கௌதம புத்தர் (உரைநடை நாடகம்): கு.வெ.பாலசுப்பிரமணியன்

 முனைவர் கு.வெ.பாலசுப்பிரமணியன் அவர்கள் எழுதியுள்ள  கௌதம புத்தர் (உரைநடை நாடகம்) என்ற நூல் மூலமாக நம்மை நிகழ்வுகள் நடந்த இடத்திற்கு அழைத்துச் செல்கிறார். வரலாற்றுக் கதைச்சுருக்கத்தைத் தொடர்ந்து (பக்.13-16) நாடக உறுப்பினர்களை அறிமுகப்படுத்துகின்றார் ஆசிரியர் (பக்.17-18). காட்சியின் தொடக்கத்தில் புத்தரின் அறநெறிகளைத் தம்ம பதம், மஜ்ஜிம நிகாயம், சம்யுக்த நிகாயம், அங்குத்த நிகாயம், சுத்த பிடகம், மணிமேகலை,  சுத்த நிகாயம் போன்ற நூல்களிலிருந்து  தந்துள்ளார். புத்தரைக் குறித்துப் பல நூல்களிலும் கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையிலேயே இந்நாடகத்தை உருவாக்கியுள்ளதாகவும், நிகழ்ச்சிகளில் தன் கற்பனைக்கு இடமில்லை என்றும், உரையாடலில் பாத்திரத்தைச் செழுமைப்ப்டுத்த மொழிநடையில் தன் கற்பனை தன்னுடைய அனுமதி இல்லாமல் நுழைந்திருக்கலாம் என்று முன்னுரையில் குறிப்பிடுகிறார்.24 காட்சிகளில் புத்தரின் வாழ்வினை மிகவும் இயல்பாக வெளிப்படுத்துகின்றார்.

முனைவர் கு.வெ.பாலசுப்பிரமணியன்
 ஒவ்வொரு காட்சிக்குள் நுழையும்போதும் படிக்கின்ற உணர்வைவிட களத்தில் இருப்பதைப் போன்ற உணர்வு ஏற்படுகின்றது.  இந்த உரைநடை நாடகத்திலிருந்து சில நிகழ்வுகளைக் காண நாம் 2500 ஆண்டுகள் பின்னோக்கிச் செல்வோம். 

 

பிறக்கப்போகும் குழந்தையை நினைத்து தாய் மகிழ்தல் (ப.21)
மாயாதேவி : (தன்னுள்) என் வயிற்றில் கருத்தோன்றிப் பத்து மாதங்கள் ஆகிவிட்டன. என் உள்ளம் மகிழ்ச்சியில் நிறைந்துள்ளது. எண்ணப் பறவைகள் சலசலக்காமல் என் உள்ளக்கூட்டில் தெளிவாயுள்ளன. இது போன்ற அமைதியையும் சாந்தத்தையும் என் வாழ்நாளில் கண்டதில்லை. என்னைக் காணும் பெரியோரெல்லாம் என் வயிற்றை நோக்கிக் கைகுவித்து வணங்குகின்றனர். வயிற்றில் வளரும் கருவைக் குறித்து மருத்துவச்சி, 'அம்மா! இந்தக் குழந்தை உறங்குவதாகத் தெரியவில்லை. ஏதோ தியானத்தில் இருப்பதுபோலவே இருக்கிறது' என்றாள்.

