பௌத்த சுவட்டைத் தேடி : மானம்பாடி

1960
பி.ஆர்.சீனிவாசன் (1960), சிவராமலிங்கம் (1997) உள்ளிட்ட அறிஞர் பெருமக்கள் மானம்பாடியில் உள்ள புத்தர் சிலையைப் பற்றிக் கூறியுள்ளனர். பாண்டிச்சேரி பிரெஞ்சு ஆய்வு நிறுவனம் (French Institute of Pondicherry) தன் தொகுப்பில் இச்சிலையின் புகைப்படத்தைக் கொண்டுள்ளது. தமிழக அரசு வெளியிட்டுள்ள தமிழ்நாட்டு வரலாறு சோழப்பெருவேந்தர் காலம் (1998) என்னும் நூலில் இப் புத்தரைப் பற்றிய குறிப்பு உள்ளது. முதல் களப்பணியின்போது கேட்பாரற்று இருந்த புத்தர் தற்போது வழிபாட்டில் உள்ளதைப் பகிர்வதே இப்பகிர்வு.

ஏப்ரல் 1995
நான் புத்தர் சிலைகளைப் பற்றி விசாரித்தபோது பல அறிஞர்கள் கூறிய இடம் திருப்பனந்தாள் அருகே உள்ள மானம்பாடி. கல்வெட்டறிஞர் கும்பகோணம் திரு சேதுராமன் அவர்களைச் சந்திக்கச் சென்றபோது அவர், கும்பகோணம் கும்பேஸ்வரர் கோயிலில் உள்ள எலந்துறை புத்தர் கோயில் தொடர்பான கல்வெட்டு பற்றி விரிவாகக் கூறிவிட்டு மானம்பாடி புத்தர் சிலையைப் பற்றிக் கூறினார். அப்போது அச்சிலையைப் பார்க்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை.  

அக்டோபர் 1998
மூன்றாண்டுகள் கழித்து அங்கு செல்லும் வாய்ப்பு கிடைத்தது. களப்பணியின்போது என் மகன் பாரத், துணைக்கு வந்தான். எலந்துறையில் புத்தர் கோயில் இருந்ததற்கான சான்றைத் தேடி அலைந்து, பெருஞ்சேரியில் புத்தர் சிலையைப் பார்த்துவிட்டு இருவரும் கும்பகோணம் வந்து சேர்ந்தோம். தஞ்சாவூர் சேருவதற்கு முன்பாக வேறுஏதாவது புத்தர் சிற்பம் உள்ளதா என நான் சிந்தித்தபோது மானம்பாடி நினைவிற்கு வந்தது. உடன் வந்த என் மூத்த மகனைப் பார்த்தேன். மறுபடியும் ஒரு புத்தரைப் பார்க்கும் ஆசை அவனுக்கும் வந்துவிட்டது. கும்பகோணம்-பந்தநல்லூர் பேருந்தில்  சோழபுரத்திற்கு அருகேயுள்ள மானம்பாடி சென்றோம். புகைப்படக் கருவியை அவனிடம் கொடுத்துவிட்டேன். அவன் ஆவலோடு புத்தரைப் புகைப்படம் எடுத்தான். அவன் எடுத்த பெருஞ்சேரி புகைப்படம் எனது ஆய்வேட்டில் இடம்பெறும் என்றதும் அவனுக்கு அதிக மகிழ்ச்சி.  நிறைவான பயணத்தை முடித்துவிட்டுத் திரும்பினோம்.


சோழ நாட்டில் உள்ள அழகான புத்தர் சிலைகளில் இதுவும் ஒன்று. எங்கும் அடர்ந்த செடிகள். மண்டிக்கிடந்த செடிகளுக்கிடையே புத்தர் அமர்ந்த நிலையில் தியான கோலத்தில் இருந்தார்.

அடுத்தடுத்து பல முறை அங்கு சென்றேன். அது தொடர்பான அனுபவங்களைத் தொடர்ந்து காண்போம்.

