த சுருள்முடி, அதற்குமேல் தீச்சுடர், அகன்ற மார்பு, பரந்த தோள்கள், மடியில் இடது உள்ளங்கையின்மீதுள்ள வானோக்கிய வலது உள்ளங்கை, இடுப்பில் ஆடை ஆகியவற்றுடன் உள்ளது. இடது தோளிலிருந்து காணப்படுகின்ற மேலாடையானது உடலை அணைத்தவாறு கால் வரை உள்ளது. பீடத்தில் அமர்ந்த நிலையில் மூன்று சிங்க உருவங்கள் காணப்படுகின்றன. சிலையின் பின்புறத்தில் இரு பக்கத் தூண்களின்மீது அரை வட்ட வடிவில் வேலைப்பாடுகளுடன் கூடிய தோரணம் உள்ளது. உள்ளங்கை சிதைந்தும், முகம் தெளிவின்றியும் உள்ளன. இந்தச் சிலை 1990களின் இறுதியில் முதல் களப்பணியின்போது அரியலூர் கோட்டாட்சியர் அலுவலகத்தின் முன்பாக இருந்தது.

இவ்வருங்காட்சியகத்தில் உள்ள கீழக்கொளத்தூரைச் சேர்ந்த புத்தர் சிலை பொ.ஆ.10ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகும். பீடத்தின்மீது உள்ள இச்சிலை உருண்டையான முகம், நீண்ட காதுகள், நெற்றியில் திலகக்குறி, தலையில் வரிசையாகச் சுருள்முடி, அதற்குமேல் தீச்சுடர், பிரபை, கழுத்தில் மூன்று மடிப்புகள், இடது மார்பை மூடிய மேலாடை, மடியில் இடது உள்ளங்கையின்மீதுள்ள வானோக்கிய நிலையிலுள்ள வலது உள்ளங்கையில் தர்மசக்கரக்குறி, இடுப்பில் ஆடை ஆகியவற்றுடன் உள்ளது. சிலையின் இடது புறத்தில் பீடத்தோடு காலின் ஒரு பகுதி சிதைந்துள்ளது.

சென்னை, அரசு அருங்காட்சியகத்தில் சுத்தமல்லியைச் சேர்ந்த புத்தர் சிலை உள்ளது. பொ.ஆ.13ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த, பீடத்தின்மீதுள்ள இந்தச் சிலை சற்றே மூடிய கண்கள், நீண்ட காதுகள், புன்னகை சிந்தும் இதழ்கள், தலையில் வரிசையாகச் சுருள்முடி, அதற்கு மேல் தீச்சுடர், கழுத்தில் மூன்று மடிப்புகள், அகன்ற மார்பு, பரந்த தோள்கள், இடது மார்பை மூடிய மேலாடை, மடியில் இடது உள்ளங்கையின்மீதுள்ள வானோக்கிய வலது உள்ளங்கையில் தர்மசக்கரக்குறி, இடுப்பில் ஆடை, தலைக்கு மேல் அரைவட்ட வடிவில் வேலைப்பாடுகளுடன் கூடிய வளைவு ஆகியவற்றுடன் உள்ளது. வளைவின் இரு புறங்களிலும் புத்தரின் தோளுக்கு மேலாக தூதுவர்களைப் போன்ற இரு உருவங்கள் உள்ளன. இவ்வாறான அமைப்பினை குழுமணி, மன்னார்குடி, கிள்ளியூர் புத்தர் சிலைகளில் காணலாம். பீடத்தில் மூன்று சிங்க உருவங்கள் உள்ளன.

புதுக்கோட்டை, அரசு அருங்காட்சியகத்தில் முத்துசேர்வைமடத்தைச் சேர்ந்த ஒரு புத்தர் சிலை உள்ளது. பொ.ஆ.11ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்தச் சிலை நீண்ட காதுகள், தலையில் வரிசையாகச் சுருள்முடி, தீச்சுடர், மேலாடை, அகன்ற மார்பு, பரந்த தோள்கள், இடுப்பில் ஆடை ஆகியவற்றுடன் காணப்படுகிறது. மூக்கும், உதடும் சிதைந்துள்ளன.