அசித முனிவர், குழந்தையின் பெருமை கூறல் (ப.24)
அசிதர்: அரசியாரே! இக்குழந்தை என்னை வணங்குதல் தகாது! நானே இதனை வணங்குதல் வேண்டும். இக்குழந்தையை வையகமே வணங்கும்! வானகமும் வணங்கும்.
சுத்தோதனர்:பெருமானே! எனக்குப் பின் இந்த நாட்டை ஆள்வானா என் மகன்?
அசிதர்: உலகையே ஆளப்போகும் ஒரு பிறவிப் பெருமையைச் சின்னச் சிமிழுக்குள் அடைக்க முயலுகிறாயே! அரசே! இக்குழந்தை மண்ணுலகம் பெற்ற துயரெலாம் நீக்கும். அறவாழி என்னும் தருமச் சக்கரத்தை இவ்வுலகம் முழுவதும் செலுத்தும்! தருமதேவதை இவ்வுருத்தாங்கி வந்துள்ளது! இதனை வணங்கி விடை பெறுகிறேன்.
இக்குழந்தை என்னை வணங்குதல் தகாது! நானே இதனை வணங்குதல் வேண்டும். இக்குழந்தையை வையகமே வணங்கும்! வானகமும் வணங்கும்.

சித்தார்த்தனின் துயிலைக் கலைத்து ஒரு குரல் கூறுவது (ப.40)
ஒரு குரல்: சித்தார்த்தனே! பயணத்தைத் தொடங்குவதில் என்ன தயக்கம்? இதயத்தை வருடும் இன்பப் பாடல்களில் மயக்கம் கொண்டாயா? சலங்கை ஒலியோடு பஞ்சுப் பாதங்கள் பயிலும் தாளகதிகளில் மனம் போக்கினையா? இவையெல்லாம் ஓய்ந்தால்...இரவின் இருளில் எது உண்மை? புலன்களுக்குத் தீனி போடுவதிலேயே வாழ்நாள் கழிய வேண்டுமா? உறக்கம் ஒத்திகை என்பதை உணரமாட்டாயா......

தனக்கு மகன் பிறந்த செய்தியைக் கேட்டபோது கூறல் (ப.45)
சித்தார்த்தன்: (தனக்குள்) பிறப்பெனின் பிணியும் மூப்பும் சாக்காடும் உண்டே! இவையெலாம் இல்லையென்றிருந்த இருள் இன்றே விலகிற்று! இந்நிலையில் மகன் பிறந்துள்ளான். புதிய விலங்கொன்று என்னைப் பூட்டி இருக்கிறது! பொறுமையாய்ப் பார்ப்போம். 

உறங்கும் யசோதரையையும் மகனையும் பார்த்துக் கூறல் (ப.47)
சித்தார்த்தன்: யசோதரை! என் உயிர்ப்பாரம் சுமந்தவளே! உன்மேல் அன்பில்லாமல் நான் போகவில்லை! மயக்கத்தில் இருக்கும் மானுடம் சிக்கிய மாய வலையை அகற்றவே நான் போகிறேன்; காம தகனம் செய்த பின்னும் நீ என் நினைவில் நீங்காதவள்!  புலன்களைத் தாண்டி நான் உன்னை நேசிக்கிறேன்!  பவித்திரமான உன்னை நெஞ்சில் வைத்துப் பூஜிக்கிறேன். என்னை மன்னித்துவிடு!
(இராகுலனை நோக்கி)
வியாகுலம் கொண்ட வேளையில் இராகுலன் வந்தான். மன்னுயிர் எல்லாம் வாழவே நான் இந்த வைராக்கியம் கொண்டேன். பாசமும் பந்தமும் என் கண்களை மறைத்திடல் கூடாது. மனைவியையும் மகனையும் பார்க்கப் பார்க்க மனம் சலனமுறும். புறப்படுகிறேன்......

