பௌத்த சுவட்டைத் தேடி : நாட்டாணி

அய்யம்பேட்டை அருகில் மணலூரில்  கண்டுபிடிக்கப்பட்ட புத்தர் சிலையைப் பற்றி  எழுதியிருந்ததைக் கண்ட தஞ்சாவூர் அருகேயுள்ள நாட்டாணி கிராமத்தைச் சேர்ந்த  விஜயகுமார் என்பவர் சரஸ்வதி மகால் நூலகத் தமிழ்ப்பண்டிதர் மணி. மாறனிடம் தன் ஊரில் ஒரு புத்தர் சிலை இருப்பதாகக் கூறியிருந்தார். அச்சிலையைக் காண்பதற்கான நாளை எதிர்பார்த்தோம்.

பிப்ரவரி 14, 2015 (சனிக்கிழமை) காலை 10.00
தஞ்சாவூரிலிருந்து நானும் மணி மாறனும் நாட்டாணி சென்றோம். செல்லும்போதே மனதுள் ஒரு எண்ணம். சுமார் கால் நூற்றாண்டாக மேற்கொள்ளப்பட்டுவருகின்ற ஆய்வில் இவ்வாறாக ஒரு புத்தர் சிலையைப் பற்றிய நாளிதழ் செய்தி வந்த ஓரிரு நாள்களிலேயே மற்றொரு சிலையைப் பார்க்கச் செலவது இதுவே முதல் முறை. நாட்டாணியை அடைந்ததும் நண்பர் விஜயகுமாரைத் தொலைபேசியில் மணி.மாறன் தொடர்புகொண்டார். அவர் சிறிது நேரத்தில் வருவதாகக் கூறினார். அவருக்காகக் காத்திருக்கும் நேரத்தில் நாட்டாணியைச் சேர்ந்த நண்பர்கள் வந்தனர். 


அவர்களுடன் சிலை இருக்கும் இடத்தினைப் பற்றி விசாரித்தோம். பேசிக்கொண்டே, சிலையைத் தேட ஆரம்பித்தோம். நாங்கள் செல்லும் பாதை முழுக்க முழுக்க முட்கள் அடர்ந்து காடாகக் காட்சியளித்தது. அடர்த்தியாக முட்செடிகள் காணப்பட்டன. செடிகள் என்று கூறமுடியாது, மரங்கள் என்றே கூறலாம். அந்த அளவு எங்கு பார்த்தாலும் முள் மரங்கள். பாதையைக் காண முடியவில்லை. உடன் வந்த நண்பர்கள் உதவினர். ஆங்காங்கு இருந்த முள்களை எடுத்துத் தூர எறிந்துவிட்டு பாதை அமைத்துத் தந்து உதவினர். அவர்கள் சென்ற தடத்திலேயே நாங்களும் சென்றோம்.  உயரமான மரங்களாக இருந்தாலும், செடிகளும் அடர்த்தியாக இருந்ததால் குனிந்து பார்த்தோ, அமர்ந்துகொண்டு பார்த்தோ சிலையைக் கண்டுபிடிக்க முடியவில்லை. உள்ளூர்க்காரர்கள் இருந்ததால் எங்களுக்கு உதவியாக இருந்தது. அவர்கள் மட்டும் இல்லாமல் போயிருந்தால் நாங்கள் வெளியே வர மிகவும் சிரமப்பட்டுப் போயிருப்போம். இவ்வாறாக களப்பணியின்போது தனியாக நான் அதிகம் சிரமப்பட்டதுண்டு. ஆனால் இப்போதுதான் இவ்வாறான ஒரு முள் காட்டில் அலைந்த அனுபவம் ஏற்பட்டது. எங்களில் பலருக்கு காலிலும், உடம்பிலும் முள் குத்தக் குத்த அவ்வப்போது அதனை எடுத்து எறிந்துவிட்டுத் தொடர்ந்தோம். நாங்கள் அணிந்திருந்த செருப்புகள் முள் செருப்புகளாக மாறிவிட்டன. போட்டுக்கொண்டு நடக்கவும் சிரமம். கழற்றி கையில் வைத்தால் அதைவிட சிரமம். அனைத்தையும் எதிர்கொண்டு தேடலைத் தொடர்ந்தோம்.







