Wednesday, 1 August 2012

பௌத்த சுவட்டைத் தேடி : கண்டிரமாணிக்கம்

மறுபடியும் மிக அழகான புத்தர் சிற்பத்தைக் காணும் வாய்ப்பு அண்மையில் கிடைத்தது. இந்த சிற்பம் சோழ நாட்டில் காணப்படுகின்ற 66ஆவது புத்தர் சிற்பமாகும். நான் பார்த்த பெரிய சிற்பங்களில் இதுவும் ஒன்றாகும். கடந்த வாரம் இச்சிற்பத்தைப் பார்த்தபோது பெற்ற பிரமிப்பையும், தற்போது இச்சிற்பம் உள்ள நிலையை அறிந்தபின் பெற்ற வேதனையையும் பகிர்ந்துகொள்ள உங்களை அன்போடு அழைக்கிறேன். வாருங்கள் கண்டிரமாணிக்கம் செல்வோம்.

23 ஜூலை 2012
கண்டிரமாணிக்கம் அருகே புத்தர் சிற்பம் இருப்பதாகத் தனக்குத்தகவல் வந்துள்ளதாக வரலாற்றறிஞர் முனைவர் குடவாயில் பாலசுப்ரணியம் அவர்கள் தெரிவித்தார். மறுநாளே அவருடன் அங்கு செல்லும் அரிய வாய்ப்பு கிடைத்தது.

24 ஜூலை 2012 
திருவாரூர் மாவட்டம் குடவாசல் வட்டத்திலுள்ள கண்டிரமாணிக்கம் என்னும் ஊருக்கு மகிழ்வுந்தில் சென்றோம். குறிப்பிட்ட இடத்தை நெருங்கும்போது தினத்தந்தி நிருபர் திரு சிவராமன் மற்றும் ஊராட்சிமன்றத் தலைவர் திரு காளிமுத்து ஆகியோர் எங்களுடன் சேர்ந்துகொண்டனர். புத்தர் சிற்பம் இருந்த இடத்திற்கு எங்களை அவர்கள் அழைத்துச்சென்றனர். மேட்டுத்தெருவில் திரு மணிகண்டன் வீட்டுக் கட்டமானப்பணியின்போது சுமார் ஆறு அடி ஆழத்தில் இச்சிற்பம் இருந்ததாகக் கூறினர். வீட்டின்முன்பாக அச்சிற்பம் வழிபாட்டில் இருந்தது. சிற்பத்தைப் பார்த்ததும் எங்களுக்குப் பிரமிப்பு ஏற்பட்டது.

வழிபாட்டில் கண்டிரமாணிக்கம் புத்தர் (2012)
புகைப்படம் ஜம்புலிங்கம்
அழகாகவும் அருமையாகவும் அச்சிற்பம் இருந்தது. வீட்டின் முன்பாக அச்சிற்பத்தை வைத்து உள்ளூர் மக்கள் வழிபாடு நடத்திக் கொண்டிருந்தனர். ஆயிரம் ஆண்டு கால வரலாறு தோண்டப்பட்டு வெளியே கொணரப்படும்போது அதற்கு மக்கள் தந்த முக்கியத்துவத்தையும், அவர்களுடைய அன்னியோன்னியமான ஈடுபாட்டையும் உணரமுடிந்தது. இரு நாள்களுக்கு முன்பு தரையிலிருந்து தோண்டியெடுத்த அச்சிற்பத்தைப் புத்தர் என அறிந்து மக்கள் வழிபாடு நடத்துவதை அறிந்து மிகவும் நெகிழ்ச்சியடைந்தோம். எலுமிச்சம்பழ மாலை மற்றும் மலர்மாலை அணிவித்து நெற்றியில் சந்தனம், குங்குமம் இட்டிருந்தனர்.  சிற்பத்தின் முன் தீபம் ஏற்றப்பட்டிருந்தது. அருகில் விபூதி, குங்குமம் வைக்கப்பட்டிருந்தது. உள்ளூர் மக்கள் புத்தரை வணங்கிச்சென்றதைக் காணமுடிந்தது.

