Sunday, 1 February 2015

பௌத்த சுவட்டைத் தேடி : மணலூர்

சோழ நாட்டில் பௌத்தம் வலைப்பூவினைத் தொடங்கி ஐந்தாவது ஆண்டு தொடங்கும் இவ்வினிய வேளையில் அண்மையில் அய்யம்பேட்டை அருகில் மணலூரில் திரு மணி மாறன் அவர்களுடன் மேற்கொண்ட களப்பணியின்போது கண்டுபிடிக்கப்பட்ட புத்தர் சிலையைப் பற்றிய அனுபவத்தைப் பகிர்வதில் மகிழ்ச்சியடைகின்றேன். இச்செய்தியினை வெளியிட்ட அனைத்து பத்திரிக்கைகளுக்கும் நன்றி. 

ஜனவரி 10, 2015 (சனிக்கிழமை)
சரசுவதி மகால் தமிழ்ப்பண்டிதர் நண்பர் திரு மணி.மாறன் தொலைபேசியில் என்னிடம் அய்யம்பேட்டை அருகே ஒரு புத்தர் சிலை இருப்பதாக மணலூரைச் சேர்ந்த ஆசிரியர் திரு சேதுராமன் தெரிவித்ததாகக் கூறி அங்கு செல்வது தொடர்பாக என்னை அழைத்தார். உடனே செல்லலாம் என்றபோது அவரது நேரம் அறிந்து கேட்டுத் தெரிவிப்பதாகக் கூறினார். எனக்கு அது புத்தரா, சமணரா என ஒரு ஐயம் எழ ஆரம்பித்தது. ஏனெனில் பலர் இரு சிலைக்கும் வித்தியாசம் தெரியாமல் அவ்வாறு கூறிவிடுகின்றனர். உரிய நாளை எதிர்பார்த்துக்கொண்டிருந்தேன்.

ஜனவரி 17, 2015 (சனிக்கிழமை)
அவருடன் பல முறை தொடர்பு கொண்டு உரிய நாளை உறுதி செய்துகொண்டோம். அவருடன் புறப்பட்டேன். புறப்படுவதற்கு முன்பாக முன்பு அப்பகுதிகளில் நான் பார்த்த புத்தர் சிலைகளைப் பற்றிய குறிப்புகளை எடுத்துக்கொண்டேன்.  தஞ்சாவூரிலிருந்து அய்யம்பேட்டை சென்றோம். அங்கு விசாரித்தபோது குடமுருட்டி மற்றும் காவிரி ஆற்றினைக் கடந்து பின் கணபதி அக்ரகாரத்தை அடுத்து வரும் பாதையில் செல்லாம் என்று கூறினர். 

குடமுருட்டி ஆறு
காவிரி ஆறு

இரு பாலங்களையும் கடந்து பின்னர் விசாரித்துக்கொண்டே மணலூர் போய்ச்சேர்ந்தோம். அங்கு சேதுராமன் இல்லத்திற்குச் சென்றோம். அவர் எங்களை அன்போடு வரவேற்று தேநீர் தந்தார். சிலையைப் பற்றி அறிய ஆவலாக விசாரித்தபோது அவர், "என் தாத்தா தன் இளம் வயதிலேயே அச்சிலையைப் பார்த்ததாகக் கூறினார்".  எனக்கு உட்கார இருப்பு கொள்ளவில்லை. உடனே சிலையைப் பார்க்கவேண்டும் என்ற உணர்வு மேலிடவே, அவரிடம் அந்த சிலை இருக்கும் இடம் குறித்துக் கேட்டேன். அவர் அருகிலுள்ள தோப்பில் இருப்பதாகக் கூறினார். அங்கிருந்து மூவரும் கிளம்பினோம்.
மணலூரில் இடிபாடுற்ற கோயில்
கிட்டத்தட்ட இடிபாடான நிலையிலிருந்த ஒரு கோயிலின் அருகே எங்களை அழைத்துச்சென்றார். அக்கோயிலுக்குப் பின்னர் இருநத ஒரு தோப்பில்அச்சிலைஇருப்பதாகக் கூறி அழைத்துச் சென்றார். அப்போது அவ்வூரைச் சேர்ந்த திரு பழனி என்பவரை அவர் எங்களுக்கு அறிமுகப்படுத்தினார். அவர் எங்களிடம் "புத்தர் சிலையைப் பார்க்க வாய்க்காலைக் கடந்து செல்லவேண்டும். உங்களால் முடியுமா?" என்றார். முடியும் என்று கூறிவிட்டு நடந்தோம். எங்களது ஆடையை முழங்கால் வரை மடித்துக்கொண்டோம். வாய்க்காலில் இறங்கினோம். சிறிது தூரம் பாத்தியில் நடந்தோம்.
புத்தர் சிலை உள்ள தோப்பு


