மத நல்லிணக்கத்துக்கு புத்தர் ஒரு சான்று : சோழர்கள் இன்று

மத நல்லிணக்கத்துக்கு புத்தர் ஒரு சான்று என்ற தலைப்பில் சோழர்கள் இன்று நூலில் வெளியாகியுள்ள என்னுடைய கட்டுரையைப் பகிர்வதில் மகிழ்கிறேன், தொகுப்பாசிரியருக்கு நன்றியுடன். 

மனித குல வரலாற்றில் பொது ஆண்டுக்கு முந்தைய (கி.மு.) ஆறாம் நூற்றாண்டு முக்கியத்துவம் வாய்ந்தது. இந்நூற்றாண்டில்தான் ஹெராக்கிளிட்டஸ், செராஸ்டர், கன்பூசியஸ் என்று பல்வேறு நாடுகளிலும் பல ஞானிகள் தோன்றினர். அப்போதுதான் புத்தரும் தோன்றினார். அசோகர் காலத்திலேயே தமிழ் நிலத்தில் பௌத்தத்தைப் பரப்ப தூதர்கள் அனுப்பப்பட்டதை நாம் அறிய முடிகிறது. பௌத்தத் தத்துவத்தின் வளர்ச்சிக்கும், சமயத்தின் பரவலுக்கும் பொதுவாகத் தமிழகமும், சிறப்பாகக் காஞ்சீபுரமும் ஆற்றிய தொண்டு சிறியதல்ல என்று கூறுவர். சோழ நாட்டுக்கும் நாம் கூடுதல் கவனம் கொடுக்க வேண்டும்.


சோழ நாட்டில் கிடைக்கும் புத்தர்கள்

தமிழகத்தில் சோழ நாட்டில்தான் அதிகமான புத்தர் சிலைகளும் நாகப்பட்டின புத்தர் செப்புத்திருமேனிகளும் காணப்படுகின்றன. மண்ணிலிருந்து கிடைக்கும் பல சிலைகள் பத்தாம் நூற்றாண்டிலிருந்து பதின்மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்தவை; அதாவது, நாம் சோழர் காலம் என்று குறிப்பிடும் பிற்காலச் சோழர்களுடைய காலகட்டம்.

குறிப்பிட்ட ஒரு பிராந்தியம் அல்லது நகரப் பகுதிகளில் மட்டும்தான் என்பதுபோல அல்லாமல், பாரம்பரியமான சோழ நாட்டின் பரந்து விரிந்த எல்லைக்குள் புத்தர் சிலைகள் கிடைக்கின்றன. இந்தப் பட்டியலைப் பாருங்கள்: அருந்தவபுரம், கோபிநாதப்பெருமாள்கோவில், சோழன்மாளிகை, திருவலஞ்சுழி, பட்டீஸ்வரம், பெரண்டாக்கோட்டை, மணலூர், மதகரம், மாத்தூர், மானம்பாடி, முழையூர், விக்ரமம், வையச்சேரி, இடும்பவனம், இலையூர், உள்ளிக்கோட்டை, கண்டிரமாணிக்கம், கோட்டப்பாடி, சீதக்கமங்கலம், திருநாட்டியத்தான்குடி, திருப்பாம்புரம், புதூர், மன்னார்குடி, வலங்கைமான்புத்தூர், வளையமாபுரம், விடையபுரம், கிராந்தி, சந்தைத்தோப்பு, புத்தமங்கலம், புஷ்பவனம், எழுமகளூர், குத்தாலம், சின்னமேடு, பெருஞ்சேரி, ஆயிரவேலி அயிலூர், கீழ்க்குறிச்சி, குழுமணி, திருச்சி, திருப்பராய்த்துறை, பேட்டைவாய்த்தலை, மங்கலம், முசிறி, வெள்ளனூர், அரியலூர், கீழக்கொளத்தூர், குழுமூர், சுத்தமல்லி, பிள்ளைபாளையம், பெரிய திருக்கோணம், முத்துசேர்வைமடம், ராயம்புரம், விக்ரமங்கலம், ஜெயங்கொண்டம், ஒகளூர், பரவாய்... இவையெல்லாம் புத்தர் சிலைகள் கிடைத்த இடங்கள்.