கண்டிரமாணிக்கம் புத்தருடன் ஜம்புலிங்கம்
இச்சிற்பம் கி.பி.10-11ஆம் நூற்றாண்டைச் சார்ந்த சோழர் காலச் சிற்பம் ஆகும்.  63 அங்குலம் உயரமும், 33 அங்குலம் அகலமும் உள்ள இச்சிற்பம் அமர்ந்த நிலையில் தியான கோலத்தில் உள்ளது. புன்னகை தவழும் இதழ்கள், நெற்றியில் திலகக்குறி, நீண்டு வளர்ந்த காதுகள், பரந்த மார்பில் காணப்படும் மேலாடை, இடுப்பில் ஆடை ஆகியவை சிற்பத்திற்கு அழகைத் தருகின்றன. வானோக்கி உள்ள வலது கையில் தர்ம சக்கரக்குறி காணப்படுகிறது. தலையில் சுருள்முடிக்கு மேல் தீச்சுடர் உள்ளது. மூக்கு சிதைந்த நிலையில் உள்ளது.  இச்சிற்பம் ஒருங்கிணைந்த தஞ்சாவூர், திருச்சி மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களை உள்ளடக்கிய சோழ நாட்டில் காணப்படுகின்ற 66ஆவது புத்தர் சிற்பமாகும். இச்சிற்பம் அவ்வூரில் இருந்த பௌத்தப் பள்ளியில் வழிபாட்டில் இருந்திருக்க வாய்ப்புள்ளது.
கண்டிரமாணிக்கம் புத்தருடன் குடவாயில் பாலசுப்ரமணியன்
புகைப்படம் ஜம்புலிங்கம்
முனைவர் குடவாயில் பாலசுப்ரமணியன் அவர்கள் கண்டிரமாணிக்கத்தில் சோழர் கால சிவன் கோயிலும், திருமால் கோயிலும் இன்றும் உள்ளதைச் சுட்டிக்காட்டி, கி.பி.1700ஆம் ஆண்டு காலகட்டத்தில் தஞ்சாவூர் மராட்டிய மன்னர் சகசியின் அவையில் இருந்த சமஸ்கிருதப் பேரறிஞர் ராமபத்திர தீட்சிதர் இவ்வூரைச் சார்ந்தவர் என்றார். மேலும் அவர், மாமன்னன் இராஜராஜன் நாகப்பட்டினத்தில் இருந்த புத்த விகாரத்திற்கு நிலதானம் அளித்தபோது அந்தச் சாசனத்தில் கையொப்பமிட்ட ஒருவரான ஸ்ரீதரபட்டன் என்பவர் கண்டிரமாணிக்கத்தை அடுத்த சீதக்கமங்கலத்தை (ஸ்ரீதுங்கமங்கலம்) சேர்ந்தவர் என்றும் கூறினார்.  புத்தர் பற்றிய செய்திகளை உள்ளூர் மக்களுடன் பகிர்ந்துகொண்டு, உதவிய அனைவருக்கும் நன்றி கூறிவிட்டுத் தஞ்சாவூரை வந்தடைந்தோம். இந்த அரிய புத்தரைத் தமிழ்கூர் நல்லுலகிற்கு அறிமுகப்படுத்தும் வகையில் பத்திரிக்கைகளுக்குச் செய்தியாகத் தந்தோம். அவை பல பத்திரிக்கைகளில் வெளிவந்தன.
வளையமாபுரம் புத்தர் (2007)
புகைப்படம் ஜம்புலிங்கம்
திருவாரூர் மாவட்டம் வளையமாபுரம் புத்தரைக் கண்டுபிடித்து ஐந்து ஆண்டுகள் கழித்து அதே மாவட்டத்தில் மற்றொரு புத்தரைக் கண்டுபிடிக்கும் வாய்ப்பு கிடைத்தது அறிந்து மகிழ்ச்சியடைந்தேன்.
சீதக்கமங்கலம் புத்தர் (2002)
புகைப்படம் ஜம்புலிங்கம் 
இடும்பாவனம் புத்தர்   (1998)
புகைப்படம் ஜம்புலிங்கம் 
இச்சிற்பத்தைப் பார்த்தவுடன் எனக்கு திருவாரூர் மாவட்டத்தில் களப்பணியில் முன்னர் பார்த்த புத்தர் சிற்பங்கள் நினைவிற்கு வந்தன. கண்டிரமாணிக்கம் புத்தர் இம் மாவட்டத்தில் காணப்படும் 13ஆவது புத்தர் சிற்பமாகும். திருவாரூர் மாவட்டத்தில் இடும்பாவனம் (காடுவெட்டி), இலையூர், உள்ளிக்கோட்டை, கிள்ளியூர், குடவாசல் அருகே சீதக்கமங்கலம், கோட்டப்பாடி, திருநாட்டியத்தான்குடி, புதூர், மன்னார்குடி, வலங்கைமான், வளையமாபுரம், விக்கிரமம் ஆகிய இடங்களில் புத்தர் சிற்பங்கள் உள்ளன. இவற்றுள் இலையூர் சிற்பம் சென்னையிலுள்ள அரசு அருங்காட்சியகத்திலும், வலங்கைமான் சிற்பம் கங்கைகொண்ட சோழபுரம் அருங்காட்சியகத்திலும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

