பௌத்த சுவட்டைத் தேடி : புதூர்

 களப்பணிகளில் மறக்கமுடியாதது திருவாரூர் மாவட்டத்திலுள்ள புதூரில் மேற்கொள்ளப்பட்ட களப்பணி.  எனது 20 வருட ஆய்வில் தொடர்ந்து மிதிவண்டியில் சுமார் 25 கிமீ பயணித்து ஒரு புத்தரை புதூர் என்னுமிடத்தில் காணும் வாய்ப்பு கிடைத்தது அப்போதுதான். முழுக்க முழுக்க மிதிவண்டியிலேயே பயணம், நண்பர் துணையுடன்.  பயணம் முடிந்து கால் வீங்கி சில நாள்கள் சிரமப்பட்டதும், பின்னர் இந்த புத்தரைப் பற்றிய செய்தியைத் தமிழ்கூறு நல்லுலகிற்குத் தெரியப்படுத்தியபின் கிடைத்த மகிழ்ச்சியும் இப்பதிவில்.

ஏப்ரல் 1999
புத்தகரம் மற்றும் புஷ்பவனம் ஆகிய இடங்களுக்குக் களப்பணியின்போது இ.செங்கத்தி-கடுவெளி செல்லும் வாய்ப்பு கிடைத்தது. அப்பகுதிகளில் புத்தரைத் தேடி அலைந்தபோது திரு கோவிந்தராசு என்பவர்  ஆய்வைப் பற்றி விசாரித்தார். பின்னர் அவர் "புஷ்பவனம் என்னுமிடத்தில் உள்ள புத்தரைப் பார்த்தீர்களா?" என்றார். "அந்தப் புத்தரை இனி பார்க்கப்போகிறேன்" என்று நான் கூறினேன். அப்போது அவர் "திருத்துறைப்பூண்டி-திருவாரூர் பேருந்தில் சென்று ஆலத்தம்பாடியில் இறங்கினால் பாலம் வரும். பின்னர் திருவாரூர் பேருந்தில் ஏறி நால்ரோடு நிறுத்தத்தில் இறங்கவும். அங்கிருந்து புதூர் 4 கிமீ. அங்கே ஒரு புத்தர் சிலை உள்ளது" என்றார். அச்சிலையைப் பற்றி அதுவரை நான் கேள்விப்பட்டதில்லை. முதன்முதலாகத் தெரிந்ததும்  அந்த புத்தரைப் பார்க்க விரும்பினேன். நேரமின்மை காரணமாக அன்றைய களப்பணியில் புஷ்பவனம் புத்தரை மட்டுமே பார்க்கமுடிந்தது. திருவாரூர் மாவட்த்தில் பல இடங்களில் புத்தர் சிலைகள் உள்ளன. இருப்பினும் புதியதாக ஒரு புத்தரைப் பார்க்கும் வாய்ப்புக்காகக் காத்திருந்தேன்.

