பௌத்த சுவட்டைத் தேடி : வலிவலம்

திருவாரூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட களப்பணியின்போது புதூர் (2000), குடவாசல் (2002), திருநாட்டியத்தான்குடி (2003), உள்ளிக்கோட்டை (2004), வளையமாபுரம் (2007) மற்றும் கண்டிரமாணிக்கம் (2012) ஆகிய இடங்களில்  புத்தர் சிலைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவற்றுள் புதூர் புத்தரைக் கண்டுபிடிக்க 25கிமீ மிதிவண்டியில் பயணிக்க வேண்டியிருந்தது. வளையமாபுரம் புத்தரைப் பற்றி 1993இல் ஆய்விற்காகப் பதிவு செய்தபோதே கேள்விப்பட்டபோதிலும், அச்சிலையைத் தேடிக் கண்டுபிடிக்கும் வாய்ப்பு 2007இல் கிடைத்தது. பிற சிலைகள் நண்பர்களும், அறிஞர்களும் கூறிய தகவல்களின் அடிப்படையில் கண்டு பிடிக்கப்பட்டவையாகும்.

ஜூன் 2009
ஒவ்வொரு முறையும் ஒரு தகவல் அடிப்படையில் புத்தரைக் காணும் வாய்ப்பு கிடைத்தபோதும், சில சமயங்களில் களப்பணியில் சென்று புத்தரைக் காணாமல் திரும்பியதும் உண்டு. அவ்வாறான ஒரு சூழல் திருவாரூர் மாவட்டத்தில் மேற்கொண்ட களப்பணியின்போது ஏற்பட்டது. நாகப்பட்டினம் பகுதியில காடம்பாடி அருகே ஒரு புத்தர் சிலை இருப்பதாக ஒரு நண்பர் கூறியதன் அடிப்படையில் களப்பணி மேற்கொண்டபோது காடம்பாடியிலோ அருகிலோ புத்தர் சிலையோ, சிலை இருந்ததற்கான தடயமோ காணப்பெறவில்லை.  அச்சிலையைத் தேடிக் கொண்டிருக்கும் போது திரு வீரபத்ரன் என்பவர் கீவளூர்-கச்சனம் சாலை அருகே வலிவலம் என்னுமிடத்தில் ஒரு புத்தர் சிலை இருப்பதாகக் கூறினார். களப்பணியின்போது இவ்வாறாகப் புதிய செய்திகளை பலமுறை பெற்ற அனுபவம் உண்டு.

நாகப்பட்டினம் வரலாற்று ஆர்வலர் குழுவைச் சேர்ந்த திரு இராமச்சந்திரன், அப்பகுதியில் எனது ஆய்வில் மிகுந்த ஆர்வம் காட்டிவரும் ஒரு பெரியவரை அறிமுகப்படுத்தியிருந்தார். பத்திரிக்கைகளில் வெளிவரும் எனது கண்டுபிடிப்புகளைப் பற்றியும், ஆய்வைப் பற்றியும் அப்பெரியவர் அவ்வப்போது தம் கருத்துக்களைக் கூறிவந்தார். இந்தப் பயணத்தின்போது அவரைச் சந்திக்கச் சென்றேன்.  
 
அஞ்சல் துறையிலிருந்து ஓய்வு பெற்ற, வரலாற்றார்வம் கொண்ட அப்பெரியவர் 71 வயதான திரு சௌந்தரராஜன் அவர்கள். அவரைச் சந்தித்துப் பேசிக்கொண்டிருக்கும்போது களப்பணியில் என்னுடன் சேர்ந்துகொள்வதாக தன் விருப்பத்தைக் கூறினார். களப்பணி மேற்கொள்ள இது ஒரு சிறந்த வாய்ப்பு என்றும், இவ்வாறான ஒரு நாளை ஆவலோடு எதிர்பார்த்திருந்ததாகவும் கூறினார். அவருடைய துணையுடன் வலிவலம் நோக்கி ஒரு ஆட்டோவில் கிளம்பினோம்.

செல்லும் வழியில் ஆங்காங்கே புத்தர் சிலை பற்றி ஏதாவது செய்தி கிடைக்கிறதா என்று விசாரித்துக் கொண்டே வந்தேன். நான் எதிர்பார்த்த மறுமொழி எங்கும் கிடைக்கவில்லை. உடன் வந்த அவரும் எப்படியாவது ஒரு புத்தரைப் பார்த்துவிட வேண்டும் என்ற ஆவலில் என்னுடன் பயணித்துக் கொண்டிருந்தார். வழியில் ஒருவர் வெள்ளையாற்றங்கரையில் புத்தர் இருப்பதாகக் கூறினார். சிறிது தூரம் அலைந்த எங்களுக்கு அச்செய்தி தெம்பைத் தந்தது. எங்களது பயணம் தொடர்ந்தது. இறுதியாக வெள்ளையாற்றங்கரை வந்து சேர்ந்தோம். ஆட்டோவை ஒரு ஓரமாக நிற்கவைத்துவிட்டு இறங்கினோம். அவரை ஆட்டோவில் அமர்ந்திருக்கச் சொல்லிவிட்டு சிலையைப் பார்க்க நான் கிளம்பினேன். எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் நடக்கத் தயார் என்று கூறிக் கொண்டு அவரும் என்னுடன் நடக்க ஆரம்பித்தார். வரலாற்றின்மீதான அவரது ஆர்வம் என்னை ஈர்த்தது. ஆங்காங்கு விசாரித்து நடந்துகொண்டிருந்தபோது சாலைப்பணி முடித்துச் சென்றுகொண்டிருந்த சில பணியாளர்கள் ஒரு குறிப்பிட்ட இடத்தில் புத்தர் சிலை இருப்பதாகக் கூறினர். சிறிது நேரத்தில் அவ்விடத்தை அடைந்தோம். ஒரு கல் குப்புறக் கிடந்தது. அதுதான் புத்தர் என்று அவர்கள் கூறியுள்ளனர். மேலும் ஒருவரை உதவிக்கு அழைத்தோம். கடப்பாரை, மண்வெட்டி சகிதமாக சிலையைப் புரட்ட ஆரம்பித்தனர். அக்கல்லைப் பின்புறத்திலிருந்து பார்த்தபோது புத்தரைப் போல அமைப்பு இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. இருப்பினும் முழுமையாகப் பார்த்தால்தான் உண்மைநிலை புரியும் என்று சிலையைப் புரட்டும் முயற்சியில் இறங்கினோம். உடன் வந்த பெரியவருக்கு எப்படியும் அது புத்தராக இருக்கவேண்டும் என்ற ஆவல்.  சிலையை முழுமையாக வெளியே கொணர்ந்தபோது அது புத்தர் இல்லை என்பது தெரியவந்தது. அது ஒரு அய்யனார் சிலை. அய்யனாரை புத்தர் என்று அப்பகுதியில் கூறிவந்திருப்பார்கள் என்பதை அறிந்தேன். சிலையை வெளிக்கொணர உதவிய பணியாளர்களுக்கு பணம் கொடுத்தபோது அவர்கள் வாங்க மறுத்துவிட்டனர். 

