ஒப்பீட்டு நோக்கில் பௌத்தமும் தமிழும் (முதற் பகுதி) : முனைவர் க. ஜெயபாலன்

 வாழ்த்துரை

முனைவர் க. ஜெயபாலன் எழுதியுள்ள ஒப்பீட்டு நோக்கில் பௌத்தமும் தமிழும் (முதற் பகுதி) என்னும் நூல், தமிழ்ப் பண்பாடு மற்றும் பௌத்தப் பண்பாடு என்ற அடிப்படையில் கலை, இலக்கியம், மொழி, பண்பாடு, தத்துவம், சமயம், சிற்பவியல், கட்டடவியல், கல்வெட்டுகள், மருத்துவம், மொழிபெயர்ப்பு போன்ற தலைப்புகளில் மட்டுமன்றி ஊர்ப்பெயராய்வு, திராவிடம், வழிபாட்டு நெறிகள், ஞான மார்க்கம், பக்தி மார்க்கம், தேர்ந்தெடுக்கப்பட்ட பௌத்தம் தொடர்பான ஆய்வுகள் மற்றும் ஆளுமைகள், பண்டைக்கால அரசியல் மற்றும் வாழ்வியல், அயலக இலக்கியம், அயலகப்படைப்புகள், இவையனைத்தும் பல்வேறு காலகட்டங்களில் உண்டான தாக்கங்கள் என்ற பல்வேறு தளங்களில் ஒப்புநோக்கு நிலையிலும், கூர்ந்து ஆராயும் நிலையிலும், ஒன்றுக்கும் பிறிதொன்றுக்குமான தொடர்பினை இயைபுபடுத்தியும் வேறுபடுத்தியும் காட்டும் நிலையிலும் 100 தலைப்புகளைக் கொண்டுள்ளது.
மொழி என்ற நிலையில் தமிழும், சமயம் என்ற நிலையில் பௌத்தமும் ஆயிரக்கணக்கான ஆண்டு வரலாற்றைத் தம்முள் கொண்டுள்ளன. பல மாறுபட்ட பொருண்மைகளை ஆழ்ந்து நோக்கும் ஆசிரியர் இரு பெரிய தலைப்புகளில் மிக முக்கியமானவற்றையத் தெரிவு செய்து கட்டுரைகளாக உருவாக்கி சமுதாயத்திற்கு பயன்படும் வகையிலும், அனைவருக்கும் சென்று சேர வேண்டும் என்ற நன்னோக்கிலும் மிக எளிய தமிழில் வழங்கியுள்ளார். மூத்த அறிஞர்கள் தொடங்கி வளர்ந்து வருகின்ற ஆய்வாளர்களின் எழுத்துக்களை மிகவும் நுணுக்கமாக ஆராய்ந்துள்ளதைப் பார்க்கும்போது ஆசிரியரின் பரந்துபட்ட வாசிப்புத்திறனை உணர முடிகிறது. முகநூலில் தொடராக வெளியானபோது இவற்றைப் பார்த்து வியந்தும் மலைத்தும் போனேன். அவற்றிலிருந்து தெரிவு செய்த கட்டுரைகளைத் தொகுத்துத் தந்துள்ள நூலாசிரியரின் முயற்சி போற்றத்தக்கதாகும். இந்நூலில் குறிப்பிடத்தக்க செய்திகளில் சிலவற்றைக் காண்போம்.

“பௌத்த வாழ்க்கை நெறி என்பதும் தமிழ் வாழ்க்கை நெறி என்பதும் இரண்டு விதமான வாழ்க்கை நெறிகள். பல்வேறு ஒற்றுமைகளைக் கொண்ட நெறிகள் என்று கூறலாம். அந்த இரண்டு விதமான வாழ்க்கை நெறிகளும் இந்தியாவிற்கும் உலகிற்கும் பல கொடைகளைத் தந்துள்ளன.” (கட்டுரை.1)

“……இந்தியத் துணைக்கண்டத்தில் இரு பெரும் அறிவு மரபுகளாக சாக்கிய பௌத்த மரபும் தமிழ் வள்ளுவ அறிவு மரபும் தொடர்ந்து எழுந்து நின்று கொண்டிருக்கின்றன.” (க.3)

