ஓர் அரிய பெட்டகம் : முதுமுனைவர் குடவாயில் பாலசுப்ரமணியன்



தமிழ்ப்பதிப்பினை வழங்கும் இனிய தருணம் (நவம்பர் 2022)

ஆங்கிலப்பதிப்பினை வழங்கும் இனிய தருணம் (ஜூலை 2024)

ஓர் அரிய பெட்டகம்

பன்னிரு ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் குறிஞ்சி மலரும். அதுபோன்றுதான் மிக அரிதாக ஆண்டுகள் பல கடந்து தமிழகத்தில் பெளத்தம் பற்றிய ஓரிரு நூல்கள் மலர்கின்றன. அதுபோன்றே பெளத்தம் பற்றி ஆய்வோர் இன்று தமிழகத்தில் மிகச்சிலரே. அவர்கள் வரிசையில் முனைவர் பா. ஜம்புலிங்கம் தன் கடின உழைப்பால் பெளத்தம் பற்றி ஆய்ந்து வருவதோடு முக்கிய தரவுகளை ஒளிப்படங்களுடன் ஆவணப்படுத்தியும் வருகின்றார். அவர்தம் கடுமையான உழைப்பின் அற்புதமான வெளிப்பாடுதான் சோழநாட்டில் பெளத்தம் எனும் இந்நூல்.

சங்க காலம் தொடங்கி தஞ்சையின் அரசர் செவ்வப்ப நாயக்கர் காலம் வரை (16ஆம் நூற்றாண்டு) சோழநாட்டில் உள்ள பெளத்த சமயம் சார்ந்த இலக்கியக் குறிப்புகள், கல்வெட்டுகள், சிற்பங்கள், செப்புத் திருமேனிகள், விகாரங்கள் எனப் பல தரவுகளைக் காலவரிசைப்படி தொகுத்து ஆய்வு மேற்கொள்ளப்பெற்றுள்ளது. சோழநாட்டில் பெளத்த சமய முக்கிய கேந்திரங்களாக விளங்கிய இடங்கள் கடற்றுரை பட்டினங்களான பூம்புகாரும், நாகையும் ஆகும். நூலாசிரியர் காவிரிப்பூம்பட்டினம் பற்றியும் நாகப்பட்டினம் பற்றியும் மிக ஆழமாக ஆராய்ந்து அங்கிருந்த பெளத்த சின்னங்களைப் பற்றி விவரித்திருப்பது பாராட்டத்தக்கதாகும்.

நாகப்பட்டினத்திலிருந்து கிடைத்து நமது நாட்டிலும், வெளிநாட்டு அருங்காட்சியகங்களிலும் இடம்பெற்றுள்ள புத்தபிரானின் செப்புப் பிரதிமங்கள் பற்றிய பட்டியலும், அவை குறித்த செய்திகளும் நம்மை மேலும் மேலும் வியக்க வைக்கின்றன. அவற்றைத் தொகுத்த பணி எளிமையானதன்று. நூலாசிரியர் உலக அருங்காட்சியகங்களுடன் தொடர்புகொண்டு ஏறத்தாழ 90 புத்தரின் செப்புத் திருமேனிகள் குறித்த தகவல்களைச் சேகரித்துள்ளார் என்பதை அறியும்போது அவர்தம் உழைப்பு எத்தகையது என்பது புரியும்.

நூலாசிரியரின் கள ஆய்வு எவ்வளவு கடுமையானது என்பதை அவர் ஆவணப்படுத்தியுள்ள புத்தரின் கற்சிற்பங்கள் வழி அறிய முடிகிறது. குறிப்பாகத் திருச்சி மாவட்டம், மங்கலத்தில் உள்ள புத்தரின் கற்திருமேனியில் மீசையிருப்பது பற்றி குறித்திருப்பது அரிய செய்தியாகும். அவர் பதிவு செய்துள்ள சிற்பங்களின் வண்ணப் படங்களைப் பார்க்கும்போது நாமே கள ஆய்வு செய்து நேரில் கண்டது போன்ற எண்ணத்தை ஏற்படுத்துகின்றது.

ஒப்பாய்வுக்காக ஒருசில சமண தீர்த்தங்கரர் சிற்பங்களையும், சிவன் சிற்பத்தையும் காட்டியிருப்பது பாராட்டும் வண்ணம் உள்ளது. முற்பட்ட ஆய்வு அறிஞர்களின் கருத்துகளையும், சமகால அறிஞர்களின் கருத்துகளையும், தேவைப்படும் இடங்களில் சுட்டிக்காட்டி தம் நன்றியுணர்வையும், வெளிப்படைத் தன்மையையும் காட்டியுள்ளார். தேவைப்படும் பட்டியல்கள், பத்திரிகை செய்திகள் ஆகியவை நூலுக்கு மேலும் செறிவூட்டுகின்றன.

சோழநாட்டில் பெளத்தம் பொ.ஆ. 1580 காலகட்டம் வரை உயிர்ப்போடு இருந்தமையை திருவிளந்துறை புத்த ஆலயம் பற்றி கும்பகோணம் கும்பேசர் கோயில் கல்வெட்டு எடுத்துரைப்பது அரிதினும் அரிய செய்தியாகும். இதனைக் கல்வெட்டு ஒளிப்படத்துடன் காட்டி இந்நூல் எடுத்துரைப்பது அரிய வரலாற்றுத் தகவலாகும். இந்நூல் சோழநாட்டு வரலாற்றில் பெளத்த சமயம் பற்றி முழுமையாக எடுத்துரைக்கும் ஓர் அரிய பெட்டகம் என்பதே உண்மை.

-------------------------------------------------------------------------------------------
நன்றி: முதுமுனைவர் குடவாயில் பாலசுப்ரமணியன்
-------------------------------------------------------------------------------------------
31 மார்ச் 2025இல் மேம்படுத்தப்பட்டது.

Comments

Post a Comment