தவம் இருக்கும்போது ஆடு மேய்ப்பவன் வரல் (ப.51)
சித்தார்த்தன்: (எழுந்து உட்கார்ந்து) தம்பீ! கலயத்தில் கொஞ்சம் பாலைக் கறந்து தாயேன்!
ஆடு மேய்ப்பவன்: ஐயையோ ஆகாதுங்க! நான் பிறப்பாலே தாழ்ந்த சாதிங்க ஐயா! தீட்டுங்க ஐயா! என் கலயம், கை, என் உடம்பு எல்லாம் பட்டால் தீட்டுங்க!
சித்தார்த்தன்: நன்றாகத் தீட்டியிருக்கிறார்கள்! வருணாச்சிரம வாளை நன்றாகத் தீட்டியிருக்கிறார்கள். அது தெரியாமல் பாவம் நீ இன்னும் தீட்டுங்க என்கிறாய். தம்பீ! நீ கறக்கும் பால் தீட்டு இல்லை! நீ வளர்க்கும் ஐந்தறிவு ஆடு, மாடு இவை துட்டு இல்லை. உன்னைப் போலொரு தொழிலாளி விதைத்து அறுவடை செய்யும் தானியம் தீட்டு இல்லை. காய் கனி தீட்டு இல்லை. தொழிலாளிகள் உருவாக்கும் பட்டாடைகள், பொன் நகைகள், வெள்ளிப் பாத்திரங்கள் எல்லாம் தீட்டு இல்லை. இவையெல்லாம் துட்டு என்றால் இவ்வுலகம் என்ன ஆவது? மேலே இருப்பவர்களின் பிழைப்பு நடக்குமா? தம்பீ வா! உன்னை நான் தழுவிக் கொள்கிறேன்! தீட்டு என்ன னெசய்கிறது என்று பார்ப்போம். (அவர் தழுவிக்கொண்டு கண்ணீர் உருக்குகிறார்).

குறிக்கோளை அடைய உறுதிகொள்ளல், அடைதல் (ப.55)
கௌதமர்: இந்தப் போதி மரத்தின் கீழிருந்து ஆழ்நிலைத் தவம புரிந்து புத்த நிலை அடையாமல் இங்கிருந்து செல்லேன், என் குறிக்கோளை அடைந்தே தீருவேன். 
(பேய்க்காற்று, சூறாவளி, மரங்கள் முறிந்து வீழ்கின்றன. பௌர்ணமி நிலவு தேம்புகிறது; விண்மீன்கள் அலைவுறுகின்றன).
கௌதமர்: மன்மதனே! உன் மாயவலையில் நான் சிக்கமாட்டேன்; நீ என்னை அச்சுறுத்த முடியாது. திட சித்தம் உடையவன் நான். உன்னுடைய மயக்கும் சேனைகளை எனது நன்ஞானம், நற்காட்சி ஆகியவை எதிர்கொள்ளும். காம தகனம் செய்தவன் நான்; வெகுளி மயக்கம் விட்டவன் நான். உனது ஆற்றல் என்னிடம் செல்லாது. போ! போய்விடு.
(மன்மதன் தோற்றுப்போகிறான். விசாகப் பௌர்ணமியில் கௌதமர் புத்த ஞானம் எய்துகிறார்.முற்பிறப்புகளை அறிகின்றார். பௌத்த சமயத்தின் உயிர் நாடியான நால்வகைச் சத்தியங்களையும் பன்னிரண்டு நிதானங்களையும் வகுத்து அவற்றை உலகுக்கு உணர்த்தும் ததாகதர் ஆகிறார்; தன் சீடர்களுக்குத் தாமறிந்த ஞானத்தை விரித்துரைக்கிறார்).

 பரிநிர்வாணம் அடைதல் (ப.95)
ஆனந்தத தேரர்: ததாகதரே! இறைச்சி உணவு உங்களுக்கு இடையூறு தந்துவிட்டது!அதை உண்ணாமல் இருந்திருந்தால்...
புத்தர்:  இல்லை ஆனந்தா! அதை நான் உள்ளத்தால் உண்ணவில்லை! யாராவது சுந்தன் படைத்த உணவால் ததாகதர் இறந்துவிட்டார் என்று சொன்னால் அவ்வாறில்லையென்று சொல்! முன்பு ஒரு நாள் சுஜாதை கொடுத்த பாலுணவையும் சுந்தன் படைத்த இறைச்சி உணவையும் ததாகதர் ஒன்றாகவே கருதினார் என்று சொல். நம் பயணம் தொடரட்டும்!.......