“பஞ்சதந்திரக்கதைகள், பட்டி விக்ரமாதித்தன் கதைகள், அராபிய கதைகள் என்று இன்னும் பல்வேறு கதை மரபுகள் உலகம் முழுவதும் இருந்தாலும் குழந்தைகளுக்கு புத்த ஜாதகக் கதைகள் ஆழமான பொது அறிவையும் அன்பையும் கருணையையும் இளம் வயதிலிருந்தே பயிற்றுவிக்கவும் உருவாக்கப்பட்ட கதை வடிவங்களாகும்.” (க.8)

“தமிழ் மரபும் பௌத்த மரபும்…பிறப்பு அடிப்படையிலான பேதக் கோட்பாடுகளைக் கடந்து நிற்கும் இரு பெரும் மரபுகள் ஆகும். இம்மரபுகள் நாகர் மரபு என்னும் ஒரு பெரும் பாரம்பரியத்தில் இருந்து எழுந்த மத அடையாளமாக பௌத்தமும் தென்னிந்தியாவிலிருந்து மொழி அடையாளமாக எழுந்து நின்ற பெரும் மரபாக தமிழும் விளங்குவதை எளிதில் உணரமுடியும்.” (க.9)

“பௌத்தத்தின் 10 வகை நிறைவுடைமைகளில் முதல் நிலையாகக் கருதப்படுவது தானமாகும்….விருந்தினர் காத்திருக்க சாவா மருந்தெனினும் எடுத்துக்கொள்ள மாட்டார்கள் தமிழர்கள் என்பது தமிழ் வேதம், தமிழ் மறை காட்டுகின்ற உன்னதப் பண்பாடாகும். ” (க.10)

“பயணம் என்பதற்கு மட்டுமல்ல இயங்குதல் இயக்கம் என்று சொல்லுகின்ற எல்லாத்துக்கும் அடிப்படை சுற்றுதல் என்பதாகும்....இதனால்தான் புத்த பகவன் தனது வாழ்க்கையில் ஆற்றிய முதல் உரை அரசு சக்கரத்தைச் சுற்றுதல் (தம்மச் சக்க பவத்தன சுத்தா) என்று அழைக்கப்படுகிறது....அதனால்தான் சக்கரம் மாபெரும் ஆயுதமாகவும்கூட இந்திய புராண மரபில் பார்க்கிறோம்.” (க.12)

“மொழியை இலக்கியத்தை வளர்க்கின்ற ஒரு மரபாக தமிழகத்தில் உருவான பாராட்டத்தக்க, போற்றத்தக்க ஒரு மரபுதான் சங்கப்புலவர் மரபு…..இதே வகையில் அறக்கருத்துக்களை உலகெங்கும் கொண்டு செல்லவும் எடுத்துக்காட்டான ஒரு வாழ்க்கையை வாழ்ந்து மக்களுக்கு நல்வழிப்படுத்தவும் ஒரு அமைப்பினை புத்தர் கண்டார். அதுதான் சங்கம் என்பது.” (க.16)

“பௌர்ணமி வழிபாடு முழுமையின் அடையாளமாய் பௌத்தத்திலும் தமிழ் மரபிலும் கொண்டாடப்படுகின்றது.” (க.18)

“பௌத்த ஜாதகக்கதைகளில் ஏராளமான கடற்பயணங்களும் பல்வேறு விரிந்த செய்திகளும் காணப்படுகின்றன. அதே வகையில் சிலப்பதிகாரம், மணிமேகலை உள்ளிட்ட காப்பியங்களிலும் மற்றும் சில காப்பியங்களிலும் இந்த நீட்சியைக் காணமுடிகிறது.” (க.25)

“மனிதன் என்பவன் தெய்வமாகலாம் என்பது தமிழ் மரபு, வள்ளுவ மரபு, அது அதுவே பௌத்த மரபு. இது உலகுக்குரிய உயர்ந்த மரபு என்றாலும் தமிழ் மரபு கண்ணகி, மணிமேகலை என்றும் இறையடியார்கள், ஏராளமான தொண்டர்கள் என்றும் பற்பல சான்றோர்களின் வரலாறுகளை இறைவன் நிலைக்கு மனிதர்களை உயர்த்தி வழிபட்ட உன்னத மரபு ஆகும்”. (க.36)