  நன்னிலம் வட்டம் அம்பகரத்தூர் புகைவண்டி நிலையத்திலிருந்து 3 கிமீ தொலைவிலுள்ள கோட்டப்பாடியில் ஒரு புத்தர் சிற்பம் இருப்பதாக வரலாற்றறிஞர் மயிலை சீனி வேங்கடசாமி கூறியுள்ளார். 1999இல் மேற்கொள்ளப்பட்ட களப்பணியின்போது அச்சிற்பத்தைக் காண முடியவில்லை. இடும்பாவனம் அருகே காடுவெட்டி என்னுமிடத்தில் 1998இல் களப்பணியின்போது நான் பார்த்த புத்தர் சிற்பத்தினை 2010இல்  காணமுடியவில்லை. புதூர் (2000), குடவாசல் அருகே சீதக்கமங்கலம் (2002), திருநாட்டியத்தான்குடி (2003), உள்ளிக்கோட்டை (2005), வளையமாபுரம் (2007) ஆகிய இடங்களிலுள்ள சிற்பங்கள் எனது களப்பணியின்போது கண்டுபிடிக்கப்பட்டவையாகும்.  நாகப்பட்டினத்தில் இருந்த புத்த விகாரத்திற்கு நிலதானம் அளித்தபோது அந்தச் சாசனத்தில் கையொப்பமிட்ட ஒருவரான ஸ்ரீதரபட்டன் என்பவர் கண்டிரமாணிக்கத்தை அடுத்த சீதக்கமங்கலத்தை (ஸ்ரீதுங்கமங்கலம்) சேர்ந்தவர் என்பதன்மூலமும், 2005இல் கண்டிரமாணிக்கம் அருகேயுள்ள சீதக்கமங்கலத்தில் புத்தர் சிற்பத்தின் தலைப்பகுதி கண்டுபிடிக்கப்பட்டதன்மூலமும் இப்பகுதிக்கும் பௌத்த சமயத்திற்கும் அதிகமான நெருக்கம் இருந்துள்ளதையும், புத்தர் வழிபாடு இருந்ததையும் அறியமுடிகிறது. கண்டிரமாணிக்கத்திலும், திருவாரூர் மாவட்டத்தின் பிற பகுதிகளிலும் காணப்படும் சோழர் காலத்தைச் சேர்ந்த புத்தர் சிற்பங்கள் அதிக எண்ணிக்கையில் பல பௌத்த விகாரைகள் இப்பகுதியில் இருந்ததையும்,  சோழர் காலத்தில் புத்தர் வழிபாடு பரவலாக இருந்ததையும் எடுத்துரைக்கும் சான்றுகளாக உள்ளன. 1000 ஆண்டுகளுக்குப் பின் வெளியே வந்த புத்தரை இன்றும் மக்கள் வணங்குவதை நோக்கும்போது பௌத்தத்தின் தாக்கத்தை உணரமுடிகிறது.

30 ஜூலை 2012
சிவப்புத்துணியால் மூடப்பட்ட
(இடது) கண்டிராமாணிக்கம் புத்தர்
(நன்றி : தினமலர்)

பல ஆண்டுகளாகப் புதையுண்டு அண்மையில் தோண்டியெடுக்கப்பட்ட இந்த அழகான புத்தர்  சிற்பம் கண்டிரமாணிக்கத்திலிருந்து எடுத்துச் செல்லப்பட்டு திருவாரூர் அருங்காட்சியக வாசலில் சிவப்புத் துணியால் மூடி வைக்கப் பட்டிருந்தது.

