புத்தர் சிலை ஆராய்ச்சியாளர் முனைவர் பா. ஜம்புலிங்கம் : முனைவர் மு.இளங்கோவன்

முனைவர் மு.இளங்கோவன் அவர்கள் என்னைப் பற்றியும் என் ஆய்வினைப் பற்றியும் அவரது வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். அவருக்கு என்னுடைய மனமார்ந்த நன்றி.

புத்தர் சிலை ஆராய்ச்சியாளர் முனைவர் பா. ஜம்புலிங்கம்

தமிழகத்துப் பல்கலைக்கழக ஆய்வேடுகளின் தரம் குறைந்து வருகின்றது என்று கல்வியாளர்கள் குறைபட்டுக்கொள்வது உண்டு. இக்கூற்றில் உண்மை இல்லாமல் இல்லை. ஆயினும் தரமான ஆய்வாளர்கள் தோன்றித் தரமான ஆய்வேடுகளை வழங்கி வருவதையும் கவனத்தில்கொள்ள வேண்டும். அவ்வகையில் தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் தட்டச்சராகவும், சுருக்கெழுத்தராகவும் பணியைத் தொடங்கிப் படிப்படியே தம் அயராத உழைப்பாலும் ஆர்வத்தாலும் முனைவர் பட்டம் வரை ஆய்வு செய்து பட்டம் பெற்று, அப் பல்கலைக்கழத்தின் உதவிப் பதிவாளர் வரை உயர் பொறுப்புகளைப் பெற்ற முனைவர் பா. ஜம்புலிங்கம் அவர்கள் கடந்துவந்த பாதை, ஆய்வுத்துறையில் ஈடுபட விரும்பும் ஆய்வாளர்களுக்குத் தன்னம்பிக்கையை ஊட்டும் என்பது என் நம்பிக்கை.
பா. ஜம்புலிங்கம் அவர்கள் 1959 ஆம் ஆண்டு ஏப்ரல் 2 ஆம் நாள் கும்பகோணத்தில் பிறந்தவர். பெற்றோர் பெயர் பாலகுருசாமி - தர்மாம்பாள். பெற்றோரின் கண்டிப்பால் மட்டும் பள்ளிக்குச் சென்ற இவருக்குப் படிப்பில் நாட்டம் இல்லை. நாளும் வகுப்பாசிரியர் “பிடிவாரண்டு” போட்டுதான் இவரைப் பள்ளிக்கு அழைத்துச் சென்றுள்ளார். பின்னாளில் குடும்பச் சுமையுணர்ந்த பா. ஜம்புலிங்கம் கல்வியில் கவனம் செலுத்தலானார்.
பா. ஜம்புலிங்கம் தொடக்கக் கல்வியைத் கும்பகோணம் திருமஞ்சன வீதியில் உள்ள ஆரம்பப் பள்ளியிலும், மேல்நிலைக் கல்வியைக் கும்பகோணம் அறிஞர் அண்ணா அரசு உயர்நிலைப் பள்ளியிலும் பயின்றவர் (1972-75). பள்ளியில் படிக்கும்பொழுதே தட்டச்சு, சுருக்கெழுத்து, இந்தி மொழி முதலியவற்றைக் கற்றுக்கொண்டவர். எனவே, ஆசிரியர்கள் பாடம் நடத்துவதைக்கூடச் சுருக்கெழுத்தில் பதிவுசெய்துகொள்ளும் பேராற்றல் இவருக்கு இளமையில் வாய்த்தது. கல்லூரிப் படிப்பினைக் கும்பகோணம் அரசினர் ஆடவர் கல்லூரியில் பயின்றவர் (1975-79) . இவரின் இளங்கலைப் படிப்பு பொருளாதாரம் ஆங்கிலவழிக் கல்வியாக அமைந்ததால் ஆங்கில அறிவும் இவருக்குச் சிறப்பாக வாய்த்தது. 1973 ஆம் ஆண்டு முதல் ஆங்கில இந்து நாளிதழைப் படிக்கத் தொடங்கியதால் இவருக்கு ஆங்கிலப் பயிற்சியும் மொழிபெயர்ப்பு ஈடுபாடும் சிறப்பாக வாய்த்தன.
இவர் குறித்த விரிவான செய்திகளை என் வலைப்பதிவில் பதிந்துள்ளேன். ஆர்வலர்கள் கீழுள்ள இணைப்பின் வழியாக என் வலைப்பதிவுக்கு வாருங்கள்.
நூல் மதிப்புரை
தினமணி, தமிழ் மணி, இந்தவாரம் கலா ரசிகன் பகுதி (9 ஜூலை 2024)

9 ஜூலை 2024இல் மேம்படுத்தப்பட்டது

Comments

  1. எமது வாழ்த்துகளும்கூடி....

    ReplyDelete

Post a Comment