புத்த தம்மம் அடிப்படைக்கொள்கைகள்

கடந்த பதிவில் களப்பணி சென்றுவந்த நிலையில் தற்போது பௌத்தக் கொள்கைகள் தொடர்பான ஒரு நூலைப் பார்ப்போம். ஆய்வில் சேர்ந்த காலகட்டத்தில் (1993) நான் படித்த நூல்களில் ஒன்று பௌத்த அடிப்படைக் கொள்கைகளைக் கொண்ட புத்த தம்மம் அடிப்படைக்கொள்கைகள் என்னும் நூல். பௌத்தக் கொள்கைகளை மிகவும் எளிதாக இந்நூல் முன்வைக்கிறது. புத்தரும் பவுத்தமும், புத்தரின் வாழ்க்கை, தம்மம், சில அடிப்படை போதனைகள், நான்கு உன்னத வாய்மைகள், உன்னத எண்வழிப்பாதை, மனித ஆளுமையின் பகுப்பாய்வு, இருப்பின் உண்மை நிலை, மறுபிறப்பு, தியானம், நிப்பாணம், அறவோர், சங்கம் போன்றவை உள்ளிட்ட 21 தலைப்புகளைக் கொண்டமைந்துள்ளது.  இந்நூலில் காணப்படும் சில கருத்துகளைக் காண்போம்.    

புத்தரின் போதனைகள் கற்கத்தக்கன. பயிலத்தக்கன. உணரத்தக்கன. நடைமுறைப்படுத்துதலும், உணர்தலும் வலியுறுத்தப்படுகின்றன. ஏனெனில் வை உடனுக்குடன் பயனளிக்கின்றன. (ப.8)

ஒருவர் ஒரு கயிற்கைக் கண்டு பாம்பென எண்ணிக்கொண்டால் அங்கே அச்சம், சலனம், கவலை, துன்பம் அனைத்தும் தோன்றுகிறது. இருந்தாலும், அது உண்மையில் ஒரு துண்டுக்கயிறே என்று அவர் அறியமுற்படும்போது அச்சம், சலனம், கவலை, துன்பம் ஆகிய எதுவும் இல்லை. மாறாக மகிழ்ச்சியும் நம்பிக்கையுமே நிலவும்.  (ப.16)

பிரபஞ்சத்தில், மாறாததும், நிலையானதும் எப்போதும் ஒன்றாகவே இருப்பதுமான ஏதுமே இல்லையெனப் பௌத்தம் போதிக்கிறது. (ப.20)

நம் மனங்கள் அவாவினால், அகந்தையால் தவறான கருத்துநோக்குகளால் மாசுற்றிருப்பதன் காரணமாக நாம் 'நான்''எனது' என்ற வகையில் சிந்திக்கிறோம். ஒருவர் 'இது என்னுடையது' என எண்ணும்போது அது அவாவினால் உந்தப்பட்டதாயுள்ளது. ஒருவர் 'இது நான்' என எண்ணும்போது அது அகந்தையால் உந்தப்பட்டதாயுள்ளது. ஒருவர் 'இது நானே' என எண்ணும்போது அது தவறான கருத்து நோக்கால் உந்தப்பட்டதாயுள்ளது. (ப.24)

தன்னுடைய மதத்தைப் பெருமைப்படுத்துவதற்காக யாரேனும் பிறர் மதத்தை இழிவுபடுத்தினால், அதன் காரணமாக அவன் தன் மதத்தையே இழிவுபடுத்திக் கொள்கின்றவனாவான். இவ்வாறு செய்வது மேல் நோக்கி எச்சில் உமிழ்பவன் தன் முகத்தையே கறைபடுத்திக்கொள்வது போலாகும். (ப.26)

மனம் ஒன்றைவிட்டு மற்றொன்றுக்குத் தாவும் தன்மை உடையது. பேராசை, பொறாமை, வெறுப்பு, ஏமாற்றம் முதலிய குறைபாடான குணங்களால் எளிதில் கறை படியக்கூடியது. மனிதர்களைப் பரபரப்புக்கும் கவலைக்கும் உள்ளாக்குவது. மனத்தை தியானத்தால் அமைதிப்படுத்தவும், கட்டுப்படுத்தவும் முடியும். (46)