(குசீ நகரை அடுத்துள்ள ஒரு சோலையில் இரண்டு பெரிய சால மரங்களுக்குடையே புத்தர் சாய்ந்து படுத்துக்கொள்கிறார். நாலா திசைகளிலிருந்தும் பிக்குகுளும், சான்றோர்களும் தாய்மார்களும் புத்தர் வீடுபேறு பெறப்போவதை அறிந்து வந்து ஆயிரக்கணக்கில் கூடுகின்றனர். புத்தர் அருள் கனிந்த நோக்கால் அவர்களைப் பார்க்கிறார்).
புத்தர்:  பிக்குகளே! தோன்றிய எதுவும் அழிந்தே தீரும்; ஊக்கம் குறையாமல் உறுதி தளராமல் வீடு பெறு பெற முயலுங்கள்!
(இரவின் கடையாம மணி ஒலி காற்றில் தவழ்ந்து வருகிறது. ததாகதர் பரி நிர்வாணம் எனப்பெறும் வீடுபேறடைகிறார்).

சித்தார்த்தர், புத்தரான வரலாற்றை உரைநாடகமாகப் பார்க்கவும், உணரவும், அனுபவிக்கவும் இந்நூலை வாசிக்க அன்போடு அழைக்கிறேன்.

கௌதம புத்தர் (உரைநடை நாடகம்), முனைவர் கு.வெ.பாலசுப்பிரமணியன், அய்யா நிலையம் (அலைபேசி 9443007623), 1603, ஆரோக்கிய நகர், ஐந்தாம் தெரு, E.B.காலனி, நாஞ்சிக்கோட்டை சாலை, தஞ்சாவூர் 613 006, ரூ.60, பிப்ரவரி 2013 இரண்டாம் பதிப்பு,  96 பக்கங்கள்.

பௌத்தம் தொடர்பாக முன்னர் படித்த நூல்கள்
தமிழ்ப்பண்பாட்டில் பௌத்தம் : பிக்கு போதிபாலா, க.ஜெயபாலன், இ.அன்பன்
தமிழ் அற இலக்கியங்களும், பௌத்த சமண அறங்களும்: முனைவர் சு.மாதவன்
தம்ம பதம் (கவிதை வடிவில்) : யாழன் ஆதி
பௌத்த சமயக் கலை வரலாறு : முனைவர் கு.சேதுராமன்
Archaeological atlas of the antique remains of Buddhism in Tamil Nadu : Dr K.Sivaramalingam

Comments

  1. நூல் அறிமுகத்திற்கு நன்றி ஐயா
    அவசியம் வாங்கிப் படிக்கின்றேன்

    ReplyDelete
  2. புத்தரின் வரலாற்றை சுருக்கமாகப் புரிந்துகொள்ள உதவுகிறது நாடக பாணியிலான இந்நூல். படிக்கும்போது தாங்களும் இதனை உணர்வீர்கள். நன்றி.

    ReplyDelete
  3. சித்தார்த்தர், புத்தரான வரலாற்றை உரைநாடகம்
    அறிமுகத்திற்குப் பாராட்டுக்கள்..!

    ReplyDelete
    Replies
    1. அசிதர் அரசியாரிடம் இக்குழந்தை தன்னை வணங்குதல் தகாது தானே இதனை வணங்குதல் வேண்டும் என்று கூறும்போதே அக்குழந்தையின் பெருமையை உணரமுடியும். நன்றி.

      Delete
  4. // நன்றாகத் தீட்டியிருக்கிறார்கள்... // இன்றைக்கும்...

    நூல் அறிமுகத்திற்கு நன்றி ஐயா...

    ReplyDelete
    Replies
    1. சரியான சொற்றொடரைத் தேர்ந்தெடுத்துள்ளீர்கள். இதன்மூலம் தாங்கள் பதிவினை உள்வாங்கிய விதத்தை உணரமுடிகிறது. நன்றி.

