சோழ நாட்டில் புத்தர் சிலைகள் : வழிபாடும் நம்பிக்கைகளும்

சோழ நாட்டில் புத்தர் சிலைகளுக்கு வழிபாடு நடத்தப்படுவதைக் களப்பணியின்போது காணமுடிந்தது. அவ்வாறு வழிபாடு நடத்தப்படும் வழிபாடுகள் பற்றியும், புத்தர் தொடர்பாக மக்கள் கொண்டுள்ள நம்பிக்கைகள் பற்றியும் அறிந்துகொள்ள இம்மாதக் களப்பணியில் இணைந்துகொள்ள அழைக்கிறேன். அனைத்து இடங்களுக்கும் ஒரே முறை செல்வது சாத்தியமாகாது என்ற நிலையில் குறிப்பிட்ட சில இடங்களுக்கு மட்டுமே உங்களைத் துணைக்கு அழைக்கிறேன், வருவீர்கள் என்ற நம்பிக்கையுடன்.

அய்யம்பேட்டை, ஆயிரவேலி அயிலூர், உள்ளிக்கோட்டை, ஒகுளூர், கரூர், கிள்ளியூர், பட்டீஸ்வரம், பரவாய், புட்பவனம், புத்தமங்கலம், புதூர், பெரண்டாக்கோட்டை, பெருஞ்சேரி, மங்கலம், மன்னார்குடி, மானம்பாடி, விக்கிரமங்கலம், விக்ரமம், வெள்ளனூர் உள்ளிட்ட பல இடங்களில் புத்தருக்கு வழிபாடுகள் நடைபெறுகின்றன. அய்யம்பேட்டையில் முனீஸ்வரன் என்றும், பெரண்டாக்கோட்டையில் சாம்பான் என்றும், பெருஞ்சேரியில் ரிஷி என்றும் புத்தரை வழிபடுகின்றனர்.

ஒகளூர்
பெரம்பலூர் அருகே ஒகளூர் என்னும் சிற்றூரில் அமர்ந்த நிலையில் தியானகோலத்தில் புத்தர் சிலை ஒன்று ஊரின் நடுவில் உள்ளது. இப்பகுதி மக்கள் பெரும்பாலும் வியாபார நிமித்தம் வெளிநாடு செல்பவர்களாக உள்ளனர். அவ்வாறு ஒவ்வொரு முறையும் அவர்கள் வெளிநாட்டுக்குச் செல்லும்போது இந்தப் புத்தர் சிலைக்கு மாலை போட்டு, பூசை செய்துவிட்டுச் செல்கிறார்கள். 32 வகை அலங்காரங்கள் செய்து மலர்கள் போட்டுப் பூசித்துவிட்டு, தண்ட மாலை எனப்படும் பெரிய மாலை போட்டு வணங்கிவிட்டே செல்கிறார்கள். அவ்வாறு  செல்லும்போது வியாபாரம் சிறப்பாக அமைவதாக அவர்கள் கூறுகிறார்கள். 

கரூர்
புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கரூரில் உள்ள நிலவளமுடைய அய்யனார் கோயிலில் உள்ள புத்தருக்குத் தொடர்ந்து வழிபாடு நடைபெற்றுவருகிறது. இக்கோயிலில் உள்ள கருப்பசாமிக்குப் பலியிடுவது வழக்கமென்றும்,  பலியிடல் தெரியாமல் இருப்பதற்காக புத்தரைத் தனியாக வைக்கப்பட்டுள்ளதாகவும் களப்பணியின்போது கூறினர். 

கற்பகநாதர்குளம்
திருத்துறைப்பூண்டி வட்டத்திலுள்ள இச்சிற்றூரில் காடுவெட்டி என்னுமிடத்தில் அமர்ந்த நிலையில் புத்தர் சிலை உள்ளது. இந்தப் புத்தரை அப்பகுதி மக்கள் 'அமணர்' என்றும், 'சமணர்' என்றும் அழைக்கிறார்கள்.  இச்சிலைக்கு வழிபாடு எதுவும் நடைபெறாவிட்டாலும் மதிக்கப்படவேண்டிய ஒரு சிலையாக அதனைக் கருதி வருகின்றனர்.