சூன் 1999
மன்னார்குடி சமணக்கோயிலில் முன்னர் பார்த்த புத்தர் சிலையைப் பார்க்கப் போகும்போது புதூர் செல்லும் வாய்ப்பு கிடைத்தது. மன்னார்குடியிலிருந்து பேருந்து தொடர்பை விசாரித்தபோது கடுவெளி கோவிந்தராசு கூறியதிலிருந்து சற்று மாற்றமாக இருந்தது. மன்னார்குடியிலிருந்து திருத்துறைப்பூண்டி செல்லும் பேருந்தில் ஏறி வடிவாய்க்கால் என்னும் நிறுத்தத்தில் இறங்கினேன். வடிவாய்க்காலில் மழவராயநல்லூரைச் சேர்ந்த திரு சிங்காரவேலன் என்பவர் புதூர் புத்தரைக் காண தானும் வருவதாகக் கூறினார். முந்தைய களப்பணியின்போது இப்பகுதியில் இவரைப் பற்றி நான் கேள்விப்பட்டுள்ளேன். இவர் சித்தார்த்தா சமூகக் கல்விக் கழகம் என்ற அமைப்பினை நடத்திவருவதோடு ஒரு நூலகத்தை தன் கிராமத்தில் நடத்திவருவதைப் பார்த்துள்ளேன். பௌத்தம் மீதான ஈடுபாடும், என் ஆய்வின்மீதான ஈர்ப்பும்  உதவின. சரியான தூரம் தெரியாத நிலையிலும், அங்கிருந்து பேருந்து வசதி இல்லாத நிலையிலும் இருவரும் தனித்தனியாக இரு மிதிவண்டிகளை வாடகைக்கு எடுத்துக்கொண்டோம்.  முதலில் வடிவாய்க்காலிலிருந்து விக்ரபாண்டியம் வழியாக ஆலத்தூர் சென்றோம். செல்லும் வழியில் வேறொரு சிலையைப் பார்த்தோம். சிறிது தூரத்தில் புத்தர் சிலை இருப்பதாகக் கூறினார். சுமார் ஐந்து கி.மீ.வந்த பின்னரும் எந்த சிலையும் இல்லை.  என் இலக்கு சிலையை பார்க்கவேண்டும் என்பதே. திரு சிங்காரவேலன் இவ்வளவு தூரம் அழைத்துவந்து சிலை இல்லாமல் போய்விடுமோ என்ற ஏக்கத்தில் மிதிவண்டியை ஓட்டிக் கொண்டுவந்தார்.  அவருடைய உணர்வு எனக்குப் புரிந்தது. தேநீர் குடிக்கக் கூட எங்களுக்கு சிந்தனையில்லை. மிதிவண்டிப் பயணம் தொடர்ந்தது. நீண்ட பயணத்திற்குப் பின்  திருநெல்லிக்காவல் வந்தடைந்தோம். அப்பகுதியில் புத்தர் சிலை இல்லை. விசாரித்தபோது புதூரில் புத்தர் உள்ளதாகக் கூறினர். நாங்கள் தேடிவந்த ஊரை நெருங்கிவிட்டதை உணர்ந்தோம்.  ஒருவர் "மணமாகாத பெண்கள் மணமாவதற்காக வழிபாடுவார்களே அந்த புத்தரைப் பார்க்கச் செல்கின்றீர்களா?" என்றார். அச்சிலை தொடர்பான நம்பிக்கையை அறிந்தோம். தொடர்ந்து திருநெல்லிக்காவல் தொடர்வண்டி நிலையத்தைக் கடந்து பின் புதூர் நோக்கிப் பயணித்தோம்.  சீயாத்தமங்கை திருமருகல் களப்பணியின்போது நடந்தும், மிதிவண்டியிலும் 16 கிமீ பயணத்தேன். ஆனால் இப்பயணமோ அதிலிருந்து வித்தியாசமானதாக இருந்தது. முழுக்க முழுக்க மிதிவண்டியிலேயே களப்பணியைத் தொடர்ந்தோம்.