      Delete
  5. வணக்கம்
    ஐயா.
    சிறப்பான வரலாற்று ஆய்வாகஒளிர்கிறது ... நூல் அறிமுக விழாவிற்கு எனது வாழ்த்துக்கள் ஐயா

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  6. தங்களின் அன்பான வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

    ReplyDelete
  7. நூல் அறிமுகத்திற்கு நன்றி ஐயா. நேரமிருப்பின் எமது பதிவை காணவும் தங்களைப் போன்றவர்களிடம்தான் உண்மையான தவறுகளை நான் தெரிந்து கொள்ளமுடியும்.

    Killergee
    www.killergee.blogspot.com

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றி. தங்களின் விருப்பப்படி தங்களின் பதிவைக் கண்டு கருத்துத் தெரிவிப்பேன்.

      Delete
  8. உரை நடை நாடகம் என்று பிரத்துயேகமாகக் கூறுவதன் நோக்கம் என்ன. ?கவிதை நாடகமல்ல என்று தெரியப் படுத்தவா.புத்தகம் வாங்கிப் படிக்க இயலுமோ தெரியவில்லை.

    ReplyDelete
    Replies
    1. தாங்கள் கூறியதுபோல கவிதை வடிவம் அல்ல என்று உணர்த்த அவ்வாறு நூலாசிரியர் எழுதியிருக்கலாம். பிறிதொரு பதிவில் மு.கு.ஜகந்நாதராஜா அவர்கள் கவிதை வடிவில் எழுதியுள்ள ஆபுத்திர காவியம் பற்றி எழுதவுள்ளேன். நன்றி.

      Delete
  9. வணக்கம் அய்யா,
    கடந்த மாதம் மும்பைக்குச் சென்றிருந்த போது, திட்டமிடப்படாத ஒரு முழு நாளில் இரவு 8-30 க்கு நாங்கள் புறப்படவேண்டிய விமானம். எங்களுக்கென அமர்த்தப்பட்ட ஓட்டுநர் சலீமிடம் எங்காவது சுற்றிப்பார்த்து வரலாம் என்ற போது சஞ்சய் காந்தி உயிரியல் பூங்காவிற்குச் செல்லலாம் என்றான். விலங்குகளைப் பார்க்கும் ஆர்வமில்லாமல் வேறிடம் செலுத்தக் கூறிய போது அங்கு சில குகைக் கோயில்கள் இருப்பதாகக் கூறினான். அதற்கு முதல் நாள் எலிபெண்டா குகைகளைப் பார்த்து ரசித்த எங்களின் பலவீனங்களை மொழி தெரியாதபோதும் புரிந்து கொண்டிருப்பான் போலும்.
    கன்னேரி குகைகள் என்று அழைக்கப்பட்ட நூற்றுக் கணக்கான குகைகள் , ஒவ்வொன்றிலும் சிலபலவாய் ஆயிரக்கணக்கானோர் தங்கக் கற்படுக்கை, குடிக்க ஒவ்வொரு குகைக்கும் நன்னீர் தேக்கும் இணைப்பு நீர்க்குழிகள்.. சிகரம் வைத்தாற் போல்
    ஒரு பெரிய பௌத்த விகாரை....! மௌனமாய் காலத்தில் கரைந்து தடயமற்றுப்போய் எங்கனும் வெறித்த கண்களொடு எங்களைப் பார்த்தபடி உருவமற்று உலவிக் கொண்டிருந்த புத்த பிக்குகள்....
    நாகபட்டினத்தில் இராஜராஜனால் புரக்கப்பட்டு அழிந்ததும் இது போன்றொரு விகாரையாய் இருந்திருக்க வேண்டுமெனத் தோன்றியது. கழிக்கப் புறப்பட்ட நேரம் அப்படியே நின்று போனால் நன்றாயிருந்திருக்கும். மனதில்லா மனதோடு எங்களை மீட்டுப் புறப்பட்ட தருணங்களை நினைவுபடுத்துகிறது அய்யா உங்கள் வலைத்தளமும் பதிவுகளும்....! நன்றி

    ReplyDelete
  10. எனது பதிவுகள் தங்களை ஈர்த்ததறிந்து மகிழ்ச்சி. வாய்ப்பிருப்பின் பூம்புகார் சென்று வாருங்கள். தமிழகத்தில் பௌத்த விகாரை இருந்ததற்கான பல்லாண்டு கால வரலாற்றைக் கொண்டு விகாரையின் எச்சங்கள் இன்றும் காணப்படுகின்றன. தங்களின் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

    ReplyDelete
  11. ஐயா,

    ஒரு நல்ல நூலை சிறப்பான முறையில் அறிமுகம் செய்துள்ளீர்கள்.

