பௌத்தச் சுவட்டைத்தேடி : பட்டீஸ்வரம் புத்தர் சிலைகள்

சோழ நாட்டில் பட்டீஸ்வரம் பகுதியில் அதிகமான எண்ணிகையிலான புத்தர் சிற்பங்கள் கிடைத்துள்ளன. இப்பகுதியில் தொடர்ந்து என்னால் களப்பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அக்டோபர் 1993இல் தேட ஆரம்பித்து பட்டீஸ்வரம் பகுதியில் இரு சிற்பங்களைக் கண்டுபிடித்தபோது பெற்ற மகிழ்ச்சி ஆகஸ்டு 2011இல் அச்சிற்பங்களைத் தேடிப் போய் அவை காணாமல் போனதை அறிந்ததும் மறைந்துவிட்டது. அது தொடர்பான  அனுபவப் பதிவு.             

அக்டோபர் 1993
பட்டீஸ்வரம் கிராம தேவதை கோயிலில் ஒரு புத்தர் சிற்பம் உள்ளதாக மயிலை சீனி வேங்கடசாமி அவரது பௌத்தமும் தமிழும் என்ற நூலில் கூறிய செய்தியை அடிப்படையாகக்கொண்டு துர்க்கையம்மன் கோயில் தொடங்கி ஒவ்வொரு கோயிலாகத் தேடி கடைசியில் பட்டீஸ்வரம் கோவிந்தக்குடி சாலையில் உள்ள முத்துமாரியம்மன்கோயிலில் புத்தரைத்தேடி கண்டுபிடித்து அது தொடர்பான செய்தியை ஆய்வேட்டில் சேர்த்திருந்தேன்.அக்டோபர் 1993 முதல் தேட ஆரம்பித்து அக்டோபர் 1998இல்தான் அதனைக் கண்டுபிடிக்க முடிந்தது.  அவ்வாறு அச்சிற்பத்தைத்தேடி சென்றபோது பட்டீஸ்வரம் பகுதியில் இன்னும் சில சிற்பங்கள் இருப்பதாகத் தெரிய வரவே, பழையாறை, சோழன்மாளிகை, உடையாளூர், திருவலஞ்சுழி உள்ளிட்ட பகுதிகளை ஒன்றுவிடாமல் தேட ஆரம்பித்தேன். அவ்வாறான இரு சிற்பங்களை முதன்முதலாக இப்பகுதியில் புதியதாகக் காணமுடிந்தது.
பிப்ரவரி 2002
பட்டீஸ்வரம் அருகில் புத்தர் (2002) 
புகைப்படம் ஜம்புலிங்கம்

வழக்கமான தேடலின் போது தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் வட்டம் பட்டீஸ்வரம்-திருவலஞ்சுழி சாலையில் பட்டீஸ்வரத்திலிருந்து 2 கிமீ தொலைவிலுள்ள கோபிநாதப் பெருமாள் என்னுமிடத்தருகே ஒரு தோப்பில் தலையில்லாத புத்தர் சிற்பம் என்னால் கண்டுபிடிக்கப் பட்டது. பிப்ரவரி 2002இல் தமிழகத்தின் பெரும்பாலான செய்தித்தாள்களில் இச்செய்தி வெளியானது. பீடமின்றி உள்ள இச்சிற்பத்தின் உயரம் சுமார் 2 அடி. தலைப்பகுதி இல்லை. அமர்ந்த பத்மாசன நிலையில் தியானகோலம். மார்பில் மேலாடை.  வலக்கரத்தில் தர்மசக்கரக்குறி. திரண்ட மார்பு. திண்ணிய தோள்கள். இவையனைத்தும் பத்திரிக்கைச்செய்தியில் கூறப்பட்டிருந்தன. பத்திரிக்கைச் செய்தியைப் பார்த்த தனியார் ஆங்கிலச்செய்தி தொலைக்காட்சி நிறுவனத்தினர் என்னைத் தொடர்பு கொண்டு அச்சிற்பத்தைக் காண விரும்புவதாகத் தெரிவித்தனர். அவர்களை அழைத்துச்சென்றபோது  அச்சிற்பத்தைப் பற்றிய கூறுகளை என்னிடம் கேட்டனர். அவை அவர்களால் பதிவு செய்யப்பட்டு மறுநாள் தனியார் தொலைக்காட்சியில் ஒலிபரப்பானது. அந்த சிற்பத்தை அங்கு பார்க்கச் சென்றபோது அருகே ஒரு கருங்கல் தலைகீழாகக் கிடந்தது. புரட்டிப் பார்க்கும்போது அது ஓர் உடைந்த சிற்பமாக இருப்பதை அறியமுடிந்தது.  போதிய நேரமின்மையாலும்,  அச்சிற்பம் தலை மற்றும் உடற்பகுதியின்றி காணப்பட்டதாலும்  குழப்பம் வரவே அங்கிருந்து தொலைக்காட்சிக் குழுவினருடன் திரும்பிவிட்டேன். மறுபடியும் எப்படியும் அச்சிற்பத்தைப் பார்க்க வேண்டும் என்ற ஆவல் என்னுள் இருந்தது. புத்தரா அல்லது சமண தீர்த்தங்கரரா என்ற குழப்பம் மனதில் நீடித்தது.

