பௌத்த சுவட்டைத் தேடி : ஜெய்ப்பூர்

எனது ஆய்வைப் பற்றிப் பலர் நேரிலும், தொலைபேசி வழியாகவும், கடிதங்கள் வாயிலாகவும் கருத்துக்கள் கூறிவருகின்றனர். அவற்றில் புதிய செய்திகளும், வாழ்த்துச்செய்திகளும் காணப்படும். அவ்வாறான ஒரு பதிவில் நான் மறக்க முடியாதது ஜெய்ப்பூரைச் சேர்ந்த ஒரு பெரியவர் எழுதிய கடிதங்கள். 17 சூலை 2004 நாளிட்ட அவுட்லுக் இதழில் எனது ஆய்வை மேற்கோள் காட்டி வெளிவந்த கட்டுரையைப் படித்த, ஜெய்ப்பூரைச் சேர்ந்த பேராசிரியர் மிட்டல் எனக்கு எழுதிய கடிதங்களில் உள்ள செய்திகளை உங்களோடு பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.   

கடிதம் நாள் 31.7.2004
பேரா.என்.எஸ் மிட்டல்  4/190 எஸ் எப் எஸ் அகர்வால் பார்ம்,
மான்ஸரோவர், ஜெய்ப்பூர், தொலைபேசி 0141-2400233

அன்புள்ள டாக்டர் ஜம்புலிங்கம்,
   உங்களுடைய முனைவர் பட்ட ஆய்வின் தலைப்பு சோழ நாட்டில் பௌத்தம் என்பதையறிந்தேன். அது என்னுள் ஓர் ஆர்வத்தை உண்டாக்கிவிட்டது. இந்த ஆய்வு தொடர்பான உங்களது கணிப்புகளையும், முடிவுகளையும், கண்டுபிடிப்புகளையும், (இயலுமாயின்) சில புத்தர் சிற்பங்களின் வண்ணப் புகைப்படங்களையும்  எனக்கு அனுப்பிவைக்கும்படி மிகவும் ஆவலோடு கேட்டுக்கொள்கிறேன்.  தொடர்புடைய உள்ளூர் பழக்க வழக்கங்களையும் நம்பிக்கைகளையும் அனுப்பிவைக்க வேண்டுகிறேன். இப்பொருண்மை தொடர்பாக 19 சூலை 2004 நாளிட்ட அவுட்லுக் இதழில் ஒரு கட்டுரையினைப் படித்தேன். இது தொடர்பாக சற்றே வித்தியாசமானதாகவும், முழுமையானதாகவும் உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறேன். நான் அவற்றை வட இந்தியாவிலிருந்து வெளிவரும் சில இந்தி செய்தித்தாள்களிலும், பருவ இதழ்களிலும் வெளியிட விரும்புகிறேன். உங்களிடமிருந்து பெறப்படும் செய்திகளுக்கும், புகைப்படங்களுக்கும் உரிய ஒப்புகையினைக் கட்டுரையில் அளித்துவிடுவேன்.
அத்துடன் உங்களுடைய ஒரு புகைப்படத்தையும், வாழ்க்கைக் குறிப்பையும் அனுப்பிவைக்க வேண்டுகிறேன்.  அது எனக்கு மகிழ்ச்சியைத்தரும். எனக்கு 80 வயதாகிறது. நான் ஒரு சுதந்திரப்போராட்ட தியாகி. ஆன்மிக நாட்டம் கொண்டவன். உங்களுக்கு என் ஆசீர்வாதங்கள். நவீன கால புத்தனான மகாத்மா காந்தியுடன் 1944 முதல் 1948 வரை வாழும் பேறு பெற்றவன். 
தங்களுடைய உடல் மன நலத்திற்கு என் வாழ்த்துக்கள்.
அன்பான வணக்கங்களுடன், 
தங்கள் உண்மையுள்ள,
என்.எஸ்.மிட்டல்