ஒரு மணி நேரமாக எந்தத் தடயமும் கிடைக்கவில்லை. உச்சி வெயில் மண்டையைப் பிளந்தது. கையில் கொண்டுவந்திருந்த குடிநீரைக் குடித்துக்கொண்டோம். பின்னர் ஒவ்வொருவரும் ஒவ்வொரு பக்கமாகத் தேட ஆரம்பித்தோம். உயரமான கள்ளிச்செடி ஒன்றை அடையாளமாக வைத்துக்கொண்டு அவர்கள் தேடினர். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பார்த்ததாகவும், செடியை மறந்துவிட்டதாகவும் கூறிக்கொண்டனர். பல இடங்களில் ஒரேமாதிரியான மரங்களாக இருந்ததால் அவர்கள் வைத்த அடையாளம் தெரியாமல் சிரமப்படுவதை உணரமுடிந்தது. அவர்கள் சென்ற தடத்திலேயே நாங்களும் சென்றோம்.  எங்களுக்கோ தவறான இடத்திற்கு வந்துவிட்டோமோ என்ற எண்ணம். அவர்களுக்கோ, எங்களை அழைத்துவந்து சிலையைப் பார்க்காமல் போனால் என்ன செய்வது என்ற எண்ணம். எது எப்படியாக இருந்தாலும் பரவாயில்லை என்று கூறிக்கொண்டே தொடர்ந்து தேடினோம். இருந்தால் பார்க்கலாம், இல்லாவிட்டால் சிலை இல்லை என்பதை உறுதி செய்துகொள்ள இக்களப்பணி உதவும் என்பது என் நம்பிக்கை. 



நண்பகல் 12.00
எங்களது தேடல் வீண் போகவில்லை. சுமார் இரண்டு மணி நேரத் தேடலுக்கு எங்கள் குழுவினைச் சேர்ந்த ஒருவர் சிலையைப் பார்த்துவிட்டதாகக் கூறிக் குரல் எழுப்பினார். அவர் வந்த திசையை நோக்கி நாங்கள் அனைவரும் சென்றோம். இரண்டு மணி நேரத் தேடலுக்குப் பின் இதோ புத்தர் என்று அவர் அழைக்கவே அருகில் சென்றோம். சென்றதும் அது புத்தர் அல்ல சமணர் என்பது தெரியவந்தது.  நினைவு தெரிந்த நாளிலிருந்து புத்தர் என்றே கூறிவருவதாக அவர்கள் கூறினர். பின்னர் தெளிவாக இருக்கவேண்டும் என்பதற்காக. சிலையின்மீது நாங்கள் குடிக்க எடுத்துச் சென்ற குடிநீரைத் தெளித்து சுத்தம் செய்து, புகைப்படம் எடுத்தோம்.  




புத்தர் சிலை, சமணர் சிலை வேறுபாடு
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள புத்தர் சிலைகளில் பெரும்பாலானவை அமர்ந்த நிலையில் தியான கோலத்தில் உள்ளன. நின்ற நிலையில் உள்ள சிலைகள் மிகவும் குறைவாகவே உள்ளன.  அமர்ந்த நிலையில் தியான கோலத்திலுள்ள புத்தர் சிலைகளில் உஷ்னிஷா எனப்படும் தீச்சுடருடன் கூடிய முடி அமைப்பு, சற்றே மூடிய கண்கள், அமைதி தவழும் முகம், நீண்டு வளர்ந்த காதுகள், மேலாடை, கையில் தர்மசக்கரக்குறி, நெற்றியில் திலகக்குறி போன்றவை காணப்படுகின்றன. இவற்றில் சில கூறுகள் சில சிலைகளில் விடுபட்டு இருப்பதைக் காணமுடியும். 
சமண தீர்த்தங்கரரைப் பொருத்தவரை முக்குடை, திகம்பரமேனி, இரு புறமும் யட்சர்கள் போன்ற பொதுமைக் கூறுகளைக் காணமுடியும்.   
நேரில் சிலைகளைப் பார்த்துவிட்டு புத்தரா சமணரா என்பதை உறுதி செய்வது நலம். ஏனென்றால் மிக நுண்ணிய வேறுபாடு நம்மை ஏமாற்றிவிட வாய்ப்புண்டு.    