சிலையின் பின்புறம்

 

 
பழனி, தண்ணீரை வெளியே எடுக்கிறார்
சிலையைப் பின்புறமிருந்து பார்த்தபோது பாதிக்கு மேல் நீரில் மூழ்கியிருப்பதைக் காணமுடிந்தது. சிலை முழுமையாகத் தெரியாமல் இருப்பதைப் பற்றி நாங்கள் பேசிக்கொண்டிருக்கும்போது திரு பழனி  வேகமாக சென்று ஒரு மண்வெட்டியை எடுத்துவந்து, சிலை வெளியே தெரிய உதவினார். உடன் திரு சேதுராமனும் சேர்ந்துகொண்டார். நீரை வெளியே பாய்ச்சப் பாய்ச்ச உள்ளே வந்துகொண்டிருந்தது. சுற்றி அணையாகக் கட்டி நீரை வெளியேற்றிவிட்டு, உள்ளே நீர் வராமல் இருவரும் உதவி செய்தனர்.  
களப்பணியில் மணி.மாறன்

அந்த சிலை அமர்ந்த நிலை தலையில்லாமல் இருந்தது. வலது கை உடைந்த நிலையில் இருந்தது. பரந்த மார்பினைக் கொண்ட இந்த புத்தர் சிலையில் மேலாடை மார்பின் இடப்புறம் தொடங்கி இடது கை வரை காணப்பட்டது.

புத்தர் சிலையுடன் பழனி, ஜம்புலிங்கம், சேதுராமன் 

புத்தர் சிலையுடன் ஜம்புலிங்கம்

தஞ்சாவூர் மாவட்டத்தில் வையச்சேரி (அய்யம்பேட்டை அருகில்), சோழன்மாளிகை, கோபிநாதப்பெருமாள்கோயில், கும்பகோணம், மதகரம், மானம்பாடி, மங்கநல்லூர், முழையூர், பட்டீஸ்வரம், பெரண்டாக்கோட்டை, திருநாகேஸ்வரம், திருவலஞ்சுழி, விக்ரமம் ஆகிய இடங்களில் புத்தர் சிலைகள் காணப்படுகின்றன. இவற்றில் வையச்சேரி மற்றும் பெரண்டாக்கோட்டை ஆகிய இடங்களில் புத்தர் தலைப்பகுதி மட்டும் கிடைத்துள்ளன.

திரு அய்யம்பேட்டை செல்வராஜ் அனுப்பிய புகைப்படம், புத்தர் தலை (1999)
அய்யம்பேட்டை செல்வராஜ்  சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்னர் அய்யம்பேட்டைக்குத் தெற்கே 3 கிமீ தொலைவில் வையச்சேரி கிராமத்தின் குளக்கரையில் புத்தர் சிலையின் தலைப்பகுதி இருப்பதாகக் கூறி அதன் புகைப்படத்தை அனுப்பியிருந்தார். அப்போது அங்கு சென்று பார்த்தபோது தலைப்பகுதியினைக் காண முடியவில்லை. வையச்சேரிக்கும் அய்யம்பேட்டைக்கும் இடையேயுள்ள தூரம் 3 கிமீ ஆகும். இந்நிலையில் தற்போது மணலூரில் காணப்படும் தலையில்லாத புத்தர் வையச்சேரியில் காணப்பட்ட தலையோடு பொருந்தலாம் எனக் கருதமுடிகிறது.