நிப்பாணம் என்பது உன்னதமான இன்ப நிலையாகும். துன்பமிலா வாழ்நிலையாகும். பௌத்தர்களின் இறுதி இலக்கு நிப்பாணமே. நிப்பாணம் இவ்வாழ்விலேயே அடையப்படுவது, இறந்தபின் அடையப்படுவதல்ல. எடுத்துக்காட்டாக புத்தர் தமது 35ஆவது வயதில் நிப்பாணம் எய்தி 80ஆவது வயது வரை உயிர் வாழ்ந்தார். (ப.49)

பசித்திருக்கும் மனிதனிடம் போதனை செய்வதில் பொருளில்லை என்று காட்டினார் புத்தர். அலவி என்னுமிடத்தில் ஒரு குறிப்பிட்ட ஏழை மனிதர் மிகுந்த பசியால் வாடியபோதும், தம்ம போதனையைச் செவிமடுக்க வந்தார். புத்தர், அவருக்கு உணவளிக்கக் கூறி, அவர் பசி தணிந்தபின்னரே அவர்க்கு தம்மத்தைப் போதித்தார். (69).

பௌத்தக்கொள்கைகள் எக்காலத்திற்கும் பொருந்தி வருவன. நம்மை நல்வழிப்படுத்துவன. அக்கொள்கைகளைக் கொண்டு அமைந்துள்ள இந்நூலை வாசிப்போம், வாருங்கள்.

நூல் : புத்த தம்மம் அடிப்படைக்கொள்கைகள் 
ஆசிரியர் : எஸ்.ஏ.எதிரிவீர
தமிழாக்கம் : டாக்டர் வீ.சித்தார்த்தா (பெரியார்தாசன்)
வெளியிடுபவர் : பிக்கு யு ரதனபால, மகாபோதி சொஸைட்டி, 17, கென்னட் லேன், எழும்பூர், சென்னை 600 008
Reprinted and donated by: The Corporate Body of the Buddha Educational Foundation, Taipei Taiwan, ROC, 1996


Comments

  1. பிறர் மதத்தை இழிவுபடுத்துபவன் தன்மதத்தை, தன்யே இழிபடுத்துபவன்,,,

    இக்கொள்கைகளை மனிதன் கடைபிடித்தால் நல்லது நடக்கும். நாம் தான் மதத்தின் பெயரால் சுயலம் தேடும் மனிதன் ஆனோமே,,

    அருமையான பகிர்வு ஐயா, தொடருங்கள்

    ReplyDelete
  2. பிறமதங்களை விமர்சிப்பவன் எச்சிலை தன்மீதே பொழிகின்றான் என்ற அருமையான எடுத்துக்காட்டு அனைவரும் உணரவேண்டிய உண்மை.
    அற்புதமான நுலைக்குறித்து தந்த முனைவருக்கு நன்றி.
    த.ம. 2

    ReplyDelete
  3. சிறப்பான கருத்துகளை புத்தகத்திலிருந்து எடுத்துத் தந்தமைக்கு நன்றி.

    அருமையான புத்தக அறிமுகத்திற்கு நன்றி.

    ReplyDelete
  4. அரிய கருத்துக்களை தங்களால் அறிய முடிந்தது. நன்றி !
    த ம 4

    ReplyDelete
  5. அருமையான கருத்துகள் நிறைந்த பதிவு
    தொடருங்கள்
    தொடருகிறோம்

    ReplyDelete
  6. நல்லதொரு நூல் அறிமுகம். வாய்ப்பு கிடைக்கும்போது நூல் முழுவதையும் படிக்க வேண்டும்.

    ReplyDelete
  7. நம்முன்னோர்கள் எதையும் மதங்களாக பார்க்கவில்லை. அரசர்கள் வாழ்ந்த காலத்தில் சமமாகதான் பாவித்தார்கள் அதற்கு உதாரணமாக தஞ்சை மியூசியம், புதுகோட்டை மியூசியம், சென்னை, திருநெல்வேலி, பூம்புகார் போன்ற இடங்களில் புத்த சிலைகள் அதிகம் காணப்படுகிறது. ஆனால் நாம்தான் சிலவற்றை ஏற்றுக்கொள்ள மறுக்கிறோம். பதிவு அருமை.

    ReplyDelete
  8. //பிறர் மதத்தை இழிவுபடுத்துபவன் தன் மதத்தை இழிவுபடுத்துகிறான்// நிறைய இடங்களில் இத்தத்துவம் பொருந்தும்.

    ReplyDelete

Post a Comment