மே 2002
புத்த பூர்ணிமா தினத்தன்று (26 மே 2002) சிலை இருந்த இடம் சுத்தம் செய்யப்பட்டு, புத்தருக்குச் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. அதுதொடர்பாக நாளிதழில் வெளியான நாளிதழ் ("Symbolic of harmony", The Hindu, May 31, 2002) செய்தியில் நான் கூறிய கருத்துகள் இடம்பெற்றிருந்தன. 



ஜனவரி 2005
இச்சிலையைக் களவாட மேற்கொள்ளப்பட்ட முயற்சி புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே முறியடிக்கப்பட்டு, மறுபடியும் மானம்பாடிக்கு வந்து சேர்ந்தது. பழைய இடத்திற்கு வந்த புத்தருக்கு மறுபடியும் உள்ளூர் மக்களால் பூசைகள் நடத்தப்பட்டன. (கும்பகோணம் அருகே திருட்டுப்போன புத்தர் சிலை மீட்பு, தினத்தந்தி, 4.1.2005)

 ஜூலை 2007
பின்னர் அந்த இடம் மிகச் சிறப்பாக சில காலம் பராமரிக்கப்பட்டு வந்ததை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட பணிகளின்போது காணமுடிந்தது. கேட்பாரற்றுக் கிடந்த அந்த சிலைக்கு கம்பிகளால் தடுப்பு வேலி அமைக்கப்பட்டிருந்தது. முட்புதர் மறைந்து சிலை அனைவரும் காணும்படி அழகாகக் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. (கும்பகோணம் அருகே மானம்பாடியில் உள்ள புத்தர் சிலையைப் போற்றி பாதுகாக்க கோரிக்கை, தினமலர், 16.7.2007)

மார்ச் 2010
குத்தாலம், பெருஞ்சேரி, பந்தநல்லூர், சிக்கநாயக்கன்பேட்டை ஆகிய இடங்களில் களப்பணி முடித்துவிட்டு, மானம்பாடி செல்லும் வாய்ப்பு கிடைத்தது. பேருந்தைவிட்டு இறங்கி முன்னர் புத்தர் இருந்த இடத்திற்குச் சென்றேன். சிறிய அதிர்ச்சி காத்திருந்தது. முந்தைய களப்பணியின்போது நான் பார்த்த இடத்தில் புத்தர் சிலை இல்லை.  செடிகளோடு மறைந்துவிட்டதா என எண்ணித் தேட ஆரம்பித்தேன். அந்தப் பகுதி முழுவதையும் தேடினேன். எந்தத் தடயமும் இல்லை. நான் அந்த இடத்தில் பல நேரம் தனியாக எதையோ தேடிக் கொண்டிருந்ததைக் கண்ட உள்ளூரைச் சேர்ந்தவர்கள் என்னிடம் என் தேடலைப் பற்றி விசாரித்தனர். நான் புத்தர் சிலையைப் பற்றிக் கூறியதும், கடந்த சில ஆண்டுகளாக அவ்வப்போது இடம் மாறியது பற்றியும், ஒரு முறை திருட முயற்சி நடந்தது பற்றியும் கூறி வருத்தப்பட்டனர். சிலையின் நிலையைப் பற்றிக் கேட்டபோது அருகில், எதிர்ப்புறத்தில் உள்ள வடபத்ர காளியம்மன் கோயிலில் இருப்பதாகக் கூறினர். அக்கோயிலில் புத்தர் சிலை வைக்கப்பட்டிருந்தது. முதல் களப்பணியின்போது கேட்பாரட்டுக் கிடந்த புத்தர் தற்போது வழிபாட்டில் இருப்பதைக் கண்டதும் மன நிறைவு ஏற்பட்டது. இந்த புத்தரை பாதுகாக்கவும், வழிபாட்டுக்குக் கொணரவும் தனியார் அமைப்புகளும் உள்ளூர் மக்களும் செய்துவரும் முயற்சி பாராட்டத்தக்கதாகும்.

