களப்பணியில் கண்டுபிடிக்கப்பட்ட புத்தர் சிலைகள் (1993-2012) : திருவாரூர் மாவட்டம்
![]() |
முதல் அமர்வு (அமர்வின் தலைவர்) |
![]() |
நான்காம் அமர்வு (கட்டுரை வழங்கும் முன்) |
![]() |
நான்காம் அமர்வு (கட்டுரை வழங்கியபின்) |
களப்பணியில் கண்டுபிடிக்கப்பட்ட புத்தர் சிலைகள் (1993-2012)
புத்தர் சிலையைப் பார்க்கச் சென்றபோது கிடைத்த அனுபவம் பற்றி ஒவ்வொரு மாதமும் முதல் நாள் விவாதிக்கப்பட்டு வருகிறது. இந்த மாதம் ஒவ்வொரு மாவட்டத்திலும் புதிதாக என்னால் தனியாகவும், பிற அறிஞர்கள் துணையுடனும் 1993இல் பௌத்த ஆய்வு தொடங்கிய நாள் முதல் 2012 வரை கண்டுபிடிக்கப்பட்ட புத்தர் சிலைகளைப் பார்க்க அழைத்துச்செல்ல விரும்புகிறேன். 20 ஆண்டுகளில் அதிகமாகப் புத்தர் சிலைகள் பார்த்த இடமான திருவாரூர் மாவட்டத்திற்கு முதலில் அழைக்கிறேன்.வாருங்கள் பயணிப்போம்.
புதூர் (2000)
குடவாசல் (2002)
திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே சீதக்கமங்கலம் என்னுமிடத்தில் அழகான புத்தரின் தலைப்பகுதி இருப்பதாக திரு கோவிந்தராஜன் தந்த செய்தியின் அடிப்படையில் அச்சிலையைக் காணமுடிந்தது. நெற்றியில் திலகக்குறி, நீண்டு வளர்ந்த காதுகள், உடைந்த நிலையில் தலையில் தீச்சுடர், புன்னகை தவழும் உதடுகள், அமைதியான கண்கள் ஆகியவற்றோடு இச்சிலை இருந்தது.
திருநாட்டியத்தான்குடி (2003)
முனைவர்
குடவாயில் பாலசுப்பிரமணியன், திரு வி.கண்ணன் ஆகியோர் துணையுடன்
மேற்கொள்ளப்பட்ட களப்பணியின்போது திருவாரூர் மாவட்டம்
திருநாட்டியத்தான்குடியில் மூங்கில் தோப்பில் ஒரு புத்தர் சிலை
கண்டுபிடிக்கப்பட்டது. அமர்ந்த் நிலையில் தியான கோலத்தில் உள்ள இச்சிலையின்
வலது கையும், கழுத்தும், முகமும் சற்றுச் சிதைந்த நிலையில் உள்ளன. உள்ளங்கையில் தர்மசக்கரம் காணப்படுகிறது.
இப்பகுதியில் மழை வராமலிருக்கும்போது, மழை பெய்வதற்காக இச்சிலைக்கு எருக்க
மாலை அணிவித்து கற்பூரம் ஏற்றினால் மழை வந்துவிடும் என உள்ளூரில்
நம்புகிறார்கள்.
உள்ளிக்கோட்டை (2004)
தவத்திரு மாதவகுமாரசுவாமிகள் கூறிய செய்தியின் அடிப்படையில்அவருடைய துணையுடன் மன்னார்குடி அருகே உள்ளிக்கோட்டை என்னுமிடத்தில் ஒரு புத்தர் சிலையைக் காணமுடிந்தது. உள்ளிக்கோட்டையில் வயற்பகுதியில் ஆடுமாடுகள் திரிந்துகொண்டிருந்த
இடத்தில் முன்னர் அச் சிலை இருந்ததாகவும், அவ்விடத்தை செட்டியார்
மேடு என்றழைத்ததாகவும் களப்பணியின்போது கூறினர். செட்டியார் குதிரையில் வந்ததாகவும், திருடர்கள்
அவரை வழி மறிக்கவே அவர் கல்லாக மாறிவிட்டார் என்றும், சிலர் இராஜகுமாரன் குதிரையில் வந்ததாகவும் பின்னர் கல்லாக மாறிவிட்டதாகவும் கூறினர். தீச்சுடர் வடிவிலான தலைமுடியும், மூக்கின் பகுதியும், காலின் ஒரு பகுதியும், கைகளும் உடைந்த நிலையில் இருந்தன. செப்டம்பர் 2012இல் அவ்விடத்தில் புத்தர் சிலை இல்லை. அருகில் விசாரித்தபோது புத்தர் மாயமாக மறைந்துவிட்டதாகக் கூறினர் தங்கள் ஊரின் பெயரையும் பெருமையையும் வெளிவுலகிற்கு வெளிப்படுத்திய புத்தர் தங்களை விட்டுப் பிரிந்தது மீளாத் துயரத்தில் ஆழ்த்திவிட்டதாக உள்ளூரில் கூறினர்.