பின்னர் அவர்களிடம் சிலையின் முக்கியத்துவத்தை எடுத்துக்கூறினோம். சமண தீர்த்தங்கரர் சிலையைப் புத்தர் என்று கூறிவருவதை எடுத்துக் கூறினோம். பின்னர் அங்கிருந்து மன நிறைவுடன் கிளம்பினோம். திரும்பி வந்துகொண்டிருந்தபோது இடிபாடுற்ற சிவன் கோயில் இருந்த இடத்தில்  ஒரு கல் தலைகீழாகக் கிடந்தது. அதனைப் புரட்டிப் பார்த்தோம். அது ஒரு சண்டிகேஸ்வரர் சிற்பம். அதன் தலை உ்டைந்த நிலையில் இருந்தது. அதனையும் புகைப்படம் எடுத்தோம்.



 

 

 



புத்தர் சிலையைப் பார்க்க வந்து ஒரு சமணர்சிலையைக் கண்டுபிடித்தது மனதிற்கு நிறைவாக இருந்தது. உதவி செய்த நண்பர்களுக்கு நன்றி கூறிவிட்டு அங்கிருந்து கிளம்பினோம்.  வீட்டிற்கு வந்தபின்னர்தான் உடம்பில் பெரும்பாலான இடங்களில் முள் குத்திய பாதிப்பினை அறியமுடிந்தது. அடர்த்தியான ஓரிடத்தில் இவ்வாறான ஒரு சிலையைக் கண்டுபிடித்தது எனது ஆய்வில் ஒரு மறக்கமுடியாத அனுபவம்.

நன்றி
புத்தர் என்றவுடன் என்னை அழைத்துச் சென்ற நண்பர் திரு மணி. மாறன், சிலை இருந்ததைத் தெரிவித்த திரு விஜயகுமார், நாட்டாணியைச் சேர்ந்த திரு இளங்கோவன், திரு பாண்டியன், திரு சின்னையன் ஆகியோருக்கு என் மனமார்ந்த நன்றி.

செய்தியினை வெளியிட்ட கீழ்க்கண்ட நாளிதழ்கள் உள்ளிட்ட அனைத்து இதழ்களுக்கும் நன்றி 
1.நாட்டாணியில் மகாவீரர் சிலை கண்டெடுப்பு, தினமணி, 14.3.2015
2..தஞ்சை வல்லம் அருகேயுள்ள நாட்டாணியில் மகாவீரர் சிலை கண்டெடுப்பு, தி இந்து, 14.3.2015
3.தஞ்சை அருகே கி.பி.9ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த மகாவீரர் சிலை கண்டெடுப்பு, தினகரன், 14.3.2015
4.தஞ்சை அருகே மகாவீரர் சிலை கண்டெடுப்பு, தினத்தந்தி, 14.3.2015
5.வல்லம் அருகே 9ஆம் நூற்றாண்டு மகாவீரர் சிலை கண்டெடுப்பு, தினமலர், 14.3.2015
6.9th century Mahavir statue found in Thanjai, The New Indian Express, 14.3.2015
7.மகாவீரர் சிலை கண்டுபிடிப்பு, சோழ நாட்டில் சமணத்துறவிகள் வாழ்ந்தனர், ஆய்வாளர்கள் தகவல், தமிழ் முரசு, 14.3.2015
8.தஞ்சை அருகே மகாவீரர் சிலை கண்டெடுப்பு, ஆய்வாளர்கள் தகவல், மாலை மலர், 14.3.2015
9.தஞ்சை அருகே நாட்டாணியில் மகாவீரர் சிலை கண்டெடுப்பு, காலைக்கதிர், 14.3.2015
10.Age old Mahavira statue found at Nattani, The Hindu, 15.3.2015


------------------------------------------------------------------------------------------------------------------------
During the field study with Mr Mani Maaran, Tamil Pandit of Sarasvathi Mahal Library a Jain Tirthankara statue was found in Nattani near Thanjavur, Tamil Nadu. This Jain is called as Buddha. 
------------------------------------------------------------------------------------------------------------------------

7.4.2015 அன்று மேம்படுத்தப்பட்டது.