சூன் 2002
நான்கு மாதங்கள் கழித்து மறுபடியும் களப்பணி. அப்போது என் புகைப்படக்கருவி பழுதாகியிருந்த நிலையில் புகைப்படக்காரர் ஒருவரை அழைத்துச் சென்றேன். பிப்ரவரி 2002இல் கண்டுபிடிக்கப்பட்ட சிற்பத்திற்கருகே இருந்த அச்சிற்பத்தில் புத்தர் சிற்பத்தற்குரிய கூறுகள் இருந்தன. பீடத்தின்மீது அமர்ந்த நிலையில் இருப்பதைக் கால்கள் தெளிவுபடுத்தின.  கால்களின் மேல் கைகள் தியான கோலத்தில் வானை நோக்கிய நிலையில் இருந்தன. கையில் தர்மசக்கரக்குறி இருந்தது. அச்சிற்பமும் புத்தர் என உறுதி செய்தபின்,  புகைப்படமெடுத்துக்கொண்டேன். கோபிநாதப்பெருமாள் என்னுமிடத்தின் அருகே குறுகிய கால இடைவெளியில் ஒரே இடத்தில் இரு சிற்பங்களைக் கண்டுபிடித்தது எனக்கு மிக மகிழ்ச்சியாக இருந்தது. ஆனால் அச்சிற்பங்கள் கவனிப்பாரின்றிக் கிடப்பதைப் பார்த்தபோது வேதனையாக இருந்தது.  நான் 2002இல் காணும் வரை இந்த இரு சிற்பங்களைப் பற்றி எவ்வித பதிவும் இல்லாத நிலையில் இவற்றை எனது ஆய்வுக்கு மிகவும் முக்கியமான ஆதாரங்களாகக் கொண்டேன்.  
ஆகஸ்டு 2011
சுமார் பத்து ஆண்டுகள் கழித்து அச்சிற்பங்களைப் பார்க்க ஆவல் வரவே இரு புத்தர்  சிற்பங்களையும் பார்ப்பதற்காக பட்டீஸ்வரம் கிளம்பினேன். தஞ்சாவூரிலிருந்து கும்பகோணம் செல்லும் பேருந்தில் திருவலஞ்சுழி சென்றேன். அங்கிருந்து பட்டீஸ்வரம் நோக்கி நடக்க ஆரம்பித்தேன். ஆங்காங்கே வயல்களை ரசித்துக்கொண்டும் உள்ளூர்க்காரர்களை விசாரித்துக் கொண்டும் முன்பு இரு புத்தர் சிற்பங்களும் இருந்த இடம் நோக்கி சென்று கொண்டிருந்தேன். போகும் வழியில் ஆங்காங்கு வந்தவர்களிடம் பேச்சுக் கொடுத்தேன். 'முன்னாடி தென்னந்தோப்பா இருந்துச்சு இப்ப அந்தப் பக்கமெல்லாம் வாழைதான்' என்றார் ஒருவர். 'செலை எதுவும் இங்கு இல்லை' என்றார் ஒருவர். 'ரெண்டு மூணு வருசத்துக்கு முன்னாடிகூட பாத்தேன்' என்றார் ஒருவர். 'வாழைத்தோப்புல சனி மூலையிலே கெடந்ததுன்னு சொன்னாங்க' என்றார் ஒருவர்.  கிட்டத்தட்ட இடத்தை நெருங்கி விட்டேன். தென்னந்தோப்பில் ஒரு வாழைத்தோப்பு உருவாகியிருந்தது. வாழைத்தோப்பைச் சுற்றிச்சுற்றி வந்து பார்த்தேன். சிற்பங்கள் இருப்பதாகத் தெரியவில்லை. அருகில் இருந்த பிற தோப்புகளைப் பார்த்தேன். மூங்கில் மரங்கள் ஒரு புறம் காடாகக் காட்சியளித்தன. அங்கு ஏதாவது தென்படுகிறதா எனப் பார்த்தேன். முள் குத்தியதுதான் மிச்சம். வெயில் உச்சி மண்டையைப் பிளக்க ஒவ்வொரு தோப்பாகத் தேட ஆரம்பித்தேன். பார்க்கும் கல்லெல்லாம் புத்தராகத் தெரிந்தது. ஆனால் புத்தர் இல்லை. தென்னங்கீற்று பின்னிக் கொண்டிருந்த ஒருவர், 'முன்னாடி செலை இருந்துச்சுன்னு சொல்வாங்கப்பா, இப்ப இருக்கா இல்லயான்னு  தெரியாது' என்றார். சுமார் ஐந்து மணி நேரமாக நான் சுற்றிக் கொண்டிருப்பதை ஆங்காங்கு இருந்தவர்கள் வித்தியாசமாகப் பார்த்தார்கள். 