புதூர் புத்தர்
 புகைப்படம் ஜம்புலிங்கம்
நாங்கள் எதிர்பார்த்த இடம் வந்ததை உணர்ந்தோம். புதூரில் ஒரு மரத்தடியில் அமர்ந்த நிலையில் தியான கோலத்தில் ஒரு புத்தர் சிலையைப் பார்த்தோம். எங்களது மிதிவண்டிகளை ஓரமாக வைத்துவிட்டு உள்ளூர் மக்களிடம் அந்த புத்தரைப் பற்றிப் பேச ஆரம்பித்தோம். அவ்வூரைச் சேர்ந்த திரு விஸ்வநாதன், "உள்ளுரில் குளம் கட்டத் தோண்டும்போது இச்சிலையை எடுத்தாங்க. சிலை இருந்த இடத்தை பத்தன்குட்டை (புத்தன் குட்டை) என்றழைக்கிறார்கள். எடுக்கும்போது மூக்கு சரியில்லாம இருந்துச்சு. ஸ்தபதியை வச்சு அதைக் கொஞ்சம் சரிசெஞ்சோம். அப்புறம் இந்தச் சிலைக்கு ோயில் கட்டி  வழிபாடு நடத்தினோம். அப்புறம் கோயில் சிதைந்துபோச்சு. இப்பக்கூட வைகாசிப் பூர்மணிமாவின்போது சிறப்பு பூசை நடத்துகிறோம்" என்றார். அவ்வூரைச் சேர்ந்த திரு சிவகுருநாதன் அச்சிலையைப் பற்றிப் பெருமையாகக் கூறினார். "ணமாகாத பெண்கள் இச்சிலையைச் சுற்றி வந்தால் திருமணம் நடைபெறும்" என்று கூறிய அவர், மணமான தன் மகள் புத்தரின் அருகில் நின்ற நிலையில் உள்ள புகைப்படத்தைக் காண்பித்தார். சிலையின் நெற்றியிலும், மார்பிலும் திருநீறு பூசியுள்ளனர். புத்தர் சிலைகளில் பொதுவாகக் காணப்படும் மேலாடை, தலையில் தீச்சுடர் முடி, அமைதி தவழும் முகம், புன்னகையின் வெளிப்பாடு போன்ற கூறுகள் உள்ளன. தீச்சுடர் முடியும் மூக்கும் சற்று உடைந்த நிலையில் உள்ளன.  அனைத்தையும் பேசியபின்னர் எங்களுக்கு பசி நினைவிற்கு வந்தது. உள்ளூரில் புத்தரை வணங்கும் அந்த மக்கள் எங்களுக்கு  நீரும் ோரும் தந்து  உபசரித்தனர். எங்களது பயண அலுப்பும், பசியும் உடனே பறந்தன. புத்தர் மீதான அவர்களுடைய பக்தியும், எங்கள் மீது அவர்களுடைய அன்பும் எங்களை நெகிழச் செய்தன. சிறிது நேரம் அவர்களிடம் உரையாடிவிட்டு நாங்கள் மிதிவண்டியில் அங்கிருந்து புறப்பட்டு வடிவாய்க்கால் வந்துசேர்ந்தோம். "ஓர் ஆய்வாளனுக்கு உதவியது எனக்குப் பெருமையாக உள்ளது. இவ்வாறான வாய்ப்பு எனக்கு தந்ததற்காக நன்றி கூறுகிறேன்" என்றார் திரு சிங்காரவேலன். என் உடன் பயணித்து உதவி செய்த அவருக்கு நன்றி கூறினேன். வாடகைக்கு எடுத்த மிதிவண்டிகளை கடையில் வைக்கும்போது அக்கடைக்காரர் நாங்கள் சென்ற இடங்களைப் பற்றிக் கேட்டார். நான் கூறியதும் "25 கிமீ மிதிவண்டிகளிலேயே போய்விட்டு வந்துவிட்டீர்களே" ஆச்சர்யம் என்றார். அப்போதுதான் எனக்கு நாங்கள் சென்ற இடங்களும் தூரமும் தெரிந்தது. திரு சிங்காரவேலனிடம் கேட்டபோது, அவர் "உண்மைதான். நாம் சென்றுவந்த தூரம் சுமார் 25 கிமீ இருக்கும்" என்றார். அதைக் கேட்டவுடன் நான் வியந்தேன். லேசாக கால்கள் வலிப்பதைப் போல ஓர் எண்ணம் ஏற்பட்டது. உண்மையா? அல்லது அவர்கள் சொன்னதால் வந்த நினைப்பா என எனக்குத் தெரியவில்லை. பின்னர் அங்கிருந்து பேருந்தில் புறப்பட்டு மன்னார்குடி வழியாகத் தஞ்சாவூர் வந்து சேர்ந்தேன். வந்த பின்னர் இரு கால்களும் வீங்கி இரு நாள்கள் சிரமப்பட்டு நடக்க முடியாமல் சிரமப்பட்டேன். இருப்பினும் புத்தரைப் பார்த்த மகிழ்ச்சி எனது வலியைக் குறைத்தது. சில நாள்கள் கழித்து செய்தித்தாள்கள் மூலமாக இந்த புத்தரைப் பற்றிய செய்தி வெளியானது. 

இச்செய்தி தூர்தர்ஷன் தொலைகாட்சியிலும், சன் தொலைக்காட்சியிலும் வெளியானது. அப்போது வீட்டில் இணைய வசதி வீடுகளுக்கு பரவலாக கிடைக்காத நிலையில், இச்செய்தி தொடர்பான நறுக்கை இலண்டன் விக்டோரியா ஆல்பர்ட் அருங்காட்சியகக் காப்பாளர் ஜான் கய் அவர்களுக்கு அனுப்புவதற்காக இணைய மையத்திற்குச் சென்றேன். அங்கிருந்த பணியாளர் எனக்காக ஒரு மின்னஞ்சலை உருவாக்கித் தந்து அதனை அவருக்கு அனுப்பினார். அனுப்பும்போது அந்த சிலையைப் பற்றிய செய்தியை சென்னைத் தொலைக்காட்சியில் தான் பார்த்ததாகவும், தஞ்சையிலுள்ள சென்னைத் தொலைக்காட்சி நிருபர் தன்னுடைய தந்தை என்றும் அவர் கூறினார். பின்னர் அவரைக் கண்டு சந்தித்து, அவருக்கு நன்றி கூறினேன்.