திருப்பாம்புரம்
தஞ்சை மாவட்டம் நன்னிலம் வட்டம் திருப்பாம்புரம் அருகே கிள்ளியூர் என்னுமிடத்தில் உள்ள அமர்ந்த நிலையிலுள்ள புத்தர் சிலை மிக அழகிய வேலைப்பாட்டுடன் உள்ளது. இச்சிலையை 'சிவனார்' என்று அழைக்கிறார்கள். கோலம் போடுவது, விளக்கேற்றுவது போன்றவற்றுடன் வழிபாடும் நடைபெற்று வருகிறது. வெள்ளி, செவ்வாய் போன்ற நாள்களிலும், பிரார்த்தனை நிறைவேறும்போதும் சர்க்கரைப்பொங்கல் படைத்து விளக்கேற்றி வைக்கிறார்கள். மாலை போட்டுப் பிரார்த்தனை செய்வதையும் பழக்கமாகக் கொண்டுள்ளார்கள்.

பட்டீஸ்வரம்
பட்டீஸ்வரம் கோவிந்தக்குடி சாலையில் திரௌபதி அம்மன் கோயிலுக்கு அடுத்தபடியாக முத்துமாரியம்மன் கோயிலில் வலப்புறம் பரிவார தெய்வங்கள் காணப்படுகின்றன. இப்பரிவார தெய்வங்களில் முதல் சிலையாகப் புத்தர் சிலை காணப்படுகிறது. மற்ற தெய்வங்களுக்குச் சூடம் ஏற்றி நைவேத்தியம் செய்யும்போது இப்புத்தருக்கும் சேர்த்து செய்கிறார்கள். மற்றபடி சிறப்பாகப் புத்தர் சிலை என்ற அளவில் உள்ளூர்க்காரர்களுக்கு இதுபற்றி எதுவும் தெரியவில்லை. 

புட்பவனம்
வேதாரண்யம் அருகே புட்பவனம் என்னுமிடத்தில் தனியார் தோப்பு ஒன்றில் அமர்ந்த நிலையில் புத்தர் சிலை உள்ளது. இச்சிலையினை 'நாட்டுக்கோட்டைச் செட்டியார்' என்று அழைக்கிறார்கள். இப்புத்தர் தரையிலிருந்து  தானாகவே உண்டானது என்றும், இச்சிலையினை அசைக்கமுடியாது என்றும் கூறுகிறார்கள். முடிவேண்டி நிவர்த்திக்கடன் செய்வதோடு சூடம், சாம்பிராணி காட்டி விளக்கேற்றியும் வைக்கிறார்கள். எப்போதும் அருகில் ஒரு பித்தளை விளக்கு சிலையின் முன் இருக்கிறது. வைகாசிப் பூர்ணிமையின்போது  இச்சிலைக்குச் சர்க்கரைப்பொங்கல் வைத்துப் படைப்பதைப் பழக்கமாகக் கொண்டுள்ளனர். சில சமயங்களில் அன்னதானமும் செய்கிறார்கள்.

 புதூர்
திருவாரூர் வட்டத்தில் திருநெல்லிக்காவல் புகைவண்டி நிலையம் அருகே உள்ள புதூர் என்னும் சிற்றூரில் அமர்ந்த நிலையில் புத்தர் சிலையொன்று உள்து. சோழ நாடடில் இங்கு மட்டும்தான் புத்தரைப் 'புத்தர்' என்று அழைக்கிறார்கள். பல ஆண்டுகளுக்கு முன்பு கோயில் கட்டப்பட்டு, அது சிதைந்த நிலையில் தற்போது அரச மரத்தடியில் வைத்துள்ளார்கள். பெண்கள் கோலம் போட்டு, விளக்கேற்றி வழிபடுகிறார்கள். திருமணமாகாத பெண்கள் இச்சிலையைச் சுற்றி வந்தால் அவர்களுக்குத் திருமணம் நடைபெறும் என்று நம்புகின்றனர் இச்சிலையில் நெற்றி, மார்பு போன்ற இடங்களில் பட்டையாகத் திருநீறு பூசியிளளனர். வைகாசி பூர்ணிமையின்போது இந்து சமய முறைப்படி அபிடேகம் செய்து மாலை போட்டு வழிபடுகின்றார்கள். இவையனைத்திற்கும் மேலாகக் கீழ்க்கண்ட மந்திரத்தைச் சொல்லி தினமு விடியற்காலைப் பொழுது விடிவதற்குள்ளாக இச்சிலையைச் சுற்றிவந்து யார் கண்ணிலம் படாமல் வீட்டிற்குச் சென்றுவிடுவோர்க்கு நினைத்த காரியம் கைகூடும் என்று கூறுகிறார்கள். இந்த மந்திரத்தை 108 முறை உச்சரிக்கவேண்டும் என்றும் அவர்கள் கூறுகிறார்கள்:

