பௌத்த சுவட்டைத்தேடி : உள்ளிக்கோட்டை
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகேயுள்ள உள்ளிக்கோட்டையில் 2004இல் நான் பார்த்த இளவரசனை மறுபடியும் அண்மையில் காணச்சென்றபோது பெற்ற அனுபவத்தை அறிய உள்ளிக்கோட்டை செல்வோம்.
நவம்பர் 2004
மன்னார்குடி அருகே உள்ளிக்கோட்டை என்னுமிடத்தில் புத்தர் சிலை இருப்பதாகக் கேள்விப்பட்டு, அங்கு செல்ல உரிய வாய்ப்பை எதிர்பார்த்திருந்தேன். அவ்வாறான பெயரில் ஒரு ஊரைப் பற்றி நான் அதுவரை அறிந்திருக்கவில்லை. காத்திருந்த நாள் வந்தது. தஞ்சாவூர்- மன்னார்குடி-பட்டுக்கோடை என்ற நிலையில் மன்னார்குடி-பட்டுக்கோட்டை சாலையில் வடசேரி வழியாக பட்டுக்கோட்டை செல்லும் பேருந்தில் உள்ளிக்கோட்டை சென்றேன். வழக்கம்போல் பேருந்தைவிட்டு இறங்கியதும் புத்தரைப் பற்றி விசாரித்தேன். வயதான பெண்மணி ஒருவர் "இளவரசனைப் பார்க்கவந்தியா, சந்தோசமா இருக்குப்பா" என்றார். எனக்கு ஒன்றும் புரியவில்லை. இருந்தபோதிலும் எனது நடையைத் தொடர்ந்தேன். அருகில் மற்றொருவரிடம் கேட்டபோது அவர், "குதிரையில வேகமாக வந்த இராஜகுமாரனைப் பார்க்க நீங்கள் வந்ததறிந்து மகிழ்ச்சி. இப்பகுதியில் ஆன்மீகத்தில் ஈடுபட்டு தொண்டு செய்துகொண்டிருக்கும் தவத்திரு மாதவகுமாரசுவாமி அவர்களைச் சந்தித்தால் அவர் இராஜகுமாரனைப் பற்றிக் கூறுவார்" என்றார் அவர்.
"நாமோ புத்தரைப் பற்றிப் பேசுகிறோம். உள்ளூரிலோ இளவரசன், இராஜகுமாரன் என்று கூறுகிறார்களே. அவர்கள் வேறு யாரையாவது பற்றிக் கூறுகிறார்களா, நாம் சரியாக விசாரிக்கவில்லையா" என்ற நிலையில் ஒன்றும் புரியாமல் என் மனதில் குழப்பம் மேலிட்டது. ஒவ்வொரு களப்பணியின்போதும் இவ்வாறாகக் குழப்பம் வர ஆரம்பிக்கும். பின்னர் அக்குழப்பத்திற்குத் தீர்வு கிடைக்கும். அவ்வாறே இதற்கும் ஒரு தெளிவு கிடைக்கும் என எண்ணிக்கொண்டு, நடக்க ஆரம்பித்தேன். என் மனதில் இப்போது புத்தரோ, இளவரசனோ, ராஜகுமாரனோ இல்லை. அவர்களைப் பற்றி தெரிந்துகொள்வதற்கு தவத்திரு மாதவகுமாரசுவாமி அவர்களை உடன் சந்திக்கவேண்டும் என்ற எண்ணம் வந்தது. அவர் இருக்கும் இடத்தைப் பற்றி விசாரித்துக்கொண்டு சென்றேன். அவரைச் சந்தித்தேன். முறையான அறிமுகத்திற்குப் பின் அவரிடம் பேச ஆரம்பித்தேன். "உள்ளிக்கோட்டையில் வயற்பகுதியில் ஆடுமாடுகள் திரிந்துகொண்டிருந்த இடத்தில் ஒரு புத்தர் சிலை இருந்தது. அந்த சிலை இருந்த இடத்தை செட்டியார் மேடு என்று கூறுவார்கள். செட்டியார் குதிரையில் வந்ததாகவும், திருடர்கள் அவரை வழி மறிக்கவே அவர் கல்லாக மாறிவிட்டார். ஒவ்வொருவரும் மனதிற்குப் பட்டதுபோல் கூறிக்கொள்கிறார்கள்" என்றார். எனக்கு இப்போது ஓரளவு தெம்பு பிறந்தது. பரவாயில்லை. புத்தரைப் பற்றித்தான் அவர்கள் கூறியிருக்கிறார்கள் என அறிந்து அந்தப் புத்தர் இருக்குமிடத்தைக் காண்பிக்க