'ஏதோ செலையைத் தேடுறாராம்' என்று ஆங்காங்கு செய்தி பரவியது. நான் பார்த்த இடத்தில் சிற்பங்கள் இல்லை. உடல் சோர்வடைய ஆரம்பித்தது. உச்சி வெயில். ஒதுங்க இடமில்லை. கடைசியில் அடர்த்தியாக மரங்கள் இருந்த இடத்துக்கு சென்று சிறிது நேரம் அமர்ந்தேன். கையில் எடுத்துச்சென்ற நொறுக்குத்தீனியும் குடிநீரும் கொஞ்சம் தெம்பைத் தந்தன. மறுபடியும் நம்பிக்கை தளராமல் தொடர்ந்து தேடினேன். எங்கும் புத்தர் இல்லை. மனம் சோர்வடையவே, திரும்ப ஆரம்பித்து நடந்து கொண்டிருந்தபோது பரிச்சயம் ஆனவர் போல ஒருவரைக் கண்டேன். அவரிடம் பேச்சு கொடுத்தேன். புத்தர் சிற்பங்கள் பற்றிக் கூறியதும் அவர், 'பத்து வருஷத்துக்கு முன்னாடி ரெண்டு மூணு தடவை நீங்க இங்க வந்திருக்கீங்க. அடிக்கடி நான் உங்களைப் பாத்திருக்கேன். மறந்துட்டீங்களா, ரெண்டு புத்தர் பாத்தோமே ரெண்டு புத்தர் கையிலேயும் சக்கரம் இருந்துச்சே அதத்தானே பார்க்க வந்தீங்க' என்றார். சோர்வு நீங்கி புத்துயிர் வந்தது எனக்கு. 'வாழைத்தோப்புல சனி மூலைலே ஒரு மரத்துக்குக் கீழே வச்சிருக்காங்க, வாங்க காமிக்கிறேன்' என்று கூறி அழைத்துச் சென்றார். நான் அனைத்து இடங்களையும் முழுமையாகத் தேடினாலும் அவரது வார்த்தைகள் எனக்கு நம்பிக்கையைத் தந்தது. அவரைத் தொடர்ந்தேன். மிகவும் வேகமாகச் சென்று அவர் கூறிய இடத்தைக் காண்பித்தார். நாங்கள்  நின்ற இடம் மேடாக இருந்தது. அவர் கை காட்டிய இடம் தாழ்வாக இருந்தது. அவர் காட்டிய இடத்தில் எதுவுமில்லை. அவர் அங்கு புத்தர் சிற்பங்கள் இருப்பதை அண்மைக்காலம் வரை பார்த்ததை அவரது வார்த்தைகள் உறுதி செய்தன. என்னை அழைத்துவரும் வரை அவர் அங்கு புத்தர் சிற்பங்கள் இருப்பதாகவே எண்ணி அழைத்து வந்து காண்பித்துள்ளார். புத்தர் சிற்பங்கள் இல்லையென்றதும் அவருக்கு அதிர்ச்சி.  'கொஞ்ச நாளுக்கு முன்னேகூட நான் பார்த்தேன்' என்றார் அவர். அந்தக் கொஞ்ச நாள் என்பது கொஞ்ச நாளா. கொஞ்ச வருடங்களா என்று எனக்குப் புரியவில்லை.  மறுபடியும் முன்னர் நான் பார்த்த அனைத்து தோப்புகளில் சுற்றி சுற்றித் தேடினார். சிற்பங்கள் இல்லை என்றதும் மிகவும் ஆதங்கப்பட்டு அருகே இருந்த கத்திரிக்கொல்லையைக் காண்பித்து அங்கிருப்பவரை விசாரித்தால் தெரியும் என்றார். மிகவும் நம்பிக்கையோடு வந்து தானும் ஏமாந்து நம்மையும் ஏமாற்றிவிட்டாரே என எண்ணிக்கொண்டே கடைசி சந்தர்ப்பமாக கத்திரிக்கொல்லை சென்றேன். வேகாத வெயிலில் பணி பார்த்துக்கொண்டிருக்கும் அவரைத் தொந்தரவு செய்வது எனக்கு சங்கடமாக இருந்தது. ஆய்வின்மீது உள்ள நாட்டமும், எப்படியும் புத்தரைக் கண்டுபிடித்துவிடவேண்டும் என்ற