"மூலதோர் பிரம்ம ரூபாய
மத்யதோர் விஷ்ணு ரூபிணி
அக்ரதோர் சிவ ரூபாய"

பேட்டவாய்த்தலை
திருச்சி கரூர் சாலையில் உள்ள பேட்டைவாய்த்தலை மத்யார்ஜுனேஸ்வரர் கோயில் முன்பாக ஒரு புத்தர் சிலை உள்ளது. இதனைச் சமணர்  சிலை என்று தவறாகக் கூறுகிறார்கள். உள்ளூர் மக்கள் இப்பகுதியில் 'கடன் கொடுத்தவன்', 'கடன் வாங்கியவன்'  என்று இச்சிலையைக் கூறுகிறார்கள். கடன் கொடுத்தவன், கடன் வாங்கியவன் என்று இரு சிலைகள் இருநததாகவும் தற்போது ஒரு சிலை மண்ணுக்குள் புதைந்துவிட்டதாகவும் கூறுகிறார்கள். அச்சிலைகள் முன்பு இருந்த இடம் 'கடன்காரன் குழி' என்றும் கூறுகிறார்க.ள ஒருவர் கடன் கொடுத்தவன், மற்றொருவன் கடன் வாங்கியவன் என்றும் கூறுகிறார்கள். மற்றபடி இச்சிலைக்கு வழிபாடு எதுவும் இல்லை.

மங்கலம்
முசிறி வட்டத்தில் உள்ள மங்கலம் என்னும் சிற்றூரில் உள்ள அரவாண்டியம்மன் எனப்படும் கிராம தேவதை ஆல்யத்தில் உள்ள இந்தப் புத்தரைச் 'செட்டியார்' என்று கூறி வழிபடுகிறார்கள். இந்தச் சிலைக்கு மீசை உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தக் கிராமத் தேவதைக்கு ஆலயத்தில் அடிக்கடி பலி கொடுப்பது வழக்கமென்றும், புத்தர் பலியிடுதலை விரும்பமாட்டாராகையால் அவருக்காகத் தனிச் சன்னதி கட்டி, அச்சிலையை வைத்து அதற்கு முன் திரைச்சீலை (பலியிடல் தெரியாமலிருப்பதற்காக) போடப்போவதாகக் கூறுகிறார்கள். சூடம் கொளுத்துவது, அகல் விளக்கேற்றுவது போன்றவை இந்தப் புத்தர் சிலைக்கு வழிபாடாகச் செய்யப்படுகின்றன. வழிபாடு நடப்பதுடன் கோயில் ஒன்று புதிதாகக் கட்டப்படுவது சோழ நாட்டில் இந்த இடத்தில் மட்டும்தான என்பது குறிப்பிடத்தக்கது. மயிலாடுதுறை அருகே பெருஞ்சேரி எனப்படும் இடத்தில் 'ரிஷிக் கோயில்' என்ற கோயில் புத்தர் சிலையோடு காணப்பட்டாலும் அங்கு தற்போது எவ்வித வழிபாடும் நடைபெறுவதில்லை. தவிரவும்   'ரிஷிக் கோயில்' தற்போது பராமரிரப்பு ஏதுமின்றிக் காணப்படுகிறது. 