தென்னகத்தில் புத்தருடைய செப்புத்திருமேனிகள் அரியன என்றாலும், அப்படிக் கிடைத்தவற்றில் பெரும்பாலானவை தஞ்சாவூர் பகுதியைச் சேர்ந்தவையாக இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. நாகப்பட்டினத்திலிருந்து 1856 முதல் மகாயானப் பிரிவைச் சேர்ந்த சுமார் 350 புத்தர் செப்புத்திருமேனிகள் கண்டுபிடிக்கப்பட்டன. இவற்றில் சில எழுத்துப்பொறிப்புடன் உள்ளன. இத்திருமேனிகள் ராஜராஜனாலும், ராஜேந்திரனாலும் கட்டப்பட்ட விகாரங்களைச் சேர்ந்தவையாகக் கருதப்படுகின்றன.

இந்தச் சிலைகள் எல்லாம் ஏன் மண்ணுக்குள் சென்றன? ஏன் பல சிலைகளும் சிதைக்கப்பட்ட நிலையில் இருக்கின்றன? பிற்காலத்தில் தோன்றிய சமயப் பூசல்கள் அதற்கான காரணமாக இருக்கலாம். ஆனால், சைவப் பற்று கொண்டவர்களாகக் கருதப்படும் சோழர் காலத்தில் பௌத்தம் செழித்தோங்கியதற்கும், எல்லாச் சமயங்களுக்கும் சோழர்கள் உரிய மதிப்பைக் கொடுத்ததற்கும் மண்ணிலிருந்து கிடைக்கும் இந்தச் சிலைகளோடு வேறு பல முக்கியச் சான்றுகளும் உள்ளன.

செப்பேடுகள் சொல்லும் செய்தி

பொது ஆண்டு பதினோராம் நூற்றாண்டில், இன்றைக்கு இந்தோனேஷிய பிராந்தியத்தை அன்றைக்கு ஆண்டுவந்த ஸ்ரீவிஜய அரசுடன் சோழர்களுக்கு நல்லுறவு இருந்தது. ராஜராஜன் அனுமதியுடன் ஸ்ரீவிஜய மன்னராக சைலேந்திர வம்சத்தைச் சேர்ந்த ஸ்ரீமார விஜயதுங்க வர்மன் நாகப்பட்டினத்தில் ஒரு பௌத்த விகாரத்தைக் கட்டினார். ‘சூடாமணி விகாரம்’ என்று தன்னுடைய தந்தையின் பெயரையும் அதற்குச் சூட்டினார். இந்த விகாரத்திற்கு ராஜராஜன் ஆனைமங்கலத்தின் வருவாயைக் கொடையாக வழங்கியதை ஆனைமங்கலச் செப்பேடுகள் மூலமாக அறிய முடிகிறது.

தஞ்சாவூரில் ராஜராஜன் கட்டிய பெருவுடையார் கோயிலில் உள்ள சிற்பத் தொகுதியில் புத்தரின் வாழ்க்கையோடு தொடர்புடைய பல நிகழ்வுகள் காணப்படுகின்றன. இக்கோயிலின் கருவறையைச் சுற்றியுள்ள சாந்தாரத்தின் சோழர் கால ஓவியங்களில், அமர்ந்த நிலையில் தியானக் கோலத்திலுள்ள புத்தர் ஓவியமும் உள்ளது.

ராஜராஜனின் மகனான ராஜேந்திரன் தன்னுடைய தந்தை பௌத்த விகாரத்துக்கு அளித்த நிவந்தத்தை உறுதிப்படுத்தினார். அப்போது இந்த விகாரம் ‘ராஜராஜப் பெரும்பள்ளி’ என்று அழைக்கப்பட்டது. அந்தக் காலகட்டத்தில் ‘ராஜேந்திரப் பெரும்பள்ளி’ என்ற மற்றொரு பௌத்த விகாரமும் அங்கு இருந்திருக்கிறது.

அடுத்து, வீரராஜேந்திரனின் காலத்தில் அவருடைய பெயரால் எழுதப்பட்ட முக்கியமான நூல் ‘வீரசோழியம்’. இதை எழுதியவர் புத்தமித்திரன்; புத்தரிடம் ஆழ்ந்த பக்தியும் பௌத்தத்தில் நம்பிக்கையும் கொண்டவர்.