மணலூர் புத்தர் (2015), புகைப்படம் ஜம்புலிங்கம்

அய்யம்பேட்டையைச் சுற்றி அமைந்துள்ள பகுதிகளில் இவ்வாறாகக் காணப்படுகின்ற புத்தர் சிலைகள் இப் பகுதியில் புத்தர் கோயில் இருந்திருப்பதற்கான சான்றுகளாக அமைவதை அறியமுடிந்தது. சிலையைப் புகைப்படம் எடுத்தபின் உரிய விவரங்களைத் தொகுத்துக்கொண்டு அங்கிருந்து கிளம்பினோம், தஞ்சையை நோக்கி.

நன்றி
தமிழ்ப்பண்டிதர் திரு மணி மாறன், மணலூர் திரு சேதுராமன், மணலூர் திரு பழனி, திரு அய்யம்பேட்டை செல்வராஜ்

மணலூர் புத்தர் செய்தியை வெளியிட்ட கீழ்க்கண்ட பத்திரிக்கைகள்
10th century headlless Buddha statue found near Ayyampet,  The New Indian Express, 31.1.2015 
தலை இல்லாத புத்தர் சிலை தஞ்சை அருகே கண்டெடுப்பு, தினமலர், 31.1.2015
மணலூரில் தலை இல்லாத புத்தர் சிலை கண்டெடுப்பு, தினத்தந்தி, 31.1.2015
தஞ்சை மாவட்டம் மணலூரில்சோழர் கால புத்தர் சிலை கண்டெடுப்பு, தி இந்து, 31.1.2015
தஞ்சாவூர் அருகே புத்தர் சிலை கண்டெடுப்பு, தினமணி, 31.1.2015
மணலூரில் புத்தர் சிலை கண்டெடுப்பு, தினகரன், 31.1.2015
மணலூரில் 10ம் நூற்றாண்டு புத்தர் சிலை கண்டுபிடிப்பு, தமிழ் முரசு, 31.1.2015
Buddha statue found near Thanjavur, The Hindu, 1.2.2015 
10th century sculpture of Buddha found in Thanjavur, Times of India, 1.2.2015 

5.2.2015இல் மேம்படுத்தப்பட்டது.

28 comments:

 1. அய்யா வணக்கம்.
  தமிழ் இந்துவில் உங்கள் ஆய்வும் கண்டுபிடிப்பும் வெளியிடப்பட்டதைக் கண்டேன்.
  அப்பொழுதே விரிவாகத் தங்களின் தளத்தில் இதுபற்றி வெளியிடுவீர்கள் என்று எதிர்பார்த்துக் காத்திருந்தேன்.
  என் காத்திருப்பு வீண்போகவில்லை.
  சமயக்காழ்ப்பு வேற்று நாட்டில் இருந்து சில நூற்றாண்டுகளுக்கு முன் இந்தியாவிற்குள் நுழைந்த மதங்களில் மட்டுமல்ல. பல் நூற்றாண்டாக இங்கிருக்கும் வைதிக மதங்களிலும் இருந்திருக்கின்றன என்பதையே இச்சிலை உடைப்பும் விகாரைகள் தகர்ப்பும் காட்டி நிற்கின்றன.
  இராசராசேச்சுரம் எனும் பெருவுடையார் கோயிலே பிற மத ஆலயமொன்றை இடித்து அதன் மேல் கட்டப்பட்டதுதான் என்கிற பார்வையைத் தாங்கள் அறிந்திருப்பீர்கள்.
  உங்களின் ஆர்வம் என்னை மிக வியக்க வைக்கிறது.
  தங்களைத் தொடர்கிறேன்.
  நன்றி
  த ம 2

  ReplyDelete
 2. முனைவர் அவர்களின் பணி மென்மேலும் சிறக்க எமது வாழ்த்துகள்
  தமிழ் மணம் 3

  ReplyDelete
 3. ஐயா... தங்களின் தேடுதல் உட்பட இந்த ஐந்தாவது மேலும் மேலும் சிறக்கட்டும்...