அவரிடம் கேட்டுக்கொண்டேன். என் மனம் குதிரையில் வந்த இராஜகுமாரனைப் பற்றிச் சிந்திக்க ஆரம்பித்தது. "நாம் பார்த்த சிற்பங்களிலிருந்து இது வித்தியாசமாக இருக்குமோ? கும்பகோணத்தில் பகவரைப் புத்தர் என்கிறார்களே, அதைப்போல இச்சிலை வேறு ஏதாவது சிற்பமாக இருக்குமோ? நமது பயணம் வீண்தானோ?" எனப் பலவாறான சிந்தனைகளுடன் அவருடன் நடந்து சென்றேன். அவர் என்னை வடக்குத் தெருவிற்கு அழைத்துச்சென்றார். வேகமாக நான் பயணித்த மனக்குதிரையிலிருந்து இறக்கினார் அங்கிருந்த ராஜகுமாரன்... இல்லை புத்தர். அமர்ந்த நிலையில் தியான கோலத்தில் ஒரு புத்தரைக் கண்டேன். வழக்கமாக சோழ நாட்டில் காணப்படும் புத்தர் சிலைக்குரிய கூறுகளுடன் உள்ள புத்தரைக் கண்டேன். என் மனதில் மகிழ்ச்சி. ராஜகுமாரன் நினைப்புடன் வந்ததால் எனக்கும் அந்த புத்தரைப் பார்த்தும் ராஜகுமாரன் நினைவு வந்தது. சிற்பத்தின் தலைமுடிச்சுருளின் மீது காணப்பட்ட தீச்சுடரும், மூக்கின் பகுதியும், காலின் ஒரு பகுதியும், கைகளும் உடைந்த நிலையில் இருந்தன. ராஜகுமாரனுக்கே இந்த நிலையா எனச் சிந்தித்தேன். அழகான புத்தர் சிலை கலையார்வம் இல்லாதோரால் சேதப்படுத்தப்பட்டிருப்பதைக் கண்டு வேதனைப்பட்டேன். இருப்பினும் பௌத்த சமய வரலாற்றை எடுத்துரைக்கும் சான்றாக இருந்த அந்தப் புத்தர் சிற்பத்தின் அழகைக் கண்ட பிரமிப்பில் என்னை மறந்து நின்றேன். சிற்பத்தைப் பார்க்க என்னை அழைத்துச்சென்ற மாதவகுமாரசுவாமிகள் அழைக்கவே என் நிலைக்கு வந்தேன். அழகான புத்தரைப் பார்த்த நிறைவுடன், அழைத்துச்சென்ற மாதவகுமாரசுவாமிகளுக்கு நன்றி கூறிவிட்டுக் கிளம்பினேன்.
-------------------------------------------------------------------------------------------
நன்றி: தவத்திரு மாதவகுமாரசுவாமி, நாளிதழ்கள்
-------------------------------------------------------------------------------------------
அடுத்தடுத்து ஒரு முறை அங்கு சென்றேன். அது தொடர்பான அனுபவங்களைத் தொடர்ந்து காண்போம்.
செப்டம்பர் 2012
முன்னர் பார்த்த புத்தர் தற்போது எப்படி இருக்கிறார் என்று தெரிந்துகொள்வதற்காக உள்ளிக்கோட்டைக்குப் பயணம் மேற்கொண்டேன். இம்முறையும் பேருந்தில் சென்றேன். உள்ளிக்கோட்டையில் இரண்டாவது பேருந்து நிறுத்தமான கடைத்தெருவில் இறங்கினேன். மாதவகுமாரசுவாமிகளைச் சந்திக்கச் சென்றேன். அவர் பிறிதொரு கோயில் விழாவிற்காக வெளியூர் சென்றிருந்ததை அறிந்தேன். நான் வந்த செய்தியை அவரிடம் தொலைபேசிவழி தெரிவித்துவிட்டு புத்தரைக் காண என் நடைபயணத்தைத் தொடர்ந்தேன். எட்டு ஆண்டுகளுக்கு முன் அங்கு சென்றிருந்த நிலையில் விசாரிப்பைக் குறைத்துக் கொண்டு சிலை இருந்த இடமான வடக்குத்தெரு நோக்கி நடந்து சென்றேன். ஆவல் அதிகமாகவே, நடந்துகொண்டே புத்தரைப் பற்றி விசாரித்தேன்.