எண்ணமும் என்னை அவரிடம் பேச வைத்தன. நான் வந்த விவரத்தைக் கூறியதும் அவர், 'நிலத்தை சமன் செய்யறப்ப தனியா ஓரமா வச்சாங்க. கொஞ்ச நாளுக்கு முன்னாடி வரைக்கும் சிலைங்க இருநதுச்சு. அப்புறம் காணல. எங்க பொழப்ப பாக்கவே நேரம் சரியா இருக்கு. நீங்க சொன்னதுக்கப்புறம்தான் அந்த சிலைங்களோட அருமை தெரியுது. முன்னாடியே தெரிஞ்சுருந்தா பத்திரமா எடுத்து வச்சிருந்திருப்போம்' என்றார். 'எவ்வளவு நாள்களுக்கு முன்பு வரை சிற்பங்களைப் பார்த்தீர்கள்?' என்று நான் கேட்கவே அவர், 'எனக்கு வருஷக் கணக்கெல்லாம் தெரியாது, ஆனா விதைக்கறதை கணக்கு வச்சுச் சொல்லிடுவேன்' என்றுகூறிவிட்டு 'முதல்ல கத்திரி, அடுத்த பருவம் வெண்டை, அப்புறம் வாழை. மறுபடியும் வாழை. இப்பயும் வாழை. கத்திரி இருந்தப்ப சிலையைப் பார்த்த ஞாபகம்' என்றார். அவரது கணக்குப்படி பார்க்கும்போது 2006 அல்லது 2007இல் இருந்திருக்குமா என்றபோது 'ஆமா நாலைஞ்சு வருஷத்துக்கு முன்னாடி வரைக்கும் இருந்துச்சு' என்றார். அவரிடம் மேற்கொண்டு எவ்வித விவரமும் பெறமுடியவில்லை. காடு மேடு கழனி என்றெல்லாம் விசாரித்துவிட்டுத் திரும்பும்போது ஒருவர் 'கொஞ்ச தூரம் போனா ஒரு வாத்தியார் வீடு இருக்கு, அவரைக் கேட்டால் தெரியும்' என்றார். மறுபடியும் புத்துணர்வு வந்தது. நடந்தேன். செல்லும் வழியில் புத்தரைப் பற்றி விசாரித்துக்கொண்டே சென்றேன். சிலர் அண்மைக்காலம் வரை பார்த்ததாகக் கூறினர். ஆங்காங்கு கிடைத்த தகவல்களுடன் ஆசிரியரைச் சந்தித்தால் புதிய செய்தி ஏதாவது கிடைக்கும் என எண்ணினேன். தோப்பிலும் காட்டிலும் மேட்டிலும் பலரைச் சந்தித்து கிடைத்த செய்திகளைவிட அவரிடம் இன்னும் செய்தி இருக்கும் என்ற நம்பிக்கையில் அவரைச் சந்தித்தேன். நன்கு வரவேற்று ஆர்வமுடன் விசாரித்தார். முறையான அறிமுகத்துக்குப் பின் அனைத்து விவரங்களையும் அவரிடம் கூறினேன். அவர், 'புத்தரா? இந்தப் பகுதியிலா?' என ஆச்சர்யத்துடன் கேட்டுவிட்டு, 'அப்படி எதுவும் இல்லை' என்றார் மிகவும் தெளிவாக. அந்த இரு புத்தர்சிற்பங்களைப் பற்றியும் மறுபடியும் எடுத்துக்கூறிவிட்டு, ஏதாவது செய்தி கிடைத்தால் தெரிவிக்கும்படி கூறிவிட்டுக் கிளம்பினேன். 10 ஆண்டுகளுக்கு முன் பார்த்த சிற்பங்கள் இப்போது இல்லை என்பதை நினைக்குமபோது வேதனையாக இருந்தது. 'தரையைச் சமன் செய்யும்போது மண்ணில் மூடப்பட்டிருக்குமா? அல்லது புதையுண்டிருக்குமா? யாராவது பாதுகாப்பு கருதி எடுத்துச்சென்றிருப்பார்களா?' என பலவித எண்ணங்கள் எழுந்தன. வரலாற்றின் சுவடுகள் கண்ணுக்கு முன் மறைகிறதே என ஆதங்கப்பட்டேன். எப்படியும் சிற்பங்கள் இருப்பதாக செய்தி வரும் என்று எண்ணி அங்கிருந்து கிளம்பினேன், நம்பிக்கையுடன்.             

