புதுக்கோட்டை மாவட்டத்தில் பௌத்தம்
2025 ஜனவரியுடன் இவ்வலைப்பூவில் 14 ஆண்டுகளை நிறைவு செய்கிறேன். என் ஆய்விற்குத் துணைநிற்கும் அனைவருக்கும் மனமார்ந்த நன்றி.
*******************
போதி முரசு ஜனவரி 2025 இதழில் புதுக்கோட்டை மாவட்டத்தில் பௌத்தம் என்ற தலைப்பிலான என் கட்டுரை வெளியாகியுள்ளது. அதனை வெளியிட்ட அவ்விதழுக்கு நன்றி.
சோழ நாட்டில் பௌத்தம் இருந்ததற்கான சான்றுகளாக புத்தர் சிலைகள், பூம்புகாரிலும், நாகப்பட்டினத்திலும் இருந்த புத்த விகாரங்கள், திருவிளந்துறையில் புத்தர் கோயில் இருந்ததைக் கூறுகின்ற கும்பகோணம் கும்பேஸ்வரர் கோயிலிலுள்ள கல்வெட்டு, பெருஞ்சேரியிலும் புத்தமங்கலத்திலும் உள்ள புத்தர் கோயில்கள், தஞ்சாவூர் பெருவுடையார் கோயில், தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோயில், திருவிடைமருதூர் மகாலிங்கசுவாமி கோயில் ஆகிய கோயில்களில் உள்ள புத்தரின் சிற்பங்கள், ஆங்காங்கு தொடர்ந்து கண்டுபிடிக்கப்பட்டு வருகின்ற புத்தர் சிலைகள், நாகப்பட்டின புத்தர் செப்புத்திருமேனிகள் ஆகியவை காணப்படுகின்றன.
சோழ நாட்டில் பௌத்தம் என்ற ஆய்விற்காக மேற்கொண்ட களப்பணியின்போது தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை, திருச்சி, கரூர், பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை மாவட்டங்களைக் கொண்ட சோழ நாட்டில் 60க்கும் மேற்பட்ட இடங்களில் புத்தர் சிலைகளைக் காணமுடிந்தது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் அருந்தவபுரம், கோபிநாதப்பெருமாள்கோயில், சோழன்மாளிகை, தஞ்சாவூர், திருவலஞ்சுழி, பட்டீஸ்வரம், பழையாறை, பெரண்டாக்கோட்டை, மணலூர், மதகரம், மாத்தூர், மானம்பாடி, முழையூர், விக்ரமம், வையச்சேரி; திருவாரூர் மாவட்டத்தில் இடும்பவனம், இலையூர், உள்ளிக்கோட்டை, கண்டிரமாணிக்கம், கோட்டப்பாடி, சீதக்கமங்கலம், திருநாட்டியத்தான்குடி, திருப்பாம்புரம், புதூர், மன்னார்குடி, வலங்கைமான்புத்தூர், வளையமாபுரம், விடையபுரம்; நாகப்பட்டினம் மாவட்டத்தில் கிராந்தி, சந்தைத்தோப்பு, புத்தமங்கலம், புஷ்பவனம்; மயிலாடுதுறை மாவட்டத்தில் எழுமகளூர், குத்தாலம், சின்னமேடு, பெருஞ்சேரி; திருச்சி மாவட்டத்தில் ஆயிரவேலி அயிலூர், கீழ்க்குறிச்சி, குழுமணி, திருச்சி (காஜாமலை), திருப்பராய்த்துறை, பேட்டைவாய்த்தலை, மங்கலம், முசிறி, வெள்ளனூர்; அரியலூர் மாவட்டத்தில் அரியலூர், கீழக்கொளத்தூர், குழுமூர், சுத்தமல்லி, பிள்ளைபாளையம், பெரிய திருக்கோணம், முத்துசேர்வைமடம், ராயம்புரம், விக்ரமங்கலம், ஜெயங்கொண்டம்; பெரம்பலூர் மாவட்டத்தில் ஒகளூர், பரவாய், புதுக்கோட்டை மாவட்டத்தில் கரூர், வன்னிச்சிப்பட்டினம் ஆகிய இடங்கள் புத்தர் சிலைகள் இருந்த/உள்ள இடங்களாகும். இவற்றைத் தவிர புத்தர் சிலைகள் என்று கூறப்படுகின்ற சமண தீர்த்தங்கரர் சிலைகளும் பிற சிலைகளும் உள்ளன.