8 மே 2021
என்னுடைய நூலான சோழ நாட்டில் பௌத்தம் அச்சாகிக்கொண்டிருந்த நிலையில் மானம்பாடிக்குச் சென்றேன். எங்கள் மூத்த மகன் ஜ.பாரத் உடன் வந்தான். சாலை விரிவாக்கம் காரணமாக கோயில் சற்று உள்ளடங்கி இருந்தது.  அக்கோயில் குடமுழுக்கு ஆகியிருந்தக் காணமுடிந்தது.  இப்போது புத்தர் சிலை கோயிலின் இடது புறத்தில் இருந்தது. புத்தரைப் பார்த்துவிட்டு அங்கிருந்து திரும்பினேன்.





டிசம்பர் 2023
என்னுடைய நூலின் ஆங்கிலப்பதிப்பு (Buddhism in Chola Nadu)  அச்சாகிக்கொண்டிருந்த நிலையில் மானம்பாடி சென்று, புத்தரையும் கண்டு வந்தேன். கோயிலின் திருப்பணி முற்றிலும் நிறைவடைந்த நிலையில் இருந்தது.



20 மார்ச் 205இல் மேம்படுத்தப்பட்டது.

Comments

  1. புத்தர் சிலைகள், இன வேறுபாடுகளைக் கடந்து, இந்து கோயில்களில் பராமரிக்கப்பட்டு பூசைகளும் செய்யப்பட்டு வருவது மன நிறைவினை மட்டமல்ல, பெருமையினையும் அளிக்கின்றது. நன்றி ஐயா.

    ReplyDelete
    Replies
    1. முதன்முதலில் நான் மானம்பாடி புத்தரைப் பார்த்ததற்கும் அண்மையில் பார்த்ததற்கும் இடையே அதிக வேறுபாடுகளைக் காணமுடிந்தது. நன்றி.

      Delete
  2. தம்ம பதம் விளக்கத்திற்கு நன்றி... ஒவ்வொரு ஆண்டின் விளக்கம் உட்பட தங்களின் களப்பணிக்கு பாராட்டுக்கள்... வாழ்த்துக்கள் ஐயா...

    ReplyDelete
    Replies
    1. வாழ்க்கைக்குத் தேவையான அரிய பல கருத்துக்களைக் கொண்டுள்ளது தம்மபதம். ஆகையால்தான் ஒவ்வொரு பதிவின்போதும் அதனையும் பகிர்கிறேன். ஆண்டுவாரியான பதிவு வரலாற்றுக்குப் பெரும் துணையாக இருக்கும் என்ற நிலையில் அவ்வாறு எழுதுகிறேன். நன்றி.

      Delete
  3. வணக்கம்
    ஐயா.

    மிகவும் சிரமத்துக்கு மத்தியில் தங்களின்
    ஆய்வுப் பணியை மேற்க்கொண்டுள்ளீர்கள் தங்களின் தளராத முயற்சியின்வழி நித்திய வழிபாடு நடை பெறுவது..மகிழ்ச்சியாக உள்ளது....இப்படியான வரலாற்று ஆய்வுகள் தொடர எனது வாழ்த்துக்கள் ஐயா

    நன்றி
    அன்புடன்
    ரூபன்

    ReplyDelete
    Replies
    1. ஆரம்பத்தில் சிரமமாக இருந்தது. நாளடைவில் ஆர்வமாக மாறியது. தங்களைப் போன்றோரின் வாழ்த்துக்கள் ஆய்வினைத் துணைபுரிய உதவுகின்றன. நன்றி.

      Delete
  4. மதிப்பிற்குரிய ஐம்புலிங்கம் அவர்களுக்கு வணக்கம்.

