பௌத்த சுவட்டைத் தேடி : வலங்கைமான்புத்தூர்

அண்மையில் மேற்கொண்ட களப்பயணத்தின்போது அரியலூர் மாவட்டம் கங்கைகொண்டசோழபுரத்திலுள்ள இராஜேந்திரசோழன் அகழ்வைப்பகம் சென்றபோது, முந்தைய களப்பணிகளின்போது கண்ட அங்கிருந்த புத்தர் சிலைகளைக் காணச் சென்றேன்.

அங்குள்ள காட்சிப்பேழையில் உள்ள புத்தர் வலங்கைமான்புத்தூரைச் சேர்ந்ததா? கங்கைகொண்டசோழபுரத்தைச் சேர்ந்ததா என்பதைத் தெளிவு செய்யவே இப்பதிவு. 
   
வலங்கைமான்புத்தூர் புத்தர்
அகழ்வைப்பகத்தில் மூன்று புத்தர் சிற்பங்கள் உள்ளன. அவற்றில்  காட்சிப்பேழையில் இருந்த புத்தர் வலங்கைமான்புத்தூரைச் சேர்ந்தது என்ற குறிப்போடு இருந்தது. அதனடிப்படையில் ஆய்வேட்டில், உரிய நூல் மேற்கோளோடு கீழ்க்கண்டவாறு பதிந்தேன்:
"புத்தர் : தஞ்சை மாவட்டம் வலங்கைமான்புத்தூரிலிருந்து சேகரிக்கப்பட்டது. பத்மாசனத்தில் தியான முத்திரையில் காணப்படுகிறது. கி.பி.10ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது. பண்டைய நாளில் வலங்கைமான் பகுதியில் புத்தர் கோயில் ஒன்று இருந்ததையும், அச்சமயம் பரவி நின்றதையும் இச்சிற்பம் நமக்கு உணர்த்துகிறது. இதன் உயரம் 27 செமீ அகலம்15 செமீ (இராசேந்திர சோழன் அகழ்வைப்பகம், ஆசிரியர்கள் மா.சந்திரமூர்த்தி, கி.ஸ்ரீதரன், கா.நெடுஞ்செழியன், பதிப்பாசிரியர் நடன.காசிநாதன், தமிழ்நாடு அரசு தொல்பொருள் ஆய்வுத்துறை, சென்னை, 1993, பக்கம் 16)"

கங்கைகொண்ட சோழபுரம் புத்தர்
புதுச்சேரி பிரெஞ்சு ஆய்வு நிறுவனம் (French Institute of Pondicherry) வைத்துள்ள ஆவணத்தொகுப்பில் இந்த புத்தர் படத்திற்குக் கீழே கங்கைகொண்ட சோழபுரம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

1993இல் வெளிவந்த நூலில் வலங்கைமான்புத்தூரைச் சேர்ந்தது என்றும், புதுச்சேரி ஆய்வு நிறுவனத் தொகுப்பில் கங்கைகொண்ட சோழபுரம் என்றும், காட்சிப்பேழையில் கங்கைகொண்டசோழபுரம் என்றும் குறிப்பிட்டுள்ள நிலையில் இந்த புத்தர் சிற்பம் வலங்கைமான்புத்தூரைச் சேர்ந்ததா கங்கைகொண்டசோழபுரத்தைச் சேர்ந்ததா என்பதைக் கேட்டு  அகழ்வைப்பகத்திற்கு மேற்கண்ட விவரங்களைத் தெரிவித்து கடிதம் எழுதினேன்.  


அகழ்வைப்பகக்காப்பாளர் இச்சிற்பம் வலங்கைமான்புத்தூரைச் சேர்ந்தது என்று தன்னுடைய 21.9.2019 நாளிட்ட கடிதத்தில் தெரிவித்திருந்தார்.  1990களின் இறுதியில் வலங்கைமான்புத்தூர் என்ற குறிப்போடும், அண்மையில் கங்கைகொண்டசோழபுரம் என்ற குறிப்போடும் இருந்த இந்த புத்தர் வலங்கைமான்புத்தூரைச் சேர்ந்தது  என்று தெரிவித்த அவருக்கு நன்றியைத் தெரிவித்தேன். 

Comments

  1. முனைவர் அவர்களின் பணி மேலும் சிறப்புற வாழ்த்துகள்.

    ReplyDelete
  2. அருமையான தகவல்கள். உங்கள் தொண்டு சிறக்கட்டும். இன்னமும் கங்கை கொண்ட சோழபுரம் கோயிலே பார்க்க முடியலை. புத்தர் யாரைச் சேர்ந்தவர் என்பதைக் கண்டு பிடித்ததுக்கும் பாராட்டுகள்.

    ReplyDelete
  3. வியக்க வைக்கும் பணி.   பாராட்டுகள்.

    ReplyDelete
  4. உங்களின் பணிகளை வெளிநாட்டு இதழ்களுக்கு தெரியப்படுத்துகின்றீர்களா?

    ReplyDelete
    Replies
    1. தனியாகத் தெரியப்படுத்துவதில்லை. இணையம் மூலமாக என் ஆய்வுகள் அவ்வப்போது வாசிக்கப்பட்டு, பல வெளிநாட்டவர் நூல்களில் மேற்கோளாக சுட்டப்பட்டுள்ளன.

      Delete
  5. மிகவும் அருமையான தொண்டு . மென்மேலும் சிறக்க இறைவனை வேண்டுகிறேன் ஐயா

    ReplyDelete

Post a Comment