 8 ஆகஸ்டு 2012
அருங்காட்சியக வாசலில் மூடிவைக்கப்பட்டிருந்த புத்தர்  சிற்பத்தின் மீதிருந்த சிவப்புத்துணி அகற்றப்பட்டு, அனைவரும் காணும் நிலையில் இருந்தது. மறுபடியும் ஆகஸ்டு 6இல் புத்தர் சிற்பம் வடக்கு திசையைப் பார்த்து அருங்காட்சியக வாசலை நோக்கி முகம் பார்த்திருக்கும்படி திருப்பிவைக்கப்பட்டுள்ளது.சிற்பத்தின் முன்பாக பிளக்ஸ் போர்டு வைத்து தடுப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. 

24 ஜூலை 2012 அன்று மிகவும் விமரிசையாக வழிபாட்டில் காணப்பட்ட அந்த புத்தர், தொடர்ந்து சிவப்புத் துணிக்குள்ளும் பின்னர் யாரும் பார்க்கமுடியாமலும் அடைபட்டுக் கிடக்கும் செய்தியைப் பார்த்ததும் மனம் கனத்தது. அறியாமை இருள் அகற்றிய புத்தர் வெளியே வர அவரையே வேண்டிக்கொள்வோம்.

  

நன்றி
கண்டிரமாணிக்கம் புத்தர் பற்றிய செய்தியைத் தெரிவித்ததோடு களப்பணியில் உதவிய தினத்தந்தி நிருபர் திரு வான்.ப. சிவராமன், ஊராட்சி மன்றத்தலைவர் திரு காளிமுத்து, சீதக்கமங்கலம் புத்தர் கண்டுபிடிப்புக்கு உதவிய திரு கோவிந்தராஜன், திருநாட்டியத்தான்குடி புத்தர் கண்டுபிடிப்புக்கு உதவிய திரு குடவாயில் பாலசுப்ரமணியன், திரு கண்ணன், உள்ளிக்கோட்டை புத்தர் கண்டுபிடிப்புக்கு உதவிய மாதவகுமாரசுவாமி ஆகியோருக்கு நன்றி.

நன்றி : இக்கண்டுபிடிப்பு பற்றிய செய்தியை வெளியிட்ட கீழ்க்கண்ட இதழ்கள் உள்ளிட்ட அனைத்து இதழ்களுக்கும் நன்றி.
Exquisite Buddha statue unearthed, Deccan Chronicle, 25.7.2012
10ம் நூற்றாண்டு புத்தர் சிலை கண்டெடுப்பு, தினமணி, சென்னை, 25.7.2012
கண்டிரமாணிக்கத்தில் 10ம் நூற்றாண்டு புத்தர் சிலை கண்டெடுப்பு, தினமணி, திருவாரூர், 25.7.2012
Buddha statue unearthed at construction site, The Hindu, 26.7.2012
10ம் நூற்றாண்டு புத்தர் சிலை : குடவாசல் அருகே கண்டெடுப்பு, தினமலர், 26.7.2012
10th Century Buddha statue unearthed, The New Indian Express, 26.7.2012
சிவப்புத்துணியால் மூடியிருக்கும் புத்தர் சிலை : வரலாற்று ஆர்வலர்கள் அதிருப்தி, தினமலர், சென்னை, 30.7.2012  
சிவப்புத்துணியால் மூடியிருக்கும் புத்தர் சிலை :  வரலாற்று ஆர்வலர்கள் அதிருப்தி, காலைக்கதிர், தஞ்சாவூர், 30.7.2012

In search of imprints of Buddhism: Kandramanickam
This article sheds light on the Buddha sculpture - the 66th in the Chola country and the 13th in Tiruvarur district - found in Kandramanickam of Kudavasa Taluk in Tamil Nadu, while carrying our renovation work in a house. Based on the information given by Mr Van.Pa.Sivaraman, field work was carried out alongwith Dr Kudavayil Balasubramanian. Local worshipped this Buddha. Other Buddhas of this district were from  Idumbavanam, Elaiyur, Ullikottai, Killiyur, Seethakkamangalam near Kudavasal, Kottappadi, Tirunattiyattankudi, Puthur, Mannargudi, Valangaiman, Valayamauram and Vikramam of which the Buddhas from Puthur (2000), Seethakkamangalam (2002), Tirunattiyattankudi (2003), Ullikkottai (2005) and Valayamapuram (2007) were identified during my field study. It is shocking to note that the Buddha which was under worship is now found in front of Tiruvarur Museum, fully covered with red cloth. Later the cloth was removed and was seen by everybody. Then on August 6th the Buddha was kept facing north, with a flex board in front of it.  Let us pray for the Buddha to see the light of the day.   