இவற்றில் உள்ளிக்கோட்டை, கண்டிரமாணிக்கம், கிராந்தி, குத்தாலம், குழுமூர், கோபிநாதப்பெருமாள்கோயில், சந்தைத்தோப்பு, சீதக்கமங்கலம், திருச்சி, திருநாட்டியத்தான்குடி, பழையாறை, பிள்ளைபாளையம், புதூர், மங்கலம், மணலூர், முழையூர், வளையமாபுரம் ஆகிய இடங்களில் புத்தர் சிலைகளும், அய்யம்பேட்டையில் நாகப்பட்டினப் புத்தர் செப்புத் திருமேனியும் கட்டுரையாளரின் களப்பணியில் கண்டுபிடிக்கப்பட்டவையாகும்.
பெரும்பாலான புத்தர் சிலைகள் அமர்ந்த நிலையில் தியானக்கோலத்தில் சற்றே மூடிய கண்கள், நீண்ட காதுகள், புன்னகை சிந்தும் இதழ்கள், நெற்றியில் திலகக்குறி, தலையில் வரிசையாக அழகிய சுருள்முடி, அதற்கு மேல் ஞானத்தை உணர்த்தும் தீச்சுடர், தலைக்குப் பின் பிரபை, கழுத்தில் திரிவாலி எனப்படுகின்ற மூன்று மடிப்புகள், அகன்ற மார்பு, பரந்த தோள்கள், மேலாடை, மடியில் இடது உள்ளங்கையின்மீதுள்ள வானோக்கிய வலது உள்ளங்கையில் தர்மசக்கரக்குறி, இடுப்பில் ஆடை ஆகியவற்றுடனோ, இவற்றில் பெரும்பான்மையான கூறுகளுடனோ உள்ளன. இதன் சில கூறுகள் நின்ற நிலையிலுள்ள புத்தர் சிலைகளில் காணப்படுகின்றன.
புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆலங்குடிப்பட்டி, செட்டிப்பட்டி, வெள்ளனூர் ஆகிய இடங்களில் புத்தர் சிலைகள் உள்ளதாக மயிலை சீனி. வேங்கடசாமி கூறுகிறார். அச்சிலைகளைத் தேடிச் சென்றபோது அங்கு சிலைகள் இல்லாததையும், கரூரிலும், வன்னிச்சிப்பட்டினத்திலும் சிலைகள் உள்ளதையும் அறிய முடிந்தது. அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் வட்டம் முத்துசேர்வைமடத்தைச் சேர்ந்த ஒரு புத்தர் சிலையைப் புதுக்கோட்டையிலுள்ள அரசு அருங்காட்சியகத்தில் காணமுடிந்தது.
புத்தர், நிலவளமுடைய அய்யனார் கோயில், கரூர், புதுக்கோட்டை மாவட்டம்
கரூரில் உள்ள நிலவளமுடைய அய்யனார் கோயிலில் சோழர் காலத்தைச் சேர்ந்த, 64 செ.மீ. உயரமுள்ள ஒரு புத்தர் சிலை அமர்ந்த நிலையில் தியானக்கோலத்திலுள்ளது. வீரசோழியத்தை எழுதிய புத்தமித்திரர் பிறந்த ஊரான பொன்பற்றிக்கு அருகில் இவ்வூர் உள்ளது. பீடத்தில் உள்ள இந்தச் சிலை நீண்ட காதுகள், தலையில் சுருள்முடி, அதற்குமேல் தீச்சுடர், கழுத்தில் மூன்று மடிப்புகள், இடது மார்பை மூடிய மேலாடை, இடது உள்ளங்கையின்மீதுள்ள வானோக்கிய வலது உள்ளங்கையில் தர்மசக்கரக்குறி, இடுப்பில் ஆடை ஆகியவற்றுடன் உள்ளது. தலைக்குப் பின்னுள்ள தோரணம் இரு பக்கங்களிலும் உள்ள தூண்களில் அமையும் வகையில் செதுக்கப்பட்டுள்ளது. இக்கோயிலில் உள்ள கருப்பர்சாமிக்கு பிராணிகளைப் பலிகொடுப்பது வழக்கமென்றும், அது தெரியாமலிருக்க இச்சிலையைத் தனியாக வைத்துள்ளதாகவும் இவ்வூர் மக்கள் கூறினர்.