    இன்றைய அவசர உலகுக்கு கெளதமரின் வரலாற்றை தெரியவைப்பது அவசியம் !

    நன்றி
    சாமானியன்
    saamaaniyan.blogspot.fr

    ( தங்களுக்கு நேரமிருப்பின் எனது வலைப்பூவை படித்து தங்களின் கருத்துகளை பதியுங்கள். நன்றி )

    ReplyDelete
  12. ஆர்வமுடன் வந்து கருத்தினைத் தெரிவித்தமைக்கு நன்றி. தங்களது வலைப்பூவைப் படித்து கருத்து தெரிவிப்பேன்.

    ReplyDelete
  13. அறிமுகத்திற்கு நன்றி ஐயா

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

      Delete
  14. நல்ல நூலை அறிமுகம் செய்திருக்கிறீர்கள். விலையும் குறைவாகவே உள்ளது. வாங்கிப் படிக்க முயற்சிக்கிறேன் ஐயா

    ReplyDelete
    Replies
    1. தங்களின் முயற்சி கைகூட வேண்டும் என்பதே என் அவா. நன்றி.

      Delete
  15. முனைவர் கு.வெ.பாலசுப்பிரமணியன் அவர்களது கௌதம புத்தர் (உரைநடை நாடகம்) பற்றிய விமர்சனம் படித்தேன். ஒரு முனைவரின் கோணத்தில் இன்னொரு முனைவரின் படைப்பு பற்றிய விமர்சனம்.

    நான் பெரியார் ஈ.வெ.ரா கல்லூரியில் பி.ஏ தமிழ் இலக்கியம்
    (1972 – 1975) படித்தபோது K.V.பாலசுப்பிரமணியன் என்பவர் தமிழ் இலக்கிய வரலாறு பாடம் எடுத்தார். உங்கள் பதிவிலுள்ள போட்டோவில் இருப்பவர் அவர் போல் இருக்கிறது. அவர்தானோ இவர்?

    ReplyDelete
    Replies
    1. நூல் விமர்சனத்தைப் பற்றிய தங்களின் விமர்சனம் நன்று. தாங்கள் கூறுபவரும் இந்நூலாசிரியரும் ஒருவரே. வருகைக்கு நன்றி.

      Delete
  16. Dear sir,
    If a story is to be brought into drama,the dialogue of all participants are to be written by the author which means he has to live in each character.Thiru. Balasubramanian has done an excellent job.congratulations.

    ReplyDelete
  17. தங்களின் வரவும், அருமையான கருத்தும் பாராட்டத்தக்கது. தங்களது கருத்தினை நூல் ஆசிரியரிடம் கூறியுள்ளேன். நன்றி.

    ReplyDelete
  18. கு.வெ.பாலசுப்பிரமணியன் அவர்களின் வசனங்கள் ஆழமானவையாகவும் கதைப்போக்கைச் சிதைக்காதவாறும் உள்ளன. நல்ல நூல். மதிப்பேடு செய்து அறிமுகப்படுத்தியதற்கு நன்றி. வாங்கிப் படிக்கவேண்டும்.

    ReplyDelete
  19. தாங்கள் உணர்ந்த உணர்வையே நானும் நூலைப் படிக்கும்போது உணர்ந்தேன். நன்றி.

    ReplyDelete
  20. Happy to read
    by Amrithraj

    ReplyDelete

Post a Comment