டிசம்பர் 2008
நீலப்பாடி என்னுமிடத்திற்கு உறவினர் திருமணத்திற்காகச் சென்றபோது மறுபடியும் புதூர் செல்லும் வாய்ப்பு கிடைத்தது. வரலாற்று ஆர்வலர் குழுவின் முதன்மைச்செயலாளர் திரு இராமச்சந்திரன் உடன் வந்தார். அப்போதும் அந்த சிலை வழிபாட்டில் உள்ளதைக் காணமுடிந்தது. முந்தைய களப்பணியில் சந்தித்த திரு சிவகுருநாதனைச் சந்தித்தேன். அவர்  கடந்த முறை நான் வந்ததை நினைவுகூர்ந்தார். சிலையை உற்றுநோக்கும்போது அதன் கழுத்தில் டாலர் போன்ற அமைப்பு செதுக்கப்பட்டதைக் காணமுடிந்தது. உடைந்த மூக்கை சரிசெய்தபோது இவ்வாறான அமைப்பை அமைத்திருக்க வாய்ப்புண்டு. ள்ளூர் மக்களிடம் உரையாடிவிட்டுப் பின்னர் அங்கிருந்து கிளம்பினேன். தமிழகத்தில் புத்தர் வழிபாடு நடத்தப்பெறும் இடங்களில் புதூர் முக்கிய இடத்தைப் பெறுகிறது என்பதை களப்பணி மூலம் அறியமுடிந்தது.  

நன்றி
25 கிமீ என்னுடன் மிதிவண்டியில் துணைக்கு வந்து புத்தரைக் காண உதவிய மழவராயநல்லூர் சித்தார்த்தா சமூகக் கல்விக் கழகத்தைச் சேர்ந்த திரு சிங்காரவேலன்,  திரு விஸ்வநான், திரு சிவகுருநாதன், புூர் கிராம மக்கள், ரலாற்று ஆர்வலர் குழுவின் முதன்மைச் செயலாளர் திரு இராமச்சந்திரன் மற்றும் கீழ்க்கண்ட நாளிதழ்கள்.














-----------------------------------------------------------------------------------------------------------------------------------
In search of imprints of Buddha: Puthur, Tiruvarur district
Though many Buddha statues were identified in Tiruvarur district during field study, the finding of Puthur Buddha gets importance because of the journey I took to see it on a bicycle covering a distance of 25 kms alongwith Mr Singaravelan of Malavarayanallur who evinced much interest on the subject and left no stone unturned to see the Buddha, which was worshipped by the locals who had much faith on the Buddha. 

20 அக்டோபர் 2022இல் மேம்படுததப்பட்டது

Comments

  1. பல சிலைகள் கண்டெடுக்கப்பட்டபின், காணாமல் போய்விடும் இவ்வுலகில், சிலையின் மூக்கினை ஸ்தபதியை வைத்து சரிசெய்து வழிபட்ட, புதூர் மக்கள் போற்றப்பட வேண்டியவர்கள். இவர்களைப் போன்றவர்கள் எல்லா இடங்களிலும் இருந்திருப்பார்களேயானால், எவ்வளவோ தமிழர்களின் பொக்கிஷங்கள் பாழடிக்கப்படாமல், காப்பாற்றப் பட்டிருக்கும்.
    25 கி.மீ. மிதிவண்டிப் பயணம். கால் வீங்கிப் போகிற அளவிற்கு.
    தங்களின் களப்பணி வியக்க வைக்கின்றது ஐயா.

    ReplyDelete
  2. உள்ளூர் மக்கள் அதிகம் போற்றப்படவேண்டியவர்களே. அவர்களுடைய ஈடுபாடும் உணர்வும் அனைவருக்கும் தேவை. இத்தகைய விழிப்புணர்வு வரலாற்றைச் சிறந்த முறையில் அமைக்க உதவியாக இருக்கும். தங்களின் அன்பான வாழ்த்திற்கு நன்றி.

    ReplyDelete
  3. எவ்வளவு சிரமப்படுகிறீர்கள் ஐயா... பல அரிய தகவல்களுக்கு மிக்க மிக்க நன்றி... வாழ்த்துக்கள் பல...

    ReplyDelete
    Replies
    1. அடிப்படை ஆதாரங்களைத் தேடிச் செல்லும்போது பல்வேறு வகையான சிக்கல்களையும், சிரமங்களையும் எதிர்கொள்ளவேண்டியுள்ளது. இருப்பினும் இத்தகைய களப்பணிகள் வரலாற்றுக்குப் பெரும் பங்களிப்பு என்று நினைக்கும்போது மிகவும் பெருமையாக இருக்கிறது. வாழ்த்துக்கு நன்றி.