"அழகான புத்தர்ங்க. குதிரையிலே ராஜா மாதிரி வந்தவர். அழகா இருப்பார். வேகமா வந்தவரு வயல்ல இருந்த கிணத்துல விழுந்து சிலையாப் போய்ட்டாரு. அங்க வயல்ல கிணத்துமேட்ல ரொம்ப நாளா இருந்தாரு. சில பேர் செட்டியார்னும் சொன்னாங்க. கையில தர்ம சக்கரம்கூட இருந்துச்சு" என்று ஒருவர் கூறினார். பேசிக்கொண்டேயிருக்கும்போது குறுக்கே வந்த ஒருவர் என்னைப் பற்றி விசாரிக்கவே நான் புத்தரைப் பற்றியும் எனது ஆய்வைப் பற்றியும் கூறினேன். என்னை மேலும்கீழும் பார்த்த அவர், "இராஜகுமாரனையா பாக்க வந்தே, அவர்தான் மாயமா மறைஞ்சுட்டாரே. அவரோட பெருமை அவர் இருக்கும்போது எங்களுக்குத் தெரியலே. அவர் மறைஞ்சதுக்கப்பறம்தான் தெரியுது" என்றார். எனக்கு எதுவும் புரியவில்லை. விரைந்து நடக்க ஆரம்பித்தேன். சிலை இருந்த இடத்தை அடைந்தேன். நான் நடக்கக்கூடாதது என எதை நினைத்தேனோ அது அங்கு நடந்திருந்தது. முன்பு புத்தர் இருந்த இடம் வெற்றிடமாக இருந்தது. நான் எதிர்பார்த்த அதிர்ச்சியே காத்திருந்தது. ஏழு ஆண்டுகளுக்கு முன் நான் பார்த்த புத்தர் அங்கு இல்லாததை எண்ணி விசாரிக்க ஆரம்பித்தேன்.
"அருமையான புத்தர். எங்கள் ஊரின் பெயரையும் பெருமையையும் வெளிவுலகிற்கு வெளிப்படுத்திய அவர் எங்களை விட்டுப் பிரிந்தது எங்களை ஆழாத் துயரத்தில் ஆழ்த்திவிட்டது. முன்னாடி இந்த சிலை இங்கேயிருந்து ஒரு கிமீ தூரத்துல வயல்ல கிணத்துமேட்ல இருந்தது. அப்புறம்தான் வடக்குத்தெருவுக்குக் கொண்டுவந்தாங்க" என்றார் ஒருவர். "அழகான ராஜகுமாரன் எங்கு போனான் என யாருக்கும் தெரியாது. ஆனால் அவன் எங்களை விட்டுச் சென்றது எங்கள் குடும்பத்தில் உள்ள ஒருவர் எங்களை விட்டுப் பிரிந்தது போலாகிவிட்டது" என்று வருத்தப்பட்டார் ஒருவர். "குதிரையில் வந்தார் என பெருமையோடு பேசிக்கொண்டிருந்தோம். எப்படிப் போனார் என்றே தெரியவில்லை" என்றார் ஒருவர் ஆதங்கத்துடன். "இவ்வளவு பெயரும் புகழும் பெற்ற புத்தர் என்று தெரிந்திருந்தால் அதனைக் காப்பாற்ற முயற்சி மேற்கொண்டிருப்போம் என்றார் ஒருவர் ஏக்கத்துடன். அவர்களுடைய ஏக்கத்திலும், வருத்தத்திலும் பங்குகொண்டுவிட்டு நடக்க ஆரம்பித்தேன்.கண்டிப்பாக ஒரு நாள் அந்த ராஜகுமாரனை மறுபடியும் சந்திப்போம் என்ற எண்ணத்தில் அங்கிருந்து கிளம்பினேன் கனமான மனத்துடன். வேகமாக எனக்குப் பின்னால் குதிரை வருவது போல் தோன்றவே திரும்பினேன். தஞ்சாவூர் செல்வதற்கான பேருந்து வந்தது. சுதாரித்துக்கொண்டு பேருந்தில் ஏறினேன் நான் பார்த்து ரசித்த புத்தரைப் பிரிந்த ஏக்கத்துடன்.