25.10.2012இல் மேம்படுத்தப்பட்டது/Updated on 25.10.2012

8 comments:

 1. Aiya

  thangaladhu aayvugal

  miha chirappaaka ullana

  Vaazhthukal

  Thamizh iyalan
  Min ilakkiyap poonga

  ReplyDelete
 2. வணக்கம்.

  மிகுந்த வேலை நேரங்களிலும் தாங்கள் கல்விப்பணி மேற்கொண்டு வருவது தங்களுக்குச் சிறப்பைத் தரும். தாங்கள் மேலும் மேலும் வளர என்னுடைய வாழ்த்துக்களைத் தெரிவிததுக்கொள்கிறேன்.

  து.நடராஜன், தமிழ்ப் பல்கலைக்கழகம்

  ReplyDelete
 3. k.sridaran01 August, 2012

  sir, i have seen your article on kandramanickam buddha and the inscriptions found at seethakamangalam near Tiruvrur.many remains are still uner the earth.my best wishes for more findings--k.sridaran

  ReplyDelete
 4. கண்டிரமாணிக்கம் புத்தர் சிலை பற்றியச் செய்திகள் மிகுந்த வியப்பை அளிக்கின்றன. ஓய்வெடுக்கக் கூட நேரமில்லாத அலுவலகப் பணிகளுக்கு இடையிடையே, தாங்கள் மேற்கொள்ளும் களப்பணி மிகுந்த போற்றுதலுக்கு உரியதாகும். அதே வேளையில், பல நூறு ஆண்டுகளாக மண்ணில் புதையுண்டு, மக்களின் பார்வையில் படாமல் மறைந்திருந்த புத்தர், வெளிப்பட்டபோது, கண்டிரமாணிக்கம் மக்களைப் போல் விழாவெடுத்து கொண்டாட விட்டாலும் பரவாயில்லை, திரையிட்டா மறைப்பது. வேதனையாக அல்லவா இருக்கின்றது.

  ReplyDelete
 5. கண்டிரமாணிக்கம் புத்தர் சிலை பற்றி அறிந்து மகிழ்ந்தேன். இனங்கடந்து மக்கள் பழமையை போற்றுவது மகிழ்ச்சிகுரியது. இப்படியே எல்லாம் இருந்தால் நல்லதாக இருக்கும். உங்களின் இந்த புத்தர் சிலை கண்டெடுப்பு பற்றிய செய்தி உலகெங்கும் பரவட்டும்... வளரட்டும்... தொடர்ந்து பணிகள் சிறக்க வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 6. அன்பு நண்பர் ஜம்புலிங்கம்,
  களப்பணி ஆய்வு மேற்கொண்டு இவ்வளவு அற்புதமான புத்தர் சிலையை உலகுக்கு அறிமுகப்படுதியதில் நண்பர் ஜம்புவிற்கும் பெரும்பங்கு இருப்பதை அறிந்து மிகப் பெருமையாகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. தொடரட்டும் உங்கள் புத்தர் ஆய்வுப் பணி..
  இனிய, ரமேஷ்பாபு

  ReplyDelete
 7. Your buddha findings in tamilnadu is really good.
  My advanced wishes for your findings and researches.
  If possible to add a small stories and thoughts of buddha shortly at the end of the article means it will helpful for younger generations and readers.

  Thanks and Regards,
  Selvaprakash
  Senior Engineer
  Cenveo Publisher Services
  Chennai
  Landline: +91-44 4205 8888 Extn. 413
  Mobile: +91-9841772209
  selvaprakash.s@kwglobal.com
  www.cenveo.com

  ReplyDelete
 8. Well. Your sincere effort will always getting success. I think you feel very much about the present status of the Buddha statutes. It will always enrich your name. Now a days it is very much needed to create a motivation to preserve our historical monuments also. It will be very helpful to our younger generation also. Don't worry about it. I wish that your valuable sincere effort would boost you as a one of the famous historians in future also. K.SRINVIVASAN

  ReplyDelete