      Delete
  4. Hats off to the locals who retain and worship, whatever the form may be!

    ReplyDelete
    Replies
    1. During my two decade old field study I could get much information from local people. Thank you for your compliments.

      Delete
  5. Hearty Congrats for your dedicative work in search of the statue. The interest and focused mind to determine your aim is highly appreciable and respectable.

    Senthil Kumar , Ravikumar @ Thanjavur

    ReplyDelete
  6. இலக்கை நோக்கிச் செல்வதற்குத் தங்களைப் போன்றோரின் வாழ்த்துக்கள் உதவியாக இருக்கின்றன. நன்றி.

    ReplyDelete
  7. வலியொடு ஒரு வரலாறு......வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. ஒரு பொருண்மை தொடர்பாக வரலாற்றில் பதியப்பட அனைத்தையும் களப்பணியின்போது எதிர்கொள்ளவேண்டியுள்ளது. நன்றி.

      Delete
  8. அருமையான பதிவு.
    நன்றி.

    ReplyDelete
  9. Great work with passion. The people like you are treasure to our cultural heritage. Best wishes ever.

    ReplyDelete
  10. You are straining very much for the Research Activity. A day will come with colours. Congrats

    ReplyDelete
    Replies
    1. Since the day I engaged in reseach activities, every day is colourful to me. Thank you very much.

      Delete
  11. Bi cycle is very close to villages and as a serious researcher you have the courage to navigate with that.vehicle.Everything is new! congrats! dr.k.ravindran

    ReplyDelete
    Replies
    1. During my Pettaivaittalai field work I found it very difficult even to get a bicycle to see the nearby Buddha. But that was not the case with Puthur Buddha. Thank you.

      Delete
  12. அன்பின் ஜம்புலிங்கம் - அருமையான பதிவு - தங்களீன் கடும் உழைப்பும் ஈடுபாடும் பிரமிக்க வைக்கின்றன. - 20 ஆண்டு ஆய்வில் - தொடர்ந்து 25 கி.மீ மிதி வண்டியில் சென்று - புதூர் என்னுமிடத்தில் உள்ள புத்தரைக் கண்டு மகிழ்ந்து - ஆய்வினிற்குப் பயன் படுத்தியமை நன்று - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
    Replies
    1. மிதிவண்டிப் பயணத்தைத் தொடங்கியபோது புத்தரைப் பார்த்துவிடுவோம் என்ற நம்பிக்கை இருந்தபோதிலும் தொடர்ந்து சென்றபோது அந்நம்பிக்கை குறைந்தது. விடாமல் பயணத்தைத் தொடர்ந்ததால் புத்தரைப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. நன்றி.

      Delete
  13. அன்பின் ஜம்புலிங்கம் - ஏப்ரல் 1999 - புஷ்பவனம்- புத்தகரம் - இசெங்கத்தி - கடுவெளி - இங்கெல்லாம் புத்தரைத் தேடி அலைந்து புஷ்பவனப் புத்தரைக் காண திருத்துரைப் பூண்டி - திருவாரூர் - ஆலத்தம் பாடி நால்ரோடு எனப் பேருந்தில் பயனம் செய்து புதூரினை அடைந்து அங்கிருந்த புத்தரைப் பார்த்தது தங்களின் விடா முயற்சி - ஆய்வில் உள்ள ஈடுபாடு - கடும் உழைப்பு - பிரமிக்க வைக்கிறது. தனி ஒரு ஆளாய் களப்பணி ஆய்வு செய்தது பாராட்டுக்குரியது. நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
    Replies
    1. ஒவ்வொரு முறை செல்லும்போதும் வித்தியாசமான அனுபவங்களைப் பெறமுடிந்தது. சில சமயங்களில் எவ்விதப் பலனுமின்றித் திரும்பியதும் உண்டு. இருப்பினும் நுழைந்த ஒரு துறையில் தடம் பதிக்கவேண்டும் என்ற வேட்கை என் ஆய்வு வெளிவுலகிற்குத் தெரியக் காரணமானது. நன்றி.