வளையமாபுரம் (2007)
1993இறுதியில் வலங்கைமான் பகுதியில் புத்தர் சிலை இருப்பதாகச் செய்தி கிடைத்தது. இருப்பினும் அதிகமான களப்பணிகளுக்குப் பின்னர் 2007இல் மேற்கொண்ட களப்பணியின்போது அமர்ந்த நிலையில் தியான கோலத்தில் ஒரு சிலை வளையமாபுரத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. இச்சிலை சோழ நாட்டில் காணப்படுகின்ற பிற புத்தர் சிலைகளுக்குரிய கூறுகளான அகன்ற மார்பு, பரந்த தோள்கள், வலது கையில் தர்மசக்கரக்குறி, மார்பிலும் இடுப்பிலும் ஆடை போன்ற கூறுகளைக் கொண்டுள்ளது. இச்சிலை வயலில் காணப்பட்டது. அருகில் தலைப்பகுதி அண்மைக்காலம் வரை இருந்ததாகக் களப்பணியின்போது கூறினர். அதனைத்தேட முயற்சி மேற்கொண்டும் பலனளிக்கவில்லை. பெரம்பலூர் அருகே ராயம்புரம், திருச்சி அருகே கீழக்குறிச்சி ஆகிய இடங்களிலும் தலையில்லாத புத்தர் சிலைகளைக் களப்பணியின்போது காணமுடிந்தது.
கண்டிரமாணிக்கம் (2012)
கண்டிரமாணிக்கம் என்னுமிடத்தில் முனைவர் குடவாயில் பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட குழுவினருடன் மேற்கொண்ட களப்பணியின்போது அமர்ந்த நிலையில் தியான கோலத்திலான அந்தப் புத்தர் சிலையைக் காணமுடிந்தது. மேட்டுத்தெருவில் ஒரு வீட்டுக் கட்டமானப்பணியின்போது சுமார் ஆறு அடி ஆழத்தில் இச்சிலை இருந்ததாகக் கூறினர். புத்தர் சிலையை வீட்டின் முன்பாக வைத்து உள்ளூர் மக்கள் வழிபட்டதைக் காணமுடிந்தது. எலுமிச்சம்பழ மாலை மற்றும் மலர்மாலை அணிவித்து நெற்றியில் சந்தனம், குங்குமம் இட்டிருந்தனர். சிலையின் முன் தீபம் ஏற்றப்பட்டிருந்தது. அருகில் விபூதி, குங்குமம் வைக்கப்பட்டிருந்தது. உள்ளூர் மக்கள் புத்தரை வணங்கிச்சென்றதைக் காணமுடிந்தது. சோழ நாட்டில் காணப்படுகின்ற பிற புத்தர் சிலைகளைப் போலவே இதுவும் கி.பி.10-11ஆம் நூற்றாண்டைச் சார்ந்ததாகும். இச்சிலை புன்னகை தவழும் இதழ்கள், நெற்றியில் திலகக்குறி, நீண்டு வளர்ந்த காதுகள், பரந்த மார்பில் காணப்படும் மேலாடை, இடுப்பில் ஆடை ஆகிய கூறுகளுடன் உள்ளது. வானோக்கி உள்ள வலது கையில் தர்ம சக்கரக்குறி காணப்படுகிறது. தலையில் சுருள்முடிக்கு மேல் தீச்சுடர் உள்ளது. மூக்கு சிதைந்த நிலையில் உள்ளது. பல ஆண்டுகளாகப் புதையுண்டு அண்மையில் தோண்டியெடுக்கப்பட்ட இந்த அழகான புத்தர் சிலை சில நாள்களுக்குள் கண்டிரமாணிக்கத்திலிருந்து திருவாரூர் அருங்காட்சியகத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டதைக் களப்பணியின்போது அறியமுடிந்தது.
சோழ நாட்டில் திருவாரூர் மாவட்டத்தில்தான் அதிக எண்ணிக்கையிலான புத்தர் சிலைகள் இந்த 20 ஆண்டுகளில் மேற்கொண்ட களப்பணியின்போது கண்டுபிடிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

-------------------------------------------------------------------------------------------
24 மார்ச் 2013இல் சென்னையில் நடைபெற்ற தமிழ்ப் பண்பாட்டில் பௌத்தம் கருத்தரங்கில் அளிக்கப்பட்ட
கட்டுரையின் மேம்படுத்தப்பட்ட வடிவம்.
படங்கள் நன்றி: திரு ஈ. அன்பன்
-------------------------------------------------------------------------------------------
16 மார்ச் 2025இல் மேம்படுத்தப்பட்டது.
கழுத்தற்றும் அங்கங்கள் சிதைந்தும் புத்தர் சிலைகள் இருப்பது, மதச் சண்டைகளின் விளைவாகவே என்று எண்ணுகிறேன். எனினும், இருப்பவற்றை இருக்கின்ற நிலையியேனும் அந்தந்த ஊரினர் பாதுகாக்கவேண்டியது அவசியம்.
ReplyDeleteமக்கள் தெய்வங்களை மதங்களைக் கடந்து போற்றுகின்றார்கள், வணங்குகின்றார்கள் என்பதனையே புத்தருக்கு திருநீறு பூசி வணங்கும் வழக்கம் காட்டுகின்றது என்று எண்ணுகின்றேன்.
ReplyDeleteகருத்தரங்கப் படங்கள் அருமை. வாழ்த்துக்கள். நன்றி
களப்பணியில் கண்டுபிடிக்கப்பட்ட புத்தர் சிலைகள் (1993-2012)-திருவாரூர் மாவட்டம் - Dr B Jambulinam அவர்களின் அருமையான கட்டுரை. எனது பக்கத்தில் பகிர்கிறேன்.
ReplyDeleteநன்றி Dr B Jambulinam