எங்கள் பகுதிக்கு ஆவலோடு நீங்கள் வந்து இவ்வாறு தேடும்போது உங்களுக்கு உதவி செய்ததைப் பெருமையாக கருதுகிறோம் என்றும்,  இனி அந்த சிலையை அய்யனார் என்றே கூறுவோம் என்றும் கூறினர். பின்னர் அருகில் அந்த அய்யனாரை அழகாக அமர வைத்துவிட்டு அங்கிருந்து கிளம்பினோம். புத்தரைப் பார்க்கமுடியவில்லை என்ற குறை இருந்தபோதிலும, ஒரு பெரியவர் வரலாற்றின்மீதும், ஆய்வின்மீதும் காட்டிய ஈடுபாட்டை அறிந்த எனக்கு நிறைவே.

-------------------------------------------------------------------------------------------
நன்றி: திரு சௌந்திரராஜன், திரு இராமச்சந்திரன், திரு வீரபத்ரன்
------------------------------------------------------------------------------------------- 

15 மார்ச் 2025இல் மேம்படுத்தப்பட்டது. 

Comments

  1. Experience gains knowldge என்பார்கள். இந்த அனுபவத்தின் மூலம் தங்களுக்குக் கிடைத்த வாழ்வியல் சிந்தனைகள் என்ன?
    அன்புடன்
    கலைமணி

    ReplyDelete
  2. புத்தர் சிலையைத் தேடி கடைசியில் அய்யனார் சிலையைக் கண்டுபிடித்ததில் ஏமாற்றம்தான்..இருப்பினும் உங்கள் முயற்சி திருவினையாக்கும்..அனுபவம் நன்கு இருந்தது. அதைவிட இன்னும் 2 நாளில் மகனின் திருமணம்..இப்போதும்கூட புத்தர் பற்றியே ஞாபகம்தான் என்னை ஆச்சரியப்படவைக்கிறது..

    கே கே ரமேசுபாபு

    ReplyDelete
  3. தேடியது புத்தரை, மீட்டது அய்யனாரை. இன்னும் இரு நாட்களில் தங்களின் மகனுக்குத் திருமணம். இருந்தபோதிலும், பதிவு நாள் தவறாமல் வெளிவருகினறது.தங்களின் விடா முயற்சி வியக்க வைக்கின்றது அய்யா

    ReplyDelete
  4. திருமணம் நடைபெறுகின்ற நிலையிலும் தங்களுடைய புத்தர் கண்டுபிடிப்பு தொடர்பான பணி நடைபெறுவது மிகவும் சிறப்பு. மேலும் மேலும் பல இடங்களுக்குச் சென்று தங்கள் பணி தொடரலாம்.

    து.நடராஜன்

    ReplyDelete

  5. என் அஞ்சல் பெட்டியில் உங்களது இந்தப் பதிவு பற்றிக் கண்டேன். முதலில் அசட்டையாக இருந்த நான் மீண்டும் பெட்டியில் செய்தி வந்தபோது ஆர்வம் உந்த வாசித்தேன். எனக்கும் ஆர்க்கியாலஜியில் ஆர்வம் உண்டு. பல கலைக் கோயில்களைக் காணும்போது அவை எழுப்பப்பட்ட காலத்தின் சிந்தனைகள் ஓடும். கல்வெட்டுக்களைக் கொண்டு சரித்திரம் தெரிந்து கொள்கிறார்கள். உங்களைப் போன்றவர்களின் அயராத பணியே நம் சரித்திரத்தை நமக்குக் காட்டுகிறது. அண்மையில் திருப்பரங்குன்றத்தில் கிடைத்த, எழுதப்பட்ட எழுத்துக்கள் பற்றிப் படித்தேன். நான் மதுரை சென்றிருந்தபோது, அதைக்காண வேண்டும் என்ற ஆவல் இருந்தது. ஆனால் செயல்பட முடியாதபடி வயது தடுத்தது. உங்கள் பணியில் நீங்கள் மேலும் மேலும் தடயங்க்ள் கண்டு சரித்திரம் தெளிவிக்க வேண்டுகிறேன். வாழ்த்துக்கள்.

    ReplyDelete

Post a Comment