டாக்டர் பா.ஜம்புலிங்கம்
மே/பா பதிவாளர்,
தமிழ்ப்பல்கலைக்கழகம், தஞ்சாவூர் 613 001

பேராசிரியர் மிட்டல் எழுதிய முதல் கடிதத்தின் முதல் பக்கம்

பேராசிரியர் மிட்டல் எழுதிய முதல் கடிதத்தின் இரண்டாம் பக்கம்

அவரது கடிதத்திற்கு 6.8.2004இல் இடைக்கால மறுமொழியும் 10.8.2004இல் விரிவான மறுமொழியும் எழுதினேன். அதற்கு அவர் அனுப்பிய மறுமொழி (கடிதம் பெற்ற நாள் 19.8.2004)
அன்புள்ள ஜம்புலிங்கம்ஜி,
நீங்கள் அனுப்பிய  அஞ்சலட்டைக்கும், தொடர்ந்து அனுப்பிய விரிவான கடிதத்திற்கும் என் நன்றி. உங்களுடைய ஒத்துழைப்பு மனப்பாங்கும், பண்பும் என்னைக் கவர்ந்துவிட்டன. உங்களுடைய முனைவர் பட்ட ஆய்வேட்டிலிருந்தும், நீங்கள் எழுதிய கட்டுரைகளிலிருந்தும் குறிப்பிடத்தக்க சில செய்திகளின் ஆங்கில மொழிபெயர்ப்பை எனக்கு அனுப்ப வேண்டுகிறேன்.
1.தஞ்சாவூர், நாகப்பட்டினம் கும்பகோணம், காவிரிக்கரை உள்ளிட்ட சோழ நாட்டில் பௌத்தம் இருந்ததற்கான சான்று.
2. பௌத்தம் தொடர்பான நம்பிக்கைகள், வழிபாடு மற்றும் சோழ நாட்டில் காணப்படுகின்ற புத்தர் சிலைகள் மற்றும் புத்தர் செப்புத்திருமேனிகள்.
3. பௌத்தர் அல்லாதோரால் புத்தர் சிற்பங்களும் கோயில்களும் அப்பகுதியில் எவ்வாறு மதிக்கப்படுகின்றன?
4. சைவர்களின்மீது பௌத்தம் எவ்வகையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது? எந்த வழியில்?
5.இவற்றை உறுதி செய்யும் வகையில் உரிய புத்தர் சிற்பங்கள் மற்றும் புத்தர் செப்புத்திருமேனிகளின் வரைபடங்களையும், புகைப்படங்களையும் இணைப்பது நலம். (அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளவை உட்பட)
6. உங்களின் பங்களிப்பு.
  மேற்கண்டவற்றின் அடிப்படையில் நான் கட்டுரை எழுத விரும்புகிறேன். உங்களது அதிகமான பணிகளுக்கிடையே இவற்றை நான் கேட்பது சற்று மிகையே. வரைபடங்கள் மற்றும் புகைப்படங்களுக்குரிய செலவினத்தைத் தெரிவியுங்கள். அச்செலவுத்தொகையை நான் அனுப்பிவைக்கிறேன். 
உங்களுடைய ஒத்துழைப்பு மனப்பான்மைக்கு நன்றிகூறுவதில் பெருமைகொள்கிறேன். எனக்கு 80 வயதாகிறது. அப்பகுதியைப் பார்வையிட இறைவன் எனக்கு அருள் தந்தானேயானால் நான் உங்களைப் பார்க்க, நேரில் பார்க்க விரும்புகிறேன். உங்களுக்கும் எனக்குமிடையே ஒரு பொதுமைக்கூறு இருப்பதாக எண்ணுகிறேன்  - மகரிஷி ராமன், நான் சொல்வது சரியா? நீங்கள் ஓர் உண்மையான ஆய்வாளர். எனது அன்பை உங்களது துணைவியாருக்கும், குழந்தைகளுக்கும் தெரிவியுங்கள். 
ஹரி ஓம், 
தங்கள் அன்புள்ள, என் எல்.மிட்டல்  
அவரது கேட்ட விவரங்களை 30.8.2004, 27.9.2004 மற்றும் 30.10.2004 நாளிட்ட கடிதங்களின்படி அனுப்பியிருந்தேன். அதற்கு அவர் அனுப்பிய மறுமொழி (கடிதம் நாள் 5.11.2004)
அன்புள்ள டாக்டர் ஜம்புலிங்கம்,
நீங்கள் அன்போடு அனுப்பிய பிற கோயில்களில் புத்தர் சிலைகள் என்ற தலைப்பிலான கட்டுரைக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். இந்தக் கலியுகத்திலும் என்னைப் போன்ற வயதானவனுக்காக முயற்சி எடுத்தது எனக்கு மகிழ்வைத் தருகிறது. உங்களுக்கு நான் எதைத் தர முடியும், எனது ஆசீர்வாதத்தைத் தவிர?  இக்கட்டுரையின் இந்தி வடிவத்தைத் தயாரித்து, அது வெளிவரும் இதழின் படியை உங்களுக்கு அனுப்புவேன். கட்டுரைக்கு மெருகூட்டும் வகையில் ஆர்ட் தாளில் வெளியிடும் அளவு மிக அழகான புகைப்படங்களுக்காகக் காத்திருக்கிறேன். அத்தகைய புகைப்படங்களை உங்களால் அனுப்பமுடியும் என்பது என் நம்பிக்கை.  ஆறு புகைப்படங்களையாவது அனுப்பிவையுங்கள். அதற்கான தொகையை நான்  அனுப்பிவைக்கிறேன். உங்கள் குடும்பத்தினரின் நலனை அறிய ஆவலாக இருக்கிறேன். உங்கள் அனைவருக்கும் என் வாழ்த்தும் ஆசீர்வாதங்களும்.  
வாழ்த்துக்களுடன், 
தங்கள் உண்மையுள்ள, என் எல்.மிட்டல்