ராயம்புரம்
புத்தர் சிலை உள்ள ஊர் முழுமையான ஊராகும் என்றும், அவ்வகையில் தம் ஊர் முழுமையான ஊர் என்றும் ராயம்புரத்தில் களப்பணியின்போது கூறினர். 

விக்கிரமங்கலம்
ஜெயங்கொண்டம் குறுக்குச்சாலை அருகே விக்கிரமங்கலம் என்னும் சிற்றூரில் அருகருகே இரு புத்தர் சிலைகள் காணப்படுகின்றன. இச்சிலைகளைக் 'கொடுத்தவன் வாங்கியவன்' என்று கூறுகிறார்கள். கொடுத்தவன் சிலை  அழுத முகத்துடனும் வாங்கியவன் சிலை சிரித்த முகத்துடனும் இருப்பதாகக் கூறுகிறார்கள். கடன் வாங்கியவன் சிலையை அவ்வப்போது கல்லால் அடிப்பதால் அச்சிலைkடடும் சிறிது உடைந்துள்ளது என்று காரணம் கூறுகிறார்கள். இச்சிலைகளுக்கு முன்பாக ஒரு வேல் வைக்கப்பட்டுள்ளது. வழக்கமாக இச்சிலைகளுக்குப் பூசை கிடையாது. எனினும் மழை வராவிட்டால் இச்சிலைகளுக்கு முன் உள்ள வேலை எடுத்து அந்த இடத்திலேயே சக்தி ஏற்றி (அருள் ஏற்றி) மேளதாளத்தோடு ஊரைச் சுற்றி வந்து மறுடியும் கொண்டு வந்து வைத்துவிட்ல் மழை பெய்வதாகக் கூறுகிறார்கள். இவ்வாறான நடைமுறை தற்போதும் நடைபெறுவதாகக் கூறுகிறார்கள். 

விக்ரமம்
மன்னார்குடி அருகே உள்ள மதுக்கூர் என்னும் சிற்றூருக்கு அருகே விக்ரமம் என்னும் கிராமம் உள்ளது. இங்குள்ள புத்தரைச் 'செட்டியார்' என்கிறார்கள். சிலை இருக்குமிடம் 'புத்தடிக்கொல்லை' என்றழைக்கப்படுகிறது. வருஷப்பிறப்பு, தீபாவளி, பொங்கல் போன்ற சிறப்பு விழாக்களின்போது தேங்காய் உடைத்துச் சாம்பிராணி போடுவதாகவும், முதலில் எண்ணெய் எடுக்கும்போது சாமிக்கு (இச்சிலைக்கு) சாத்திவிட்டுத்தான் பயன்படுத்துவதாகவும் கூறுகிறார்கள். எந்தப் புதிய வேலையையும் தொடங்கும்போது இங்கு வந்து பலர் வேண்டிக்கொண்டு மாலை போட்டுவிட்டுச் செல்கிறார்கள். 60 ஆண்டுகளுக்கு முன்பு இங்கே மூட்டைப்பூச்சித் தொல்லை அதிகம இருந்ததாகவும், அப்போது இச்சிலைக்கு நைவேத்யம் செய்தால் மூட்டைப் பூச்சித் தொல்லை குறைந்துவிடும் என்றும் ஒரு வயதான மூதாட்டி கூறினார். தற்போது மூட்டைப்பூச்சித் தொல்லை இல்லையென்றும் அதுபோன்ற நம்பிக்கையும் இல்லையும் என்றும் அவர் தெரிவித்தார்.

இவ்வாறாகச் சோழ நாட்டில் புத்தர் சிலைகளுக்குப் பல இடங்களில் வழிபாடுகள் நடைபெறுவதை அறியமுடிகிறது. தவிரவும், 'சிவனார்', 'சமணர்', 'அமணர்', 'நாட்டுக்கோட்டைச் செட்டியார்' என்று பலவாறாக அழைக்கப்பட்டாலும் 'புத்தர்' என்று அழைக்கப்படுவதையும் காணமுடிகிறது. வழிபாடுகள் பெரும்பாலும் இந்து சமயத் தெய்வங்களுக்கு உரியன போலவே காணப்படுகின்றன. 