12 மார்ச் 2025இல் மேம்படுத்தப்பட்டது.
என்றேனும் ஒரு நாள் எதிர்பாராத விதமாய், எதிர்பாராத இடத்தில் இராஜகுமாரனை அவசியம் சந்திப்பீர்கள் என்றே முழுமையாய் நம்புகின்றேன். நிச்சயமாக எங்கேனும் ஓரிடத்தில் தங்களின் வருகையை எதிர்நோக்கி இராஜக்குமாரன் காத்துக் கொண்டிருப்பார். தங்களின் களப் பணித் தொடரட்டும்.
ReplyDeleteவணக்கம்.
ReplyDeleteகிராந்தி புத்தரைப்பற்றிய தங்களின் இடுகையை இன்று காண நேர்ந்தது.
அச்சிலையின் ஒளிப்படத்தைக் கண்டதும் இதைப்போல் சிலை நம்மூரிலும் இருந்ததே அதைப்பற்றிய தகவலைத் தெரிவிக்கலாமே என எண்ணிக் கொண்டே படிக்கும் போது, தாங்கள் எம்மூரிலுள்ள(இருந்த!) புததர் சிலையைப் பற்றி தனி இடுகை இட்டிருப்பது கண்டு மகிழ்ச்சி.
தாங்கள் மறுமுறை சென்றபோது அச்சிலை காணவில்லையென்ற செய்தி வருத்தமுறச்செய்தது.
நானும் சிறுவயதில் அதனருகில் விளையாடியுள்ளேன் அப்போது அந்த கிணற்றின் கரையில்(செட்டி மேட்டில்) இருந்ததுஅப்பொழுது சிலை முழுமையாகவும் அருகில் பெரிய கிணறும் இருந்தன.அது செட்டியார் சிலையென்றும் அவர் வந்த குதிரைச்சிலை அக்கிணற்றுக்குள் விழுந்துவிட்டதாகவும் கேட்டிருக்கிறேன்.
தங்களின் அளப்பரிய முயற்சிக்கு என் நன்றி.
அன்புடன்
உள்ளிக்கோட்டை இரா.ராஜா
குவைத்திலிருந்து
இன்றுதான் எனக்கு இதைப் படிக்கும் வாய்ப்பு கிட்டியது. எங்கள் ஊரில் இப்படி ஒரு அற்புத சிலை இருந்ததே எனக்கு இதப் படிக்கும் போதுதான் தெரிகிறது. எங்கள் ஊரின் பெருமை உலகறிய ஒரு வாய்ப்பு இல்லாமல் போய்விட்டதே என்று நினைக்கும் போது மிகவும் வருத்தமாக இருக்கிறது. உள்ளிக்கோட்டை க.தென்னரசன் சென்னை
ReplyDeleteவணக்கம்
ReplyDeleteஇன்று தங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது வாழ்த்துக்கள் சென்று பார்வையிட http://blogintamil.blogspot.com/2014/01/blog-post_21.html?showComment=1390260727952#c4402202584474342055
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
சோழ நாட்டில் பௌத்தம் வலைப்பூ தளம் வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளதறிந்து மகிழ்ச்சி. நன்றி.
Deleteவணக்கம். இன்றைய வலைச்சரத்தில் தங்கள் தளம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நன்றி.
ReplyDeletehttp://blogintamil.blogspot.com.au/2014/01/blog-post_21.html
சோழ நாட்டில் பௌத்தம் என்ற தலைப்பிலான வலைப்பூவில் ஒவ்வொரு மாதமும முதல் தேதி வெளியிடுகிறேன். அதன் ஆங்கிலப் பதிப்பை 15ஆம் தேதி வெளியிடுகிறேன். எனது வலைப்பூவை இணைத்தமைக்கு என் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
Delete