  வாழ்த்துக்கள் பல...

  ReplyDelete
 4. வலைப் பூவில் வெற்றிகரமான ஐந்தாவது ஆண்டு
  வாழ்த்துக்கள் ஐயா
  மணலூரில் தாங்கள் கண்டுபிடித்த புத்தர் சிலை பற்றிய செய்திகளை நாளிதழ்களில் கண்டு மகிழ்ந்தேன்
  தம +1

  ReplyDelete
 5. Good job, Jambu Sir. Another topic for you, Ayyampettayil Boutham!

  ReplyDelete
 6. தலையிழ்ந்து ஆண்டுகள் பலவாய் நீரில் மூழ்கிக் கிடந்த புத்தனைத் தோண்டியெடுத்து வெளியுலகறியச் செய்த தங்கள் குழுவினரின் முயற்சி பெரும் பாராட்டிற்கு உரியது.

  ReplyDelete
 7. நாளிதழில் படிக்காதததை தங்கள் பதிவினில் படித்து தெரிந்து கொண்டேன் ஐயா.....

  ReplyDelete
 8. புத்த மதம் தமிழகத்தில் வேரூன்றி இருந்தால் நன்றாய் இன்றைய சாத்திய கட்சிகளின் ஆதிக்கம் இருந்து இருக்காது என்று தோன்றுகிறது ,முளையிலேயே கிள்ளி எறிந்து விட்டார்களே என்ற ஏக்கம்தான் வருகிறது ,உடைக்கப் பட்டிருக்கும் புத்தர் சிலையைப் பார்க்கும் போது!
  அய்ந்தாவதுஆண்டு நிறைவுக்கு வாழ்த்துக்கள் !
  த ம 6

  ReplyDelete
 9. வணக்கம்
  ஐயா.

  முதலில் தங்களின் தேடலுக்கு எனது பாராட்டுகள்... படிக்க முடியாத தகவலை தங்களின் வலைப்பூ வழி அறிந்தேன்... தேடல் உள்ள உயிகளுக்கே தினமும் பசியிருக்கும் என்ற பாடலுக்கு அமைய தங்களின் தேடல் தொடர எனது வாழ்த்துக்கள்.

  5வது ஆண்டு நிறைவுக்கு எனது வாழ்த்துக்கள் த.ம8

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
 10. தங்கள் பணி மகத்தானது. தொடரட்டும்ம்

  ReplyDelete
 11. எங்கேயோ யார் யாரோ தகவல்கள் எல்லாநேரங்களிலும் பலன்தருவதுஊக்கம் கொடுக்கும். மணலூரில் கண்டெடுக்கப் பட்ட தலையில்லாத சிலையோடு வையாச்சேரியில் கிடைத்த தலையோடு பொறுத்திப்பார்த்தீர்களா. சரியாக இருந்தால் ஊகங்கள் சரியென்று நிறுவப் படும். களப்பணியாளனுக்கு அதுவே டானிக் போல் அமையும். வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 12. தங்களின் கள ஆய்வுப் பணிகள் தொடர வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 13. வணக்கம் ஐயா..மிகப்பெரிய ஆய்வு செய்கிறீர்கள்!! வியந்து வணங்குகிறேன்..பதிவைப் படிக்க படிக்க ஆர்வம் மேலோங்க புல்லரித்தது..
  புத்த, சமண மதங்களை இப்படி அழிக்க முற்பட்டுள்ளனரே என்பது வருத்தம் தருகிறது..
  தொடருங்கள் ஐயா..பகிர்விற்கு மிக்க நன்றி!
  த.ம.12