இச்சிலைகளில் சில புத்தர் சிலைகள் கோயில்களிலும், சில பொது இடங்களிலும் உள்ளன. கோயில் போன்ற அமைப்பு என்ற நிலையில் புத்தமங்கலம், பெருஞ்சேரி, மங்கலம் ஆகிய இடங்களில் மட்டும் உள்ளது. பல இடங்களில் கோயில் போன்ற அமைப்பு இல்லாவிட்டாலும் புத்தரைத் தொடங்கி வணங்கிவருவதையும்,  சில இடங்களில் புத்தரைத் தொடர்புபடுத்தி சில நம்பிக்கைகளையும் மக்கள் கொண்டுள்ளதையும், களப்பணியின்போது காணமுடிந்தது.  


-------------------------------------------------------------------------------------------
நன்றி: தமிழக நாட்டுப்புறவியல் ஆய்வுகள்/
பதிப்பாசிரியர் ம.சா.அறிவுடைநம்பி
(வலைப்பூ கட்டுரையின் மேம்படுத்தப்பட்ட வடிவம்)
-------------------------------------------------------------------------------------------

Buddha sculptures of Chola country : worship and faiths 
This article details the worship of Buddha in selected places in the Chola country which include Ayyampet, Ayiraveli Ayilur, Buddhamangalam, Karpaganatharkulam, Karur, Killiyur, Manambadi, Mangalam, Mannargudi, Ogalur, Paravai, Pattiswaram, Perandakottai, Perunjeri, Pettaivaithalai, Pushpavanam, Puthur, Rayampuram, Ullikkottai, Vellanur, Vikramam and Vikramangalam and the connected faiths and beliefs the people had on Buddha. 


18 மார்ச் 2025இல் மேம்படுத்தப்பட்டது.

Comments

  1. மார்பிலும் நெற்றியிலும் திருநீருடன் புத்தர் காட்சியளிப்பதும், மீசையுடன் புத்தர் சிலை இருப்பதும் வியப்பிற்குரிய செய்திகளாகும். பிற மதத்தினர் தங்களின் வேண்டுதல்களை நிறைவேற்ற பலியிடுதல் என்னும் சடங்கினைச் செய்யும்போது, புத்தர் சிலையினைத் திரைச்சீலையிட்டு மறைக்கும் செயலானது,புத்தர் போதனைகள் மற்ற மதத்தினரிடையேயும் ஏற்படுத்தியுள்ளத் தாக்கத்தினையேக் காட்டுகின்றது. இது போன்ற செய்திகளை தொடர்ந்து வழங்குமாறு அன்புடன் வேண்டுகின்றேன். நன்றி.

    ReplyDelete
  2. The extensive data collected by Dr Jambulingam shows the spread and practice of Buddhism in those days. Actually the common men followed the religion which their ruler wanted them to follow; otherwise they would be taken to task as has been witnessed in the case of Saint Thirunavukkarasu. I am very much pleased by the keen interest shown by the researcher in vistiing different places and collecting data. It would be better if some link either from ancient literature or inscriptions could be established to those findings. Some attempt could be made to date the sculptures unearthed as is done by the the Archeology Department (July 5, 2012 report in the Hindu states that attempts are made to date the inscriptions of Chola period at Pudukkottai unearthed recently. Further, attempt could be made to check whether these is any remnant of Buddhism in Tamilnadu refected either in folklore or some such thing. C.Sivashanmugam

    ReplyDelete
  3. The article is very useful.P.Perumal

    ReplyDelete
  4. quite interesting blog on Buddha worship. some attempts should be made to date at least one of the sculpture, otherwise it is like a news report. I feel it is an important finding adn the Govt should help the researcher concerned. one can note in certain places in Thailand, we have vishnu scultpture along with Buddha adn the Thai people do not really distinguish one form the other.thks for this nice spot
    suryanarayanan, paris

    ReplyDelete

Post a Comment