Comments

  1. வணக்கம்
    ஐயா

    தாங்கள் அகழ்வு செய்யும் ஒவ்வொரு ஆதாரங்களும் வரலாற்று சுவடுகள்... இவைகள் பற்றிய புத்தம் வெளியிட்டால் இன்னும் சிறப்பாக இருக்கும் ஐயா தேடல் தொடரட்டும் ... பகிர்வுக்கு நன்றி த.ம1
    என்பக்கம் கவிதையாக வாருங்கள் அன்புடன்ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: ஜீவநதி இதழ்லே:
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  2. தங்களின் தேடுதல் ஆர்வத்திற்கு பற்பல பாராட்டுகள் ஐயா... உதவி செய்யும் அனைத்து தோழமைக்கும் நன்றிகள்... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  3. தேடல் எவ்வளவு கஷ்டம்..இல்லையா...அனைத்தையும் கடந்து முயன்று காண்பது பெரிய விஷயங்கள் ஐயா. தொடர்கிறேன். நன்றி. தம +1

    ReplyDelete
  4. தங்களின் அரும் பணிக்கும், தேடுதல் வேட்டைக்கும் எமது ராயல் சல்யூட் முனைவர் அவர்களே..... தங்களுக்கு உதவிய அனைத்து உள்ளங்களுக்கும் நன்றியும், பாராட்டுகளும்.
    தமிழ் மணம் 5

    ReplyDelete
  5. தமிழிற் கள ஆய்வுகளின் தேவை இன்னம் இருக்கிறது என்பதற்கும் அதற்கு எத்தகு முயற்சியும் அர்ப்பணிப்பும் வேண்டும் என்பதற்கும் தங்களின் இந்தப் பயணம் தமிழாய்வாளர்களுக்கொரு பாடம்.
    த ம 6
    தொடர்கிறேன் அய்யா!!!

    ReplyDelete
  6. புத்தரைத் தேடி சமணரைக் கண்டு, அவர் சமணர்தான் என ஊராருக்கு தெளிவுபடுத்தி பட்டாங்கை அழகுற வடித்திருக்கிறீர்கள். நன்றி1

    காணப்பட்ட சிலை புத்தர் சிலை அன்று; சமணர் சிலைதான் என்னும் முடிவிற்கு எவ்வாறு வந்தீர்கள் என்பதை விளக்க வேண்டுகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. தற்போது கட்டுரையில் புத்தர் சமணர் சிலை கூறுகள் தொடர்பான பத்தியை இணைத்துள்ளேன்.

      Delete
  7. அருமையான கட்டுரை. நேரில் உங்களோடு வந்த உணர்வை உங்கள் எழுத்துக்களும் புகைப்படங்களும் தந்தன.

    ReplyDelete
  8. முன்பே ஒரு முறை கேட்டதாக நினைவு. புத்தர் சிலைகளுக்கும் சமண தீர்த்தங்கரர் சிலைகளுக்கும் வேறுபாடுகள் குறித்த் உ விளக்கினால் பயனுள்ளதாக இருக்கும் பார்ப்பதற்கு ஒரே போல் இருக்கும் சிலைகளை எவ்வாறு அடையாளம் காண்கிறீர்கள். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. தற்போது கட்டுரையில் புத்தர் சமணர் சிலை கூறுகள் தொடர்பான பத்தியை இணைத்துள்ளேன்.

      Delete
  9. தங்களின் அகழ் ஆராயச்சி மூலம்தான் புத்தருக்கும் சமணருக்கும் உள்ள வித்தியாசமே தெரியவரும் அய்யா...

    ReplyDelete
  10. This comment has been removed by the author.

    ReplyDelete
  11. சமணர் என்பது ஒருவரைக் குறிக்கும் பெயர் போல் இல்லையே என்று கேட்டால் கோபித்துக் கொள்ள மாட்டீர்களே :)

    ReplyDelete
  12. உங்கள் தேடல் எங்கள் அனைவருக்கும் ஒரு நல்ல விஷயத்தினைத் தெரியப் படுத்தி இருக்கிறது.

    புத்தர்-சமணர் வித்தியாசங்கள் உங்கள் பதிவு மூலம் அறிந்தேன். படங்களும் நன்று.

    ReplyDelete
  13. இந்த வயதில் காடுகளுக்குள் ஆராய்ச்சிக்கு செல்லும் போது செருப்பு அணிந்து போவதைவிட பூட்ஸ் அணிந்து செல்லுவதுதான் பாதுகாப்பானது. உங்களது ஆய்வுக்கு எனது பாராட்டுக்கள். முடிந்தால் படங்களை பெரியதாக இடவும்.....