நாளிதழ் செய்தி மூலமாக மணமேல்குடி வட்டம் வன்னிச்சிப்பட்டினத்தில் சீனன்திடலில் பொ.ஆ.10ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு புத்தர் சிலை இருப்பதை அறியமுடிந்தது. அமர்ந்த நிலையில் தியானக்கோலத்தில் சற்றே மூடிய கண்கள், நீண்ட காதுகள், அழகிய இதழ்கள், தலையில் வரிசையாகச் சுருள்முடி, அதற்குமேல் தீச்சுடர், இடது காதின் அருகில் சிறிய வளைவுடன் கூடிய வித்தியாசமான பிரபை, மேலாடை, மடியில் இடது உள்ளங்கையின்மீதுள்ள வானோக்கிய வலது உள்ளங்கை, இடுப்பில் ஆடை ஆகியவற்றுடன் அச்சிலையின் ஒளிப்படம் செய்தியில் இடம்பெற்றிருந்தது. அந்தப் புத்தரைக் காணும் நாளை எதிர்நோக்கியிருந்தபோது அது காணாமல் போன செய்தியை நாளிதழ் செய்தி மூலமாக அறியமுடிந்தது.
தற்போது புதுக்கோட்டை மாவட்டத்தின் பௌத்த சமயச் சான்றாக கரூர் நிலவளமுடைய அய்யனார் கோயிலில் உள்ள புத்தர் சிலை மட்டுமே உள்ளது. சமண சமயத்தின் சான்றுகளை அதிகமாகக் கொண்டுள்ள இம்மாவட்டத்தில் பௌத்த சமயச் சான்றுகள் மிகவும் அரிதாகவே காணப்படுகின்றன. தொடர்ந்து மேற்கொள்ளப்படுகின்ற கள ஆய்வுகள் இங்கு பிற பகுதிகளில் புத்தர் சிலைகள் இருந்ததற்கான சான்றுகளை வெளிக்கொணர உதவும் என நம்புவோம்.
துணை நின்றவை
வேங்கடசாமி, மயிலை சீனி. (1957). பௌத்தமும் தமிழும். திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக்கழகம், சென்னை.
10th century Buddha statue found, The Hindu, 19 May 2002.
Buddha idol missing, The Hindu, 30 June 2008.
Jambulingam, B. (Oct-Dec 2009). A resurvey of Buddha statues in Pudukkottai region (1993-2009), Tamil Civilization, Vol 23.
(1 பிப்ரவரி 2012). பௌத்த சுவட்டைத்தேடி : ஆலங்குடிப்பட்டி, சோழ நாட்டில் பௌத்தம், https://ponnibuddha.blogspot.com/2012/02/blog-post.html
ஐயனார் கோயிலில் பழமையான புத்தர் சிலை, நக்கீரன், 11 அக்டோபர் 2021.
ஜம்புலிங்கம், பா. (2022). சோழ நாட்டில் பௌத்தம். புது எழுத்து.
வேங்கடசாமி, மயிலை சீனி. (1957). பௌத்தமும் தமிழும். திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக்கழகம், சென்னை.
10th century Buddha statue found, The Hindu, 19 May 2002.
Buddha idol missing, The Hindu, 30 June 2008.
Jambulingam, B. (Oct-Dec 2009). A resurvey of Buddha statues in Pudukkottai region (1993-2009), Tamil Civilization, Vol 23.
(1 பிப்ரவரி 2012). பௌத்த சுவட்டைத்தேடி : ஆலங்குடிப்பட்டி, சோழ நாட்டில் பௌத்தம், https://ponnibuddha.blogspot.com/2012/02/blog-post.html
ஐயனார் கோயிலில் பழமையான புத்தர் சிலை, நக்கீரன், 11 அக்டோபர் 2021.
ஜம்புலிங்கம், பா. (2022). சோழ நாட்டில் பௌத்தம். புது எழுத்து.
காவேரிப்பட்டிணம்.
Comments
Post a Comment