      Delete
  14. அன்பின் ஜம்புலிங்கம் - சூன் 1999 - புதூரில் உள்ள புத்தரைக் காண ஒரு நண்பருடன் ஆளுக்கொரு மிதி வண்டியில்என்று படாத பாடு பட்டு - புத்தரைக் கண்டதற்குப் பாராட்டுகள். மணமாகாத பெண்கள் மணமாவதற்கு வழிபடும் புத்தர் - அரிய தகவல் - அலைந்து திரிந்து - கண்டே தீருவது என வைராக்கியத்துடன் சிரமம் கருதாது சென்று பார்த்தது நன்று நன்று. - 25 கி.மீ மிதி வண்டிப் பயனத்தில் கால்கள் வீங்கி இரு நாட்கள் அல்லல் பட்டு - ஆய்வினைச் செய்ததற்குப் பாராட்டுகள் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
    Replies
    1. மிதிவண்டிப் பயணம் முடிந்து புத்தரைப் பார்த்தபின் உள்ளூர் மக்கள் மிக அன்பாக நடந்துகொண்டனர். ஒரு மூதாட்டி தட்டில் கீரைக் கூட்டும், மோரும் தந்து உபசரித்ததை மறக்கமுடியாது.

      Delete
  15. அன்பின் ஜம்புலிங்கம் - தம்ம பதம் 17 பாடல் விளக்கம் நன்று - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
    Replies
    1. ஐயா, உங்களின் வரவும் வாழ்த்தும் எனக்கு மகிழ்ச்சியைத் தருகிறது. களப்பணியைப் பற்றியே எழுதிவந்தபோது ஒரு நண்பர் பௌத்தத் தத்துவங்கள் அல்லது புத்தரது அறிவுரைகளை எழுத அறிவுறுத்தினார். அதன்படி விடாமல் தொடர்ந்து எழுதுகிறேன். அன்புக்கு நன்றி. ஜம்புலிங்கம்.

      Delete
  16. ஆய்வுப் பணி முன்னேற்றங்கள் ஒவ்வொரு கூறிலும் தெரிகிறது.வாழ்த்துக்கள் - அ.கலைமணி

    ReplyDelete
    Replies
    1. எனது ஒவ்வொரு பயணம் பற்றிய அனுபவத்திற்கும் தாங்கள் இடும் இடுகை சிறப்பாக உள்ளது. தங்களின் அன்பான பாராட்டுக்கு நன்றி.

      Delete
  17. புத்தரை தேடி புதுர்ர் சென்ற உங்களது பயணம் வெற்றியடைய உதவிய சிங்கார வேலன் போன்றோரின் ஆர்வம். கிராமத்து மக்களின் உபசரிப்பு, திருமணமாவதற்கு பெண்கள் புதுர்ர் புத்தரை வழிபடுவது போன்றவை அறிந்து மகிழ்ச்சி. புத்தரை நோக்கி உங்களது பயணங்க்ள் தொடர வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. வழிப்பயணத்தில் இவ்வாறு துணை இருப்பவர்களால் அதிகமான செய்திகளை அறியமுடிந்தது. தற்போது உங்களைப் போன்ற நண்பர்களால் என் எழுத்துப் பயணம் சிறப்பாக அமைகிறது. தொடர்ந்து உடன் வர அழைக்கிறேன்.வாருங்கள். நன்றி.

      Delete
  18. உங்களுக்குத்தகவல் வந்து புத்தர் சிலையைக் காணப் போகிறீர்கள் என்றால் அப்புத்தர் சிலை பற்றி ஏற்கனவே செதிகளும் வரலாறும் தெரிந்த்ததாக இருக்குமா.புதியதாய் யாரும்காணாதடைக் கண்ட அனுபவத்துக்கு அது ஈடாகுமா. ?

    ReplyDelete
    Replies
    1. வரலாற்றறிஞர் மயிலை சீனி.வேங்கடசாமி 1940இல்எழுதிய பௌத்தமும் தமிழும் என்ற நூலை அடிப்படையாக வைத்துக்கொண்டும், அவருக்குப் பின்னர் ஆய்வாளர்களால் கண்டுபிடிக்கப்பட்ட ஆதாரங்களைக் கொண்டும் களப்பணி மேற்கொள்ளப்பட்டது. இவ்வாறான களப்பணிகளில் கடந்த 20 ஆண்டுகளில் 15 புத்தர் சிலைகளும் 12 சமணர் சிலைகளும் என்னால் தனியாகவும், நண்பர்கள் துணையோடும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன என்பதைப் பகிர்வதில் மகிழ்கிறேன். நன்றி.

      Delete

Post a Comment