அவர் கேட்டபடி புத்தர் புகைப்படங்களை எனது 19.11.2004 நாளிட்ட கடிதத்தின்படி அனுப்பியிருந்தேன். அவற்றைப் பெற்றதை உறுதி செய்யுமாறு 16.12.2004இலும், 11.2.2005இலும் நினைவூட்டி கடிதம் எழுதினேன். அவரிடமிருந்து மறுமொழி இல்லை. பின்னர் தொலைபேசியில் தொடர்பு கொள்ள முயன்றேன். இணைப்பு கிடைக்கவில்லை. ஒவ்வொரு முறையும் கோப்பைப் புரட்டும்போது அவரது கடிதங்களைத் திரும்பத் திரும்பப் படிக்கிறேன். 80 வயது பெரியவர் (தற்போது 88 வயதாகியிருக்கும்) எனது ஆய்வில் வைத்த ஆர்வத்தையும், அவரது ஈடுபாட்டையும் என்னால் என்றுமே மறக்கமுடியாது. இவரைப் போன்றோரின் வாழ்த்துக்களுடன் எனது பயணம் தொடரும். 

In search of imprints of Buddhism: Jaipur
I get feedback from friends and well wishers about my research. Of them, the letters written by Prof. Mital of Jaipur (80) were touching. On seeing the quote about my research in "Bodhi's Tamil Afterglow" by S.Anand, Outlook, July 19, 2004,  he wrote the first letter on 31.7.2004 and subsequently he enquired much about Buddhism. He wanted information about my study to write article in Hindi papers and journals of North India. In his first letter he said: "I had the privilege of living with the modern day Buddha - Mahatma Gandhi for four years 1944-48". In another letter he said: "...I am 80, if God gives me an opportunity to visit that side I shall make it a point to see you and that you in person....". I sent him necessary photographs and copies of my articles. After some time I could not get any reply him. Even through phone I could not able to get him. He might have been 88 now. I will never forget his interest and involvement on my research. With the blessings of such people my journey continues.

The quote from the article in Outlook: "In 2000, B. Jambulingam, in his doctoral thesis Buddhism in the Chola Country, Tamil University, Thanjavur, listed 60 granite images of the Buddha in Perambalur, Tiruchi, Thanjavur, Thiruvarur and Pudukkottai districts, adding at least 16 to the earlier recorded Buddhas. The survey covered only five of the state's 30 districts"    






 

Comments

  1. அய்யா தங்களை நினைத்தால் உண்மையிலேயே மிகவும் பெருமையாக இருக்கின்றது. தேசத் தந்தை மகாத்மா காந்தியுடன் நான்காண்டுகள் உடனிருந்த, உன்னத மனிதர் மிட்டல் அவர்களிடமிருந்து பெற்ற பாராட்டு, மகாத்மாவிடமிருந்து பெறும் பாராட்டிற்குச் சமம் அய்யா. தங்களின் மாபெரும் பணி தொடர வாழ்த்துகின்றேன்.

    ReplyDelete

Post a Comment