    தாங்கள், தினசரி அலுவலகப் பணிகளுக்கு
    (கண்காணிப்பாளர்) இடையேயும் புத்தரை பற்றி இத்தனை செய்திகளை எப்படி தோண்டித் தோண்டி விவரங்களை சேமித்துத் தரமுடிகிறது என பிரமிப்பாக உள்ளது!!!!!!!!!!.

    புத்தர்பிரான் மீது தாங்கள் கொண்டுள்ள பற்றும் தொண்டும் தொடரட்டும்..... அவர் கூறிய பொன்மொழிகளையும் அவ்வப்போது உலகுக்குத் தெரியப்படுத்தி நல்வழிப்படுத்துங்கள்.

    அன்புடன்
    இடைமருதூர் கி.மஞ்சுளா

    ReplyDelete
    Replies
    1. என் ஆய்வின் மீதான தங்களின் பிரமிப்பைக் கண்டு பெருமகிழ்ச்சியடைகின்றேன். தங்களின் கருத்தின்படி புத்தரின் பொன்மொழிகளைத் தொடர்ந்து பதிவு செய்வேன். நன்றி.

      Delete
  5. புத்தர் சிலை இந்து அம்மன் கோயிலில் பராமரிக்கப்படுவது மத ஒற்றுமைக்க அவ்வூர் எடுத்துக்காட்டாக அமைந்திருப்பதை சொல்லியிருப்பது பாராட்டப்படக்கூடிய செய்தி.

    ReplyDelete
    Replies
    1. இவ்வாறு பிற கோயில்களில்கூட புத்தர் சிலைகளை களப்பணியின்போது பார்த்துள்ளேன். பாராட்டுக்கு நன்றி.

      Delete
  6. உங்கள் முயற்சி பாராட்ட தக்கது

    ReplyDelete
  7. Replies
    1. எனது வலைப்பூ பயணத்தில் தொடர்ந்து வரும் தங்களுக்கு நன்றி.

      Delete
  8. ஐயா வணக்கம். 1998-ம் ஆண்டு மானம்பாடியில் கண்ட புத்தர் சிலைக்கு ஏதாவது அடையாளம் இருந்ததா.? அதுதான் இப்போது வழிபாட்டில் இருக்கும் சிலை என்பதற்கானதெளிவு ஏதாவது உள்ளதா.?கண்டெடுக்கப்பட்ட சிலையின் தொன்மை குறித்து ஏதாவது ஆவணங்கள் உள்ளதா.?கேள்விகள் எனக்கு தெளிவு ஏற்படவே. மற்றபடி உங்கள் விடாமுயற்சி பாராட்டத்தக்கதே.

    ReplyDelete
    Replies
    1. சோழநாட்டு புத்தர் சிலைகளில் காணப்படும் கூறுகள் இச்சிலையில் உள்ளன. தொடர்ந்து அனைத்து இடங்களிலும் புத்தர் சிலைகளைப் பார்த்துவருவதால் என்னால் அது அந்த புத்தர்தான் என உறுதியாகக் கூறமுடியும். பல வரலாற்றறிஞர்கள் இச்சிலையைப் பற்றி விவாதித்துள்ளனர். ஐயா, தங்களின் வருகைக்கும் வினாக்களுக்கும் பாராட்டுக்கும் நன்றி.

      Delete
  9. தெரியாத தகவல்கள் தெரிந்து கொண்டேன் மிக்க நன்றிகள்....

    ReplyDelete
  10. உங்கள் தகவுலுக்கு மிக்க நன்றிகள்...

    ReplyDelete
  11. வாழ்த்துக்கு நன்றி. தொடர்ந்த தங்களின் வருகை என்னை மென்மேலும் எழுதவும், களப்பணி அனுபவங்களைப் பகிரவும் உதவும்.

    ReplyDelete
  12. உங்கள் ஒவ்வொரு பதிவும் அந்த இடத்தை பார்க்க ஆர்வத்தை தூண்டுகிறது. நன்றி அய்யா.

    ReplyDelete

Post a Comment