அருங்காட்சியகங்களில் உள்ள புத்தர் சிலைகளைப் பற்றி விவாதித்த நிலையில், இனி பிற சிலைகளைக் காண்போம். முனைவர் ம.செல்வபாண்டியனுடன்  மேற்கொண்ட களப்பணியின்போது குழுமூரில் பீடத்தின்மீது ஒரு புத்தர் சிலையைக் காணமுடிந்தது. உடற்பகுதியுடன் தலைப்பகுதி பொருத்தப்பட்ட, இந்தச் சிலை சற்றே மூடிய கண்கள், நீண்ட காதுகள், புன்னகை சிந்தும் இதழ்கள், நெற்றியில் திலகக்குறி, தலையில் வரிசையாகச் சுருள்முடி, அதற்குமேல் தீச்சுடர், அகன்ற மார்பு, பரந்த தோள்கள், மார்பில் ஆடை, இடது உள்ளங்கையின்மீதுள்ள வானோக்கிய வலது உள்ளங்கையில் தர்மசக்கரக்குறி, இடுப்பில் ஆடை ஆகியவற்றுடன் உள்ளது. தீச்சுடர், மூக்கு, கழுத்து ஆகியவை சிதைந்துள்ளன. புத்தர் சிலை உள்ள இந்த ஊரில் கெட்ட ஆவி எதுவும் நெருங்காது என்றும் அதனால் குழந்தைகள் இங்கு நிம்மதியாகத் தூங்கும் என்ற நம்பிக்கை இவ்வூர் மக்களிடம் உள்ளது. புத்தர் சிலை உள்ள ஊர் முழு ஊர் என்றும், புத்தர் அனைவருக்கும் நல்லதைத்தான் செய்வார் என்றும், சில ஆண்டுகளுக்கு முன்பு வரை இச்சிலைக்கு விளக்கேற்றி பூஜை செய்ததாகவும் அவர்கள் கூறினர்.

முனைவர் ம.செல்வபாண்டியன், முனைவர் க.ரவிக்குமாருடன் மேற்கொண்ட களப்பணியின்போது பிள்ளைபாளையத்தில் ஊரின் நடுவில் அரச மரத்தின்கீழ் வழிபாட்டில் ஒரு புத்தர் சிலையைக் காணமுடிந்தது. தலையிலிருந்து இடுப்புப்பகுதி வரை மட்டுமே உள்ள இந்தச் சிலை சற்றே மூடிய கண்கள், நீண்ட காதுகள், தலையில் சுருள்முடி, அதன்மேல் தீச்சுடர், அகன்ற மார்பு, பரந்த இடது பக்க தோள், மார்பில் ஆடை ஆகியவற்றுடன் இச்சிலை உள்ளது. வலது கை, இடுப்புப்பகுதிக்குக் கீழ்ப்பகுதி முற்றிலும் உடைந்தும், இடது கை, மூக்கு, இதழ்கள், தீச்சுடர் ஆகியவை சிதைந்தும் உள்ளன. .

பெரிய திருக்கோணத்தில் உள்ள புத்தர் சிலை தாமரைப்பீடத்தில் உள்ளது. இந்தச் சிலை உருண்டையான முகம், சற்றே மூடிய கண்கள், நீண்ட காதுகள், புன்னகை சிந்தும் இதழ்கள், நெற்றியில் திலகக்குறி, தலையில் வரிசையாகச் சுருள்முடி, அதற்குமேல் உருண்டை வடிவில் தீச்சுடர், கழுத்தில் மூன்று மடிப்புகள், மேலாடை, இடது உள்ளங்கையின்மீதுள்ள வலது உள்ளங்கையில் தர்மசக்கரக்குறி ஆகியவற்றுடன் உள்ளது. தலையின் பின் புறமும் சுருள்முடி அழகாக உள்ளது. முன்னர் இவ்விடத்தில் ‘கடன் கொடுத்தவன்’, ‘கடன் வாங்கியவன்’ என்றழைக்கப்பட்ட இரு சிலைகள் இருந்ததாகவும், அவற்றில் தற்போது இந்த ஒரு சிலை மட்டும் உள்ளதாகவும் உள்ளூரில் கூறினர்.

ராயம்புரத்தில் ஏரிக்கரையில் மரத்தின்கீழ் தலையில்லாத ஒரு புத்தர் சிலை இடுப்புக்குக் கீழ் புதையுண்டு இருந்தது. இந்தச் சிலை கழுத்தில் மூன்று மடிப்புகள், அகன்ற மார்பு, பரந்த தோள்கள், இடது மார்பினை மூடிய மேலாடை, மடியில் இடது உள்ளங்கையின்மீதுள்ள வானோக்கிய வலது உள்ளங்கை, இடுப்பில் ஆடை ஆகியவற்றுடன் இருந்தது. புத்தர் சிலை உள்ள ஊர் முழு ஊர் என்றும், ஒரு நல்ல சிலையை உடைத்துள்ளார்கள் என்றும் இச்சிலையைப் பற்றி உள்ளூரில் கூறினர்.