“சங்க இலக்கியத்தில் அகம் புறம் என்று காதலும் வீரமும் இன்னும் பல்வேறு விழுமியங்களும் பாடப்பட்டு வந்தன. பின்னர் அறம் அதிகமாக வலியுறுத்தப்பட்டது. அந்தத் தொகுப்பையே அற இலக்கியங்கள் என்கிறோம். இதே நிலைதான் பௌத்த ஜைன இலக்கியங்களிலும் (ஐம்பெரும் ஐஞ்சிறும் காப்பியங்களிலும்) இடம் பெற்றன.” (க.63)

1993இல் பௌத்தம் தொடர்பான ஆய்வில் நான் ஈடுபட ஆரம்பித்தபோது சில அறிஞர்கள் என்னிடம் பலரும் தொடாத துறையை நான் தெரிவு செய்ததாகக் கூறினர். அப்போது பௌத்தம் தொடர்பாக அரிதான ஆய்வுகள் இருந்தன. இந்த 30 ஆண்டு கால இடைவெளியில் என்னால் அதிக முன்னேற்றத்தைக் காணமுடிகிறது. அதில் பௌத்தம் தொடர்பான ஆய்வுகளும், நூல்களும், மொழிபெயர்ப்புகளும் தற்போது முக்கியமான இடத்தைப் பெறுகின்றன. அதில் இந்நூலாசிரியரின் பங்களிப்பு முக்கியமான இடத்தைப் பெறுகிறது. இந்நூலாசிரியர் ஆயிரம் தலை வாங்கிய அபூர்வ சிந்தாமணி திரைப்படத்திலிருந்து மேற்கோளைச் சுட்டுகிறார். அதே சமயத்தில் தற்காலத்தில் பௌத்தம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வருகின்ற கட்டுரைகள், நூல்கள், கள ஆய்வுகளைப் பற்றி நூலில் விவாதிக்கிறார். பௌத்தமும் தமிழும் என்ற தலைப்பில் அவர் ஆற்றிய உரை தந்த ஊக்கமே முகநூலில் தொடராகப் பரிணமித்து, தற்போது நூல் வடிவம் பெற்றுள்ளது என்பதை நோக்கும்போது நூலாசிரியர் இப்பொருண்மையில் கொண்டுள்ள ஈடுபாட்டையும், தன்னம்பிக்கையையும் உணரமுடிகிறது. மாறுபட்ட நிலையில் தலைப்புகள் அமைந்துள்ளபோதிலும் தேவைப்படும் இடங்களில் உரிய மேற்கோள்களைத் தந்து, தன் கருத்தை மிகவும் தெளிவாக முன்வைக்கிறார். சமூக ஊடகத்தை முறையாகப் பயன்படுத்தி பிறருக்கு முன்னுதாரணமாகத் திகழ்ந்து பௌத்தம் தொடர்பான ஆய்வில் சிறந்த முறையில் தடம் பதித்துள்ளார். இந்த ஆரம்பமானது தொடரவும், அடுத்தடுத்த பகுதிகளை நூலாசிரியர் தொடர்ந்து வெளியிடவும் மனம் நிறைந்த வாழ்த்துகள்.
நூல்: ஒப்பீட்டு நோக்கில் பௌத்தமும் தமிழும் (முதற் பகுதி)
ஆசிரியர் : முனைவர் க.ஜெயபாலன் (அலைபேசி 90030 56091)
பதிப்பகம் : அறம் பதிப்பகம், 3/582, முல்லைத்தெரு, கஸ்தூரிபாய் நகர், TNHB எதிரில், முள்ளிப்பட்டு கிராமம் மற்றும் அஞ்சல், ஆரணி வட்டம், திருவண்ணாமலை மாவட்டம் 632 316 (அலைபேசி 91507 24997, மின்னஞ்சல் arampublication50@gmail.com)
பதிப்பாண்டு : ஜனவரி 2022
விலை : ரூ.420

(நூலில் வெளியான என்னுடைய வாழ்த்துரை)

Comments

  1. தங்களது வாழ்த்துரை நூலுக்கு மேலும் அழகூட்டுகிறது.
    நூலாசிரியருக்கு வாழ்த்துகள்.

    ReplyDelete
  2. வாழ்த்துரை அருமை ஐயா...

    ReplyDelete

Post a Comment