    ReplyDelete
  14. தங்களுக்கும் குழுவினருக்கும் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  15. பாராட்டுக்கள்

    ReplyDelete
  16. adventure & academic .. நல்ல combination ... வாழ்த்துகள்

    ReplyDelete
  17. முதலில் ஆய்வுக்கு மிகப் பெரிய பொக்கே! பாராட்டுகள், வாழ்த்துகள்!

    ஐயா ஒரு சிறிய சந்தேகம். தமிழகத்தில், பௌத்தம் பரவியதை விட சமணம் தானே இருந்தது இல்லையோ? சிலப்பதிகாரத்தில் பௌத்தம் பேசப்படுகின்றதுதான். என்றாலும் சமணர்களுக்கும், சைவர்களுக்கும் இடையே கருத்து வேறுபாடு வந்ததாக வரளாறு சொல்கின்றது இல்லையோ?

    நல்ல விவரணம் ஐயா! மறுமுறை இது போன்று செல்வதென்றால் கவனமாக உடையணிந்து செல்லுங்கள் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கொன்றோம் ஐயா!

    பகிர்வுக்கு மிக்க நன்றி!

    ReplyDelete
  18. தமிழகம் உள்ள காடுகளில் கருவாட்டு முள்கள் பெருகிவட்டது அய்யா...

    ReplyDelete
  19. தமிழகம் உள்ள காடுகளில் கருவாட்டு முள்கள் பெருகிவட்டது அய்யா...

    ReplyDelete
  20. மிக முக்கியமான வரலாற்று ஆவணப் பதிவு. எனது சிற்றறிவுக்கு எட்டிய வரை தமிழகத்தில் புத்த மதம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்றே நினைக்கிறேன். அதனால் புத்தரை தேடுவது கடினமான காரியமாகத்தான் இருக்கும். அதில் முழுமையாக தங்களை ஈடுபடுத்திக் கொண்டது மாபெரும் அர்ப்பணிப்பு.
    தவறாக கூறியிருந்தால் மன்னித்து பொறுத்தருளுங்கள் அய்யா!

    ReplyDelete
  21. வணக்கம் ஐயா..உங்கள் தேடலுக்குத் தலை வணங்குகிறேன். முள் காட்டில் வெயிலில் சிரமப்பட்டுத் தேடியிருக்கிறீர்கள்..சிறந்த வரலாற்றுப் பணிக்கு நன்றி ஐயா.

    ReplyDelete
  22. மிக அருமையான பதிவு அய்யா. தொடர்ந்து வாசிக்கிறேன்

    ReplyDelete
  23. தக்கது. தங்களைப் போன்றவர்களின் அறிய முயற்சிகளால்தான் ஒரு சில வாவது அறிய முடிகிறது. இந்த சிறப்புப் பணியில் முக்கிய இடம் உங்களுக்கு உண்டு

    ReplyDelete
  24. Mr D Dharan,thro' email: visitanand2007@gmail.com)
    Thanks a Lot for your Excellent infos sir.

    ReplyDelete
  25. Mr Kanaka Ajithadoss (thro: ajithadoss@gmail.com)
    அன்புடையீர், வணக்கம். அஹிம்சை நடை 47ல் தங்களை சந்தித்தது மிக்க மகிழ்ச்சியை இன்னும் தந்துகொண்டிருக்கிறது..
    தங்கள் மின்னஞ்சல்கட்கு தாமதமாக தொடர்புகொள்வதை பொறுத்தருள வேண்டுகிறேன். தங்களது பதிவுகள் சிறப்பானவை. நாட்டாணி மஹாவீரரை தாங்கள் சந்தித்த அனுபவத்தை மற்ற நண்பர்கள் அறிந்து மகிழ, ஆர்வம் கொள்ள, உணர்வு பெற முக்குடை இதழில் வெளியிட்டால் நல்லது என எண்ணுகிறேன் . சென்ற வாரம் அஹிம்சைநடை 48 க்காக முன் கள ஆய்வுக்கு வயலக்காவூர் ,கணி கிளுப்பை என்ற இடங்களுக்கு சென்றோம்; கணி கிலிப்பையில் அருமையான புத்தபிரான் திருவுருவ சிலையைக்கண்டோம் .அதன் பக்கத்தில் மஹாவீரர் . அதன் நிழற் படங்களை இணைத்துள்ளேன். மிக்க நன்றி,மிக்க அன்புடன்

    ReplyDelete

Post a Comment