விக்ரமங்கலத்தில் உயரமான மேடையின்மீது அடுத்தடுத்து இரு புத்தர் சிலைகள் இடது மார்பை மூடிய மேலாடை, நெற்றியில் திலகக்குறி, சற்றே மூடிய கண்கள், புன்னகை சிந்தும் இதழ்கள், நீண்ட காதுகள், மடியில் இடது உள்ளங்கையின்மீதுள்ள வானோக்கிய நிலையில் வலது உள்ளங்கை, இடுப்பில் ஆடை ஆகியற்றுடன் உள்ளன. பொ.ஆ.13ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த முதல் சிலை தலைக்குப் பின் பிரபை, தலையில் வரிசையாகச் சுருள்முடி, அதன்மீது தீச்சுடர் ஆகியவற்றுடன் உள்ளது. மூக்கு சிதைந்துள்ளது. சிலையின் பின்புறத்தில் அரை வட்ட வடிவில் வேலைப்பாடுகளுடன் கூடிய வளைவு அழகான இரு பக்கத்தூண்களின்மீது அமைந்துள்ளது. அடுத்துள்ள, பொ.ஆ.12ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சிலையின் தலையில் வரிசையாகச் சுருள்முடி, பின்புறத்தில் அரை வட்ட வடிவில் வேலைப்பாடுகளுடன் கூடிய வளைவு அழகான இரு பக்கத்தூண்களின்மீது அமைந்துள்ளது. இதன் இடது புறம் உடைந்துள்ளது. இந்தச் சிலைகளைக் ‘கடன் கொடுத்தவன்’, ‘கடன் வாங்கியவன்’ சிலைகள் என்றழைக்கின்றனர். கொடுத்தவன் சிலை அழுத முகத்துடனும் வாங்கியவன் சிலை சிரித்த முகத்துடனும் இருப்பதாகவும், கடன் வாங்கியவன் சிலையை அவ்வப்போது அனைவரும் கல்லால் அடிப்பதால் மேல் பகுதி உடைந்துள்ளதாகவும் கூறினர். இரு சிலைகளும் உள்ள மேடைக்கு முன்பாக ஒரு வேல் வைக்கப்பட்டுள்ளது. மழை வராவிட்டால் அந்த வேலை எடுத்து மேளதாளத்துடன் அருள் ஏற்றி ஊரைச் சுற்றிச் சென்று மறுபடியும் கொண்டுவந்து வைத்துவிட்டால் மழை வரும் என்ற நம்பிக்கை இவ்வூர் மக்களிடம் உள்ளது.

ஜெயங்கொண்டத்தில் பொ.ஆ.11ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியைச் சேர்ந்த ஒரு புத்தர் சிலை தாமரைப்பீடத்தில் உள்ளது. சற்றே மூடிய கண்கள், நீண்ட காதுகள், புன்னகை சிந்தும் இதழ்கள், தலையின் பின்புறம் பிரபை, கழுத்தில் மூன்று மடிப்புகள், வரிசையாகச் சுருள்முடி, அதற்குமேல் தீச்சுடர், அகன்ற மார்பு, பரந்த தோள்கள் ஆகியவற்றுடன் இச்சிலை உள்ளது. சிலையின் முகத்தில் தவழும் புன்னகை நன்கு வெளிப்படுத்தப்பட்டுள்ளது. பிரபைக்கு மேல் குடை போன்ற அமைப்பும், போதி மரமும் உள்ளன. மூக்கு சிதைந்துள்ளது.

பிள்ளைபாளையம், விக்ரமங்கலம், ஜெயங்கொண்டம் சிலைகள் வழிபாட்டில் உள்ளன. ராயம்புரம் சிலையையும், குழுமூர் சிலையின் தலைப்பகுதியையும் அடுத்தடுத்த களப்பணியின்போது காணமுடியவில்லை. அடுத்த பதிவில் பிறிதொரு மாவட்டத்திற்குப் பயணிப்போம்.

துணை நின்றவை
  • குழுமூரில் புத்தர் சிலை கண்டுபிடிப்பு, தினமணி, 26 ஜூன் 2006.
  • (1 செப்டம்பர் 2016). பௌத்த சுவட்டைத்தேடி : சுத்தமல்லி, https://ponnibuddha.blogspot.com/2016/09/blog-post.html
  • (1 அக்டோபர் 2016). பௌத்த சுவட்டைத்தேடி : அரியலூர், https://ponnibuddha.blogspot.com/2016/10/10-1997.html
  • (1 செப்டம்பர் 2019). பௌத்த சுவட்டைத்தேடி : பிள்ளைபாளையம், https://ponnibuddha.blogspot.com/2019/09/blog-post.html
  • அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே கண்டறியப்பட்ட கி.பி. 11ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த புத்தர் சிலை, இந்து தமிழ் திசை, 2 செப்டம்பர் 2019.
  • ஜம்புலிங்கம், பா. (2022). சோழ நாட்டில் பௌத்தம். புது எழுத்து. காவேரிப்பட்டிணம்.
  • Jambulingam, B. (2023). Buddhism in Chola Nadu, Pudhu Ezuthu, Kaveripattinam.
-------------------------------------------------------------------------------------------
நன்றி: போதி முரசு, பிப்ரவரி 2025
-------------------------------------------------------------------------------------------

22 பிப்ரவரி 2025இல் மேம்படுத்தப்பட்டது.

Comments