  ReplyDelete
 14. அய்யா வணக்கம். தாமத வருகைக்கு மன்னிக்க வேண்டுகிறேன். எழுதத்தான் தாமதமெனினும் தங்களின் ஆய்வு பற்றிய செய்திகளை தமிழ்-இந்துவில் பார்த்து மகிழ்ந்தேன். ஐந்து ஆண்டுகளா ஓடிவிட்டன? தங்களின் நமது முந்திய வரலாற்றைத் தேடும் பணி தொடரவேண்டும் அதன் பயனாக, அறிவிற்சிறந்த புத்தரின் கருத்துகள் பரவினால், நமது இன்றைய மூடநம்பிக்கைகள் பல தகர்ந்து புதிய சிந்தனை பிறக்கும். அந்தத் திசையில் தங்கள் பணி தொடர வாழ்த்துகள், வணக்கம் அய்யா

  ReplyDelete
  Replies
  1. தங்களின் பணி தொடர எனது வணக்கத்துடன் கூடிய த.ம.13.

   Delete
 15. ஐயா வலைப்பூவில் இக்கட்டுரையைப் படித்ததும், புகைப்படங்களைப் பார்த்ததும் அந்த இட்ங்களுக்கு நேரில் சென்று வர வேண்டும் என்ற ஆவல் ஏற்படுகிறது. இப்பணியில் தங்களுக்கு உதவியவர்களுக்கும் வணக்கங்களும், வாழ்த்துக்களும் தெரிவிக்க வேண்டும். இவ்வரிய பணி தொடரட்டும். நன்றி. ச,மல்லிகா

  ReplyDelete
 16. தலையில்லா உடலையும் உடலில்லா தலையும் சேர்த்தால் ஒன்றாக வரும் என்று தாங்கள் கூறியது ஆறுதலாக இருக்கிறது. ஐயா...

  ReplyDelete
 17. தலையில்லா உடலையும் உடலில்லா தலையும் சேர்த்தால் ஒன்றாக வரும் என்று தாங்கள் கூறியது ஆறுதலாக இருக்கிறது. ஐயா...

  ReplyDelete
 18. புத்தர் சிலை கண்டுபிடித்தது குறித்து பத்திரிக்கைகளில் வெளிவந்தது கண்டு மகிழ்ந்தேன். தங்களின் ஆர்வத்திற்கும், ஐந்தாம் ஆண்டைக் கடந்த தங்களின் வலைப்பூவுக்கும் வாழ்த்துகள் ஐயா.

  மன்னிக்க வேண்டும் ஐயா. தங்களின் வலைப்பூவுக்கு வர எனக்கு இப்போது தான் வேளை வந்தது...:)

  ReplyDelete
 19. This comment has been removed by the author.

  ReplyDelete
 20. பௌத்த சுவட்டைத் தேடி : மணலூர்...மதுரையிலும் மணலூர் என்ற ஊர் ...உள்ளது ஐயா.

  ReplyDelete
 21. இங்கே தலையில்லாத புத்தர் சிலை அவமானமாக இருந்தது ஐயா :(
  எவ்வளவு அழகான புத்தர் சிலைகலெல்லாம் இலங்கை தாய்லாந்தில் பார்த்திருக்கேன்.

  ReplyDelete
 22. காடு, மேடு, கழனி திரிந்து, சோழநாட்டில் பௌத்தம் பற்றிய உங்களது களப்பணி ஆராய்ச்சி போற்றத்தக்கது. அசோக சாம்ராஜ்யத்தில் பரந்து விரிந்து இருந்த பௌத்தம் அழிந்தது என்பதை நினைக்கும் போதும், தலை இல்லாத புத்தர் சிலையைக் கண்டபோதும் மனம் வெதும்புவதைத் தவிர வேறு என்ன செய்ய முடியும்?

  த.ம.15

  ReplyDelete
 23. உங்களுடைய ஆய்வுச் செய்திகள் தொகுப்பாக நூலாக வெளியிட்டு இருந்தால், அதன் விவரம் தெரிவிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. நூலாக்க முயற்சியில் உள்ளேன். நன்றி

   Delete
  2. நூலாக்க எண்ணியுள்ளேன், நன்றி.

   Delete