குறிப்பு: பட்டீஸ்வரம் கிராமத்தேவதை கோயிலில் இருந்த புத்தராக மயிலை சீனி வேங்கடசாமி குறிப்பிட்ட சிற்பத்தைப் பட்டீஸ்வரம் முத்துமாரியம்மன் கோயிலில் களப்பணியில் கண்டபோது பெற்ற அனுபவங்களை அறிய http://tamilindru.blogspot.com என்ற வலைப்பூவில் 31.7.2010இல் வெளியான பௌத்தச் சுவட்டைத்தேடி: அந்த புத்தர் எந்த புத்தர் என்ற தலைப்பிலான கட்டுரையை அன்புகூர்ந்து காண்க.


நன்றி : இக்கண்டுபிடிப்பு பற்றிய செய்தியை வெளியிட்ட கீழ்க்கண்ட இதழ்கள் உள்ளிட்ட அனைத்து இதழ்களுக்கும் நன்றி. 
தமிழ்முரசு, 1.2.2002
பட்டீஸ்வரத்தில் புத்தர் சிலை கண்டுபிடிப்பு, தினமலர், 2.2.2002
பட்டீஸ்வரம் அருகே புத்தர் சிலை கண்டுபிடிப்பு, தினத்தந்தி, 2.2.2002
பட்டீஸ்வரம் அருகே சோழர் கால புத்தர் சிலை கண்டுபிடிப்பு, தினமணி,  3.2.2002
புத்தர் சிலை கண்டுபிடிப்பு, தினகரன், 3.2.2002
பட்டீஸ்வரம் அருகே அழகிய புத்தர் சிலை, தினபூமி, 3.2.2002
தஞ்சை அருகே புத்தர் சிலை கண்டெடுப்பு, காலைக்கதிர், 3.2.2002


25.10.2012இல் மேம்படுத்தப்பட்டது/Updated on 25.10.2012

Comments

 1. பயணம் வெற்றிகரமாகத் தொடர வாழ்த்துகிறேன். தங்களிடமிருந்து புதுப் புதுச் செய்திகளை எதிர்பார்க்கிறோம்.

  அன்புடன்
  கலைமணி

  ReplyDelete
 2. Aiya

  Thangal aaivugal arumaiyaaka ullana.... thodarattum ...
  vaazhthukal...Thamizh iyalan

  ReplyDelete

Post a Comment