முன்னோர் வழியில் சிவபெருமானிடத்து எல்லையற்ற பேரன்புடையவனாகத் திகழ்ந்தவர் முதலாம் குலோத்துங்கன். அதேசமயம், சோழப் பேரரசில் உள்ள சைவ, வைணவ, பௌத்த, சமணக் கோயில்களில் இவருடைய கல்வெட்டுகள் காணப்படுவது இவருடைய சமய நல்லிணக்கத்துக்குச் சான்றாகும். ‘ராஜேந்திரசோழப் பெரும்பள்ளி’க்குச் சிறந்த விளைநிலங்களைக் கொண்ட ஊர்களை இம்மன்னர் இறையிலியாகத் தந்துள்ளார்.

கும்பகோணம் அருகிலுள்ள தாராசுரத்தில் இரண்டாம் ராஜராஜன் காலத்தில் கட்டப்பட்ட ஐராவதீஸ்வரர் கோயிலில் புத்தர் சிற்பமும் உண்டு.

நாகப்பட்டினம் சிறந்த பௌத்த மையமாக விளங்கியதை லெய்டன் செப்பேடுகளும் அங்கே கிடைத்த நாகப்பட்டின புத்தர் செப்புத்திருமேனிகளும் உணர்த்துகின்றன.

ஆக, தொடர்ந்து சோழ மன்னர்கள் பல்வேறு காலகட்டத்திலும் பௌத்தத்திற்கு ஆதரவு நல்கியிருக்கின்றனர். இது பல்வேறு சமயங்களுடனும் அவர்களுக்கு இருந்த நல்லிணக்கத்தின் தொடர்ச்சியே ஆகும்.

இன்றிலிருந்து அன்றைக்கு

மண்ணிலிருந்து புத்தர் சிலைகள் மீட்டெடுக்கப்பட்ட பல ஊர்களுக்கும் நான் சென்றிருக்கிறேன். பல இடங்களில் புத்தர் சிலைகளை வழிபாட்டுக்கு அவர்கள் கொண்டுவந்துள்ளனர். புத்தருக்குத் தங்களுக்குப் பிடித்தமான பெயர்களையும் அவர்கள் சூட்டியுள்ளனர். புத்தர் என்ற பெயரைத் தவிர அம்மணசாமி, சமணர், செட்டியார், ராஜகுமாரன், சிவனார், மழை வரவழைக்கும் சாமி, நாட்டுக்கோட்டை செட்டியார், சாம்பான், ரிஷி, பழுப்பர் என்று பலவாறான பெயர்களிலும் அழைக்கின்றனர். புத்தர் சிலை உள்ள ஊர் முழுமையான ஊர், புத்தர் நல்லதைத்தான் செய்வார், மழையைக் கொணர்வார், நல்ல விளைச்சலைத் தருவார், புத்தர் சிலை இருக்கும் இடத்தில் கெட்டவை நெருங்காது, புத்தரை வணங்கினால் நினைத்த காரியம் கைகூடும், விரைவில் திருமணம் நடக்கும் என்று பலவாறாக மக்கள் நம்புகின்றனர்.

ஆக, சாமானிய மக்களிடம் இங்கே எப்போதும் ஒரு நல்லிணக்கம் இருக்கிறது; அந்த நல்லிணக்கத்துக்கு நெடிய வேரும் இருக்கிறது!






நூல் : சோழர்கள் இன்று
தொகுப்பாசிரியர் : சமஸ் (அருஞ்சொல் ஆசிரியர் குழு எண்: 63801 53325)
பதிப்பகம்: தினமலர்
பதிப்பாண்டு: மே 2023 
விலை : ரூ.500
நூல் தேவைக்கு : 75500 09565 எண்ணுக்கு ஜிபே செய்து, வாட்ஸப் வழி முகவரி அனுப்பினால், கூரியர் வழி நூலை அனுப்புவர்.

Comments

  1. அழித்நவர்கள் அழிந்தால், நாடு நலம் பெறும்...

    ReplyDelete
  2. அருமையாக சுருக்கமாக சொல்லி உள்ளீர்கள்.

    ReplyDelete

Post a Comment